Friday 23 August 2019

குறள் அமுது - (142)


குறள்: புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று  
   இகழ்வார்பின் சென்று நிலை         

                                                                            - 966

பொருள்: புகழ் இல்லையானால் விண்ணுலகமும் சேர்க்காது. எனவே தன்மானத்தை இழந்து இகழ்வார் பின்சென்று நிற்பதால் கிடைக்கும் பயன் என்ன?

விளக்கம்: இத்திருக்குறள் மானம் என்னும் அதிகாரத்தில்  உள்ள ஆறாவது குறளாகும். ஒருவன் தன் நிலையிலிருந்து தாழாது இருத்தலே மானமாகும். 

திருவள்ளுவர் இக்குறளில் ஏழு சொற்களில் நான்கு விடயங்களைச் சொல்கிறார். முதலாவது தன்மானத்தை ஒருவர் இழந்தால் தம்மை இழிவுசெய்வோரின் பின்னே சென்று நிற்கும் நிலை உருவாகும். இரண்டாவது அப்படி நிற்பதால் இவ்வுலகில் என்றும் அழியாது நிற்கும் புகழை இழக்கும் நிலை ஏற்படும். மூன்றாவது புகழில்லை எனின் தேவர் உலகமும் கிடையாதது. நான்காவதாக இவற்றால் வரக்கூடிய நன்மை என்ன? எனக் கேள்வியும் எழுப்புகிறார். இக்கேள்வி மனித சிந்தனையைத் தீட்டும் நல்ல கேள்வியாகும். 

நல்லோர்கள் தமது மானத்துக்கு கேடு வரும் எனில் பரந்து விரிந்த விண்ணுகலமே கையில் கிடைத்தாலும் வாங்க மாட்டார்கள் என்பதை

“……………………………………… - இடமுடைய

வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்

மானம் அழுங்க வரின்     - 300

என நாலடியார் கூறுகிறது. 

விண்ணுலக வாழ்வைவிட மானம் உயர்ந்தது. ஆதலால் படை வீரர்கள் உலகெங்கும் சுற்றித் திரியும் புகழை விரும்புவதால் உயிர்வாழ விரும்புவதில்லை. அதனை

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்      - 777 

என படைச்செருக்கு என்ற அதிகாரத்தில் திருவள்ளுவரே கூறுகிறார். அவர் சொன்னது போல எம்மினத்தின் மானத்தைக் காப்பதற்கு தம் உயிரை விரும்பாத [வேண்டா] மாவீரர் உயிர்க்கொடை கொடுத்து, முள்ளிவாய்க்கால் மண்ணில் குருதிக் களமாடினர். இன்றும் எம்மாவீரர் புகழ் உலகெங்கும் சுழல்கிறதே.

பிறரை இழிவுசெய்வோரை இகழ்வார் என்பர். அதனைச் சொல்லாலும் செயலாலும் செய்வர். ஒருவரின் உயர்வை, பெருமையை இகழ்தலை விட ஓர் இனத்தை இழிவுபடுத்தல் என்பது பல்லாயிரக் கணக்கானோரை கிளர்ந்து எழச் செய்யும். 1956ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த 65 ஆண்டுகளாக இனக்கலவரங்களாலும் போராலும் நடந்த இழிவுகளை ஈழத்தமிழினம் அறிந்தேயிருக்கிறது. அவை எத்தனை வகைகளில்? எத்தனை இடங்களில்? நடந்தன ஒன்றா இரண்டா? எண்ணில் அடங்கா. 

இனக்கலவரங்களின் போது தமிழனாய்ப் பிறந்த குற்றத்திற்காக கொதிக்கும் தாரில் தூக்கி வீசியும், உயிரோடு தூபிகளில் கட்டி எரித்தும், வீட்டோடு எரித்தும், பொருளுக்காக நகைகளுக்காக கை கால்களை வெட்டியும் கற்பை அழித்தும் மனங்களித்தனரே. தமிழரின் பொருளாதாரத்தைச் சிதைத்துச் சின்னாபின்னம் ஆக்கினர். அந்நாளில் போர் ஆயுதங்களைக் கனவிலும் நினைத்தறியாத, கையில் எடுத்து அறியாத பச்சிளம் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் எனக் கொன்று குவித்தனரே!

ஈழத்தமிழ் இளைஞரின் சிறந்த அறிவையும் ஆற்றலையும் தரப்படுத்தல் எனும் போர்வையில் கிள்ளி எறிந்து இழிவு செய்தனரே! நம்மினத்தின் அறிவுச் சுரங்கமாய் இருந்த யாழ்நூலகத்தை எரியூட்டியது ஏன்? அது இழிவு இல்லையா? இவ்வாறு இகழ்வோரின் பின் சென்று கைகட்டி வாய் புதைத்து வாழ முடியுமா? அதனையே திருவள்ளுவர் இக்குறளில் 'என்மற்று இகழ்வார் பின்சென்று நிலை?' எனக்கேட்கிறார்.

ஈழத்தமிழினம் தன்மானத்துடன் வாழ்வதற்கு கொத்துக் குண்டுகளாலும் இரசாயனக் குண்டுகளாளும் முள்ளிவாய்க்கால் மண்ணும் அதில் இருந்த எல்லா உயிர்களும் வெடித்துச் சிதறி பற்றி எரிந்ததே! தமிழரின் குருதி, நீர் நிலைகள் எங்கும் ஆடியதே! பனைமர உச்சியிலும் படிந்ததே. அந்நிலையிலும் இனமானங்காக்க முள்ளிவாய்க்கால் மண்ணில் செந்நீரால் பாய்விரித்துக் வீரக்களமாடி கண்ணீரில் நாம்மிதக்க அன்று மாவீரர்களாய் வீரவரலாறு படைத்து தம்முயிர் கொடுத்த அனைவரையும் போற்றுவோம்.

இனிதே,

தமிழரசி.

Wednesday 21 August 2019

நீரும் நிலமும் வசமானால்



இலைகள் கூறும் கதைகேளு
மலர்கள் காட்டும் நிறம்பாரு

வாவி தோரும் அலையடிக்கும்
வானின் தோற்றம் அதில்தெரியும்

நீரும் நிலமும் வசமானால்
நீணில மெங்கும் வளமாகும்

இயற்கை சொல்லும் பேரறிவை
எளிதில் படிக்க முடியாது

இயற்கையை இரசித்து வாழ்ந்திடின்
இன்பங்கள் யாவும் எமதாகும்

மயனே! இயற்கை உன்சொத்து
இயற்கையின் நாதம் இறையாகும்

இயற்கை இறையை உள்வாங்கி
இன்ப உணர்வில் கரைத்திடெடா!

இயற்கை வாழ்வின் நெறிநடந்து
வையம் வாழ வழிகாட்டு!

இனிதே,
தமிழரசி.
20/07/19

குறிப்பு:
பேரன் மயனுக்கு மலர்கள், மரஞ்செடி கொடிகள் என்றால் உயிர். அதனால் அவனுக்காக எழுதியது.

Friday 2 August 2019

முப்பொருளின் நாயகியே மீனாட்சி



முப்பொருளின் நாயகியே மீனாச்சி
முழுதுணர்த்த உளமதனில் நில்லாச்சி
எப்பொரும் எவ்வுயிரும் உனதாட்சி
எமதிடரை நீயறிந்து போக்காச்சி
நற்பொருளை நல்லறிவை தாஆச்சி
நம்மிடையே அறமதனை வளராச்சி
தற்பொருளை வேண்டுவது ஏனாச்சி
தண்ணுமையே தேரேறி வாஆச்சி
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
கிளிநொச்சி நெயந்திநகர் மீனாச்சி அம்மன் கோயில் தேர்த்திருவிழா.