குறள்:
“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை” - 669
பொருள்:
மிகவும் துன்பம் வந்தாலும் துணிவோடு அதனைப் பொறுத்துக் கொண்டு இன்பம் தரும் செயலச் செய்து முடியுங்கள்.
விளக்கம்:
ஒருவர் தாம் செய்யும் தொழிலில் வைக்கும் மனஉறுதியே, செய்யும் தொழிலுக்கு வேண்டிய உறுதியைக் கொடுக்கும். மன உறுதி அற்றோர் செய்யும் தொழில் சிறக்காது. எனவே எடுத்த செயலை மன உறுதியோடு செய்து முடிக்க மிக்க துணிவு வேண்டும். ஒரு செயலைச் செய்ய ஏன் துணிவு வேண்டும்? என்ற கேள்வி எழலாம். ஒரு செயலச் செய்யும் போது பல இடையூறுகள், துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது மனம் சோர்ந்து போகாது இருக்க துணிவு வேண்டுமே. நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு மிக்க இன்பத்தை அள்ளித்தருமாக இருந்தால், துன்பம் வந்தாலும் மனம் சோர்ந்து துவண்டு போகாத நெஞ்சத் துணிவோடு, செய்க!’ எனத் திருவள்ளூவர் கட்டளை இட்டுள்ளார்.
இக்குறளிலே ‘துணிவாற்றி’ என்றோர் அழகிய சொல்லை அவர் எமக்குத் தந்திருக்கிறார். எமக்கு வேண்டிய துணிவை நாமே ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை துணிவாற்றி - துணிவை உண்டாக்கி என்ற பொருளில் தந்துள்ளார். நாம் செய்யும் செயலை முழுமையாகச் செய்து முடிக்கவேண்டுமா? அதற்கான மனவலிமையை நம்மையல்லால் வேறு யாரால் ஏற்படுத்தித் தரமுடியும்?
முடிவில் நிலைத்த இன்பத்தை அள்ளி வழங்கும் செயலைச் செய்யும்போது அதிக துன்பம் வரலாம். அதைப் பொருட்படுத்தாது துணிவோடு பொறுத்தும், பொறுக்கமுடியாத இடத்து எதிர்த்தும் நின்று அதனைச் செய்து முடிக்க வேண்டும்.
இன்றைய உலக அரசியற் சூழ்ச்சிகளால் நிலைகுலைந்து நிற்கும் தமிழராகிய எமக்கு இன்பத்தை அள்ளித்தர இருப்பது எதுவோ! அதற்காக இனியும் எத்தகைய பெரும் துன்பம் வந்தாலும் எல்லோரும் சேர்ந்து துணிவோடு அச்செயலை செய்து முடித்து வாகை சூட வேண்டும் என்பதற்காக திருவள்ளுவர் சொன்ன மிகவும் அற்புதமான திருக்குறள் என இக்குறளைச் சொல்லலாம்.
No comments:
Post a Comment