Sunday 31 December 2023

புங்கைமண்ணிற் புன்னகைப்பாள்


பூங்கமலம் பூத்திடவும்

  பூம்புனல் பெருகிடவும்

தேங்கமலத் தெளிதேறல்

  தெள்ளமுதாய் ததும்பிடவும்

செங்கமலச் செய்யவளும்

  செழிப்பையள்ளித் தந்திடவும்

பொன் கமலத் தாயவளும்

  புங்கைமண்ணிற் புன்னகைப்பாள்

இனிதே,

தமிழரசி.

சொல்விளக்கம்:

பூங்கமலம் - தாமரைப்பூ

பூம்புனல் - புது வெள்ளம்

தெளிதேறல் - தெளிந்த தேன்

தெள்ளமுதாய் - மாசற்ற அமுதம்

ததும்புதல் - நிறைந்து வழிதல்

செய்யவள் - திருமகள்/இலக்குமி

பொன் கமலம் - பொற்கமலம்

தாயவளும் - இங்கே [கலைமகள்/சரஸ்வதி] குறிக்கிறது

புங்கைமண் - புங்குடுதீவு மண்

Tuesday 19 December 2023

சங்கத்தமிழர் கண்டுகளித்த காரன்னம்



ன்றைய ஈழத்திலோ அன்றேல் தமிழகத்திலோ பார்க்கமுடியாத பறவை இனத்தில் ஒன்று காரன்னம். கார் + அன்னம் = காரன்னம். அதாவது கரியநிற அன்னம். காரன்னங்கள் சங்ககாலப் பழமையானவை. சங்க இலக்கிய நூலான குறுந்தொகையில் அம்மூவனார் என்னும் சங்ககாலப் புலவர்

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானாகியர்நின் நெஞ்சுநேர் பவளே - (குறுந்தொகை: 49)

என தலைவி கூறுவதாக ஒரு பாடலில் காரன்னம் வாழ்ந்ததைக் காட்டுகிறார்.

இதில் தலைவிஅணிற்பல் போன்ற முள்ளை உடைய முள்ளிச்செடியும் [முண்டகம்] கருநீலமணி போல் ஒளிரும்[மணிக்கேழ் அன்ன] அன்னமும் உள்ள கடல்[மாநீர்] உடைய தலைவனே[சேர்ப்ப]! இப்பிறப்பு மாறி மறுபிறப்பு வந்தாலும் நீயே என் கணவன். நானே உன் நெஞ்சிற் கலந்தவள்என்கின்றாள். காரன்னத்தையே அம்மூவனார்மணிக்கேழ் அன்னம்என்கிறார்.


நான்காம் திருமுறைத் தேவாரத்தில் திருநாவுக்கரசு நாயனார்

கணிவளர் வேங்கையொடு கடி திங்கள் கண்ணி

  கழல் கால் சிலம்ப அழகார்

அணிகிளர் ஆரவெள்ளை தவழ் சுண்ண வண்ண

  இயலார் ஒருவர் இருவர்

மணிகிளர் மஞ்ஞை ஆல மழையாடு சோலை

  மலையான் மகட்கும் இறைவர்

அணிகிளர் அன்னவண்ணம் அவள் வண்ண வண்ணம்

  அவர் வண்ண வண்ணம் அழலே

- (.திருமுறை: 4: 8: 6)

மலையான் மகளின் [பார்வதியின்] நிறத்தை காரன்னத்தின்[அணிகிளர் அன்னவண்ணம்] நிறமாகச் சொல்கிறார். எனவே நாவுக்கரசர் காலத்திலும் காரன்னங்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்திருக்கின்றன எனக்கொள்ளலாம்.


அவர்மட்டுமல்ல கச்சியப்ப முனிவர் தாமியற்றிய பேரூர்ப்புராணத்தில்காரன்னங்கள் வந்ததும் [படர்தலொடும்] வெள்ளை அன்னங்கள் அந்த இடத்தை விட்டு அருகே இருந்த பெரிய வெண்டாமரைக் குளத்தை அடைந்ததை [விரவிய]

“………………….. காரன்னம் படர்தலொடும்

உய்யலாந் திசையாதென் றுய்யான மருங்கடுத்த

வெய்யபூம் பணைக்கமலம் விரவியவெள் ளோதிமங்கள்

- (பேரூர்ப்புராணம்:72)

என ஒரு காட்சியாகவே காட்டுகிறார்.


குமரகுருபர சுவாமிகளும் சகலகலாவல்லி மாலையில் 

வெள்ளோமதிமப் பேடே சகலகலாவல்லியே     

- (சகலகலாவல்லி மாலை:7)

என சரஸ்வதியைப் போற்றிப் பாடியுள்ளார் அல்லவா! வெள்ளை அன்னத்தைவெள்ளோதிமம்என்பதுபோல் காரன்னத்தை காரோதிமம் எனவும் கூறுவர்.


சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர் பார்த்து மகிழ்ந்த காரன்னத்தை நாம் பார்த்ததில்லை.  தற்கால உலகில் அழிந்துகொண்டிருக்கும் பறவைகளில் காரன்னமும் ஒன்று. ஆதலால் நாம் இன்றைய Australia அதிலும் Tasmania சென்றால் வகைவகையாகப் காரன்னங்களைப் பார்த்து மகிழலாம்.

இனிதே,

தமிழரசி.