Wednesday 15 July 2015

நேர்மையைக் காட்டுவது எப்போதோ?


குஞ்சுகள் நாம் இங்கு கூடிநின்றோம்
கூடுகள் இன்றி வாடுகின்றோம்
வஞ்சம் உள்ள மானுடரே உங்கள்
வன்மம் தீர்வது எப்போதோ?

பச்சை மரம்  இங்கு காணவில்லை
பதுங்கி இருக்க நிழலுமில்லை
அச்சம் உள்ள மானுடரே உங்கள்
ஆசை மாய்வது எப்போதோ?

தஞ்சம் எமக்கு இங்கு யாருமில்லை
தந்தை தாயரை கண்டதில்லை
விஞ்சும் எண்ண மானுடரே உங்கள்
வேட்கை தணிவது எப்போதோ?

மிச்சம் எமக்கு இங்கு ஏதுமில்லை
மேதினி எங்கும் யாதுமில்லை
இச்சை மிக்க மானுடரே உங்கள்
இச்சை குறைவது எப்போதோ?

பஞ்சம் உமக்கு இங்கு வந்ததில்லை
பாரின் பசுமைக்கு ஈடுமில்லை
நெஞ்சம் கொண்ட மானுடரே உங்கள்
நேர்மையைக் காட்டுவ தெப்போதோ?
                                                                    
இனிதே,
தமிழரசி

Tuesday 14 July 2015

முந்நின்று அருள்தருவான்!


பன்னிரு கையுடையான் பழந்தமிழ் பாவுடையான்
என்னிரு கண்ணிரண்டில் என்றுமே ஒளியானான்
தன்னிரு கண்ணிரண்டில் தயைதனைக் காட்டிடுவான்
முன்னைய வினையறுக்க முந்நின்று அருள்தருவான்

Monday 6 July 2015

மணிவாசகர் வாக்கில் வண்டோதரி

இராவணன் வண்டோதரி புடைப்புச் சிற்பம் - களனி

இதிகாச காலத்திற்கு முன்பிருந்தே பண்டைய மனிதர்களால் அறியப்பட்ட பெருமை மிக்க நாடுகளில் ஒன்று இலங்கை. உலகின் பண்டைய சரித்திரங்களைக் கூறும் பண்டைய மொழி நூல்களும் கூட இலங்கையின் வளத்தை - செல்வச்செழிப்பைக் கூறத்தவறவில்லை. சமஸ்கிருத வேத, இதிகாச நூல்களும், தமிழ் இலக்கிய சங்க நூல்களும் இலங்கையில் வாழ்ந்தோரின் புகழையும் சேர்த்துச் சொல்கின்றன.

அவை இலங்கையின் மாந்தையை அரசாண்ட மயனைப்பற்றியும் கூறுகின்றன. அவனை நாகர்களின் அரசன் என்றும் அவை சொல்கின்றன. மதுரையை நாகநாடு எனவும் தமிழரை  நாகர்கள் என்றும் பரிபாடல் கூறுகின்றது. சிலப்பதிகார மங்கல வாழ்த்தும் 
“நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு”
என மதுரையைச் சொல்கிறது. ஆதலால் நாகர்கள் எனத் தமிழரையே அழைத்தனர் என்பதும் தெளிவாகின்றது..

பண்டை நாளில் திருக்கேதீஸ்வரத்தில் இருந்த திருக்கோயில் ‘மா எந்தை’  கோயில் என அழைக்கப்பட்டது. அதனை
மா எந்தை கோயில் நண்ணி மலரடி தொழுவார்க் கெல்லாம்
மறுமையும் இன்பம் நல்கும் மணிமிடற் றந்தணாளன்”
என்று அக்கோயில் இறைவனை மாந்தை மாண்மியம் கூறுகின்றது. ‘மா எந்தை’ கோயிலை மயன் கட்டினான் எனவும் அவனின் மகள் வண்டோதரி ‘மா எந்தை’ இறைவனை காதலால் கசிந்துருகி வணங்கினாள் எனவும் மாந்தை மாண்மியம் சொல்கிறது. 'மாஎந்தை' கோயில் இருந்த இடமே இன்று 'மாந்தை' என அழைக்கப்படுகிறது.

மாந்தையில் வாழ்ந்த மயனின் மகளுக்கு சிவன் நித்தமும் திருமணக்கோலத்துடன் காட்சி கொடுத்தாராம். சிவனின் கீர்த்திகளை திருவாசகத்தின் ‘கீர்த்தித்திருவகவல்’ சொல்கிறது. அதில் மாணிக்கவாசகர்
“தேவூர் தென்பால் திகழ்தரு தீவில்
கோஆர் கோலங் கொண்ட கொள்கையும்            
                                            - (ப.திருமுறை: 8: 2: 71 - 72)
என்று இறைவனின் கீர்த்திகளில் ஒன்றைச் சொல்கிறார்.

இத்திருவாசகத்தில் இலங்கையை மணிவாசகர் ‘திகழ்தரு தீவு’ எனக் கூறுகிறார். குமரி ஆற்றுக்கிடையே ஆற்றிடைக்குறையாக திகழ்ந்ததால் - இலங்கியதால் அதற்கு இலங்கை என்று பெயர். [ஆற்றுக்கு இடையேயுள்ள நிலப்பரப்பு, தமிழில் இலங்கை என அழைக்கப்படும்]. இலங்குதலும் - திகழ்தலும் ஒத்த கருத்துள்ள சொற்களேயாகும். கொள்கை என்றது இங்கு இறைவனின் தன்மையைக் குறிக்கின்றது. அதாவது தேவூருக்குத் தெற்கே இலங்குகின்ற தீவில் [திகழ்தரு தீவு] சிவன் பேரழகு பொருந்திய மணவாளக்கோலம் [கோஆர் கோலம்] கொண்ட தன்மையை [கொள்கையை] புகழ்கிறார்.

அதனால் மாணிக்கவாசகர் ‘நித்தமணாளர்’ என்று சிவனைப் பெயரிட்டு அழைத்தார். அதை
“நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும்
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்”               
                                              - (ப.திருமுறை: 8: 17: 3)
என அன்னைப்பத்து காட்டுகின்றது.

இந்த திருவாசகத்தில் மணிவாசகர் பெருந்துறை என்று சொல்வது தமிழகத்தில் உள்ள திருப்பெருந்துறையையா? ஈழத்தில் உள்ள பெருந்துறையையா? என்ற கேள்வி எழுகின்றது. ஈழத்தில் பெருந்துறை இருக்கிறதா? என்னும் கேள்வி இதைவாசிக்கும் உங்களில் பலருக்கு இப்போது எழலாம். ஈழத்திலும் பெருந்துறை இருந்தது. இப்போதும் இருக்கிறது. 

ஈழத்து பெருந்துறையை சங்க இலக்கியங்களும் சொல்கின்றன. குமரி ஆற்றுக்கு இடையே  இலங்கை இருந்தகாலத்திலும் இந்தப் பெருந்துறை ஈழத்தில் இருந்தது. அதனை
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின்”           
                                                     - (புறம்: 67: 6)
என அன்னச்சேவலுக்கு, பிசிராந்தையார் புறநானுற்றில் சொல்வதால் அறியலாம். பிசிராந்தையார் கூறிய அயிரை மீன் நன்னீரில் வாழும் மீன். ஆதலால் அவ்விடம் கடல்கோளுக்கு முன்னிருந்த குமரியாற்றுப் பெருந்துறை என்பதும், அது இன்றைய கன்னியாகுமரி அல்ல என்பதும் தெளிவாகிறது. அன்று குமரிஅம் பெருந்துறை என்ற பெயருடன் இருந்த பெருந்துறையே, கடல் கோளின் பின் மணிவாசகர் காலத்திலும் அரேபியக் குதிரைகள் வந்து இறங்கும் பெருந்துறையாக இருந்தது. அந்தப் பெருந்துறையே இன்றைய மாதோட்டம் ஆகும்.

பெருந்துறை என்ற பெயர் மாதோட்டம் ஆக மாறியது.  அதுபோல் இலங்கையில் இருந்த சம்பான் + துறை = சம்பாந்துறை என்ற பெயரும் சம்பான் + தோட்டம் = சம்பாந்தோட்டமாகி இப்போது அம்பாந்தோட்ட ஆகி நிற்கிறது. சம்பான் என்பது தோணி, படகு என்பவற்றைக் குறிக்கும் சொல்லாகும். சம்பு என்பது நாவல் மரத்தின் பெயர்களில் ஒன்று. நாவல் மரத்தால் செய்த படகு, தோணி என்பவை சம்பான் அழைக்கப்பட்டன. தமிழரின் கப்பல் கட்டும் கலைச்சொல் தொகுதி; இன்றும் கூட  நாவல் மரம், கப்பல் கட்ட பயன்படுவதைச் சொல்கிறது. படகுகள் நிறைந்த துறைமுகம் என்ற கருத்தில் சம்பாந்துறை என ஈழத் தமிழ் முன்னோர் அழைத்தனர்.
“குரை கடலுக்கொரு சம்பானாய் வருவடிவேலா
என்று திருப்புகழில் முருகனை சம்பான் என அருணகிரிநாதர் அழைக்கின்றார்.

மணிவாசகரும் பெருந்துறையைக் கூறும் இடங்களில் தென் பெருந்துறை’ ’தென்னன் பெருந்துறை’ ‘பெருந்துறை’ என்றெல்லாம் கூறுவதைக் காணலாம். அவர்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் பல பெருந்துறைகள் தமிழகம் எங்கும் இருக்கின்றன. அப்படியிருக்க எப்படி மாதோட்டத்தை மணிவாசகர் சொன்ன பெருந்துறை என்று சொல்வது?

மேற்கே தமிழகத்தில் இருந்து கிழக்கே இருக்கும் பெருந்துறையைப் பார்க்க வரும் மணிவாசகரின் பார்வையில் கதிரொளியானது பெருந்துறையில் இருந்த மலைக்கு [பெருந்துறை வரை] மேலே திசைதோறும் விரிந்து செல்வது தென்படுகின்றது. அதனை திருவண்டப் பகுதியில்
“கருமா முகிலின் தோன்றி
திருஆர் பெருந்துறை வரையில் ஏறி
திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய”                         
                                                  - (ப.திருமுறை: 8: 3: 67 - 69)

என்று கூறியுள்ளார். அவர் மட்டுமல்ல அவருக்குப் பின்னே வாழ்ந்த திருஞானசம்பந்தர் தாம் பாடிய திருக்கேதீஸ்வரப் பதிகத்தில்
“மாடெலாமண முரசெனக் கடலின் ஒலிகவர் மாதோட்டம்”      
                                                 - (ப.திருமுறை: 2: : 11)
என்று பாடியுள்ளார். கடலலையின் ஒலி மணமுரசு போல கேட்பதற்கு அது மோதும் இடம் மலையாக - கல்லாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த காலத்தில் கடல் நீர்மட்டம் மிகவும் தாழ்ந்து இருந்ததையும் நாம் கருத்தில் கொள்வது நன்று. எனவே மணிவாசகர் பெருந்துறை என்று கூறியது மாதோட்டத்தை எனக் கொள்ளலே ஏற்புடையது.

இறைவனின் பெருமைகளைக் கூறி, இறைவனை இனிய குரலில் அழைக்க ஆசைப்பட்ட மணிவாசகர் “கீதமினிய குயிலே!” எனக் குயிலைக் கூப்பிட்டு
“ஏர்தரும் ஏழ் உலகு ஏத்த எவ்வுருவும் தன் உருவாய்
ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகு அமர் வண்டோதரிக்குப்
பேர் அருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிராணைச்
சீரிய வாயால் குயிலே தென் பாண்டி நாடானைக் கூவாய்!”       
                                                        - (ப.திருமுறை: 8: 18: 2)

எனப் பாடச் சொல்கின்றார். முதன்முதல் கீதமினிய குரலில் கேட்க அவர் ஆசைப்பட்டது ‘மயனின் மகளாய் பிறந்து, இராவணனின் மனைவியான வண்டோதரிக்கு பேரின்ப பெருவாழ்வு அளித்த பெருந்துறைச் சேர்ந்த மா எந்தை இறைவனையே!’  அத்துடன்
தென்பாண்டி நாடானைக் கூவாய்!’
என இலங்கையை தென்பாண்டி நாடாகக் காட்டுவதையும் இத்திருவாசகம் சொல்கிறது. 

பூ இதழ்களால் கட்டிய மாலையை [இதழி], இறைவன் வண்டோதரிக்குக் கொடுத்ததை திருநாவுக்கரசு நாயனார்
“மங்கை காணக்கொடார் மண மாலையை
கங்கை காணக்கொடார் தலைக் கண்ணியை
நங்கைமீர் இடை மயனரின் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே”           
                                              - (ப.திருமுறை: 5: 15: 6)

எனக் கேட்கிறார். இத்தேவாரத்தின் மூன்றாம் அடியில் “மயனரின் நங்கைக்கே” என்றும் “மருதரின் நங்கைக்கே” என்றும் பாட பேதம் உண்டு. மயனை - மருத நிலத் தலைவனாக மாந்தை மாண்மியம் சொல்லும். இன்றும் மாந்தைப் பகுதி மருதநிலமாகவே இருக்கிறது.

சிவனின் மேல் தீராக் காதல் கொண்டவள் வண்டோதரி என்பதும் அவளுக்கு இறைவன் அருள் புரிந்தார் என்பதையும் திருநாவுக்கரசரின் இந்தத் தேவாரம் மட்டும் அல்ல உத்தரகோச மங்கை புராணமும், மாந்தை மாண்மியமும் சொல்வதோடு, திருக்குற்றாலக் குறவஞ்சியில்
“தென்னிலங்கை வாழுமொரு கன்னிகைமண்
       டோதரியாள் மானே - அவர்
பொன்னடியில் சேர்ந்தணைய என்னதவம்
       செய்தாளோ மானே”                        
                                                     - (தி. குறவஞ்சி: 23: 2)
என திரிகூடராசப்ப கவிராயர் குற்றாலத்து இறைவனைக் கூற, 

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து, திருக்கோணேஸ்வர நாதரைப் பாடிய பாடலில் பண்டிதர் ஆறுமுகன் அவர்களும்
“மயனாரின் மகளாய் மாந்தைபதி வாழ்ந்தவருள்
         மங்கை மனமகிழ் நாதராய்”
என்று திருக்கோணேஸ்வர இறைவனை வணங்குகிறார்.

வண்டோதரியின் கதையை திருவாசகத்தில் பல இடங்களில் கூறியதால் இவர்களுக்கு முன்னோடியாக மணிவாசகர் இருந்ததை திருவாசகம் மிக நன்றாக எடுத்துச் சொல்கிறது.
“வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த
        மாக் கருணைக் கடலாய் அடியார்
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் 
       பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்
உந்து திரைக் கடலைக் கடந்து அன்று
       ஓங்கு மதில் இலங்கை அதனில்
பந்து அணை மெல் விரலாட்கு அருளும்
       பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே”            
                                                     - (ப.திருமுறை: 8: 43: 5)
என்கின்றது மணிவாசகரின் திருவார்த்தை.

ஆதிகாலம் தொடக்கம் பெருந்துறையில் இருக்கும் எங்கள் இறைவன் [பரமன்] தேவர்கள் வந்து வணங்கிப் போற்ற, பெரிய கருணைக் கடலாய் இருந்து அடியவரின் பந்த பாசங்களை நீக்குபவர். அவர் அந்த நாளில் உந்தும் அலைகடலைக் கடந்து சென்று, ஓங்கி எழுகின்ற மதில் [தூங்கு எயில்] உள்ள இலங்கையில், பந்து விளையாடிய மென்மையான விரல்களை உடைய வண்டோதரிக்கு கொடுத்த அருட்பரிசு என்ன என்பதை அறிந்தவர் பெருந்துறை இறைவன் என்கிறது இத்திருவாசகம்.

வண்டோதரிக்கு இறைவன் அருளிய அருட்பரிசை நினைந்து நினைந்து, தனக்கும் அதுபோல் கிடைக்குமா என ஏங்கிய ஏக்கமே ‘மணிவாசகர் வாக்கில் வண்டோதரி’ வரக் காரணமாய் இருந்ததை இந்தத் திருவாசகம் காட்டுகிறது அல்லவா!
இனிதே,
தமிழரசி.

Sunday 5 July 2015

இன்றைய காதலர்க்கு!

காதலர்கள் காலங்காலமாக வாழ்கிறார்கள். ஆனால் காதலர்கள் தம் காதலை வெளிப்படுத்தும் பாங்கோ வேறு வேறாக இருக்கிறது. அவர்கள் வளரும் சூழல், அறிவு, ஆற்றல், மனநிலை என்பவற்றை பொறுத்து காதலைச் சொல்லும் பாங்கு வேறு படலாம். காதலன் பணக்காரணாக இருந்தால் விலையுயர்ந்த பொருட்களைப் பரிசளித்து தமது காதலை வெளிப்படுத்துவான். வாய்ச்சாலம் உள்ளவன் தன் வார்த்தைகளாலே காதலியை மடக்குவான். எழுத்தாற்றல் உள்ளவன் எழுதுவான். கவிஞனாக இருந்தால் காதலியின் அழகை கவிதையில் வடிப்பான். இதுவே காலங்காலமாக நாம் காணும் காதலர் நிலை. இதற்கு முரணான காதலர்களும் இருந்திருக்கிறார்கள். இன்றைய காதலர்க்கு அத்தகைய ஒரு காதலனை காட்டலாம் என நினைத்தே இதனை எழுதுகிறேன்.

காதல் வயப்பட்ட ஒருவன் தன் காதலியிடம் பலமுறை தன் காதலை சொன்னான். அவளோ ஏதாவது ஒரு சாட்டுச் சொல்லி நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள். காதல் வேதனையால் உண்டான தவிப்பை இனியும் தாங்க முடியாது என்பதை கவிதையாக எழுதி அவளிடம் கொடுத்தான். அந்தக் காதற் கவிதையை இன்றைய காதலர்களாகிய உங்களுக்காகத் தருகிறேன். கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
    உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
    இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே
    பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே
    சகிக்க முடியாதினி என்சகியே மானே!
                                                      (- விவேகசிந்தாமணி: 18)

இந்தக் காதற்கவிதை புரிந்ததா? புரியவில்லையா? இக்கவிதையில் அக்காதலன் தன் காதலிக்கு “கன்னியே கேள்! உண்மையாய் உன் சிவந்தவாயைக் கேட்கிறேன், உன் பதிலைச் சொல்லவாயா? நான் சொல்வதைக் கேட்டபடி பதில் தருவாயானால் வெற்றி பெறுவாய் பெண்ணே! இதற்குப்பின் இன்று ஏதும் சாக்குப் போக்குச் சொல்லவேண்டாம். என் தோழியே! மான்போன்றவளே! மன்மதன் படுத்தும் பாட்டால் இனியும் காம வேதனையை என்னால் சகிக்க முடியாது” என்றே எழுதியுள்ளான்.

என்ன? ஒரே எண்கணிதமாக இருக்கின்றது என நினைக்கிறீர்களா? எண்கணிதம் மட்டுமல்ல இக்கவிதையில் சோதிடத்தையும் காதலையும் சேர்த்தே எழுதியிருக்கிறான். காதல், கணிதம், காலக் கணிப்பு மூன்றும் சேர்ந்த ஓர் அற்புதமான காதற்கவிதை இது. 

இக் கவிதையை எழுதிய காதலனுக்கு கணிதமும் சோதிடமும் தெரிந்தது போல கவிதையைப் படிக்கும் காதலியும் கணிதமும் சோதிடமும் எழுதியதை வாசிக்கவும் தெரிந்தவளே. எனவே இக் கவிதை, தமிழ்ப் பெண்கள் கணிதம் சோதிடம் என்பவற்றை கற்றவர்களாக இருந்ததையும் எடுத்துக் காட்டுகிறது. தொல்காப்பியர் சொன்னது போல காதலனும் காதலியும் ஒத்த அறிவுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். உங்களைப் போல் ஒத்த அறிவுள்ள காதலர்களைக் காதலியுங்கள் என்று இன்றைய காதலர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கவிதையைக் கொஞ்சம் பார்ப்போம்.
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே = 4 + [½ + ½] + 1 = 6
சோதிடத்தில் வரும் பன்னிரெண்டு இராசியில் ஆறாவது இராசி கன்னிராசி. ஆதலால் கன்னியே கேளாய்! என்கின்றான்.

ஐயரையும் அரையும் = [5  x ½] +½ = 3
கிழமைகளிலே மூன்றாவதாக இருப்பது செவ்வாய். உண்மையாய் செவ்வாயை [சிவந்த வாயை] கேட்டேன் எனச் சொல்கிறான்.

இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் = [2 x 4] + 3 + 1 = 12
நட்சத்திரங்களிலே பன்னிரெண்டாவது நட்சத்திரம் உத்தரம். உத்தரம் என்றால் பதில். உன் பதிலைச் சொல்வாய்.

இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின் = சொல்வதைக் கேட்டபடி பதில் தருவாய் ஆனால்

பெருநான்கும் அறுநான்கும் = 4 + [6 x 4] = 28
வருடங்களில் இருபத்தெட்டாவது வருடம் ஜெய வருடம். ஜெயம் என்றால் வெற்றி. வெற்றி பெறுவாய் பெண்ணே.

பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே = இதற்கு பின்னும் இன்று ஒன்றும் சொல்லவேண்டாம்.

சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே = 4 + 10 + 15 = 29
வருடங்களில் இருபத்தொன்பதாவது வருடம் மன்மதவருடம். மன்மதனாலே, மன்மதன் படுத்தும் பாட்டால்,
சகிக்க முடியாதினி என்சகியே மானே!

இப்போது காதலனின் கவிதையை அந்தக் காதலியாய் இருந்து படித்துப் பாருங்கள்
      
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே [கன்னியே] கேளாய்
    உண்மையாய் ஐயரையும் அரையும் [செவ்வாய்] கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் [உத்தரம்] சொல்லாய்
    இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் [பதில் தந்தாய்]ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் [ஜெயம்] பெறுவாய் பெண்ணே
    பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே [மன்மதனாலே]
             சகிக்க முடியாதினி என்சகியே மானே!
இனிதே,
தமிழரசி.

Friday 3 July 2015

தேனாய் மயக்கு தெடா!



















கொள்ளை கொள்ளும் குதலைமொழி
             காதினில் இனிக்கு தெடா
வெள்ளை உள்ளச் சிரிப்பலையோ
             வேதனையை போக்கு தெடா
கள்ளம் இல்லா கனிந்தநோக்கு
             காதலை பெருக்கு தெடா
தெள்ளு தமிழ் சொல்லழகு
              தேனாய் மயக்கு தெடா
                                                      - சிட்டு எழுதும் சீட்டு 105 
குறிப்பு:
எனது பேரன் மயன் வாய்விட்டு இரசித்துச் சிரிப்பதைப் பார்த்து அவனுக்கு 1/07/2015 அன்று எழுதிய பாடல் இது. என்னை பாட்டெழுதத் தூண்டிய சிரிப்பை படத்தில் காண்க.

Thursday 2 July 2015

தமிழர் தொழுகுல தெய்வமே!

அருள்மிகு திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]

பஞ்சவடி இராமன் பதைத்திடச் சீதையைப்
       படர் சிறையிட்ட திறலோன்
பசுநிரை கவர்ந்துபோர்ப் பகைவரை அழைத்திடும்
       பண்டைமுறை யரசு செய்தோன்
அஞ்சுமற் றஞ்சுமெனுமத் திசைகள் முடிசூடி
       அகிலம் புரந்த சைவன்
ஆகாய மானந் தடுத்தஅக் கைலைமலை
       அதிரப் பெயர்த்த வண்ணல்
பஞ்சின்மெல் லடிமங்கை பங்கன் மகிழ்ந்திடப்
       பாவீணை செய்த புலவன்
பாரோர் புகழ்ந்திடும் இராவணே சற்கருள்
       பாலித்த கருணா கரன்
தஞ்சமென வுன்பதம் நம்பிப் பிடித்தனம்
       தந்தருள் சுதந்திர மையா
தரையுதிரு சருகிற்கு முயிரீயு சித்தனே
       தமிழர் தொழுகுல தெய்வமே 
இனிதே,
தமிழரசி.