Monday 20 May 2013

ஔவையார் பெண்ணை பேடு என்றாரா? - பகுதி 1


ஔவையார் பெண்ணைப் பேடு என்று சொன்னதாக சிலர் கருதுகிறார்கள். பெண்பாற் புலவர்களில் பலர் ஔவையார் என்ற பெயரில் வாழ்ந்திருக்கிறார்கள். ஔவை என்ற பெயரில் வாழ்ந்த ஔவையர் யாவருமே பேரறிவுடன் இருந்தவர்களே. பெண்ணாக இருந்த ஔவையர் எப்படி பெண்ணைப் பேடு என்பர்? எனவே எந்த ஔவையார் பேடு பற்றிச் சொன்னார்? அந்த ஔவையாரும் பெண்ணை பேடு என்று சொன்னாரா? என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.

கிறிஸ்துவுக்கு முன்பு வாழ்ந்த சங்ககால ஔவையாரே காலத்தால் மூத்தவர். அவருக்கு பின் வாழ்ந்த ஔவையரைப் பற்றிப் பார்க்க முன்னர் விநாயகரை தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பரஞ்சோதியாரை உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்க விரும்புகிறேன். பரஞ்சோதி என்பவர் நரசிம்மபல்லவனின் படைத்தளபதியாக   இருந்தார். அவர் கி பி 642ல் வாதாபிக்கு படையெடுத்துச் சென்று புலிகேசியை வென்றார். அங்கிருந்து வரும்பொழுது வாதாபியின் வெற்றியின் அடையாளமாக வாதாபிகணபதியான விநாயகரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார். அதனால் தான் என்னவோ மற்றக் கடவுளரைவிட பிள்ளையாரை எல்லா அழைப்பிதழ்களிலும் போட்டு, பட்டி தொட்டி எல்லாம் பறக்கவிட்டு எம் வெற்றியை இன்றும் கொண்டாடுகிறோம். 

அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாரே, இளமையில் பரஞ்சோதி எனும் இயற்பெயருடன் இருந்த பொழுது புலிகேசியை வென்றார். அந்தப் பரஞ்சோதியாரே தமிழர்க்கு விநாயகரை முதன்முதல் அறிமுகம் செய்து வைத்தார் என்பது வரலாற்றறிஞர் முடிபு. அதற்கு முன் தமிழர் விநாயகரை வணங்கியதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆதலால் கி பி 600களின் நடுப்பகுதியில் விநாயகர் வணக்கம் தமிழரிடம் பரவியது எனலாம். எனவே விநாயகரை சங்ககால ஔவையாருக்கு மட்டுமல்ல சங்ககாலப் புலவர் எவருக்குமே தெரியாது.


சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலமான கி பி 700களில் இன்னொரு ஔவையார் வாழ்ந்தார். அவர் விநாயகர் வணக்கம் தமிழரிடையே பரவிய பின்னர் வாழ்ந்தபடியால் விநாயகரை வணங்கி வந்தார். அந்த ஔவையார் ஒருநாள் விநாயகருக்கு பூசை செய்து கொண்டிருக்கும் போது சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான்பெருமாள் நாயனாரும் கைலாயம் செல்வதை அறிந்து, தாமும் அவர்களுடன் கைலாயம் செல்வதற்காக பதற்றத்துடன் விநாயகர் அகவலைப் பாடினார். அதைக்கண்ட விநாயகர், பதற்றப்பட வேண்டாம் என்றும் அவர்கள் கைலாயம் சென்றடைய முன்பு, ஔவையாரை கைலாயத்தில் சேர்ப்பதாகக் கூறி, அப்படியே செய்தாராம். அந்த ஔவையாரே 
“சீதக்களப செந்தாமைரைப்பூம் பாதச்சிலம்பும் பலவிசைபாட”
எனத் தொடங்கும் விநாயகர் அகவலை இயற்றியவர்.

கம்பர் வாழ்ந்த காலமாகிய கி பி 1200களில் ஒரு ஔவையார் வாழ்ந்தார். அவர் தனிப்பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார். அந்த ஔவையாரிடமே பழமுதிர்சோலையில் முருகன் சுட்டபழம் வேண்டுமா? சுடாதபழம் வேண்டுமா? எனக்கேட்டு சுட்டபழம் கொடுத்தார் என்பர். அந்தக் கதை நம் எல்லோருக்கும் தெரிந்த கதையே. அப்போது முருகன் ‘அரியது என்ன?’ என ஔவையாரிடம் கேட்டதற்கு 
“அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது
அதனிலும் அரிது கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயல் அரிது
தானமும் தவமும் தான் செய்வாராயின் 
வானவர் நாடு வழி திறந்திடுமே”
என்று அவர் பாடிய பாடல் இது. 

இப்பாடலில் ஔவையார்
“அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது
அதனிலும் அரிது கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது” 
என்கிறார் அல்லவா? இதிலே வரும் 'பேடு என்ற சொல் பெண்ணைக் குறிப்பதாகவும், பெண்கள் பேடு நீங்கி அதாவது பெண் தன்மை நீங்கி - ஆண்களாகப் பிறந்தாலே ஞானமும் கல்வியும் கிடைக்கும் என்பது சிலரது கருத்து. பெட்டைக் கோழியைப் பேட்டுக்கோழி எனச்சொல்வதால் பெண்ணையே பேடு எனச்சொன்னதாக' நினைக்கின்றனர். அந்த எண்ணம் சரியா? இப்பாடலை இயற்றிய ஔவையாருக்கு முன் வாழ்ந்த சங்ககாலத் தமிழரும், ஏனைய சான்றோரும் ‘பேடு’ என்ற சொல்லை பெண்ணைக் குறிக்கவா பயன்படுத்தினர்? எனப்பார்ப்போம்.

சங்ககாலப் புலவர்களில் காலத்தால் மூத்தவர் தொல்காப்பியர். அவர் தமிழுக்கு தொல்காப்பியம் என்ற ஒப்பற்ற இலக்கணநூலைத் தந்த பெரும் புலவர். அவர் தொல்காப்பியத்தின் சொல் அதிகாரத்தில் சொற்கள் உண்டாகும் முறையை கிளவியாக்கம் [கிளவி என்றால் சொல்] எனும் தலைப்பில் தந்துள்ளார். 

அதில்
“ஆண்மை திரிந்த பெயர் நிலைக்கிளவி
ஆண்மை அறிசொற்கு ஆகுடன் இன்றே”         - (தொல்.சொல்: கி.ஆ: 12)
என்று கூறியுள்ளார்.

ஆண்மை திரிந்த - ஆண்தன்மையில் இருந்து மாறிய; 
பெயர் நிலைக்கிளவி - பெயரை உறுதிசெய்யும் சொல்;
ஆண்மை அறிசொற்கு - ஆண் என்பதை அறியத்தரும் சொல்லுடன்;
ஆகுடன் இன்றே - பொருந்தி வராது;

அதாவது ஆண்தன்மையில் இருந்து மாறியவரது பெயரை உறுதிசெய்யும் சொல், அவர் ஆண் என்பதை அறியத்தரும் சொல்லுடன் பொருந்தி வராது என்கிறார். ஆண் தன்மையில் இருந்து திரிந்து மாறியவர்களா பெண்கள்? தொல்காப்பியர் யாரை ஆண் தன்மையில் இருந்து திரிந்தவர் என்று சொன்னார்?

ஆண்மையை விட்டு பெண்தன்மையை விரும்புவோரையும், பெண்மையைவிட்டு ஆண்தன்மையை  விரும்புவோரையும் நம் முன்னோர் பேடு என்றும் அலி என்றும் அழைத்தனர். தம் தன்மையில் இருந்து மாறுவோரை பேடு என அழைத்ததை நன்னூல்
“பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மை விட்டு பெண் அவாவுவ பேடு பெண்பால்”         
                                                        - (நன்னூல்: 264)
என்கின்றது.

அவாவுவ என்றால் விரும்புவது. பெண்ணாகப் பிறந்து பெண்தன்மையை விட்டு, ஆண்மையை விரும்பும் பேடு 
பேடு + அன் = பேடன் (ஆண்பால்) ஆகவும் 
ஆணாகப் பிறந்து ஆண்தன்மையை விட்டு, பெண்மையை விரும்பும்பேடு
பேடு + இ = பேடி (பெண்பால்) ஆகவும் அழைக்கப்பட்டனர்.

தாம் பிறந்தபோது இருந்த தன்மையில் இருந்து மாற்றம் அடைவோரை இக்காலத்தில் திருநங்கையர் என்றும் அரவாணிகள் என்றும் அழைக்கிறோம். எனவே பேடுபற்றி தொல்காப்பியம், மகாபாரதம், திருக்குறள் போன்ற நூல்களும், சான்றோரும், கல்வெட்டுகளும்  சொல்வதை  தொடர்ந்து பார்ப்போம்.
இனிதே,
தமிழரசி.

5 comments:

  1. சிறப்பாக எழுதியுள்ளீர்கள். நன்றி

    ReplyDelete
  2. மிகச் சிறப்பாக உள்ளது. தொடரட்டும் ஆராய்ச்சி

    ReplyDelete
  3. அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete