நான் பெத்த மகனே!
தாயொருத்திக்கு ஒரே ஒரு மகனிருந்தான். அவளுக்கு மகனைத்தவிர சொந்தம் என்று சொல்ல வேறு யாரும் இல்லை. கடன்சுமையால், வாழ்வதா சாவதா என்று வாழ்க்கையோடு திண்டாடினாள். அதனால் ‘தான் இறந்து போனால் மகனாவது சுகமாக வாழ்வானா? அன்றேல் கடன் கொடுத்தவர்கள் வந்து அவனிடம் கடனைக் கேட்டால் அவன் என்ன செய்வான்?’ என நினைத்து பார்க்கிறாள். தான் நினைத்ததை மகனிடம் கேட்கிறாள்.
தாய்: நான் பெத்த மகனே! நாய்க்குட்டி தலையே!
நான் செத்தா நீ என்ன செய்வாய்?
மகன்: பனையில ஏறி பனம் பாணி குடிப்பேன்
தாய்: கடன்காரன் வந்தா?
மகன்: கடன்காரன் வந்தா கட்டிப்போட்டு அடிப்பேன்
தாய்: எப்படி அடிப்பாய்?
மகன்: சூத்துக்கும் பூத்துக்கும் சுழலச்சுழல
சூத்துக்கும் பூத்துக்கும் சுழலச்சுழல
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
என்று கூறிய மகன் ‘இரு கைவிரல்களையும் ஒன்றோடு ஒன்று பொருத்தி வைத்து, நடுவிரல் இரண்டையும் மாற்றி மாற்றி அங்கும் இங்கும் ஆட்டி ஆட்டி “சூத்துக்கும் பூத்துக்கும் சுழலச்சுழல சூத்துக்கும் பூத்துக்கும் சுழலச்சுழல” எனப்பாடிப் பாடி விளையாடத் தொடங்கினான். அந்தத் தாயும் தன் மகனின் அறியாமை எண்ணி தன் எண்ணத்தைக் கைவிட்டாள். ஆனால் அப்பாடல் சிறுவர்கள் விளையாடும் நாட்டுப்பாடலாக நிலைத்து நிற்கிறது.
No comments:
Post a Comment