Wednesday 24 August 2022

எந்தமிழர் யாவர்க்கும் என்றும் அருள்வோனே!


சித்தி விநாயகனே சித்தத் தமர்வோனே
              செந்தி லாண்டவன் சந்நிதி யிருப்போனே

பக்தி தருவோனே பழவினை தீர்ப்போனே

              பாவியர் நெஞ்சிலும் பரிந்துவந் துறைவோனே

முத்திக்கு வித்தாகி முளைத் தெழுந்தோனே

  மூவர்க்கும் முதல்வனாய் முன்னின்று காப்போனே

எத்திக்கும் தொழ நின்ற ஓங்காரவடிவனே

  எந்தமிழர் யாவர்க்கும் என்றும் அருள்வோனே

இனிதே,

தமிழரசி.

Sunday 14 August 2022

ஆனந்த நடனம் கண்டேன்


ஆனந்த நடனம் கண்டேன் அன்றொரு நாள் 
            அந்திப் பகல் அதனில் என்பக்கலில் நின்றே
வானந்தக் கருமுகில் கண்டு வண்ண தோகை
            விரித் தாடும் மாமயில் மீ திவர்ந்து
தானந்த மில்லா தன்மை யாளன் தண்டாயுதன்
            தன்னந் தனியனாய் யெனை நாடி வந்து
தேனந்த சுவையூட்டு தமிழ்  பாவின் இசை
            தேர்ந்து தெளிந்து தந்து மகிழ்ந் தனனே!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
அந்திப்பகல் - பகல் முடியும் நேரம் 
வானந்தக்கருமுகில் - வானத்திலுள்ள கருமுகில்
மாமயில் - பெரிய மயில்
இவர்ந்து - ஏறி
தானந்தமில்லா - முடிவில்லாத
தண்டாயுதன் - முருகன்
தேனந்த - தேன்போன்ற
தேர்ந்து - ஆராய்ந்து
தெளிந்து தந்து - தெளிவடையும்படி தந்து

Friday 12 August 2022

யாழ்ப்பாணத் தமிழரும் யானைகளும்


இவ்வுலகில் மனிதன் தோன்றுவதற்கு 50 மில்லியன் வருடங்களுக்கு முன்பே யானை இனங்கள் தோன்றிவிட்டன. ஆனால் மனிதர் கடந்த ஒரு மில்லியன் வருடங்களாக யானைகளை அடக்கியாள்கின்றனர். மனிதர் காட்டில் வாழ்ந்தகாலத்திற் கூட யானைகளும் சுதந்திரமாகக் காட்டில் வாழ்ந்தன. 50 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் யானைகளை கடந்த 500 ஆண்டுகளில் மனிதன் அழிவின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளான். 


அதனால் உலகத்தில் உள்ள யானை இனங்களை அழிவில் இருந்து காப்பாற்ற 2012 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் August 12ம் திகதி உலக யானைகள் நாள் எனக் கொண்டாடுகின்றனர். அத்துடன் தனக்கு மட்டுமே இவ்வுலகம் சொந்தம் எனக்கருதி இயற்கையை இயற்கையோடு இணைந்து வாழும் உயிரினங்களை அழிக்கும் மனிதருக்கு அறிவூட்டும் நோக்கமும் இதில் அடங்கியிருக்கிறது.


இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த பண்டைத் தமிழரின் வாழ்வியலோடு யானைகளும் பின்னிப் பிணைந்து வாழ்ந்தன. அதனை சங்க இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. சங்ககால அரசர் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாற்படை என நான்கு படைகள் வைத்திருந்தனர். போர்க்களம்  ஒன்று, அங்கே ஓர் ஆனை வெறி கொண்டு போர்வீரன் ஒருவனைத் தாக்க வருகின்றது. அவன் அந்த யானையைப் பார்த்து சிரித்து

தானால் விலங்கால் தனித்தால் பிறன் வரைத்தால்

யானை எறிதல் இளிவரலால் யானை

ஒருகை யுடையது எறிவலோ யானும்

இருகை சுமந்து வாழ்வேன்

- பழந்தமிழ் பாடல்

ஒரு விலங்கு அதுவும் தனித்து வருகிறது. பிறன் ஒருவனிடம் அடிபணிந்து வாழ்கிறது. அப்படிப்பட்ட யானையைக் கொல்வது எனக்கு இழுக்காகும். யானையோ ஒருகையுடையது. யானோ இரண்டு கைகளை சுமந்து வாழ்கிறேன்எனக்கூறி பெருமிதத்தோடு நின்று யானையைக் கொல்லாது ஓடிப்போக விடுகின்றான். என்னே! பண்டைத்தமிழர் வீரம்!!


அரசர்கள் வைத்திருந்த பெரிய யானைப் படை போர் முனையில் போர் புரிந்ததோடு பகைவர் நாட்டு செல்வங்களை அழிக்கவும் சூரையாடவும் கட்டிடங்களை தகர்த்து எறியவும் செய்தன. தோல்வியடைந்த அரசர்கள் திறையாகச் செலுத்திய பொருட்களை இழுத்துவரவும் அவை உதவின. 


பகைவர் நாட்டு காவலுடைய நீர்நிலையை தனது யானையைக் கொண்டு பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி உடைத்ததை புறநானூறு

“……. நின் தெவ்வர் தெஎத்துத்

துளங்கு இயலாற் பணை எருத்தின்

பாவடியாற் செறல் நோக்கின்

ஒளிறு மருப்பின் களிறு அவர

காப் புடைய கயம் படினை - (புறநானூறு: 15: 6 - 10)

எனச் சொல்கிறது.


சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர் அறுபதிற்கும் மேற்பட்ட பெயர்களால் யானையை அழைத்திருப்பதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இன்று வாழும் எமக்கு இத்தனை பெயர்களை அறியமுடியுமாயின் அன்று எத்தனை பெயர்களால் யானைகளை அழைத்து மகிழ்ந்தனரோ! 


அன்றைய யாழ்ப்பாணத் தமிழரின் வாழ்வியல் சங்கத் தமிழரின் வாழ்வியலுக்குச் சற்றும் குறைந்ததாக இருக்கவில்லை. அதனைச் சங்க இலக்கியங்களும் அந்நாளைய ஈழத்து நூல்களும் ஈழத்தில் கிடைத்துவரும் கல்வெட்டு ஆதாரங்களும், முத்திரை மோதிரம், மட்பாண்டங்கள் போன்ற தொல்பொருட்களும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. 


யாழ்ப்பாணத்தில் யானைகளா? யாழ்ப்பாணத்தில் யானைகளைக் கண்டவருண்டா? யானைக்காடுகள் உண்டா? யாழ்ப்பாணத் தமிழருக்கு யானைகளுடன் என்ன தொடர்பு? எனப் பல கேள்விகள் எழலாம். யாழ்ப்பாணத் தமிழருக்கும் யானைகளுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருந்தது. அதனை யாழ்ப்பாணத் தமிழர் இன்றும் அன்றாடம்  பயன்படுத்தும் அவன் என்ன பெரிய கொம்பனா!” என்னும் சொற்றொடர் உறுதிப்படுத்துகிறது. ஓர் ஆனைக்கூட்டத்தை உயரமும் வலிமையும் மிக்க கொம்பன் யானை வழிநடத்தும். அத்தகைய கொம்பன் யானையை [தந்தம் உள்ள யானை] கொம்பன் என அழைப்பர். கொம்பன் யானைகள் வாழாத இடத்தில் இப்படி ஒரு சொற்றொடர் உருவாகி இருக்குமா?


யாழ்ப்பாணத்தில் உடுப்பிட்டி என்று ஓர் ஊர் இருப்பது எம்மில் பலருக்குத் தெரியும். உடுப்பிட்டி தொண்டைமான் ஆற்றுக்கு அருகே இருக்கிறது. அங்குள்ள ஓர் இடத்தின் பெயர் கொம்பந்தறை.  தமிழில்கொம்பன் + தறை’ = கொம்பந்தறை என்று புணரும். கொம்பன் யானைகள் மேய்ந்து திரிந்த தறையே 'கொம்பந்தறை' என்பதை விளங்கிக் கொள்ளலாம். அவ்ஊரில் பல சிறிய குளங்கள் இருக்கின்றன. அதில் ஒரு குளத்தின் பெயர் 'ஆனைவிழுந்தான் குளம்'. அதன் காரணம் என்ன? 


ஆனைப்பந்திஎன்று ஓர் இடமும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. பந்தி என்றால் கூட்டம். யானைக் கூட்டம் நிறைந்திருந்த இடமும் யானைகள் தூங்கும் சாலையும் ஆனைப்பந்தி என்ற பெயரால் அழைக்கப்பட்டன. 

பாடலங் கரி வைகிய பந்தியும்

- (அரிச்சந்திர புராணம்: நகர்: 3)

ஆதலால் இன்றைய ஆனைப்பந்தி என்ற ஊர் இருக்கும் இடத்தில் அந்நாளில் யானைக்கூட்டமும் யானைகள் தூங்கும் சாலையும் இருந்ததை அறியலாம்.


ஈழத்தில் கமத்தொழில் செழிப்புற்றிருந்த காலம் அது.

பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறியுள்ள

ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்

காவிரிப்பூம்பட்டினதிற்கு ஈழத்திலிருந்து உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதைச் சொல்கிறது.


யானையால் உழுதல் 19ம் நூற்றாண்டு

யானைகள் 18ம் 19ம் நூற்றாண்டில் கூட ஈழத்தின் வயல்களை உழுதும் விளைந்த நெற்கதிர்களை சூடு மிதித்தும் [போரடித்து] இருக்கின்றன. ஏனெனில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை மாடுகளை விடவும் யானைகள் விரைவாக உழுதன. முல்லைத்தீவு பேராற்றங்கரை மணிபூங்குன்றின் நாட்டுப்பாடல்

பெண்: மாடுகட்டிப் போரடிச்சா

                       மாளாது என்னு சொல்லி

    ஆனகட்டி போரடிச்ச

                       ஆளான சிங்கமல்லோ!

         நாட்டுப்பாடல் (மணிபூங்குன்று - பேராற்றங்கரை

                                           - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

எனச்சொல்வதும் வலுச்சேர்க்கிறது.


செங்கரும்பும் செந்நெல்லும் செவ்வாழையும் தென்னங்கீற்றும் யானைகள் மகிழ்ந்து உண்ணும் உணவுகளாகும். இவை அந்நாளில் யாழ்ப்பாண குடாநாட்டில் மிகுந்தே இருந்தன. அவற்றை உண்ண வன்னிக் காட்டு யானைகள் கண்டாவளை, உருத்திரபுரம், கிளிநொச்சி, பரந்தன், பூநகரி பக்கங்களால் வந்து ஆனையிறவு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வந்து திரிந்தன. இறவு என்னும் சொல் தேன்கூடு, இறால், எல்லை, மிகுதி, இறக்கம், செல்லுகை/செல்லுதல் என்னும் கருத்துக்களைத் தரும். மேற்கே யாழ் நீரேரிக்கும் கிழக்கே ஆனையிறவு நீரேரிக்கும் இடையே காட்டு யானைகள் ஏறி இறங்கிச் சென்ற வழித்தடமே ஆனையிறவு என அழைக்கபட்டது.


இதுபோல் ஆனையிறவில் அந்நாளில் யானைகள் ஏறி இறங்கிச் சென்றன


வாகனங்கள் இல்லாத அக்காலத்தில் பாரமான பொருட்களை ஏற்றி இறக்கவும், அரண்களை, கட்டிடங்களை, பாலங்களை, குளங்களைக் கட்டவும் தொழிற்துறையிலும் யானைகளின் பங்களிப்பு யாழ்ப்பாணத் தமிழருக்கு தேவையாக இருந்தது. அதனால் திருவள்ளுவர் சொன்னது போல்

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று - குறள்: 678

மதநீர் ஓடும் கன்னத்தையுடைய பழக்கப்பட்ட யானையால் காட்டு யானைகளை பிடித்துக் கட்டுவதற்கும் ஆனையிறவு வழிவகுத்துக் கொடுத்தது.


யானைக்குக் கோட்டைகட்டிய பெருமை யாழ்ப்பாணத் தமிழருக்கு உண்டு. அதனை யாழ்ப்பாணத்தில் உள்ளஆனைக்கோட்டைஎன்ற ஊரின் பெயர் இன்றும் பறைசாற்றுகிறது. ஈழத்தில் காலத்தால் முந்திய ஊர்களில் ஒன்று எனும் பெருமையும் ஆனைக்கோட்டைக்கு இருக்கிறது. தொல்லியல் ஆய்வின் போது பெருங்கற்காலப் பண்பாடு காணப்படும் இடங்களில் கந்தரோடை, ஆனைக்கோட்டை ஆகிய இரண்டும் காலத்தால் முந்திய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. கந்தரோடையில் கிடைத்த பொருள்களின் கரிமக் காலக் கணிப்பின்படி [Carbon dating C14]  கந்தரோடை 3000 ஆண்டுகளுக்கு முந்தி இருந்த ஊராக [கி மு 1000] பென்னற் புரோன்சனின் [Bennet Bronson] ஆய்வால் அறியப்பட்டுள்ளது. 


எனினும் ஆனைக்கோட்டையில் கிடைத்த இரு ஈமச்சின்ன மையங்களில் 5’ உயரமுள்ள இரு எலும்புக் கூடுகளும் அவற்றைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த மட்பாண்டங்களில் இருந்த பொருட்களும் முத்திரையும், முத்திரையில் உள்ள தமிழி[தமிழ் பிரமி] எழுத்துக்களும் ஈழத்துத் தொல்லியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 2300 வருடங்களுக்கு முந்திய எலும்புக் கூடுகளும் முத்திரை மோதிரத்தின் முத்திரையும் கிடைத்ததால் ஆனைக்கோட்டை தொல்லியல் ஆய்வில் முதன்மை அடைந்துள்ளது. பேராசிரியர் கா இந்திரபாலா, பேராசிரியர் பொ இரகுபதி, பேராசிரியர் ப புஸ்பரட்னம், பேராசிரியர் சி பத்மநாதன், ஐராவதம் மகாதேவன், ஆர் மதிவாணன் போன்ற பலரும் இது பற்றி எழுதியுள்ளனர்.


ஈழத்தின் தெருவிலே யானைகள் சிறு வீட்டையே இழுத்துச் சென்றன. அதனை தாவும் மனை எனும் கருத்தில் தாமனை என அழைத்தனர். அந்தத் தாமனை உணவுப் பொருட்களையும், உடைகளையும், குழந்தைகள் தூங்கும் கட்டிலையும், ஆயுதங்களையும், யானைக்கு வேண்டிய தீனையும் (உணவு), சுமந்து சென்றது.  கவிகைஎன்பவள் யானையால் தாமனையை ஓட்டிச் சென்ற கணவனை குழந்தையுடன் தாமனையுள் உறங்க விட்டு, யானைக்கு நெல்லும் கரும்பும் கொடுத்து களைப்பாற விட்டாள்.

தாமனை


அத்தாமனைகள் பணக்காரரிடமே இருந்தன. அரசுக்குச் சொந்தமான தாமனையில், மருத்துவர்கள் சென்று மூலிகை ஆராய்ச்சி செய்தனர். ஈழத்தில் உள்ள மணித்தலை என்ற இடத்திலிருந்து நரிவெரூட்டித்தலை [தனங்கிளப்புக்கு அருகே] வரையும் மூலிகைச்செடிகள் வளர்த்து ஆய்வு செய்துள்ளனர். பண்ணையிலும் இவ்வாய்வு நடந்திருக்கிறது. மருத்துவர் நோயாளியையும், ஆராய்ச்சிக்கு வேண்டிய பொருட்களையும் தாமனையில் ஏற்றிச் சென்றனர். இவற்றை புங்குடுதீவில் கோட்டை கட்டி வாழ்ந்த வீரமாதேவி [மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியன் மகள்] அவளது நாட்குறிப்பில் கூறியுள்ளாள்.


யாழ்ப்பாணத் தமிழரின் வாழ்வில் யானைகளும் பின்னிப் பிணைந்து வாழ்ந்தன என்பற்கான ஆதரங்கள் சிலவற்றைத் தொட்டுக் காட்டினேன். யானைகளை யாழ்ப்பாணத் தமிழர் மறந்தாலும் ஊர்களின் பெயர்கள் அவற்றைத் தாங்கி நின்று தம் கதைகளைச் சொல்கின்றன.


இனிதே,

தமிழரசி.


குறிப்பு

இந்த ஆக்கத்தை 12/08/2012 [August 12] அன்று உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்ட பின்னர் எழுதினேன். கந்தரோடை என்பதை காரைநகர் எனத் தப்பாகப் பதிவு செய்தமைக்கு வருந்துகிறேன். அதனைத் திருத்தியுள்ளேன். கிட்டத்தட்ட பத்து வருடங்களின் பின்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.