Tuesday 24 February 2015

இசைத்தமிழின் இராகம் - 2


தமிழ்நாட்டை ஆண்ட தெலுங்கு மன்னர்களாகிய விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தின் [கி பி 1529] பின் நடந்த இசை வளர்ச்சியைப் பற்றியே பெரும்பாலானோர் பேசியும் எழுதியும் வருகின்றனர். அப்படி எழுதுவோர் கர்நாடக இசையையும் இந்துஸ்தானி இசையையும் முதன்மைப்படுத்தி எழுதிவருகின்றனர். இந்த இருட்டடிப்பு எதற்கு என்பது எனக்குப் புரியவில்லை? இசை என்பது மனிதப் பண்பாட்டின் கூறுகளில் ஒன்று. இசைப் பண்பாட்டில் மூழ்கிய மனித இனங்களில் தன் மொழியின் கூறாக - பகுதியாக - முத்தமிழில் ஒன்றாக இசையைப் போற்றி வருகின்றது தமிழினம். அப்படியிருக்க மிக நீண்ட வரலாற்றை உடைய தமிழிசையின் வரலாற்றை மூழ்கடிப்பது சரியா?

இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னரே ஏழிசை நூற்சங்கம் நடத்தியவர்கள் தமிழர்கள். அவர்களிடம் பெருங்குருகு, பெருநாரை, நூல், வரி, சிற்றிசை, பேரிசை, தாளவகை யோத்து போன்ற பல இசை இலக்கண நூல்கள் இருந்ததை பண்டைத் தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் எடுத்துச் சொல்கின்றன. அதனால் தமிழ் மொழிக்கு மட்டுமல்லாமல் தமிழ் இசைக்கும் இலக்கணம் எழுதி அதன்படி இசைக்கருவிகளை இசைத்தும் பாடியும் வந்தவர்கள் தமிழர் என்பதற்கு எத்தனையோ நூல்களும் இசைக்கருவிகளும் பாடல்களும் சான்றாக இன்றும் இருக்கின்றன. 

அத்துடன் தமிழிசையானது பெருநரங்களிலும் சிற்றூர்களிலும் பரவிக் கிடந்ததைக் காணமுடிகின்றது. அரசன் முதல் ஆண்டிவரை ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி இசையை அறிந்திருந்தனர். அக்கால கட்டத்தில் இந்த நிலைப்பாடு உலகின் எந்த மொழி இசைக்கும் இருக்கவில்லை எனலாம்.  இசை அறிந்த புலவர்களை, பாணர்களை, பாடினிகளை தமிழ் அரசர்கள் போற்றிப் பாதுகாத்ததோடு பொருட்களை வாரிக் கொடுத்தனர் என்பதையும் பண்டைத் தமிழ் இலக்கிய வரலாறு சொல்கிறது.

ஆனால் சிலர் இந்துஸ்தானி இசைக்கும், கர்நாடக இசைக்கும் பரத முனிவர் எழுதிய பரதசாஸ்திரம் இலக்கண நூலாகும் என்கின்றனர். உண்மையில் பரதசாஸ்திரம் ஒரு நாட்டிய இலக்கண நூலாகும். நாட்டிய சாஸ்த்திரம் என்பதே அதன் பெயர். பரதமுனிவர் இயற்றியதால் பரத சாஸ்த்திரம் என்றும் கூறுவர். நாட்டியத்துக்கு தேவையான நாட்டியக் கரணங்களையும், பாவங்களையும், அலங்காரம், உடை போன்றவற்றையும், இசை நுணுக்கங்களையும், இசைக்கருவிகளையும் அரங்க அமைப்பையும் நாட்டிய சாஸ்த்திரம் கூறுகிறது. எனவே இந்துஸ்தானி இசையும் கர்நாடக இசையும் எப்போ பிறந்தன என்பதைச் சிறிது பார்ப்போமா?

மத்திய ஆசியாவிலிருந்து வந்து முகலாய பரம்பரையை இந்தியாவில் உருவாக்கியவர் சாகிருதீன் பாபர் ஆவார். இந்த பாபரின் மகன் ஹுமாயூன் [கி பி 1530] ஆப்கானிஸ்தான், அன்றையவட இந்தியா [இன்றைய பாக்கிஸ்தான் உட்பட] ஆகியவற்றை ஆண்ட பேரரசனாவான். இவனது காலத்தில் ஆப்கானிய இசையும் வட இந்தியக் கோயில்களில் பாடப்பட்ட துருபத் இசையும் சேர்ந்து உருவாகிய இசையே இன்றைய இந்துஸ்தானிய இசையாகும். அதாவது கி பி 1530 க்கு பின்னர் முகலாய மன்னர்களின் சபையில் பாடப்பட்ட இசையில் இருந்து பிறந்ததே இந்துஸ்தானிய இசை.

வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை கருநாடகர்கள் என அழைத்தார்கள். அதாவது இப்போது பிரிந்து ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என்றிருக்கும் யாவற்றையும் கருநாடகம் என்றே அழைத்தனர். அதுவே வரலாறுகாட்டும் உண்மையாகும். கர்நாடக இசையின் பிதாவாக [தந்தையாக] போற்றப்படுபவர் புரந்தர தாசர் ஆவார். அவர் பிறந்ததே கி பி 1484ம் ஆண்டில் தான். அத்துடன் இன்றைய கர்நாடக இசைக்கு மூலமாகக் கருதப்படும் நூல் சங்கீதரத்னாகரமாகும். அதை எழுதிய சாரங்க தேவர் கி பி 13ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சையில் வந்து தங்கியிருந்து தேவரப் பண்களை ஆய்வு செய்து எழுதிய நூல் சங்கீதரத்னாகரம். அதில் இராகங்களை அதன் பிரிவுகளைக் கூறும் அவர் இராகங்கள் எப்படிப் பிறக்கும் என்னும் கணிதக் கூறுபாடுகளைக் கூறவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் கர்நாடக சங்கீதம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்கவுமில்லை. அதனாலேயே கி பி 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த புரந்தரதாசரை கர்நாடக இசையின் தந்தை என்கின்றனர்.

இந்துஸ்தானி சங்கீதத்தையும் கர்நாடக சங்கீதத்தையும்  முதன்மைப்படுத்திக் கூறுவோர் சொல்வதில்  ஒன்று ‘ராகம்’ என்ற சொல் தமிழில் இல்லை என்பதாகும். பண்டைத்தமிழர் தாம் பயன்படுத்திய 103 பண்களில் நிருபதுங்கராகம், நாகராகம், கின்னராகம், சீராகம், தக்கராகம், சோமராகம், மேகராகம், துக்கராகம், மேகராகக்குறிஞ்சி, சூர்தூங்கராகம், பழந்தக்கராகம், நட்டராகம், மாதுங்கராகம் ஆகிய பண்களின் பெயர்களை ராகம் என்ற சொல்லைச் சேர்த்தே அழைத்திருப்பதைக் காணமுடிகின்றது. தமிழ் இசையின் பண்களைப்பற்றி கி பி 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டும் மிகவிரிவாகச் சொல்கிறது.

சிவனை நாம் சங்கராபரணன் என்றும் காம்போதியன் என்றும் கூறுகிறோம் அல்லவா? அது போல 'அந்தளி ராகம்' போலும் வடிவானவர் சிவன் என திருநாவுக்கரசு நாயனார் தனது தேவாரத்தில் சொல்கிறார்.
“எந்தளிர் நீர்மை கோலமேனி என்று இமையோர் ஏத்தப்
பைந்தளிர்க் கொம்பர் அன்ன படர்கொடி பயிலப் பட்டுத்
தஞ்சடைத் தொத்தினாலுந் தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளி ராகம் போலும் வடிவர் ஆரூரனாரே” 

அந்தளி என்பது என்ன? பண்ணா? இராகமா? பண்டைத்தமிழரின் 103 பண்களில் ஒன்றாக ‘அந்தாளி’ கூறப்பட்டுள்ளது. அதனையே நாவுக்கரசர் அந்தளி ராகம் என்கின்றார். திருநாவுக்கரசர் கி பி 660ல் வாழ்ந்தவர்.

தொல்காப்பியருக்கு முன்வாழ்ந்தவர் அகத்தியர் என்பது இலக்கிய ஆய்வாளர்கள் கண்டமுடிவு. அவர் கி மு 1200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பர். அகத்தியர் காலத்தில் தமிழிசை மட்டுமல்ல ராகம் என்ற சொல்லும் இருந்ததை
தக்கராக நோதிறம் காந்தாரம் பஞ்சமமே
துக்கம் கழிசோம ராகமே - மிக்கதிறற்
காந்தாரம் என்றைந்தும் பாலைத் திறமென்றார்
பூந்தார் அகத்தியனார் போந்து”
என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் எடுத்துக்காட்டும் இப்பாடல் காட்டுகிறது.

மேலே உள்ள பாடலில், பாலை பண்ணின் திறங்கள் ஐந்தின் பெயர்களையும் அகத்தியர்  தக்கராக நோதிறம், காந்தாரப் பஞ்சமம், துக்கம், கழிசோமராகம், காந்தாரம் என்று கூறினார் என்கிறது. இதில் கூறப்படும் பண்களாகிய தக்கராகம், கழிசோமராகம் இரண்டும் ‘ராகம்’ என்ற சொல்லைக் கொண்டே முடிகின்றன. அகத்தியர் காலத்திலேயே இராகம் என்ற சொல் இருந்ததை இப்பாடல் எடுத்துச் சொல்கிறது. அதுமட்டுமல்ல இப்பாடல் சொல்லும் துக்கம், துக்கராகம் என்றும் காந்தாரம், காந்தாரராகம் எனவும் அழைப்பட்டது. 

அப்படியிருக்க கி பி 16ம் நூற்றாண்டில் பிறந்த இந்துஸ்தானிய சங்கீதமும் கி பி 13ம் நூற்றாண்டில் தவழ்ந்து 15ம் நூற்றாண்டில் வளரத்தொடங்கிய கர்நாடக சங்கீதமும் ‘ராகம்’ என்ற சொல்லைத் தமிழுக்குத் தந்தனவா!? கொஞ்சம் சிந்தனை செய்தால் என்ன? 
இனிதே,
தமிழரசி.

Thursday 5 February 2015

ஒன்னுமோ உலக வாழ்க்கை!


மனையையே எண்ணி நாளும்
        மயங்கியே திரிய வைத்து
தினையையே விதைத்து நாளும்
        தின்றிடும் வாழ்வு போல்
வினையையே விண்டு நாளும்
        விழலிலே வாழும் போது
உனையையே மறந்து போனால்
        ஒன்னுமோ உலக வாழ்க்கை
இனிதே,
தமிழரசி.

Tuesday 3 February 2015

குறள் அமுது - (101)


குறள்:
“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து”                                 
                                            - 1032

பொருள்:
உழவர் உழவுத் தொழிலைச் செய்யமுடியாதோரைத் தாங்குவதால் உலகில் வாழ்வோர் யாவருக்கும் அச்சாணி போன்றவராவர்.

விளக்கம்:
இத்திருக்குறள் உழவு என்னும் அதிகாரத்தில் வருகின்றது. நிலத்தை உழுது பயிர் செய்வோரே உழுவார்.  உழவுத்தொழிலைச் செய்வதற்கு உடலில் ஆற்றல் இருக்க வேண்டும். உடலாற்றல் இல்லாதவர்களால் உழவுத்தொழிலை செய்ய முடியாது. அத்தகையோர் உழவுத்தொழிலை செய்ய முடியாது எழுந்து செல்வாராதலால் எழுவார் என்று இக்குறளில் திருவள்ளுவர் கூறுகிறார். உழவுத் தொழிலைச் செய்யாது உலகில் வாழும் மனிதரை உழவர்களே தாங்குகிறார்கள். ஏனெனில் மனிதவாழ்வுக்கு மிகவும் தேவையான உணவு, உடை இரண்டும் உழவுத்தொழிலாலேயே கிடைக்கிறது.  ஒரு வண்டிச்சில்லின் அச்சாணி எப்படி வண்டிலைத் தாங்குகின்றதோ அப்படி உலகோருக்கு வேண்டிய உணவு, உடை இரண்டையும் கொடுத்து உழவர்கள் தாங்குகிறார்கள்.

பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு அவ்வண்டியின் அச்சு உறுதியாக இருக்க வேண்டும். வண்டியின் கட்டமைப்பையும், ஏற்றும் பொருட்களையும், வண்டி ஓட்டுபவரையும் தாங்குவது அச்சு. அச்சில் பூட்டியிருக்கும்  வண்டிச் சில்லுகள் கழன்று போகாது காப்பது அச்சாணியாகும். அந்த அச்சாணியை திருவள்ளுவர் இக்குறளில் ஆணி என்கிறார். அதனைக் கடையாணி என்றும் சொல்வர். வண்டி ஓடும் வேகத்துக்கு அமைய நிலத்தோடு ஏற்படும் அதிர்வலைகளையும் சில்லின் சுழற்சியின் போது ஏற்படும்  உராய்வுகளையும் அச்சாணி தாங்குகிறது.

பார்ப்பதற்குத் தேவையற்ற பொருள் போல் அச்சாணி தோன்றினாலும் அது இல்லை எனின் வண்டிச் சில் கழன்று விழ வண்டி பொருட்களோடு சாய்ந்து கிடக்கும். வண்டியையும் வண்டியின் ஓட்டத்தையும் தாங்கி, வண்டி இயங்க உதவும் அச்சாணி போல் உலகில் வாழ்வோரின் இயக்கத்துக்கு அச்சாணியாக இருப்போர் உழவரே.

உலகில் வாழும் மனிதரின் இயக்கத்திற்கு சக்தி வேண்டும். அந்த சக்தியைத் தருவது உணவே. மனிதரின் உணவுக்கு வேண்டிய தானியங்களை பயிரிட்டு; ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து பால், தயிர், நெய், முட்டை போன்ற உணவுகளையும் சேர்த்து தருபவர்கள் உழவர்களே. உழவுத்தொழிலைச் செய்து உழவர்கள் உணவைத் தராவிட்டால் உலகில் வாழும் மற்றைய மனிதரின் நிலை என்னாகும்? நாட்டைவிட்டு நகரைவிட்டு காட்டுக்குச் சென்று காயும் கனியும் மானும் மரையும் தேடவேண்டி இருக்கும்.

உலகின் காலநிலை மாற்றங்களில் இருந்து மனித உடைலைக் காப்பது உடைகளே. உடைகளுக்கு வேண்டிய பருத்தி, பட்டு, செம்மறி ஆட்டின் மயிர் போன்ற பலவற்றை உழவர்களே தந்து உதவுகிறார்கள். அவர்கள் இல்லையேல் மனிதன் ஆடையின்றி பனியிலும், குளிரிலும் வெப்பத்திலும் தவித்து விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்திருப்பான்.

எனவே உலகில் வாழ்வேருக்கு உணவை, உடையைக் கொடுத்து தாங்கிக்காப்பதால் உழவர்கள் அச்சாணி போன்றவர்கள் எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.

Monday 2 February 2015

எடா! அடடா!!


தமிழில் எத்தனையோ இனிய சொற்கள் இருக்கச் சிலர் நம் காது கைக்கும்படி இனிமை இல்லாத சொற்களையே பேசி கேட்போர் மனதை நோகச் செய்வர். அப்படிப்பட்டோருக்குத் திருவள்ளுவர்
“இனிய உளவாக இன்னாது கூறல் 
கனியிருக்க காய்கவர்ந் தற்று”
எனக் கூறுகிறார்.

திருவள்ளுவர் கூறியது போல் 'எடா' என்ற சொல்லும் எமக்கு இனிமை தராத சொல்லே. எடா! என்றும் எடேய்! எனவும் அடேய்! என்றும் அழைத்தால் எமக்கு கோபம் வருவது இயல்பு. அதனால் எடா! என்ற சொல்லைக் கீழ்த்தரமான சொல்லாகப் பலரும் கருதுவர். 

ஆனால் ஒருதாய் தன் மகனைப்பார்த்து அன்போடு “என்னடா! இவ்வளவு நேரமாய் சாப்பிடாமல் இருக்கிறாய் வந்து சாப்பிடடா” என்று எத்தனை எடா போட்டு கூப்பிட்டாலும் மகனுக்கு கோபமோ எரிச்சலோ வராது. காயாய் இன்னாத சொல்லாய் இருந்த ‘எடா’ தாயின் அழைப்பில் கனியாய் இனிய சொல்லாய் மாறி தாயன்பை மிளிரச் செய்கிறது.

தாயைப்போல் யாரெல்லாம் எவ்வெப்போது எடா போட்டு அழைத்தால் கேட்பவர்க்கு கோபம் வராது என்பதைச் சொல்லும் பாடலைப் பார்ப்போம்.
கடாவிடுஞ்சமர்க் களத்திலும் மடந்தையர் இடத்தும்
விடாமலோதிய கவிதை பாராட்டிய இடத்தும்
நடாவிடுஞ்சிறு பிள்ளையை நவிலும் இடத்தும்
அடாவெனுஞ் சொல்லை இன்சொலாய் மதிப்பர்

போர்க்களத்தில் எதிரியைச் சாடும் போது தன்னோடு சேர்ந்த போர் வீரரை உயர்வு தாழ்வு பார்க்காது விளித்து ‘எடா’ என்று பேசுவது வழக்கம். அதனால் போர்க்களத்தில் ‘எடா’ இனிமையாய் இருந்து வீரத்தைக் கூட்டுகிறது.

காதலன் காதலியை, கணவன் மனைவியை எடா என அழைப்பதும் இன்பமே. விடாமல் கவிதை பாடியதைக் கேட்ட போதும் அடடா! என்ன கவிதை எனப் பாராட்டும் போதும் இனிமையைத் தரும். மெல்ல மெல்ல கால்பதித்து தத்தி தத்தி நடை போடும் சிறு குழந்தையை ‘என்னடா!’ எனக் கேட்பதும் இனிமையாகும். இப்படி எடா - அடா என்ற சொல்லை இன்சொல்லாய் மதித்துப் போற்றுவர். காயாய் கசக்கும் சொல்லும் கனியாய் இனிப்பதுண்டு.
இனிதே, 
தமிழரசி.

Sunday 1 February 2015

முத்தமிழ் இன்பம்

எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
[வீரகேசரி, கொழும்பு  - 1939]



இருந்தமிழே உன்னாலிருந்தேனே தேவர்
விருந்தமுதம் ஆயிடினும் வேண்டேன்”
என்கிறார் சங்கச் சான்றோராய கபிலதேவர்.

“தமிழுக்கு அமிழ்தென்று பேர் அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என பொற்காலக் கவிஞர் பாரதிதாசனும் புகன்றுள்ளார்.

“பொருப்பிலே பிறந்து தென்னன் 
        புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே இருந்து வைகை 
        ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் 
        நினைவிலே நடந்து ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை
        மருங்கிலே வளருகின்றாள்"
                             - (வில்லி பாரதம்: சிறப்புப்பாயிரம்) 
என நந்தீந்தமிழுக்கு ஒரு சரித்திரச் சுருக்கமும் இருக்கிறது.

இத்தகைய அரிய செந்தமிழ் - இயல், இசை, நாடகம் என மூன்று திறம்பட இயல்கின்றது. இவை மூன்றும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களைப் பற்றியும் துருவித் துருவி ஆராய்ந்து போதிக்கின்றன. தமிழ் இலக்கண இலக்கிய நூற்கடல்கள் யாவும் இயற்தமிழின் பாற்பட்டன. அறிவுத்துறைகளை - ஒழுகலாறுகளை, மனிதவாழ்வுக்கு இன்றியமையாத பண்பாடுகளை எல்லாம் எடுத்து இயம்புவது இயற்றமிழ் என்க.

இடார்வின் அவர்களின் அறிவுண்மைகளுக்கு நந்தீந்தமிழ்ச் சான்றோர்கள் அடியெடுத்து வைத்துள்ளனர்.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய் …………
எல்லாப் பிறப்பும் பிறந்து இழைத்த”
தாக மணிவாசகர் திருவாசகம் செய்துள்ளார். வள்ளுவப் பெருந்தகையாரும் தெள்ளுதமிழ் மறை புகன்று உலகத்தார் உள்ளுவதெல்லாம் உரைத்து முப்பாலில் நான்கறம் புகட்டிப் பேரின்பப் பெருவாழ்வுக்குத் தமிழ் மக்களை வழிநடத்திச் சென்றனர்.

கபிலதேவரும் சங்கச் செய்யுட்கள் மூலம் தமிழனின் நாகரிக உயர்வைச் சித்தரித்து பலப்பல அமிர்தக் கவிதைகள் புகன்று வைதனர். அவற்றுள் ஒன்று அவர் பாரிமகளிர்க்கு சொன்ன 
“மாயோன் அன்ன மால்வரைக் கவான் 
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம்மலைக் கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்ச்சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந் தளவல் வேண்டும் மறுத்தரற்கு
அரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே”

என்னும் அருமந்த செய்யுளாகும். ஒரு கன்னிப் பெண் எவ்வாறு தனக்கு ஒரு வரனைத் தேடவேண்டும் என ஆராய்கிறார், அந்தக் கபிலத்தமிழ் முனிவர்.

தன்னுடன் பின்னி வாழ ஒருவனைத் தெரிவதானால் முதலில் அவனது குணங்களை ஆராயட்டுமாம். பின்னை தம் அன்னை, தந்தை, சகோதரர், பெரியோரிடமும் ஆராயட்டுமாம். அத்துடன் அறிவு அறிந்து - அறிவு மயங்காது அளவளாவட்டுமாம். பெரியோர் வரிசையில் நின்று நாடி நட்புப் பூண்க - நட்புப் பூண்டபின் நாடற்க. இவற்றை - இந்த அறிவுரைகளை எவராலும் மறுக்க முடியாது என்றும் வற்புறுத்துகின்றார்.

இவ்வரிய அறிவுரைகளை எல்லாம் கற்பதன் பயன் மெய்யறிவறிந்து பேரானந்தப் பெருவாழ்வை எய்தவே.
“கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்”
எனத் தேவரும் அருளிச் செய்தனர்.

முத்தமிழின் முடிபெல்லாம் மக்களை மாக்கள் நிலையின் நின்று உயர்த்தி, ஒழுகலாறுகளைப் பண்படுத்தி உடல் வளர்த்து உயிர் பூரித்து, உவகை இன்பம் பெறவாழ்ந்து, பிறவா நெறியை நல்கும் வீட்டின்பம் பெறச் செய்வதேயாம்.

“தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாக” மனிதன் எத்தனையோ கோடி யோனி பேதங்களில் பிறந்து இறந்து இருவினை புரிந்து மனிதப் பிறவி பெற்றே பக்குவமடைகின்றான்,” என்கிறார் மணிவாசகர்.

இயற்றமிழை உடலென எடுத்துக் கொண்டால் அதனைப் பல வழிகளிலும் இசைவிப்பது எது? அது, உயிர். அந்த உயிர் போன்று இயற்றமிழ் மூலம் மக்கள் அறிந்து கொண்ட ஒழுகலாறுகளை அனுபவங்களை உயிராய் நின்று இசையைச் செய்வது இசைத் தமிழ் என்க. ஆன்மாவின் குரலே இசை என்பர் சான்றோர். தெய்வத்தை அடைய இசைத்தமிழ் தோன்றியது என்றுங்கூடச் சொல்லலாம்.

கண்ணனின் குழலோசை கைலாசபதியை உருக்கியமையால் உலகினைக் காக்கும் பதத்தினை பெற்றனன் என்பர். அந்த முரளீகானம் கோபியர்களையும் இன்பமயக்கத்தில் சொக்க வைத்ததுடன் அமையாது எல்லா உயிர்களையும் வேறுபாடற்று மெய்மறக்க வைத்தது. புலியும் பசுவும் ஒருங்கு நின்று இசை கேட்டனவாம். மயில்கள் மீது மாநாகங்கள் மயங்கி வீழ்ந்து மெய்மறந்தனவாம். இசைத்தமிழில் இசையாத உள்ளங்களே இல்லை எனலாம்.

இராவணன் இசைத்தமிழின் தலைவன் எனக் கருதப்படுகின்றான். 
“ஏழிசையாழ் இராவணனே”
எனத் திருஞான சம்பந்தரால் வாழ்த்தப்பட்ட பேரருளாளன். பெரிய சிவபக்தன். ஆணவமலையின் கீழ் அகப்பட்டு வீணாகானத் தமிழ் செய்து பெருவரம் பெற்றவன்.

பொன்னான பொதியமலை முனிவர் இசைத்தமிழ் மூலம் பெறற்கரிய பெரும் பேறு பெற்றவர். கோடானுகோடி பக்தர்கள், அருளாளர்கள் தமது இன்பப்பொழுது போக்குக்காக இறைவனைத் தம்முள் இசைவிக்கும் கருவியாக இசைத்தமிழையே பெரிதும் போற்றினர். உடலுழைப்பாளருங்கூட தனது வருத்தம் நீங்க இசைத்தமிழையே துணைக்கொண்டனர். இன்று ஒவ்வொரு மக்களும் இசைத்தமிழை மாந்தி இன்புறுகின்றனர்.

இசையுடன் கூடிய இயல் ஆன்மாவில் பதியுந் தன்மையை அடைகின்றது. பண்டைத் தமிழ் மன்னர்கள் இசையில் வல்ல ஒரு பிரிவினரையே வாழ்வித்தனர். பெரும்பாணர், சிறுபாணர் என்போர் அத்தகையினர் என்க. அவர்களில் விறலியர் விறல் தோன்ற - இசையின் இயலின் கருத்தை உடலால் வெளிப்படுத்தி நடமாடினர்.

பெருநாரை, பெருங்குருகு, முதுனாரை, முதுகுருகு போன்ற இசை நூல்களும் முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், நூல் முதலிய நாடக நூல்களும் பண்டைத் தமிழர் இசைக்கும் நாடகத்திற்கும் கொடுத்த மதிப்பை எமக்கு அறிவிப்பன ஆயின. சமயகுரவர் நால்வரும் பிற்காலத் தமிழ் இசைக்குப் புத்துயிர் ஈந்த புனிதர்களாவர். 
“தமிழோடிசைபாடல் மறந்தறியேன்” 
என்றல்லவா திருநாவுக்கரசர் அருளியுள்ளார்.

இயல், இசை இவ்வளவிற்றாக நாடகத்தமிழ் இயலையும் இசையையும் கொண்டு மேலும் ஒருபடி உயர்ந்து உயிர் போன்ற இசைக்கும், உடல் போன்ற இயலுக்கும் முழுத்தெளிவும் கொடுத்து இறை போன்று நடம்புரிவதாகின்றது. அந்தத் தமிழ் இல்லையேல் உலக வாழ்வு பூரணம் அடையாது. நாடகன் கடந்த கால நிகழ்ச்சிகளைச் ஒன்பான் சுவைகள் மூலம் மக்கள் முன் நடித்துக் காட்டி எல்லா மக்களுக்கும் பூரண அறிவு பெறவைக்கின்றான்.

இயல் இசையால் இழுந்த ஒழுகலாறுகளை மக்களுக்கு மிக மிக நுணுக்கமாய் உணர்ச்சி வேறுபாடுகளுடன் உணர்த்த எழுந்ததே நாடகத் தமிழ். அதனை

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம் “
எனப் பண்டைதமிழ் இலக்கண ஆசிரியரான தொல்காப்பியரும் சொல்லிப் போந்தார்.

இறவனுக்குமே ‘நடனராசர்’ - ‘மாணிக்கக்கூத்தர்’ - ‘ஆனந்தக்கூத்தர்’ எனப்பல அன்புப் பெயரிட்டுப் போற்றினர். 
“முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்” 
என மலைகிழவோனை அருணகிரி பணிகின்றார். ஔவைத் தமிழம்மையார் நான்கு அமுது ஈந்து முத்தமிழையும் விநாயகப் பெருமானிடம் இரந்து வைத்திருக்கிறார்.

உலக இன்பம் முற்றி பேரின்பம் பெற வழிவகுப்பன நம் முன்னோர் போற்றிய முத்தமிழுமே. எனவே இவை இன்பமெனில் யாம் சொல்ல வல்லது இது ஒன்றே அது முத்தமிழ் இன்பமாம்.