Tuesday, 7 May 2013

எழுநூறும் தீதாய்விடும்


நாம் மேலை நாட்டு பண்பாடுகளின் தாக்கத்தால் நம் தமிழ் மூதாதையரின் எத்தனையோ அரிய நல்ல பண்பாடுகளை இழந்து கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று நன்றி மறத்தல். நன்றி என்ற சொல்லின் உண்மையான கருத்தை மறந்து, பொய்யான பகட்டு உடையை அதற்கு இட்டு, நன்றி என்பதை வாய்ச் சொல்லாக குறுக்கிவிட்டோம். எதுவித உணர்வும் சிந்தனையும் இல்லாது உதட்டு அசைவில் நன்றி வெளிப்படுகிறது. அப்படி வெளிப்படும் நன்றி என்ற சொல்லால் பயனடைவோர் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எமது மனதுக்கும் சிந்தனைக்கும் செயலுக்கும் தொடர்பில்லாச் சொல்லாச் மாறியதாலேயே நன்றியை மறந்து வாழ்கிறோம்.

ஒருவர் இன்னொருவருக்கு எவ்வித பயனும் கருதாது செய்யும் நன்மையை, நன்றி என்று நம் தமிழ் முன்னோர் அழைத்தனர். 
அதனாலேயே ஔவையாரும் மூதுரையில்
"நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்"
எனக்கூறினார்.

கவனியுங்கள்! ஒருவருக்கு பயன் கருதாது செய்வதே நன்றி (நன்மை). சொல்வது நன்றி ஆகாது. பயன் கருதாது செய்யப்படும் நன்மையானது பொருளாகவோ பணமாகவோ இருக்க வேண்டிய தேவை இல்லை. அது அன்பாக இருக்கலாம், உடல் உழைப்பாக இருக்கலாம், ஏன் கல்வியாகக் கூட இருக்கலாம். உண்மையான அன்பு என்றும் பயன் கருதி உண்டாவதில்லை. அன்பின் காரணமாகவே ஒருவர் தன் உடல் உழைப்பை மற்றவருக்குக் கொடுக்கிறார். 

அதுபோலவே கல்வியும். தன் நேரத்தையும் பசியையும் மறந்து, தன் குழந்தையாக எண்ணி அறிவுக் கண்ணைத் திறக்கும் ஆசிரியரைக் கூட மட்டமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்து என் பிள்ளைக்கு துரோகம் செய்தாய் எனச் சொல்லி அங்கலாய்க்கும் உலகம் இது. எந்த ஒரு ஆசிரியரும் எக்குழந்தைக்கும் பயன்கருதி கல்வி கற்பிப்பதில்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன் குழந்தைக்கு கொடுத்த அறிவுக்கே சூடான வார்த்தைகளால் செருப்படி என்றால் அன்புக்கும், உடல் உழைப்புக்கும் இன்றைய உலகம் என்ன மதிப்பு வைத்திருக்கிறது? எடை போடமுடியுமா?

ஒருவர் பயன் கருதாது செய்த நன்மையை யார் தீமையாகக் கருதுவர் என்பதை நாலடியார் எடுத்துக் கூறுகிறது.  ஒருவர் ஒரு நன்மை செய்திருந்தாலும் சான்றோர்கள் அதற்காக  அவர்கள் செய்கின்ற நூறு பிழைகளைக் கூட பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் கயவர்களுக்கு எழுநூறு நன்மை செய்து, தற்செயலாக அவர்கள் பார்வையில் ஒன்று தீதாகத் தெரிந்தாலும் செய்த எழுநூறு நன்மையும் தீமையானதாகவே கருதுவர் என்று நாலடியார் கூறுகிறது. எனவே நாலடியாரின் கூற்றுப்படி, ஒருவர் செய்த நன்றியை - நன்மையை மறப்பவர் கயவர் ஆவார். 
ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறும் சான்றோர் பொறுப்பர் - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீதாயின்
எழுநூறும் தீதாய் விடும்                                 - (நாலடியார்: 357)

ஆதலால் நமக்கு நன்மை செய்தோருக்கு நன்மை செய்யாவிடினும் தீமையாவது செய்யாதிருப்போம். தமிழர்கள் எந்த நூல்களைக் கற்காவிடினும் திருக்குறளையும் நாலடியாரையும் நேரங்கிடைக்கும் நேரங்களில் படித்துக் கொள்ளுங்கள். அவை இரண்டும் மனிதரை மனிதராக வாழவைக்கும் இரு கண்களாகும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment