Saturday 4 May 2013

ஆலும் வேலும்


கொழும்பு காலிவீதியில் இருந்த ஆலமரம் 1880

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்பது முதுமொழி.

ஆலமரத்தை ஆல் என்றும், வேப்பமரத்தை வேல் என்றும் வேம்பு எனவும் கூறுவர். முதுமையால் ஆடி விழும் பற்களைக்கூட ஆலமரத்தின் பால் மீண்டும் உறுதியாக நிலைத்து நிற்கவைக்கும். ஆதலால் ஆலமரப் பாலை முமைக்காலத்தில் பல்லில் தடவி வந்தனர். ஆலமரத்தின் பாலுக்காக ஆலமரத்தை  நம் முன்னோர் பேணி வளர்த்தனர். ஆலமரவிழுதினை வெட்டி, ஒரு நுனியை நன்னி மிருதுவாக்கி பல் துலக்கினர். அப்படி பல் துலக்குவதால் ஆலவிழுதில் உள்ள ஆலமரப்பால் பற்களின் ஈறுகளுக்குள் சென்று பற்களில் கிருமிகள் தொற்றுவதை தடுத்ததுடன், பற்களுக்கு உறுதியையும் அளித்தது பற்களின் வெண்மைக்கு காரணமாகவும் இருந்தது. குழந்தை இல்லா மலட்டுத்தன்மையை ஆலம் பழம் போக்கியது. 



ஆதலால் நம்முன்னோர் பரந்து வளரும் மரமான ஆலமரத்தை ஒவ்வோர் ஊருக்கும் குறைந்தது ஒரு மரம் என வளர்த்தனர். அது ஊரார் சுற்றமான காற்றை சுவாசிக்க, அதிக ஒட்சிசனையும் நிழலையும் தந்து நிலத்தடி நீரையும் காப்பாற்றியது. அந்நிய ஆட்சியாளர்களின் வரவால் எம் முன்னோரின் அரிய கண்டுபிடிப்புகளை நாம் நம் அறியாமையால் தொலைத்து அல்லல்படுகிறோம். அடுக்குமாடிக் கட்டிடங்களை கட்டுவதற்காக எத்தனை ஆயிரம் ஆலமரங்களை மண்ணோடு மண்ணாக ஆக்கி இருக்கிறோம். ஆலமரங்களைப் பேணிக்காக்கவேண்டும் என்று எப்போ புறப்படுப் போகிறோம்?

ஆலமரத்தின் பயனை நாம் அறியாவிட்டாலும் வேப்பமரத்தின் பயனை ஓரளவு அறிந்திருக்கிறோம். ஏனெனில் நம் முன்னோர் ஆலமரத்தை ஊருக்கு ஒன்று, இரண்டு என வளர்த்த போதும் வேப்பமரத்தை வீட்டுக்கு ஒன்று இரண்டு என வளர்த்தனர். ஆதலால் எமக்கு வேப்பமரத்தின் அருமை தெரியும். வேப்பம்பூ வடகம், வேப்பிலைத் துவையல், வேப்பெண்ணெய், வேப்பம்பிசின், வேப்பம்சவற்காரம், வேப்பம்பற்பசை, வேப்பம்பற்பொடி என்று எத்தனையோ விதத்தில் வேம்பை பாவிக்கிறோம். எமது பற்களில் இரத்தம் வடிதலையும், முரசு கரைதலையும் வேம்பு போக்க வல்லது. ஒரு சாண் நீளமான  வேப்பங்குச்சியின் ஒருபக்க நுனியை நன்னி பல் துலக்கிவர பல்லால் இரத்தம் வடிதல் நிற்கும். பல்லின் ஈறுகளில் தங்கும் கிருமிகளை கொல்லும். பல் வெண்மையாகும்.



எந்தக் கோடை வெய்யிலிலும் ஆலமர நிழலும், வேப்பமர நிழலும் குளிர்மையை அள்ளித்தந்ததை அநுபவத்தால் ஆராய்ந்து அறிந்தே நம்முன்னோர் அவற்றை முதன்மை மரங்களாகப் பேணினர். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்றதுபோல் இப்போது ஆலம்பட்டையை பற்பசையில் சேர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதுவும் வரவேற்கத் தக்கதே. எனினும் ஆலமரப் பாலே பல்லுக்கு உறுதியைக் கொடுப்பது என்பதை வருங்கால எமது குழந்தைகளாவது ஆய்வு செய்து உலகிற்கு சொல்வது நன்று. அந்த நேரம் ஆலமரங்களை அருங்காட்சியகத்தில் தேடாது இருப்பதற்கு நாம் வழிவகுக்க வேண்டும். எம்மைப்போல் பல்வைத்தியரிடம் பல்லைக்காட்டாது, நம் சந்ததியினர் இருப்பதற்கு ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி தரும் என்னும் தாரக மந்திரத்தை எம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வழிநடத்துவோம். அதற்கு வழிவகுக்க ஆலையும் வேலையும் நடுவோமா! எமது வாழ்வை வளமுடன் எல்லோருடனும்கூடி மனிதராய்வாழ மரம் வளர்ப்போம்!!

மனிதராய்வாழ மரம் வளர்த்தால் மட்டும் போதாது. எமது மனித மனம் பண்பட வேண்டும். அதற்கு முதலில் பிறரது மனதை புண்படுத்தாது வாழ, எமக்கு கற்றுத் தரவல்ல அரிய நூல்களை நாம் தேடிக் கற்கவேண்டும். மனித நெஞ்சத்தில் உண்மையை, நேர்மையை, அன்பை, பண்பை வளர்ப்பன தமிழில் உள்ள அரிய நூல்களாகும். அவற்றுள் மிக எளிமையாக மனிதவாழ்க்கையின் எல்லா தன்மைகளையும் எடுத்துக் கூறுவன இரண்டே. 

அந்த இரண்டு நூல்களையே மேலேயுள்ள முதுமொழி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி எனச் சொல்கிறது. அது இரண்டு அடியால் ஆன திருக்குறளை இரண்டு என்றும் நாலு அடியால் ஆன நாலடியாரை நான்கு என்றும் சொல்கிறது. இரண்டு அடியால் ஆன ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் கொண்டதே திருக்குறள். நான்கு அடியால் ஆன நாநூறு பாடல்களை உடையதே நாலடியார். இவை இரண்டையும் நன்கு ஆராய்ந்து கற்றால் நீங்கள் சொல்லும் சொற்கள் உறுதியானவையாக இருக்கும். 

உலக நேயத்துடன் எவரையும் மதித்து வாழவேண்டுமா? நாலடியாரையும் உலகப் பொதுமறையாம் திருக்குறளையும் உங்கள் கண்போல் பேணிக் கற்றுக்கொள்ளுங்கள்.

‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்று முதுமொழி புகன்ற எமது மூதாதையர் முழுமையானவர்களே!
இனிதே, 
தமிழரசி.

2 comments:

  1. ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி பாலும் தேனும் உடலுக்குறுதி வேலும் மயிலும் உயிருக்குறுதி"

    ReplyDelete
    Replies
    1. நன்று, மகிழ்ச்சி.

      Delete