Saturday 19 July 2014

காத்தருள்வாயே!



நோயிற் கிடந்து நோன்மை இழந்து
      நாளும் நாளும் நெஞ்சம் நொந்து
பாயிற் கிடந்து பாரோர் பகரும்
      பழிச்சொற் கேட்டுப் பதையா நிலையை
தாயிற் சிறந்த தயா நிதியே
      தருவாய் எனக்கே தத்துவ ஞான
சேயிற் சிறந்த செவ்வடி வேளே
      செங்கரம் தந்து காத்தருள்வாயே
இனிதே,
தமிழரசி.

Tuesday 15 July 2014

ஆசைக்கவிதைகள் - 93

சும்மாத்தான் பாருமய்யா!


ஈழத்தின் நாட்டுப்புறத்தில் கன்னி ஒருத்தி குளத்தில் தண்ணீர் அள்ள வருவாள். அவள் வரும் வழியில் இருந்த வீட்டில் வாழ்ந்த ஓர் இளைஞனைக் காதலிதாள். ஆனால் அவன் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காலங்கள் உருண்டன. அவனிடம் தன் எண்ணத்தைச் சொல்ல நினைத்தாள். அதற்கான நேரமும் அவளுக்குக் கிட்டியது. அப்போது

பெண்: கழுத்தைத் திருப்பிக் கொண்டு
கதையாமல் போரவரே
சுழுக்கெடுக்க நான் வரட்டா
சும்மாத்தான் பாருமய்யா
                                    -  நாட்டுப்பாடல் (ஈழம்)
                                                            -  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

என்று சொன்னாள். ஆனால் அவளது மன எண்ணத்தைச் சொல்லவிடாது நாணம் தடுத்தது. இப்படிக் கேட்டதற்கே அவன் என்ன நினைப்பானோ என திகைத்து நின்றாள்.

Monday 7 July 2014

கீதை சொல்வதென்ன?

பக்திச்சிமிழ் 81


‘வீரவேல் …. உண்டே துணை’ என்பது எமது மூலமந்திரம். உருவென அருவென உளதென இலதென அருமறை இறுதியும் அறிவரு நிலையென நின்றவனைத் துணையென உணர்வீரேல் வேறு துணையை உலகில் நீர் எதிர் நோக்கத் தேவையில்லை. 

உயர்ந்த வேதாந்தத் தத்துவங்களைப் புகட்டும் நூலுக்கு “பிரஸ்தானத் திரயம்” என்று பெயர். பிரஸ்தானத் திரயம் என்றால் முத்தத்துவம் என்று பொருள். உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் என்ற மூன்று நூல்களையும் பிரஸ்தானத் திரயம் என்பர். வேதாந்தம் சொல்வது இந்துசமயத் தத்துவம். சித்தாந்தம் என்பது சைவசமயத் தத்துவம். இந்த இரண்டு தத்துவங்களும் வெவ்வேறானவை. 

பிரஸ்தானத் திரயம் கூறும் உண்மைகளிற் சில. “அர்சுனா! ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வளவு சோர்வு இன் நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்து அடைந்தது. பார்த்தா! அலியின் இயல்பை அடையாதே. அது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே! இழிவான உள்ளத் தளர்வைத் துறந்துவிட்டு எழுந்திராய். வாழ்க்கைத் திறவு கோலை கிருஷ்ணன் இக் கோட்பாட்டில் கொடுத்துவிடுகின்றான்.

பிரபஞ்ச (உலக) வாழ்க்கை ஒரு முடிவில்லாத போராட்டம். எதைப் பெறவிரும்பினாலும் உயிர்கள் அதன் பொருட்டுப் போராடியாக வேண்டும். கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் சீவ தத்துவத்தையும் கர்மயோக தத்துவத்தையும் புகட்டிக் கொண்டு போகின்றன. எல்லாக் கர்மங்களும் சங்கல்பத்தை அல்லது மனவுறுதியை அடிபடையாகாக் கொண்டிருக்கின்றன. நடமான - உண்ண - உறங்க - எழுந்திருக்க மனிதன் முதலில் சங்கற்பத்தைச் செய்கிறான். பின்பு தான் எண்ணியதைச் செய்கிறான். சிருஷ்டி முழுவதும் சங்கற்பத்தில் இருந்து விரிந்தது. 

ஸத், சித், ஆனந்தம் - சச்சிதானந்தம். இந்த சத்து, சித்து, ஆனந்தம் என்பனவற்றை விளக்கும் நூலே  பகவத்கீதை. 

ஸத்:- 
சொரூபத்தை விளக்குவதற்கான சாஸ்திரமாகும். உணர்ச்சியைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதன் மேலோன் ஆகிறான். ஸத், ஆகிய ‘சீவனைப்’ பற்றி பகவத்கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் விளக்குகின்றன.

சித்:-
கடவுள் தன்மையைப் பற்றியது. பகவத்கீதையின் ஏழாம் அத்தியாயம் முதல் பன்னிரெண்டாம் அத்தியாயம் முடிய ‘சித்’ ஆகிய கடவுள் தன்மையைப் பற்றி விளக்குகிறது. பக்தியையும் அப்பகுதி வளர்க்கிறது. ‘தூய உணர்ச்சியின் திரள்’ பக்தி என்னும் பெயர் பெறுகிறது. தீய [கேடுடைய] உணர்ச்சிகள் எல்லாவற்றையும் நலம் வாய்ந்த உணர்ச்சிகளாக மாற்றுவது பக்தியாகும். கடவுளுடைய மகிமை விளங்குமளவிற்கு அன்பை ஊற்றெடுக்கச் செய்வதும் பக்தியே. கீதையின் இந்த இரண்டாவது ஷட்கம் அதாவது ஏழாவது தொடக்கம் பன்னிரெண்டாவது அத்தியாயம் வரை ‘சித்’தைப்பற்றி விளக்க ஈசுவர இலக்கணங்கள் அவற்றில் பேசப்படுகின்றன.

ஆனந்தம்:-
அன்புடைய உயிர் தெய்வத்திடம் கவரப்படுகின்றது. அன்பே கடவுள் என்பதை அது உணர்கிறது. அன்பு என்னும் கவர்ச்சி ஓங்குதற்கு ஏற்ப இனிமை மிளிர்கிறது. அது ஆனந்தமாகப் பரிணமிக்கிறது. ஆனந்தம் வளர வளர அது உவப்பிலா ஆனந்தமாகிறது. ஆனந்தமே இறைவன். இறைவனின் உருவமே ஆனந்தம். இந்த ஆனந்தத்தை நாடியே உயிர்கள் வாழ்க்கையில் பற்று வைக்கின்றன. ஆனந்தம் இல்லாவிட்டால் உயிர்கள் கணப்பொழுதும் வாழ்ந்திருக்க மாட்டா. ஆக ஆனந்தம் எப்போதும் ஆத்ம சொரூபத்தை வளர்ப்பது.

பதின்மூன்றாவது அத்தியாயம் பொடங்கி பதினெட்டாவது அத்தியாயம் முடியவுள்ள மூன்றாவது ஷட்கம் ஞானத்தை வளர்ப்பதற்கான வழிகளைப் பகர்கின்றது.


அத்வைதம் என்பதற்கு இரண்டல்ல என்பது பொருள். நதி கடலில் லயமாவது போல ஞானமடைந்த சீவன் பரத்தில் கலக்கிறான். இது அத்துவிதம் புகட்டும் முத்தி. அதை இன்னும் நன்றாகப் புகட்டுமிடத்து கடலில் தோன்றி கடலில் நிலை பெற்றிருக்கும் அலையானது தனது நாம ரூபத்தை அழித்து விடும் பொழுது பழையபடி கடலாகி விடுகிறது. அப்படி, முத்தி நிலையில் சீவன் இறைவனுடன் கலந்து விடுகிறான்.

குறிப்பு:
என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் 11-06-1980 அன்று எனக்கு எழுதிய கடிதத்தில் எழுதியது.
இனிதே,
தமிழரசி.

Sunday 6 July 2014

பொன்கைநகர் இளவழகனே!

புங்குடுதீவு மடத்துவெளி பாலமுருகன் 
வணக்கப் பாமலர்
-இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -


 வெண்பா
தேங்குபுகழ் பொன்கைநகர் சேரும் மடத்துவெளி
ஓங்க எழுந்தருளும் உத்தமனார் - பாங்கா
மயிலேறும் பால அழகன்  பதம்பாட
கயிலாய ஐங்கரனே காப்பு

  ஆசிரியப்பா
வடஆழியில் தோன்றி நடமாடி வளர்தென்றல்
       வலம்வந்து துதி பாட
மங்கையர்கள் நிறைகுடங் கொண்டு நன்னீர்மொண்டு
       மயிலன்ன மென நடப்பர்
மடமாது வள்ளியும் மகிழ்தெய்வ யானையும் 
       மருவியிரு பாக மேவ
மணமார்ந்து பொன்கைநகர் வடபால் மடத்துவெளி
       வாழ்வா யமர்ந்த பெருமான்
நடமாடு வரதர்கட் பொறியாகி நளினமலர்
       வந்தசர வண வமுதனே
நம்பியழும் அடியவர்துயர் வெம்பிவிழ வேல்தொடும்
       நாதமுடி வான பொருளே
மடமானைத் தொடரென்ற மடமானின் சொற்கேட்ட
       ரகுராமற் கொரு மருகனே
மங்கலம் தங்கிவிளை அதிகாரி புலமேவி
       வளருமொரு இள வழகனே!
இனிதே,
தமிழரசி.

Saturday 5 July 2014

கூறிடுவீர் மானிடரே!






















கற்பனையின் சிகரத்தில் கவித்துவம் படைக்க
கையில்தூரிகை பிடித்த கலைஞன் இவன்
நற்றிணையில் காணா நயங்கள் எல்லாம்
நயப்புடன் தந்தான் நானிலத்தோர்க்கே

சிற்பமென இச்சித்திரம் சொல்லும் சேதியென்ன
சிந்தனையைச் செதுக்கி சிந்தியுங்கள் மானிடரே
பற்றெதுவும் இன்றிப் பாண்புடனே கேட்கின்றேன்
பறவைகள் செய்திட்ட பாவம் என்னவோ

வெற்று வெளியாய் வேரோடு மரம்சாய்த்து
வீதியென்றும் வீடுஎன்றும் வேண்டுவன கட்டுகின்றோம்
குற்றுயிராய் குலையுயிராய கூடின்றி குருவிகளிடும்
கூக்குரல் கேட்கலையோ கூறிடுவீர் மானிடரே

வற்றுநீருமின்றி காடின்றி விலங்கினம்வாட வக்கணையாய் 
விமான ஓடுபாதை வேடிக்கை வினோதமென
உற்றவுலகு எங்கணும் உல்லாசம் காணுகிறோம்
உணர்ச்சியின்றி எத்தனைநாள் உவந்திடுவீர் இவ்வாழ்வை

நற்றமிழர் நாமென்றால் நானிலத்திற்கு ஏதுசெய்தோம்
நாடென்ன நகரென்ன நட்டிடுவோம் நன்மரங்கள்
பொற்புடனே போற்றி பச்சைப்பசும் புல்வெளியில்
பறவைகளும் உலாப்போக பூயைக் காத்திடுவோம்
                                  
இனிதே,
தமிழரசி

Thursday 3 July 2014

ஆசைக்கவிதைகள் - 92

உருக்கம் வைத்தால் ஆகாதோ!

காதலன்:  பாய்போல் சுருளுறனே பச்சை
                           நெல்லாய் சிலிர்க்கிறனே
               உமியாய் பறக்கிறனே உருக்கம்
                          வைத்தால் ஆகாதோ!

காதலி:   பாயாய் சுருளுவதும் பச்சை
                        நெல்லாய் சிலிர்ப்பதுவும்
            உமியாய் பறப்பதற்கே உருகுமா
                        எந்தன் உள்ளம்!
                                                   -  நாட்டுப்பாடல் (ஈழம்)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

Wednesday 2 July 2014

குறள் அமுது - (93)

குறள்:
“இளியவரின் வாழாத மானம் உடையார் 
ஒளிதொழுது ஏத்தும் உலகு”                           - 970

பொருள்:
தமக்கு இழிவு வந்த போது, உயிர்வாழாத மானம் உடையவரின் புகழை இந்த உலகம் வணங்கிப் போற்றும்.

விளக்கம்:
நாம் வாழும் மனிதவாழ்வுக்கு ஓர் அர்த்தம் வேண்டும். அந்த அர்த்தத்தை எமக்கு ஊட்டுவது மானமே. ஏனெனில் ஆண்டியாக வாழ்ந்தால் என்ன? அடிமையாக வாழ்ந்தால் என்ன? உயிர் சுமந்து வாழ்ந்தால் போதும் என்று தமிழர் வாழவில்லை. அதனால் எம் தமிழ் மூதாதையர் “மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே” என வாழ்ந்தனர். அவர்களது கொள்கைப்படி உயிரைவிட மானமே சிறந்தது. 

தாம் வாழும் வாழ்க்கையில் பிறரால் வரும் இழிநிலை தமக்கு வந்தாலும், தம் இனத்துக்கு வந்தாலும் மானமுள்ளோர் தமக்கு வந்ததாகவே கருதுவர். ஏனெனில் வாழ்வு நிந்தம் வசை பங்கல்லவா? நம் தமிழினம் அல்லற்படும் போது நாமெப்படி சுவைத்து சுகித்து வாழமுடியும்?  என நினைந்து தமிழினத்தின் மானம் காக்க தம்முயிரை துச்சமாக மதித்து, தமிழ் மண்ணில் விதையானோர் எண்ணில் அடங்கார். அதனாலேயே திருவள்ளுவரும் மானத்திற்காக இறந்தோரை, ‘இளியவரின் வாழாத மானம் உடையார்’ என பன்மையில் கூறியுள்ளார். 

நம் தமிழினம் மெல்ல மெல்ல அடக்கி ஒடுக்கப்படும் இழிநிலை கண்டு மனம் வெதும்பி, தமிழினத்துக்கு வந்த தாழ்வைப் பொறுக்கமுடியாது கடலைபோல் பொங்கி எழுந்து ஆரவாரித்துச் சென்று கடல் மடியில் வீரகாவியமாய் நிலைத்தோரும் இழிவுவந்த போது வாழாத மானமுடையாரே. அத்தகைய மானமுடையோரின் புகழின் சிறப்பை இவ்வுலகே கைதொழுது வாழ்த்தும் என்று திருவள்ளுவரே கூறியுள்ளார். தமிழராகிய நாமும் உலகுடன் சேர்ந்து ஒளிதொழுது [விளக்கு ஏற்றித் தொழுது] போற்றுவோம். 
இனிதே,
தமிழரசி.