Saturday 17 February 2024

ஏழைகள் கண்ணீர் துடைத்தருளே!


 உந்தன் அடி தொழ நினைந்தே 

  உருகிடும் அன்பர் உளம் உறைபவளே

கந்தம் கமழுநல் கமல மலர்ப்பதம்

  கண்டு களித்து கலங்குவ தெப்போ

சந்தம் மிகுசொற் செந்தமிழ் பாடல்

  சற்றே சாற்றிடும் வேளை வந்து

எந்தன் உயிர் ஏகாம்பரையாய் நின்று

  ஏழைகள் காண்ணீர் துடைத் தருளே! 

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

உந்தன் - உனது

உருகிடும் - மனம் நெகிழ்தல்

உளம் - உள்ளம்

உறைபவள் - இருப்பவள்

கந்தம் கமழ்தல் - மணம் வீசுதல்

கமல மலர் - தாமரை மலர்

பதம் - பாதம்/அடி

களித்து - மகிழ்ந்து

சந்தம் - குறித்த ஓசை மிகுந்து வருதல்

சற்று - கொஞ்சம்

சாற்றிடும் - சொல்லும்

வேளை - பொழுது/நேரம்

Friday 16 February 2024

மயன் மகள் - 1.7(சரித்திரத் தொடர்கதை)


சென்றது.....

நாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன். அவனின் மனைவி இளமதி. அவளை அவன் காதலித்த காலத்தில் உலக நாடுகளை சுற்றிவரும் வழியில் அவளுக்காக அரசமாசுணத்திடம் இருந்து மனோமயமாமணியை எடுத்தான். மாசுணத்தால் தாக்கப்பட்ட அவனது நண்பன் முகிலனின் உயிரைக் காப்பாற்ற பணிலத்தில் நாககடத்திற்கு எடுத்துச் சென்றான். செல்லும் வழியில் பறக்கும் யானைகளும் மீன்களும் பணிலத்தைத் துரத்தின.

இனி.......


வாலகன் வாழ்த்து


மாண்டனை பலவே! போர்மிகு குரிசில் நீ!

மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்

முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற

                                             - காப்பியாற்று காப்பியனார்[பதிற்றுப்பத்து]


நத்தத்தா! உனக்கு இவ்வளவு பயமா?” எனக்கேட்ட மயனைப் பார்த்து,


நான் பயப்பிடவில்லை. கொல்களிறு எம்மை நோக்கி வருகின்றது. கைகட்டி நிற்கவா சொல்கிறாய்? நீயோ பாயும் மானைப் பார்ப்பது போல பறக்கும் யானையை வேடிக்கை பார்க்கிறாய்என்றான் நத்தத்தன்.


அந்த யானைகளைப் பார்! காற்றை ஊடுருவிச் செல்வதற்காக துதிக்கையை நீட்டிப் பிடித்துப் பறப்பதோடு, பெரிய உடலை தூக்கிக் கொண்டு பறக்க அவை படும் துன்பத்தையும் பார். அவற்றால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது. எவ்வளவு வேகமாக அவை பறக்கின்றனவோ அவ்வளவு வேகமாக அவை களைத்துப் போகும். அத்துடன் அவற்றால் ஒரு குறித்த உயரத்திற்கு மேல் பறக்கவும் முடியாது. சிலவேளை அந்தப் பறக்கும் மீன்கள் எம்மைத் தாக்கலாம்.”


அது எப்படி மாயா! யானைகளால் பறந்து வரமுடியாத உயரத்தை, அதுவும் நீரில் வாழும் மீன்களால் பறந்து வரமுடியும்?”


பறக்கும் மீன்களில் இருவகை உண்டு. ஒன்று நீரில் வாழும். ஒரு குறித்த தூரம் பறக்கும். அடுத்தவகைப் பறக்கும் மீன்கள் நீரிலும் நிலத்திலும் வாழும். நன்றாகப் பறக்கக் கூடியது. எம்மைத் துரத்துபவை எந்தவகை என்பது தெரியவில்லைஎன்ற மயன், “ நாம் நாககடத்துள் சென்றுவிட்டால் எந்த மிருகமும் எம்மைத் தாக்காதுஎன்றான்.


நாககடம் என்ன தெய்வத்தன்மை பொருந்திய இடமா?”


தன் இசையால் உலக உயிரினங்களை மட்டுமல்ல கல்லையும் கனியவைத்த ஓர் உத்தமர் இந்த உலகில் வாழ்கிறார். அவரிடமே நாம் செல்கிறோம். அங்கே புலியிடம் மான்குட்டி பால்குடிக்குமாம், என்று இளமதி எனக்குச் சொல்லி இருக்கிறாள். அந்த அற்புதத்தை நாககடத்தில் பார்ப்போம்.”


நீ, நாகநாட்டு இளவரசன் ஆதலால் நாகமலை, நாகநளினி, நாககடம் என யாவற்றையும் நாக, நாக என்றே சொல்கிறாய், வேறு பெயர்களே கிடையாதா?”


நத்தத்தா! ஓர் எழுத்தாளனும் கவிஞனுமான நீயா இப்படிக் கேட்பது? நாகர்கள் தம் இனத்தின் மேலும் மொழியின் மேலும் பற்றுள்ளவர்கள் என்பது உனக்குத் தெரியாதா? நாககடத்தில் யானைகள் இருப்பதால் அப்பெயர் வந்தது என்று நினைக்காதே. ‘நாககடம்புமரங்கள் நாககடத்தில் நிறையவே இருக்கின்றன. ஆதலால் அதற்கு நாககடம் என்று பெயர். அதோபார்! நாககடம்பு மரங்களையும், அவற்றிலிருந்து மாலைபோல் அசைந்து தொங்கும் பூங்கொத்துக்களையும்என்றான்.


நாம் நாககடம் வந்துவிட்டோமா?” என்ற நத்தத்தன், அவர்களைத் துரத்திய மீன்கள் நாகநளினியுள் வீழ்வதையும் யானைகள் திரும்பிச் செல்வதையும் மயனுக்குக் காட்டினான்.


நாம் நாககடத்தின் எல்லைக்குள் நுழைகின்றோம். இங்கு நாம் மிகவிளிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நான் நாகநாட்டு இளவரசன் என்பது யாருக்கும் தெரியக்கூடாது. மலைச்சாதி நாடோடிகள் போல் நாககடத்துக்குள் செல்வோம்,” எனக்கூறிய மயன் நாககடத்தின் முன்பு விரிந்து கிடந்த நாகநளினிக் கரையோரம் இருந்த ஒரு குன்றின் மறைவில் பணிலத்தை மெதுவாக இறக்கினான். 


முகிலனின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த நத்தத்தன் தன்னிடமிருந்த மூலிகை மருந்தை நாக்கில் தடவி, மூக்கினுள் மருந்துப் புகையையும் புகவிட்டான். முகிலனின் மூச்சு சீராக வருவதைக் கண்டு மகிழ்ந்து, “முகிலன் இனி நம்மைவிட்டுப் போகமாட்டான்என்றான்.


மயனும் முகிலனின் நாடியைப் பிடித்துப் பார்த்து, நத்தத்தன் முதுகில் தட்டிக்கொடுத்தான். இருவரும் மலைச்சாதியினர் போல உடைமாற்றியதோடு முகிலனின் உடையையும் மாற்றினர்.


மயனைப் பார்த்து,”நாககடமே அமைதியாக உறங்கும் இந்த அதிகாலையில் நீ சொன்ன பெரியவர் வீட்டுக்கு எப்படி போவது? உனக்கு அவர் இல்லம் தெரியுமா? என்றான் நத்தத்தன்.


தெரியாது’, என தலையை அசைத்த மயன், “எல்லாம் மாஎந்தை இறைவன் அருளால் நலமாகவே நடக்கும் வா! போவோம்என்று தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு நடந்தான். 


நத்தத்தன் முகிலனைத் தூக்கிக் கொள்ள, இருவரும் அக்குன்றின் மேல் ஏறினர். குன்றின் மேல் நின்ற வெண்யானை ஒன்று மரத்தின் தளிரைப் பறித்துக்கொண்டிருந்தது. 


முதலில் ஏறிய நத்தத்தன் அந்த வெண்யானையைக் கண்டதும், “மாயா! நீ நாககடம் வந்தாயா? அல்லது தேவலோகம் வந்தாயா? தேவேந்திரனின் பட்டத்து யானைஐராவதம்அல்லவா இங்கு நிற்கிறதுஎன்றான். 


நத்தத்தன் சொல்வதைக் கேட்டு, தன் கவலையெல்லாம் மறந்து நகைத்த மயன், “இது தேவலோகமா? தேவர்களோ இந்த இடம் தமக்குக் கிடைக்காதா? எனச் சப்புக் கொட்டுகிறார்கள். இது தேவேந்திரனின் ஐராவதம் அல்ல. வெண்யானையாக இருப்பதால் இதனை ஐராவதம் என நினைத்தாயா? அதற்கு மூன்று தலைகள். நான் நினைப்பது சரியாக இருந்தால் இந்த யானை வாலகனாக இருக்கலாம்என்றான். 


இதன் பெயர் வாலகனா? யாருடைய யானை? 


அசுரர் குருவான சுக்கிராச்சாரியாரின் யானை வாலகன். மிகுந்த ஞாபக சக்தியும், அறிவுக்கூர்மையும் உடையது.”


சுக்கிராச்சாரியாரின் யானையா? நாம் சுக்கிராச்சாரியார் இடமா போகிறோம்? தேவர் குருவான வியாழனின் மகன் கயனே சுக்கிராச்சாரியாரிடம் குருகுலவாசம் செய்தல்லவா கல்வி கற்றான். அந்த மாமேதையிடமா போகின்றோம்? இது கனவில்லையே! அவரைப் பார்க்கும் பாக்கியம் இப்பிறவியில் எனக்குக் கிடத்திருக்கிறதா?” என்ற நத்தத்தனைப் பார்த்து, “வாழ்க்கையில் சிலவிடயங்கள் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமலேயே எமக்கு முன்னே வந்து அறிமுகமாகின்றன. அது ஏன் என்பதற்கான விடையை யாருமே அறிந்ததில்லை. நடப்பது நடக்கும்என்றான் மயன்.


மரத்தின் தளிரைப் பறித்துக் கொண்டிருந்த வாலகன் அவர்களைப் பார்த்துப்பிளிறியது’. அமைதியான அந்த அதிகாலை வேளையில் எழுந்த பிளிறல் நாககடம் எங்கும் ஒலித்து, நாகமலையில் எதிரொலித்து நின்றது. 


அவ்வொலியைக்கேட்ட நாககட மக்களில் பலர் விழித்துக் கொண்டனர். நாககட நகர்காவலர் வாலகன் நின்ற இடத்திற்கு விரைந்தனர்.


வாலகனோ துதிக்கையைத் தூக்கி வளைத்துப் பிடித்தபடி மயனை நோக்கி வந்தது. தலையை ஆட்டியபடி கம்பீரமாக அசைந்து வந்த தோரணையிலிருந்து அது தம்மைத் தாக்காது என்பதை மயன் உணர்ந்தான். மயனின் முன்னே வந்த வாலகன் மீண்டும் பிளிறி வாழ்த்தியது.


நாடோடியான மலைவாசிக்கு வாலகன் வாழ்த்துவதைக் கண்டு நகர்காவலர் திகைத்தனர். நகர் காவற்றலைவனுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் இருவரும் எதோ மருந்து கொடுத்து வாலகனை மயக்கி விட்டதாக நினைத்தான். யானைப் பாகனைப் பார்த்துநீ! எங்கே போயிருந்தாய்?” என்று அதட்டினான்.


மரத்தடியில் இருந்தேன். அவர்கள் வருவதைக் கண்டு வாலகன் அவர்களிடம் போனதுஎன்று யானைப்பாகன் சொன்னான்.


மயனை வாழ்த்திய வாலகன், மயனைத் தூக்கி தன் மஞ்சு மேல் வைத்துக் கொண்டு நாககடத்தின் பெருவீதி நோக்கிச் சென்றது.


பாகனும் வாலகனைத் தொடர்ந்து சென்றான்.


மயனை வாலகன் தூக்குவதைக் கண்ட நத்தத்தன்மாயாஎனக்கத்த எடுத்த வார்த்தையை தாமிருக்கும் சூழ்நிலையைக் கருதி மெல்ல அடக்கிக் கொண்டான்.


வாலகன் பெருவீதி நோக்கி போவதைப் பார்த்த நகர் காவல் தலைவன் தன் யானையில் இருந்தபடி நத்தத்தனைக் காட்டி, “ அவனையும் அவன் தூக்கி வைத்திருப்பவனையும் கொண்டு வாருங்கள் எனக் கட்டளையிட்டு வாலகன் பின்னே தன் யானையைச் செலுத்தினான். 


பெருவீதியிலிருந்த சுக்கிராச்சாரியரின் மாளிகை முன் வந்து நின்று பிளிறிய வாலகன், மயன் இறங்குவதற்கு ஏதுவாக நிலத்தில் மண்டியிட்டது.


மலைவாசிக் கோலத்தில் இருந்த மயனும் மண்டியிட்ட யானயைத் தடவிக்கொடுத்தபடி இறங்கினான். 


மயன் வாலகனைத் தடவுவதைக் கண்ட நகர்காவல் தலைவனுக்கு மயன் மேல் சந்தேகம் வலுத்தது. மயனைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்துநீ யார்?” என்றான்.


ஐயா! தெரியிதில்லிங்களா? நாங்க மலைவாசியீங்க. யிது போல யேத்தன யானைங்கள பாத்திருக்கீறேனுங்க. நமக்கு தீங்கு நெனைக்காத எந்தப் பூச்சிக்கும் நாம தீங்கு செய்யறதில்லீங்க. ஏனுங்க நிங்க எங்கள அப்படி பாக்கிறீங்கஎன்றான்.


உன் பெயரென்ன?”


அதற்குள் மற்ற நகர்காவலர்களில் சிலர் முகிலனையும் நத்தத்தனையும் அங்கு கொணர்ந்தனர். அதனையும் மயன் கவனித்தான். 


என் பெய சித்தேனுங்க. அவன் பெய நத்தேனுங்கஎன்று நத்தத்தனையும் காட்டி மயன் சொன்னான். 


அப்ப அடிபட்டுக் கிடப்பவனின் பெயர் முத்தனா?” என்றான் காவற்றலைவன்.


பெரிய குரலில், “யில்லீங்க, என் பெய சித்தேன். அவன் பெய நத்தேன். காயப்பட்டவன் பெய முகிலேன்என நத்தத்தனுக்கும் கேட்கும்படி மயன் சொன்னான்.


ஏன் கத்துகிறாய், இங்கு எல்லோருக்கும் காது நன்றாகவே கேட்கும்.” என்றான் காவல் தலைவன்.


எங்கள பாக்கத் தெரியலீங்ஙளா? நாங்க மலையாதி நாடோடியீங்க. மலைகளில் கத்தி பேசித்தானுங்க பழக்கமுங்க. யிங்ங பாருங்ங கொக்கிறகு, சங்குமணி, மான்கொம்பு, மரைக்கொம்பு, பன்றி முள் யெல்லாம் யிருக்குதுங்கோஎன்று முடிச்சுப் பையை அவிழ்த்து மயன் கொட்டினான். 


யிவை மட்டுமில்லீங்கோ நல்ல நரிக் கொம்பு கூட யிருக்குதுங்கோ. அது யெங்கேயு கெடைக்காதுங்கோஎனக் கூறியபடி இடையில் கட்டியிருந்த பட்டியிலிருந்து மெல்ல எதையோ எடுத்தான்.


அப்போ அங்கே சிரித்தபடி வந்த இளநகைசுக்கிராச்சாரியார் மாளிகையில் நரிக்கொம்பு விற்க வந்த முதல் ஆள் நீதான். ‘வாலகன் வாழ்த்துபெற்ற முதல் மலையாதி நாடோடியும் நீதான், என்று கூறியபடி ஒய்யாரமாக நின்று, “இங்கே திரும்புஎனக்கையைத் தட்டினாள்.


ஒரு பெண்ணின் குரலைக் கேட்டு, அது வந்த திசையில் திரும்பிப் பார்த்த மயனுக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘இவள் எங்கே? இங்கே வந்தாள்?’


வருவாள்........


இனிதே,

தமிழரசி.


சொல் சொற்றொடர் விளக்கம்:

மாண்டனை பலவேபோர்மிகு குரிசில் நீ!

மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்

முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற  - பலவகை மாண்பு உடையவனே! போராற்றல் மிக்க பெருமை மிக்க தலைவன் நீ! உன் நற்குணமும் நடுவுநிலைமையும் திசையெங்கும் பரவ தந்தத்தினுள் முத்து இருக்கும் இளம்யானை பிளிற அதைச் செலுத்துபவன்.

மாண்டனை - மாண்பு

குரிசில் - அரசன்/தலைவன் 

மாதிரம் - திசைகள்

விளக்கும் - பரவ

சால்பும் - நற்குணம்/ மேன்மை

செம்மையும் - நடுவுநிலைமையும்

மத்துடை மருப்பு - உள்ளே முத்திருக்கும் தந்தம்

மழகளிறு - இளம்யானை

பிளிற - யானை எழுப்பும் சத்தம்

கொல்களிறு - கொலை செய்யும் யானை

ஊடுருவி - இடையே புகுந்து

நாகநளினி - நாககடத்தில் இருந்த ஒரு குளம்

 வெண்யானை - வெள்ளை யானை

 நகைத்த - சிரித்த

சப்புக் கொட்டுதல் - சுவையை நினைத்து வெறும் வாயை மெல்லல்

நாகமலை - யானைகள் வாழும் மலை [நாகம் - யானை]

மஞ்சு - யானையின் முதுகு

பன்றி முள் - முள்ளம் பன்றி முள்