Saturday 25 May 2013

தாமரையில் தவளை இருந்தால் என்ன?


மலர்களிலே நிறைந்த தேனும் நல்ல மணமும் அழகும் உள்ள மலர் தாமரை மலராகும். யாராவது ‘பூ’ என்று சொன்னால் தாமரைப்பூவையே நம் முன்னோர் நினைத்தனர். அதனை 
“செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி
பாதம் போற்றும் வாதவூர் அன்ப
பா எனப்படுவது உன் பாட்டு
பூ எனப்படுவது பொறிவாழ் பூவே”          
                               - (நால்வர் நான்மணிமாலை: 40)
நால்வர் நான்மணிமாலையின் கடைசிப்பாடலான இப்பாடலால் அறியலாம்.

























பாட்டு என்றால் மாணிக்கவாசகரின் திருவாசகம், பூ என்றால் வரிவண்டு வாழும் பூ - அதாவது தாமரைப் பூ என்கிறது இப்பாடல். பொறி என்பது வரிவண்டு. வரிகளையுடைய வண்டு எது? தேனீயே வரிவண்டாகும். தேனீக்களில் பலவகையுண்டு. அவற்றில் ஒன்று வரிவண்டாகும். இந்த வரிவண்டுகள் பெரும்பாலும் நீர்நிலைகளில் வளரும் தாமரை போன்ற மணமுள்ள மலர்களை நாடிச்சென்று தேனை எடுக்கும். பல பொறிமுறைகளை அறிந்து அவை தேன் கூடுகளைக் கட்டுவதால் பழந்தமிழர் தேனீயை 'பொறி' என அழைத்தனர். அதனால்
“பூ எனப்படுவது பொறிவாழ் பூவே 
என்கிறார். 

தேனீ, தேன் கூட்டில் அல்லவா வாழும். ஆனால் இப்பாடலோ தேனீ தாமரைப்பூவில் வாழும் என்கிறது. தாமரைப்பூவில் தேனீக்கள் தேன் அருந்துவதைப் பார்த்திருக்கும் நம்மில் எத்தனை பேர் அவை அதில் வாழ்வதை பார்த்திருக்கிறோம்? எனவே இப்பாடல் சொல்வது சரியா? என்பதை கடைச் சங்கப் புலவரான நக்கீரரிடம் கேட்டுப் பார்ப்போமா? 
“மாடம் மலிமறுகின் கூடல் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
கண் போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன்”             
                              - (திருமுருகாற்றுப்படை: 71 - 77)

என்று திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றைக்காட்டி, அங்கே முருகன் இருப்பதாகக் கூறுகிறார்.

முருகன், ‘மாடம் [உப்பரிகை, நிலாமுற்றம் (balcony)] உள்ள வீடுகள் நிறைந்த[மலி] தெருக்களையுடைய[மறுகு] மதுரையின்[கூடல்] மேற்கே[குடவயின்], கரிய நிறமான சேறு[இருஞ்சேறு] உள்ள அகலமான[அகல்] வயலில் மலரும்[விரிந்து வாய் அவிழ்ந்த] முள்ளிருக்கும்[முள்] தண்டுள்ள[தாள்] தாமரைப் பூவிலே இரவில் தூங்கி[துஞ்சி], அதிகாலையில்[வைகறை] தேன்மணக்கும் [கள்கமழ்] நெய்தற்பூவை ஊதி, சூரியன் உதித்ததும்[எல்பட] கண் போல மலர்ந்திருக்கும் கருங்கற்குளங்களிலுள்ள மலர்களில் சென்று அழகிய சிறகையுடைய[அஞ்சிறை] வண்டின் கூட்டம்[அரிக்கணம்] இரையும்[ஒலிக்கும்] திருப்பரங்குன்றில் உறைபவன்’ என்கிறார்.


இதில் நக்கீரர் கூறும் ஒரு விடயத்தை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ‘தேன் எடுக்க வரும் வண்டுகள் தாமரைப்பூவிலே இரவில் தூங்குகின்றன’ என்று கூறுகிறாரே, ஏன் அவை தேன் கூட்டில் தூங்காமல் தாமரைப் பூவில் தூங்குகின்றன? பூக்களில் சென்று தேனெடுக்கும் வேலைக்காரத் தேனீக்கள்  தமது தேன்கூடுகளில் இருந்து பல மைல் தொலைவில் இருக்கும் தேனுள்ள பூக்களில் சென்று தேனைச் சேகரிக்கின்றன. அப்படிச் செல்லும் தேனிக்கள் சூரியன் மறையமுன் மீண்டும் தேன்கூடுகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்படும். அப்போது காலநிலை வெப்பத்திற்காக (இரவு நேரம் வெப்பநிலை குறைவதால்) இரவில் கூம்பி பகலில் விரியும் பூக்களில் தங்கி, இரவைக் கழிக்கின்றன. இப்போது தான் மேற்கு உலகநாட்டினர் இரவில் கூம்பும் தாமரை மலரினுள் வெப்பம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். பூக்கள் ஏன் பூச்சிகளைக் கவர்கின்றன என்பதை ஆராய்ந்த போது இதனைக் கண்டுபிடித்திருகிறார்கள். ஆனால் இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே தாமரை மலர் இரவில் கதகதப்பாக இருக்கும் என்பதை படுமரத்து மோசிகொற்றன் என்னும் சங்ககாலப் புலவர் கூறியுள்ளார்.  

அவர் தாமரை மலரின் வெப்பநிலையை மட்டும் அப்பாடலில் சொல்லவில்லை. பெண்களின் உடல் வெப்பநிலை - வெப்பகாலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் சிறிது வெப்பமாகவும் இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் தாமரை மலரை மட்டுமல்ல, பெண்களையும் நன்றாக ஆராய்ந்து பார்த்திருக்கிறார் போலும். 

தலைவன் ஒருவன் தன் நெஞ்சிற்கு சொல்வதாக, படுமரத்து மோசிகொற்றன் சொல்வதைப் பார்ப்போம். அவரது தலைவி, ‘உலக உயிர்களால் முற்றாக அறியப்படாத பொதியமலையில் இருக்கும் சந்தனம் போல கோடையில் குளிர்ச்சியாக இருக்கிறாள். பனிக்காலத்திலோ, வெப்பத்தை வாங்கும் சூரியக்கதிர்கள் மறையக் கூம்பி, நுண்மையாக அசைகின்ற வெயிலை சேமித்த தாமரை மலரின் உள்ளிடத்தைப் போல சிறிது வெம்மையாக இருக்கிறாளாம்.



















“மன் உயிர் அறியாத் துன் அரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
வேனிலானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென
அலங்கு வெயிற் பொதித்த தாமரை
உள்ளகத் தன்ன சிறு வெம்மையளே!”      
                                          - (குறுந்: 376)

பாருங்கள்! இந்தப் பாடலில் அவர் 
“வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென
அலங்கு வெயிற் பொதித்த தாமரை
உள்ளகத் தன்ன சிறு வெம்மை”
என்ற வரிகளில் அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை, மிகவும் நுட்பமான தமிழ்ச்சொற்களால் சொல்லியிருக்கும் பாங்கு போற்றுதற்கு உரியதாகும். பண்டைய நம் சங்கச் சான்றோர் அறிந்து சொன்ன இத்தகைய விஞ்ஞான நுட்பங்களை நாம் அறியாது இருப்பது எமது அறியாமை இல்லையா?

தாமரைமலர் சேகரித்து வைத்திருக்கும் கதகதப்பான சூட்டின் காரணமாக தேனீக்கள் தாம் தங்கிப் போகும் இரவு விடுதிகளாக கூம்பிய தாமரை மலரைத் தேர்ந்து எடுத்தன போலும். 

தாமரை வளரும் சுனைகளையோ, குளங்களையோ, பொய்கைகளையோ பார்த்தறியாது எங்கோ தொலைதூரத்தில் காட்டில் தேன் கூடுகளில் பிறந்து வளர்வன தேனீக்கள். ஆனால் அவை தாமரை மலரின் மணத்தாலும் நிறத்தாலும் கவரப்பட்டு அவற்றைத்தேடி சின்னஞ்சிறு சிறகுகளால் பறந்து வருகின்றன. தாமரைப்பூக்கள் தம்மை நாடி தேடிவரும் தேனீகளுக்கு தேனையும் கதகதப்பான வெப்பத்தையும் கொடுக்கின்றன. தாமரையின் அழகு, நிறம், மணம், தேன், கதகதப்பு யாவற்றையும் எங்கோ பிறந்த தேனீ தேடிவந்து பெற்றுச் செல்கிறது. 

ஆனால் தவளையோ தாமரை வளரும் அந்தப் பொய்கையிலோ குளத்திலோ பிறந்து தாமரையோடு வளரும். அப்படி தாமரையோடு வளரும் தவளைக்கு தாமரைமலரின் அழகோ, நிறமோ, மணமோ, அதன் தேனின் சுவையோ, அது கொடுக்கும் கதகதப்போ தெரியாது. அதுபோல எத்தனையோ சிறந்த அறிஞர்களின் அறிவை, ஆற்றலை அவர்களுடன் சேர்ந்து பழகும் அறிவிலிகள் அறிவதில்லை. ஆனால் நாடுவிட்டு நாடு வாழ்வோராயும், வேற்று மொழிபேசுவோராயும் இருந்தாலும் கற்ற அறிஞர்கள், மற்ற அறிஞர்களை இனங்கண்டு ஒருவரோடு ஒருவர் பேசி நட்புக்கொண்டு இன்புறுவர் என்கின்றது விவேகசிந்தாமணி.


“தண் தாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடை இருந்தும் வந்து கமலமது உண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரைக்
கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே”

இந்தப்பாடல் சொல்வது போல எம்வீடுகளில் கணவனிடம் இருக்கும் ஆற்றலை மனைவியும், மனைவியிடம் இருக்கும் திறமையை கணவனும், தாம் பெற்ற பிள்ளைகளிடம் இருக்கும் சிறந்த வல்லமையைப்  பெற்றோரும் அறிந்து கொள்வதில்லை. ஒவ்வொருவரின் திறமையையும் மற்றவர் மதிப்பவராக வாழ்ந்தால் எல்லோரும் இன்பமாக வாழலாம். 

இந்த விவேகசிந்தாமணிப் பாடல் இன்றைய தமிழர்களாகிய எம்மை தவளைகளாகவும் பண்டைய சங்ககாலச் சான்றோரை தாமரை மலர்களாகவும் காட்டுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. எல்லிஸ் என்ற தனது பெயரை, எல்லீசன் என்ற தனித்தமிழ்ப் பெயராக மாற்றி வாழ்ந்த பிறநாட்டு அறிஞர் போன்ற எத்தனையோ பிறமொழியாளர்களைக் கவர்ந்த சங்க இலக்கியம் நம் தமிழ் மக்களால் புறக்கணிக்கப்படுவது அதனைக் காட்டுகிறது அல்லவா?

சொல்விளக்கம்:
எல்பட - சூரிய ஒளி படும்போது; சூரியன் உதிக்க 
வாங்குகதிர் -  வெப்பத்தை வாங்கும் சூரியக்கதிர்
தொகுப்பக் - மறைய 
ஐயென - நுண்மையாக
அலங்கு - அசைகின்ற
பொதித்த - சேமித்த  
உள்ளகத்து - உள்ளிடத்து 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment