Tuesday 28 March 2017

உமியைக் குற்றிக் கைவருந்துவோர்


நெல்லை உரலில் இட்டு குற்றினால் அரிசியும் உமியும் கிடைக்கும். நெல்லைக் குற்றிப் புடைத்து அரிசியை எடுத்தபின் அங்கே சப்பியும் உமியும் குவிந்து கிடக்கும். சப்பி அதிகம் இருக்கும் பொழுது அது நெற்குவியல் போலவே காட்சி அளிக்கும். அதனை எடுத்துச் சென்று தம்மிடமும் நெல்லுண்டு என்பதைக் காட்டுவதற்காக உரலில் போட்டு இடிப்பர். சப்பி நெல்லையும் உமியையும் இடித்தால் அரிசி கிடைக்குமா? கிடைக்காது. ஆனால் இடிக்கும் சத்தத்தைக் கேட்போர் நெல்லுக் குற்றுவதாக நினைப்பார்கள். அருகில் சென்று பார்ப்போருக்குத் தெரியும் அவர்கள் உமியைக் குற்றுவது. பார்த்தவர்கள் சொன்னாலும் கேட்டவர்கள் நம்பமாட்டார்கள். உமியை உரலில் இட்டு குற்றியவனுக்கு கடைசியில் கிடைப்பது என்ன? கைநோ. அதன் வலி சிலருக்கு உடனே தெரியும். பலருக்கு நாள் போகப் போகத் தெரியும். காலங்காலமாகப் பகட்டுக்காக உமியைக் குற்றும் வேலைகள் அரங்கேறிய படியே இருக்கின்றன. அதனைப் பார்த்த கடைச்சங்க காலப்புலவரான நல்லாதனார்

“வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்
இல்லது காமுற் றிருப்பானுங் - கல்வி
செவிக்குற்றம் பார்த்திருப் பானும் இம்மூவர்
உமிக்குற்றிக் கைவருந்து வார்”
- (திரிகடுகம்: 28)
என உமியைக் குற்றி கை வருந்துவோரை எடுத்துக் காட்டுகிறார்.

தாம் வெற்றி அடைவதற்காக வெகுண்டு இல்லாதது பொல்லாததைச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். நீங்கதான் போன் செய்து அவர்களிடம் அப்படிச்சொன்னீங்க. நாங்க பதிவு செய்து வைத்திருக்கிறோம். படம் எடுத்து வைத்திருக்கிறோம். இப்படியெல்லாம் பலரைப் பலவிதமாக வெருட்டிச் சினந்து காரியம்  பார்க்கும் தவமில்லாத் தீயோரும், தம்மிடம் இல்லாத பொருட்களை விரும்பி இருப்பவனும் பல நூற்களை ஆராய்ந்த கற்ற கல்வியறிவு இல்லாது கேட்ட விடையங்களை வைத்து கற்றறிந்தவர்களிடம் குறை காண்பவனும் ஆகிய இப்படிப்பட்ட மூவரும் உமியைக் குற்றுவோர் போல வருந்துவர்.

கோபப்பட்டு வாயால் வெருட்டி பிறரை வெல்ல நினைப்போரும் தம்மால் அடைய முடியாததை தமதாகக் கருதுவோரும் பிறரின் கல்வியின் ஆற்றலை அறியாது கேள்வி ஞானத்தால் குற்றம் கண்டுபிடிப்போரும் உமியைக் குற்றிக் கைவருந்துவோர் போல துன்பமடைவர். எவருக்கும் பயன்படாத வேலை செய்வோருக்குக் கிடைப்பது துன்பமே.
இனிதே,
தமிழரசி.

Thursday 23 March 2017

பார்த்திடத் துடிக்குது உள்மனது

Angkor Wat Temple - Cambodia  [12- 11- 12 Early Morning 05:50]

கண்ணின் நீரும் கசியுதையா
           காதலில் நெஞ்சம் கரையுதையா
எண்ணிய பொருளும் நீயலவா
           ஏதிங்கு வாழ்க்கை செப்பிடுவாய்
நண்ணியே வருவாய் நாயகனே
           நானில மீதினில் இப்போதே
பண்ணிய புண்ணியம் ஏதுமில்லை
          பார்த்திடத் துடிக்குது உள்மனது
இனிதே,
தமிழரசி.

Tuesday 21 March 2017

பொன்கை நகர்

புங்குடுதீவு வெளிச்சவீடு
‘நாடாக இருக்கலாம். காடாக இருக்கலாம். மலையாக இருக்கலாம். பள்ளமாக இருக்கலாம். அந்தந்த இடத்தில் வாழும் ஆண்கள் எவ்வளவுக்கெவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு நீயும் நல்லை. வாழ்வாயாக! நிலமகளே!’ என மக்கள் வாழும் நானிலத்தை விழித்துப்பாடினார் ஔவையார். நீங்களும் அதனை ஒருமுறை பாருங்கள்.
“நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
                                                       - (புறம்: 187)
இச்செய்யுட் கருத்தை அடியிட்டு நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள். அன்னாரின் செயற்கருஞ் செயல்களைப் பாராட்டிய நண்பர்களும் பெரியோர்களும் நமது தாயகத்திற்கு அன்புடன் இட்ட பெயர் தான் பொன்கை நகர். எல்லா நல்ல கருமங்களுக்கும் முன்னின்று உடல் பொருள் ஆவி அனைத்தினாலும் தொண்டுபுரியும் பெருங்குணம் படைத்த உத்தமர் வாழும் நற்பதியை நல்லோர் நற்பெயரால் அழைப்பது இயல்பு தானே. “பெருமையும் சிறுமையும் தான் தர வருமே” என்பது அநுபவமொழி அல்லவா!

வல்லிபுரக் கோயிலை அடுத்துள்ள பகுதியிற் புதைபொருள் ஆராச்சியின் பொழுது கிடைத்த ஒரு சாசனத்தில் கி மு 300 வரையில் புங்குடுதீவு மக்கள் சிறப்புடன் வாழ்ந்தமை பொறிக்கப்பட்டுள்ளது. கி மு 300ல் பாலிநகர்ச் சிவாலயம் சிறப்புடன் விளங்கியதாகவும் பாலியாற்றை மறித்து அதற்கு அணி செய்வதற்கான வாவி கட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை இலங்கை அரசாங்கத்தின் கமத்தொழில் திணைக்களம் வெளியிட்ட “கமத்தொழில் பண்டைக்கால நிலை” தொகுப்பு 2ல் காணலாம். 
 பாலிநகர் காலத்தில் இருந்த சிவலிங்கம் [வவுனிக்குளம்]

பண்டைக்கால பாலி நகரே இன்று வவுனிக்குளம் என்று வழங்கப்படும் குடியேற்றத் திட்டமாகும். பாலி வாவியே தற்போது வவுனிக்குளம் என்று வழங்கப்படுகின்றது. வவுனிக்குளத்தை நிரப்பும் ஆறு இப்பொழுதும் பாலியாறு என்றே அழைக்கப்படுகின்றது. இன்றைக்கு 2,300 ஆண்டுகளுக்கு முன் வடபகுதியில் தமிழ்மக்கள் அரசோச்சிக் குடியமர்ந்து வாழ்ந்தமைக்குப் பொன்கை நகர் பற்றியும் பாலிநகர் சிவாலயம், பாலியாறு பற்றியும் பேசப்படும் ஏடுகள் சான்று பகர்கின்றன.

அன்றியும் அனுராதபுரியைத் தலைநகராக வைத்து ஈழம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட எல்லாள மன்னன் காலத்தில் மருந்து மூலிகைகள் நிறைந்த பழம்பெரும்பதியாகப் பொங்கைநகர் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. தொடும்தோறும் நன்னீர் சுரக்கும் இயற்கைவளமும், நெய்தலும் மருதமும் கலந்த நிலவளமுங் கூடிய ஊரதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வரகவி முத்துக்குமாருப் புலவர் 1815ம் ஆண்டளவில் நயினை நாகராசேஸ்வரி அம்பாளுக்குப் பத்தும் பதிகமும் பாடியவர். தமது தாயகத்தின் தென்பால் அமைந்த கண்ணகை அம்பாளுக்கும் பத்தும் பதிகமும் பாடினார். அக்கவிதைகளின் இறுதி தோறும்
“கன்னலொடு செந்நெல்விளை பொங்கை நகர்
தன்னிலுறை கண்ணகைப் பெண்ணரசியே”
என வாழ்த்திப் பாடியுள்ளார்.

கண்ணகை அம்பாள் கோயிலின் தென்மாக்கடலில் மேற்புறமாக ஒளிரும் நீலக்கடற் பிரதேசம் நம் முன்னோரால் ‘குளத்துவான்’ எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டது. இது பண்டைக் காலத்தில் ஒரு துறைமுகமாக விளங்கியிருந்தது. இந்தியர், அரேபியர் முதலான பிற நாட்டினர் ஈழத்துக்கு இத்துறைமுகம் மூலம் வந்து போயினர். ஊர்காவற்றுறையில் ஒரு காலம் நங்கூரமிட்டு ஒதுங்கிய மரக்கலங்களை வடகீழ்ப் பருவக் காற்றுக் காலத்தில் எம் தாயகத்துத் தென்மாக் கடற் ‘குளத்து  வானில்’ நங்கூரமிட்டனர்.

நடுவுத்துருத்தி, குறிகாட்டுவான், புளியடித்துறை, களுதைப்பிட்டி இவைகளும் பண்டைய இயற்கைத் துறைமுகங்களாக அமைந்திருந்தன. அக்காலத்தில் வடமேற்குப் புறமாக எமது தாயகத்தின் வாயில்கள் இருந்தன. மக்கள் தமது தேவைகளை இந்திய வர்த்தக மூலம் அனுபவித்தனர்.

சேதுக்கரை -> கச்சதீவு -> நெடுனைநகர் -> இவற்றைத் தொட்டு குளத்துவானுக்கு வந்த மரக்கலங்கள் மண்டைதீவின் கிழக்குப்புறமாக அலுப்பாந்தி -> கொழும்புத்துறை -> இவற்றைத் தொட்டுக் கொண்டு பூநகரித்துறையில் நங்கூரமிட்டன. இந்தக் கடற்பாதை சேதுக்கரையில் இருந்து பூநகரி வரும் வரையிலும் பூநகரியில் இருந்து சேதுக்கரை செல்லும் வரையிலும் இருக்கும் ஒவ்வோர் இடங்களையும் வெறுங்கண்ணாற் பார்க்கக்கூடியதாகவும் போக்கு வரவு செய்யும் பண்டைய மக்களுக்குப் பாதுகாப்பு உள்ளதாகவும் இருந்தது. இந்தியாவின் கொடுங்கோலாட்சி நடந்த போதும் ஈழத்தில் அத்தகைய ஆட்சி நடந்த போதும் இருபகுதி மக்களும் அவ்வப்போது பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.
நாச்சார் வீட்டில் மழைபொழியும் நேரம்

போத்துக்கீசர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் பெருங்கொடுங்கோல் தாண்டவமாடியது. எந்த வழியிலும் மக்களுக்கு அரசு உதவவில்லை. தமது பொருளாரதத்திலேயே மக்கள் வாழவேண்டியிருந்தது. அதுவொரு சர்வோதய வாழ்வாக அமைந்திருந்தது. அன்னியருடைய ஆட்சிக்காலத்தில் அவர்களின் பிடியில் இருந்து கன்னியர்களையும் பெண்களையும் பாதுகாக்க வேண்டிய அவலநிலை தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. அதனால் தீவகங்களில் நால்சார் வீடுகளமைத்து வீட்டினுள் முற்றத்திலே வடகீழ்ப்புறமாகக் கிணறுகளும் தோண்டி உள்ளறைகளிலும் உள் விறாந்தைகளிலும் பெண்களும் உணவுக் களஞ்சியமும் இருக்க வீட்டின் புறச்சுற்றாடலில் வீட்டுக்காரரும் ஏவலாளராகிய ஆண்களும் வாழ்ந்தனர். புறனோக்காக ஆராய்ந்தால் ஒவ்வொரு நாற்சார் வீடுகளும் ஒவ்வொரு குறுநில மன்னரின் கோட்டைகள் போல் இருந்தன. இவ்விதமான வீடுகளை இன்றும் தீவகங்களிற் காணலாம்.

இலங்கையின் சுதந்திரத்திற்காகக் கடைசிவரைப் போராடிய கடைசிக் கண்டியரசன் ராஜசிம்மன் ஆங்கிலேயருடன் கடுஞ்சமர் செய்தான். அவனது சுதேசியப்படையின் ஒரு பிரிவுக்குத் தலைமை வகித்தவர் பொன்கை நகரில் வீராமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மன்னனும் படைகளும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதப்படைகளுடைய படைக்கு எதிர்நிற்க முடியாத நிலையில் ராஜசிங்கன் தனது வீரர்களை ஆயுதங்களுடன் தத்தம் வதிவிடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டான். அதனையேற்றுத் தனது துப்பாகியுடன் பிறந்தகம் வந்தவரை மக்கள் ‘துப்பாக்கியர்’ என அன்புடன் அழைத்தனர். அவர் நயினை நகரில் தமது மனைவியை மணந்துகொண்டு அங்கேயே வாழ்வு நடாதினார். அன்னாரின் வழிவந்தவரே இன்றைய மகான்களுக்கும் மகானாகவும் அளப்பரிய சோதிடராகவும் ஆத்மஜோதி ஆங்கில இதழ் ஆசிரியராகவும் ஆத்ம ஞானியாகவும் விளங்கிய பெரியார் க இராமச்சந்திரர் அவர்களாவார். அவரின் அரிய புத்திரர்களில் ஒருவரும் தென்கிழக்காசியாவிலேயே திறமை மிக்க கண்வைத்தியரெனப் பெயர் பெற்றவர் டாக்டர் பரராஜசிங்கம். இலங்கையின் உதவிப் பொலிஸ்மா அதிபராகக இருக்கும் திரு சுந்தரலிங்கமும் அவரின் புதல்வரே.

தனித்தமிழ் கைவந்தயோகி மறைமலை அடிகளாரின் தாயாரும், தவத்திரு யோகர்சுவாமிகளின் தந்தையாரும் பொன்கை நகர் ஈன்ற புனிதர்களே. இந்நகர நங்கையர் தாம் மணந்து கொண்ட நம்பியருடன் தாயகம் துறந்து ஈழத்தின் தென்பகுதியிலும், இந்தியா, மலேயா முதலிய இடங்களிலும் மேல்நாடுகளிலும் கூடச் சென்று சிறப்புடன் வாழ்கின்றனர். சென்ற இடமெல்லாம் தமிழ்ப்பண்பும் சமயாசாரமும் பொங்கிவழியும் குணசீலர்களாகவும் தமது மக்களைக் கலாச்சார சீலர்களாக வளர்க்கும் நன் நோக்குடையரவர்களாகவும் விளங்குகுன்றனர். வாழ்க தமிழ்! வளர்க பொன்கை நகர்!!
இனிதே,
தமிழரசி.

குறிப்பு: இவ்வாக்கத்தை திரு சதாசிவம் சேவியர் அவர்கள் வெளியிட்ட ‘சப்ததீவுகள்’ நூலுக்காக 1978ல் எழுதினேன். அந்நூல் 1979ல் வெளிவந்தது.

Sunday 19 March 2017

அழிவுறும் சிட்டுக்குருவிகள்!

Photo Source: Discover Wildlife

இயற்கையின் படைப்புகளில் தாமே மனிதரை நாடி வந்து மனிதரோடு வாழும் ஒரேயொரு பறவை சிட்டுக்குருவியே. அதனால் நம் சங்கத்தமிழ் முன்னோர் சிட்டுக்குருவியை மனையுறை குருவி, உள்இறைக் குருவி, ஊர்க்குருவி, உள்ளூர்க் குருவி என்ற பெயர்களால் அழைத்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. தம்வீட்டில் வாழும் குருவி என்ற கருத்தில் 'மனையுறை குருவி' என்றனர். அது வீட்டுக்கூரைக்குள் கூடு கட்டி வாழ்வதால் இறையுறை குருவி எனவும் அழைத்தனர். வீட்டின் கூரையை இல்இறை என்பர். இக்காலத் தமிழராகிய நாமும் அச்சிட்டுக்கள் வாழ நம் வீடுகளில் அடைக்கலம் கொடுப்பதால் அடைக்கலக்குருவி, அடைக்கலாங்குருவி என்ற பெயர்களால் அழைக்கிறோம்.

சிட்டுக்குருவிகளைப் பார்த்திருக்கிறீர்களா? அவை ஒன்றோடு ஒன்று கிச்சூ கிச்சூ, க்யூக் க்யூக் எனச் சீழ்க்கை அடித்தபடி காதல் மொழி பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா? சேவல் சிட்டு தன் பேடைச்சிட்டு முட்டை இடுவதற்காகக் கட்டும் கூட்டைப் பார்த்து இரசித்ததுண்டா? பேடைச்சிட்டு பெரிதாகக் குரல் எழுப்பியபடி சேவற்சிட்டுக்கு கால்களால் அடிப்பதைக் கண்டிருக்கிறீர்களா? சேவலும் பேடையுமாகத் தமது குஞ்சுகளுக்கு உணவூட்டும் அழகைப் பார்த்து மகிழ்ந்ததுண்டா? அவை தரும் ஆனந்தத்திற்கு ஈடு இணையேது! சிட்டுக்குருவிகளின் வாழ்வியலே ஓர் ஆனந்தம். 

அதனாலேயே பாரதியாரும்
“சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்து வா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா” - (பாரதியார் பாடல்)
எனப்பாடிவைத்தார். நானும் வண்ணப்பறவைகளைக் கண்டு மகிழ்ந்தேன். பேடைச் சிட்டு தத்தித் தத்தி நடக்க சேவற்சிட்டு துள்ளித் துள்ளி நடை போடும். 

சிட்டுக்குருவி இழைத்த கூடு

வண்ணக்கன் தாமோதரன் எனும் சங்ககாலப்புலவர் துள்ளு நடை நடக்கும் சேவற்சிட்டொன்று   தனது பேடை முட்டை இடுவதற்கு [ஈன்இல்] ஏற்ற கூட்டை இழைக்க இனிய கருப்பின் வெண்பூவைக் கோதி எடுப்பதைச் சொல்கிறார்.
“உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்”             
                                            - (குறுந்தொகை - 85: 2 - 5)
எனக் குறுந்தொகை மணமில்லா  [நாறா] கரும்புப்பூவால் கூடு இழைக்கும் சிட்டுக்குருவியை காட்ட, புறநானூறோ
“மனையுறை குரீஇக் கறையணற் சேவல்
பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்
குரல்செய் பீலியின் இழைத்த குடம்பை
பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்துதன்
புன்புறப் பேடையொடு வதியும்” 
                                             - (புறம்: 318: 4 - 8)
என ‘கறை போன்ற தாடியுள்ள [கறையணல்] சேவற்சிட்டு பாணர் பாவிக்கும் யாழ் நரம்புத் துண்டுகளோடு [நரம்பின் சுகிரொடு] கர்ச்சிக்கும்[குரல்செய்] சிங்கத்தின்[வயமான்] பிடரிமயிரையும் சேர்த்து இழைத்த கூட்டில் [குடம்பை] பெரிய வயலில் விளைந்த நெல்லரிசியை உண்டு தன் போடையோடு வாழும் என்கிறது. எனவே சிட்டுக்குருவிகள் தமக்கு வேண்டிய கூட்டைக் கட்ட சுற்றாடலில் கிடைக்கும் நார், மயிர் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றன என்பதை அறியலாம்.

சங்ககாலத்து வீட்டுக் கூரையில் வாழ்ந்த சிட்டுக்குருவியை குறுந்தொகையில்
“ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவின் நுண்டாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்று கொல் தோழி அவர் சென்ற நாடே” 
                                                   - (குறுந்தொகை : 46)
எனச் சங்ககாலப் புலவரான மாமலாடனார் [மாமிலாடன்] கூறுகிறார். “வாடிய [சாம்பல்] ஆம்பற்பூவின் நிறத்தைப் போன்ற கூம்பிய சிறகை உடையவர்[சிறகர்] - வீட்டில் வாழும் [மனையுறை] குருவி, முற்றத்தில் உலரும் தானியங்களைத் [உணங்கல்] தின்று பொதுவிடத்திலுள்ள எருவின் [காய்ந்த சாணி] புழுதியில் குடைந்து விளையாடி வீட்டின் இறப்பிலுள்ள கூட்டில் [ பள்ளி] தம் குஞ்சுகளோடு [பிள்ளை] வாழுகின்ற மாலை நேரமும் இல்லையோ தோழி! அவர் சென்ற நாட்டிலே?” எனத் தலைவனைப் பிரிந்த தலைவி ஒருத்தி தன் தோழியைக் கேட்டதை இப்பாடல் கூறுகிறது.

பறவைகள் பலவிதம். அதில் சிட்டுக்குருவிகள் ஒருவிதம். அந்த சின்னஞ்சிறிய சிட்டுக்களின் வாழ்க்கை மனித மனங்களைச் செம்மைப்படுத்தின. அதனை இச்சங்ககாலப் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. தலைவன் சொந்த ஊரில் வாழ்ந்த காலத்தில் சிட்டுக்குருவிகளின் வாழ்க்கையைப் பார்த்திருப்பான். அவற்றின் வாழ்க்கை அவனுக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கும். அவன் சென்ற நாட்டில் உள்ள சிட்டுக்குருவிகள் மாலை நேரம் ஆனதும் கூட்டைத் தேடிப் பறந்துவந்து தந்துணையோடும் பிள்ளையோடும் [குஞ்சோடும்] கீச்சுக் கீச்சென்று குலாவி வாழ்வதைக் காண்பான். அதைப் பார்த்ததும் தம்மை நினைத்து வாருவான் எனும் துணிவை அவளுக்குச் சிட்டுக்களின் வாழ்க்கை கொடுதிருக்கிறது. 

மனித வாழ்வுக்கு வேண்டிய செவ்வியல் கருத்தை இப்பாடலில் மாமலாடனார் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அஃறிணைக்குரிய சிட்டுக்குருவியை ‘சிறகர்’ என மரியாதைப் பண்பில் அழைத்திருப்பது மனித வாழ்வியலோடு சிட்டுக்களுக்கு இருந்த நெருக்கத்தைக் காட்டுகிறது. 
கார் அணற் சேவல் [ஆண்]

ஒன்றாக வாழ்ந்த சிட்டுக்குருவிப் பேடைக்கும் சேவலுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பச் சண்டையை நற்றிணைப் பாடல் ஒன்று படம்பிடித்து வைத்துள்ளது.
“உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப
கையற வந்த மையல் மாலை”                            
                                            - (நற்றிணை : 181: 1 - 8)

இப்பாடலை இயற்றிய சங்கப் புலவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் சிட்டுக்குருவிகளின் இரசிகன் என்பதை இப்பாடல் காட்டுகிறது. வீட்டு இறைப்பில் வாழும் கரிய தாடியை[அணல்] உடைய சேவற்குருவி வேறு பகுதியிலுள்ள பேடையோடு கூடி இன்புற்று வாழ்ந்த பின்னர் தன் பேடையைத் தேடி வந்தது. அப்படி வந்த சேவலில் உண்டாகியிருந்த மாற்றங்களைப் பார்த்த [செவ்வி நோக்கி] பேடை, வெடித்துச் சிதறும் ஈங்கைப் பூவைப்போலச் சத்தம்மிட்டு தன் குஞ்சோடு [பிள்ளையோடு] வாழும் கூட்டினுள் வராது தடுத்தது. அதனால் அச்சேவல் மழையில் [துவலையில்] நனைந்த முதுகோடு [புறத்தது] கூட்டுக்கு அருகில் குளிரால் நடுங்கியபடி [கூரல்] இருந்தது. அது நடுங்குவதைக் கண்ட பேடைக்கு அதன்மேல் இரக்கம் [ஈர நெஞ்சின்] வந்தது. தான் என்ன செய்யலாம் என நீண்ட நேரம் [நெடிது] நினைத்துப்பார்த்து சேவலைத் தன்னிடம் அழைத்தது. அச்சேவலும் தான்விட்ட பிழையால் செயலற்றதாயிற்று [கையறல்]. அத்தகைய மயக்கமுள்ள மாலைப்பொழுதும் வந்தது. 

குறுந்தொகையும் நற்றிணையும் சொல்லும் சிட்டுக்குருவியின் வாழ்வியல் மனிதவாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டவில்லையா? சிறுவயதில் இப்படியான இயற்கையின் பாடத்தைப் படித்தோருக்கு வாழ்க்கை சுமையாகத் தெரியாது. சிட்டுக்குருவிகளின் வாழ்க்கை முறையை இரசித்தவர்கட்கு  குடும்ப வாழ்க்கையின் இரகசியம் புரியும். அது இயற்கை கற்றுக்கொடுக்கும் வேதபாடமாகும். அதற்குப் பணம் தேவை இல்லை. இல்லற வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தால் counselling என்று அலையவேண்டியதில்லை.

குருவிகளின் வாழ்வியலை அவை மனிதனின் இல்லறத்தை நல்லறமாக வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கும் பாடத்தை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்
பெண்: “பாக்கு மரச்சோலையிலே பளபளக்கும் பாளையிலே
பறந்து பறந்து குருவியெல்லாம் என்ன பின்னுது"

ஆண்: அது வாழ்க்கைதனை உணர்ந்துகிட்டு
மனசும் மனசும் கலந்துகிட்டு
மூக்கினாலே கொத்திக் கொத்திக் கூடு பின்னுது”
என ‘தலை கொடுத்தான் தம்பி’  என்ற படப்பாடலில் எழுதினார்.

ஜெயகாந்தன்
“சிட்டுக்குருவி பாடுது - தன்
 பெட்டைத் துணையைத் தேடுது”   
எனவும் கவிஞர் கண்ணதாசனும்
“சிட்டுக்குருவி முத்தங்கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே”
என்றும் பாட்டெழுதி சிட்டுக்குருவிகளின் வாழ்வியல், மனித வாழ்வியலை நெறிப்படுத்துவதைக் கடந்த நூற்றாண்டிலும் பதிவு செய்தனர்.

நம்வீட்டு முற்றங்களில் உள்ள தானியங்களை உண்டு, காய்ந்த சாணிப் புழுதியில் புகுந்து பூச்சி, புழுக்களைத் தின்று அதில் குளித்து விளையாடி, சிறுமலர்களைக் கொத்தி, கோதிப் பார்த்து மாலையில் கிணற்றடி நீரில் புரண்டு குளித்துச் சிலிர்த்து தம் கூட்டில் வந்து துயிலும் சிட்டுக்குருவிகள் எங்கே? எங்கே? அவை எங்கே தம் சிறகை விரித்தன? 

நான் கடந்த வருடம்  இலங்கை போன பொழுது கோப்பாய், மானிப்பாய், மருதனாமடம், யாழ்ப்பாணம், புங்குடுதீவு, நயினாதீவு, கிளிநொச்சி, மாங்குளம், துணுக்காய், வவுனிக்குளம் திருக்கேதீஸ்வரம் எனச் சென்ற இடங்களில் சிட்டுக்குருவியை முன் போல் பார்க்கமுடியவில்லை. ஆனால் வவுனியாவில் கண்டேன். அது மனதிற்கு நிறைவைத் தந்தது.

‘மாற்றான் தோட்டத்து மல்லிகையே மணம் வீசும்’ எனும் பிழையான எண்ணத்தில் நம் தமிழ்ப்பண்பாடுகளைத் தொலைக்கும் தமிழர் நாம். அதனாலேயே தமிழரின் வீடுகளில் 2300 ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டி உறவாடி வாழ்ந்து வரும் சிட்டுக்குருவிகளை அழிவின் விளிம்புக்குக் கொண்டு செல்கிறோம். அவற்றை மட்டுமா  அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்றோம்! அவை உண்ணும் உணவுகளை! அவை ஆடி மகிழ்ந்த முற்றங்களை! அழிவின் விளிம்புக்கு இட்டுச்செல்கிறோம். இத்தகைய நம் செயலால் நம்மை அறியாமல் நாமே அழிவின் விழிம்புக்கு சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை எப்போது உணரப்போகிறோம்?
தேங்காய்ப்பூக் கீரை

சங்க இலக்கியத்தில் கபிலர் தொன்னூற்று ஒன்பது பூக்களைக் குறிஞ்சிப்பாட்டில் சொல்லி மகிழ்கிறார். அப்பூக்களில் ஒன்று பூளை. அதனை பூளாப்பூ என்றும் சொல்வர். இப்பூவை சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும். அதனால் ‘குரீஇப் பூளை’ என்ற பெயரும் இச்செடிக்கு உண்டு. 
“குரீஇ பூளை குறு நறும் கண்ணி” 
                                                - (குறிஞ்சிப்பாட்டு: 72) 
இப்பெயர் சங்ககாலப் பழமையானது. இரண்டாயிர வருடங்களுக்கு மேலாகச் சிட்டுக்குருவிக்கு உணவாய் நம் ஒவ்வொருவர் வீட்டுக் காணியிலும் பூத்து நின்ற ‘தேங்காய்பூக் கீரையே’ இந்தக் குருவிப் பூளைச் செடி. இப்போது தேங்காய்ப்பூக் கீரைச் செடி எவர் வீட்டுக்காணியில் இருக்கிறது எனச் சல்லடை  போட்டுத் தேடவேண்டிய நிலையில் இருக்கிறோம். தேங்காய்ப்பூக் கீரைச்செடியின் மெல்லிய தண்டு காற்றில் அங்கும் இங்கும் அசைய சிட்டுக்குருவிகள் அதிலிருந்து பூக்களைக் கொத்தித் தின்னும் அழகே அழகு.

தேங்காய்ப்பூக் கீரையின் அருமை தெரியாமல் அவற்றைக் காட்டுச் செடியெனக் கருதி வெட்டி எரிக்கிறோம். தேங்காய்ப்பூக் கீரை வறை மிகவும் சுவையாக இருக்கும். தேங்காய்புக்கீரை இரசமும் சுவையானதே. நம் முன்னோர்கள் தேங்காய்ப்பூக்கீரை பூத்துக் குலுங்கும் காலத்தில் அதனை வேரோடு பிடுங்கி மண் போக அலசி காயவிட்டு மூட்டையாகக் கட்டி கோர்க்காலியில் அடுக்கி வைத்து உணவாகப் பயன்படுத்தினர். 

இரசம், கஞ்சி, கறி போன்றவற்றில் போட்டும், இடித்து மாவாக்கி அரிசிமாவுடன் கலந்து புட்டு, களி போன்றன செய்தும் உண்டனர். ஏனெனில் சிறுநீரகக் கோளாறு - சிறுநீரகக்கல், சிறுநீர்பை, சிறுநீர்க்குளாய் தொடர்பான நோய்களை நீக்கும் நல்ல மருந்து தேங்காய்ப்பூக் கீரையே. எனது சிறுவயதில் வீட்டிலிருந்த வைத்திய வாகடத்தில் இதனை வாசித்திருக்கிறேன். நாம் எம் கண்போல் வளர்க்க வேண்டிய மருந்துச் செடியை எமது அறியாமையால் அழிவின் விளிம்புக்குத் தள்ளுகிறோம். 

நாம் வாழ்ந்த வீடுகள் கூரையற்று இடிந்து கிடக்கின்றன. அவற்றை மீண்டும் கட்டச் செல்வோருடன் மல்லுக்கட்டும் கைக்கூலிகளின் தொந்தரவைத் தாங்க பெரிய மனது வேண்டும். எப்படித்தான் பிறர் சொத்தை தமதாக்க நினைக்கிறார்களோ அது அவர்களுக்கே வெளிச்சம். இப்போது நம் நாட்டில் வாழ்வோருக்கு எழுத வாசிக்க நன்கு தெரியும்.  ஒவ்வொருவரிடமும் அவரவர் உறுதிகள் இருக்கும். அதைப் பார்த்து தம் காணியின் எல்லையை அளந்து மதிலைக் கட்டினால் அடுத்த வீட்டுக் காரருக்கு தொல்லை இருக்காதல்லவா! அவர்களும் வந்து தத்தமது வீடுகளை மீளக்கட்ட வசதியாக இருக்குமே. அதைவிடுத்து அவர்கள் புலம் பெயர்ந்து விட்டனர் எனத் தம்போக்கில் பிறர் காணிகளை பிடிப்பதால் நேரமும் பணமும் வீணாய் போவதை உணர வேண்டும். அப்படி உணரும் நாள் வந்தால் சிட்டுக்குருவிகள் நம்மவர் கட்டும் வீடுகளில் அடைக்கலக் குருவி என்னும் அதன் இன்னொரு பெயருக்கு ஏற்ப மீண்டும் அடைகலம் புகும்.

தற்காலத்தில் வீடு கட்டுவோர். முற்றத்தில் இருக்கும் மரங்களை வெட்டி,  கல் பதிக்கின்றனர். முப்பது நாற்பது வருடங்கலாக முற்றத்தில் நின்ற வேப்பமரங்கள், மாமரங்கள், பலாமரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அம்மரங்களில் வாழ்ந்த அணில்கள் குருவிகள் யாவும் எங்கே சென்று வாழும் என்பதை ஏன் சிந்திப்பதில்லை? கட்டும் வீடுகளைச் சுற்றி குறைந்தது ஐந்தாறடி நிலமாவது விட்டால் எம்மைவிட்டுச் சென்ற சிட்டுக்குருவிகள், செம்போந்துகள், மரகதக் குயில்கள், கருங்குருவிகள், பச்சைவண்ணச் சிட்டுகள், மாம்பழக்குருவிகள்,  கானாங்கோழிகள் யாவும் மீண்டும் எம்மனை நாடிவந்து முற்றத்துப் புழுதியில் விளையாடும்.

மனிதருக்குச் சிட்டுக்குருவிகள் செய்யும் பேருதவி என்ன தெரியுமா? நுளம்புகள் இடும் முட்டைகளை உண்பதே அப்பேருதவி. நம் நாட்டில் தற்போது தலைவிரித்தாடும் டெங்குக் காய்சலுக்கு எத்தனை மனிதஉயிர்கள் பலியாகின்றன? நாகரீகம் என்ற போர்வையில் சிட்டுக்குருவிகளை நாம் புறக்கணிப்பதும் அதற்கு ஒரு காரணம். ஈடு இணையற்ற இயற்கை எல்லாவற்றையும் தந்திருக்கிறது. இயற்கையின் அற்புதக் கொடைகளை நாம் அழிப்பதால் பல நோய்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம்.

எம் முன்னோர் ஏன் சிட்டுக்குருவிகளை ‘மனைஉறை குருவி’ எனப்போற்றி வளர்த்தனர்? என்ற சிந்தனை சிறிதும் இன்றி வாழ்கிறோம். எம்மைவிட்டுச் சிறகு விரித்துச் சென்ற சிட்டுகுருவிகள்! அழிகின்றனவே என ஏங்குவதை விடுத்து, மனிதராய் சிங்காரச் சிட்டுக்களை சீராட்டிப் பாராட்டி பாதுகாப்போமா!
இனிதே,
தமிழரசி.

Tuesday 14 March 2017

கோடையை ரசித்தேன் பாரினிலே!

திரிகோணமலை

மாங்கனி தூங்கும் சோலையிலே
          மானினம் துள்ளிடும் வேளையிலே
தீங்கனி பறிக்கப் போகையிலே
          தேந்துளி சிந்திடும் பூவினிலே
தேங்கனி வண்டு ஊதையிலே
         தென்றலும் வந்து மோதையிலே
கோங்கனி சிதறும் ஊரினிலே
          கோடையை ரசித்தேன் பாரினிலே
                  
இனிதே,
தமிழரசி.

கோங்கனி 

Sunday 12 March 2017

பாவற்குளத்தில் பண்டிதர் ஆறுமுகன் ஐயா

       12/03/1914                 12/03/2014         

எழுதியவர்
திரு. பரமேஸ்வரன் நாராயணபிள்ளை, 
வவுனியா


ஈழத்திரு நாட்டில் வடக்கில் உள்ள வவுனியா மாநகரில் மேற்குத் திசை நோக்கி ஒன்பது மைலுக்கு அப்பால் அமைந்துள்ளது, பாவற்குளம் என்ற அழகிய கிராமம். ஒரு பக்கம் மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலமாகவும் ஒரு பக்கம் வயலும் வயல் சார்ந்த மருத நிலமாகவும் ஒரு பக்கம் காடும் காடுசார்ந்த முல்லை நிலத்தோடு மிகப்பெரிய வாவியும் ஒரு பக்கம் குடியேற்றத் திட்டங்கள் அமைந்த நிறைந்த வீடுகளையும் கொண்டு இயற்கை அன்னை மகிழ்ந்து இருக்கும் அழகிய கிராமம் பாவற்குளம்.

அந்நாளில் அங்கிருந்த குளத்தருகே நிறைய குருவித்தலை பாகற்காய்ச் கொடி [Momordica balasamina] படர்ந்து வளர்ந்து இருந்த படியால்  அக்கிராமம்  பாகற்குளம் என அழைக்கப்பட்டது என்பர். பாகற்குளம் என்ற பெயர் மருவி இப்போது பாவற்குளம் என அழைக்கின்றோம் என நினைக்கின்றேன்.

நான் இந்தக் கிராமத்துக்கு வரும்போது எனக்கு ஒரு வயது. அப்போது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பிறந்த இடத்தைவிட்டு இங்கு குடியேற்றப்பட்டோம். பெற்றோர் சகோதரங்களுடன் எனது வாழ்க்கை இங்கு ஆரம்பமானது. எமது வீட்டுக்கு முன் ஒரு காணித்துண்டு காடாக இருந்தது. அது பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்று எனது தந்தையார் கூறினார். 

அந்தக் காலத்தில் அக்கிராமத்தில் பாடசாலை இல்லை. கல்வி கற்போர் மிகக்குறைவு. படிப்பவர் கூட தொலைதூரம் சென்றுதான் படித்து வந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் 1959 என நினைக்கின்றேன் வெள்ளை நசனல் [national] உடையில் ஒருவர் வந்தார். உயர்ந்த மெலிந்த அழகான திடமான உடல், நேரான பார்வை, சாந்தமான முகம், அழகான தமிழ் உச்சரிப்புடைய பேச்சு, தன்னை ஒரு ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்தக் கிராமத்தில் பாடசாலை ஆரம்பிக்கப் போவதாகக் கூறி அதற்குரிய வேலையும் செய்ய ஆரம்பித்தர்.

மிகக் குறுகிய காலத்தில் ஒரு சிறிய பாடசாலை கிடுகினால் வேயப்பட்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. தானாகச் சென்று வீடு வீடாக மாணவர்களைச் சேர்த்து முடிந்தவரை கல்வி புகட்டினார். இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது, அப்போது அங்கு படித்த மாணவர்கள் சிலர் வேட்டியுடனும், சாரம் அணிந்தும், பெண் பிள்ளைகள் சேலையும் பாவாடைத் தாவணியுடனும் வந்து படித்திருக்கிறார்கள்.

நானும் அப்பாடசாலையில் அரி வரி எனச் சொல்லப்படுகின்ற பாலர் வகுப்பில் கல்வி கற்றேன். சிறிது காலம் செல்ல அப்பாடசாலைக்கு அரசாங்கத்தினால் சிறந்த கட்டிடம் கட்டப்பட்டு பாவற்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடாசாலை எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவில் இருந்து கவிஞர் சுத்தானந்த பாரதியாரை அழைத்து திறப்புவிழாச் செய்து, நிறைய மாணவர்களுடனும் பல ஆசிரியர்களுடனும் திறம்பட நடாத்தினார்.

பாடசாலைக் கல்விமட்டும் அல்லாது விளையாட்டிலும் ஊக்கம் கொடுத்து மாணவர்களை விளையாட்டுக்குத் தயார்படுத்தி முதன்முதல் வவுனியா மாவட்டப் பாடசாலைகளுக்கான போட்டியில் பங்கு பெறவைத்து பல பரிசுகளையும் பெறக் காரணமாக இருந்தார். அன்றைய நாள் இன்றும் ஞாபகம் இருக்கின்றது. அன்று பாடசாலைக் கொடியை ஏந்தி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்மக்கள் எல்லோரும் சேர்ந்து பாவற்குளத்திற்கு ஜேய்! புண்ணிய குளத்திற்கு ஜேய்! என்று கோசம் போட்டு, அந்தக் கிராமத்தை வலம் வந்தது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது.

பாடசாலை விடயங்கள் மட்டுமல்லாது ஊரிலுள்ள பொது விடயங்களிலும் முன்னின்று நடாத்தி நன்மதிப்பைப் பெற்ற சேவையாளராகப் பணிபுரிந்தார். கல்வித்திணைக்கழகம் அவரை அதிபராய் பாவற்குளம் 2ம் யூனிற் பாடசாலைக்கு மாற்றலாகிச் செல்லப் பணிக்க வேண்டிய கடிதத்தில், தவறுதலாக பாவற்குளம் 1ம் யூனிற் முகவரியை இட்டதால் அவர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். அங்கே பாடசாலை இல்லாது - அக்கிராமப் பிள்ளைகள் கல்வி கற்க முடியாதிருப்பதைக் கண்டு, பாடசாலையை உருவாக்கினார். இப்படிப்பட்ட பண்டிதர் ஆசிரியர் திரு ஆறுமுகன் ஐயா அவர்கள் பல காலமாக அரச ஊழியம் எதுவும் பெறாமல் அப்படிபட்ட அரிய பெரிய சேவைகளை ஆற்றியதை நான் பின்பு தான் அறிந்து கொண்டேன்.

அவர்களுடன் சேர்ந்து அவரின் துணைவியார், மகள் ஆகியோரும் சகல சேவைகளிலும் பங்குபற்றியுள்ளார்கள். அதன் பின் அவர்கள் பணி மாற்றலாகி வேறு இடம் சென்றுவிட்டார். பின் நாளில் அப்பாடசாலை பாவற்குளம் தமிழ் மகாவித்தியாலயம் எனத் தரம் உயர்த்தப்பட்டு 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் G C E சாதாரண தர [கா பொ த] வகுப்பு வரையும் இருந்தது. ஆனால் அப்பாடசாலை இன்று நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆசிரியர்களுடனும் 13 மாணவர்களுடனும் 5ம் வகுப்புவரை நடைபெற்றுக் கொண்டு இருப்பதை அறியும் போது என் மனம் வேதனைப்படுகின்றது.

புங்குடுதீவில் பிறந்து, அங்கேயே வளர்ந்து, யாழ்ப்பாணத்தில் படித்துத் தொழிலுக்காக மாற்றலாகி தற்செயலாகப் பாவற்குளக் கிராமத்திற்கு வந்த பண்டிதர் திரு ஆறுமுகன் ஐயா அவர்களால் கல்வியிலே பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடிந்தது. ஆனால் அந்த பாடசாலையில் படித்த எத்தனையோ மாணவர்கள், புத்திஜீவிகள், உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். நாம் படித்த இந்தப் பாடசாலைக்கும், நாம் பிறந்த இக்கிராமத்துக்கும் நாம் என்ன செய்யப்போகிறோம்? என்ற கேள்வியை பண்டிதர் ஆறுமுகன் ஐயாஅவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அவர் இன்று எம்மோடு இல்லவிட்டாலும் அவர் செய்த அரும் பெரும் சேவைகளையும் நற்பண்புகளையும் நாம் என்றும் நன்றியுடன் நினைவில் கொள்வோம். அவருடைய புகழும் பெருமையும் என்றும் பாவற்குளத்தில் நிலைத்திருக்கும்.

இறுதியாக இந்தக்கருத்துக்களை பண்டிதர் ஐயா அவர்களின் நூற்றாண்டு மலரில் வழங்க எனக்கு வாய்ப்பளித்த அவரது மகள் திருமதி தமிழரசி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday 10 March 2017

அழகுமுகம் காண நாணுதே!


மாறுமுகம் கண்ட சூரனும் - நின்
       மதிமுகம் காணக் கோணியே
வேறுமுகம் இன்றிப் பேணியே - தன்
       வீறுமுகம் மாய வேண்டியே
பேறுமுகம் பெற்ற போதிலே - நீ
       மீளிமுகம் கொண்ட தேனடா
ஆறுமுகம் இலங்கு சோதியே - உன்
       அழகுமுகம் காண நாணுதே!

சொல் விளக்கம்
மீளிமுகம் - சிறுவனின் முகம்

இனிதே,
தமிழரசி.

Monday 6 March 2017

குறள் அமுது - (131)


குறள்:
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
யாண்டும் அஃதுஒப்பது இல்                              - 0363

பொருள்:
எப்பொருளின் மேலும் ஆசை வைக்காமல் வாழ்வது போலச் சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை. எங்கும் அதற்கு ஒப்பானது ஏதும் இல்லை.

விளக்கம்:
அவா அறுத்தல் எனும் அதிகாரத்தில் வரும் மூன்றாவது திருக்குறள் இது. அவா என்றால் ஆசை. நாம் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு ஆசையே காரணமாகும். உலகப் பொருள்களின் மேல் ஏற்படும் ஆசையை அறுத்துவிடுதல் ‘அவா அறுத்தலாகும்’. எப்பொருளையும் விரும்பாத தன்மை வேண்டாமையாகும். இன்னொருவகையில் சொல்வதானால் வேண்டாமை என்பது அவா அற்றநிலையே. வேண்டாமை என்னும் வீடுபேறு அடையும் நிலையை அவா அற்ற நிலையின் முதிர்ந்த நிலை எனலாம்.  இதனையே பிறவாமை என்கிறோம்.

எப்போ மனிதருக்கு அவா அற்றநிலை வரும். பால் வேண்டும் என அடம்பிடித்து அழுத குழந்தை பாலகன் ஆனதும் அந்த விளையாட்டுப் பொருள் வேண்டும் இந்த இனிப்பு வேண்டும் என்று ஆசையோடு ஏங்கி ஏங்கி அழும். அந்தப்பாலகனே சிறுவனானதும் வேறு வேறு பொருட்களை விரும்பிக் கேட்பான். பருவவயதில் காதல் எனும் வலையில் சிக்கித் தவிப்பான். கல்வி, தொழில், பொருள், வீடு, மனைவி, மக்கள் சுற்றம் என அவனின்  ஆசைகளின் வட்டம் பெருகிப் பெருகிச் செல்லும். 

பாலுக்கு அழுத குழந்தை பருவவயதில் பால் கேட்டு அடம்பிடிப்பதில்லை. அந்த அவா அவனை விட்டு அறுந்து போய்விடும். வயது முதிர, அறிவும் ஆற்றலும் முதிர அறியாமை எனும் இருள் அகல எம்மைப் பிடித்த ஆசை வட்டங்கள் ஒவ்வொன்றாக அறுந்து போகும். அதாவது தாம் முழுமையாக அநுபவித்ததை மீண்டும் அநுபவிக்க ஆசைப்படாமல் ஒதுக்க ஒதுக்க வேண்டாமை என்னும் விழுச்செல்வத்தை அடையலாம்.

உலகப் பொருட்களின் மேல் வைத்த ஆசையை அகற்றிவிட எல்லோராலும் முடியாது. ஒரு சிலரால் மட்டுமே பொருள் இருந்த போதும் பொருளை இழந்த பொழுதும் இயல்பாக வாழமுடியும். அதற்கான ஆற்றலை அவர்கள் பிறவி தோறும் பெற்றிருப்பர். ஆனால் நிலையற்ற செல்வத்தின் மேல் பற்று வைத்து உழன்று சாமியாடித் திரிவோருக்கு அந்த ஆற்றல் புரியாது. அந்த ஆற்றலே வேண்டாமை என்னும் மிகச்சிறந்த செல்வத்தை எமக்குத்தரும். அந்தச் செல்வத்திற்கு ஒப்பான செல்வம் வேறு ஏதும் இவ்வுலகில் கிடையாது.

Saturday 4 March 2017

உள்ளம் எனும் மாளிகையில்

புங்குடுதீவின் முதுபெரும் மூதாட்டி தனது 106வது வயதில் இன்று இறைபதம் அடைந்தார் 
 தோற்றம்: 17/08/1910                                மறைவு: 04/03/2017

“நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் உலகு”

புங்குடுதீவின் முதுபெரும் மூதாட்டியும் எனது அம்மம்மாவின் தங்கையுமான திருமதி இராசமணியம்மாள் வேலாயுதம் அவர்கள் தனது 106 வயதில் இன்று இயற்கையோடு கலந்தார். இவர் காலஞ்சென்றவர்களான மானிப்பாயைச் சேர்ந்த Dr கனகசபைக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த தெய்வயானைக்கும் கடைசி மகளாகப் பிறந்தவர். நவாலியைச் சேர்ந்த ஓவசியர் வேலாயுதம் என்பவரை மணந்து பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் எனப்பெருவாழ்வு வாழ்ந்தவர். 

நூற்றியாறு வயதிலும் தன் உறவினரை நினைவில் வைத்திருந்தவர். தன் வேலைகளை தானே செய்தவர். இந்த வயதிலும் 60 மைல் வேகத்தில் சென்ற காரில் இருந்து 150 மீற்றர் தூரத்திற்கு முன்பே “அது வரக்காப்பொல ஆஸ்பத்திரி தானே” எனக் கேட்ட அவரது பார்வையின் கூர்மையைப் பார்த்து நான் வியப்படைந்தேன். மனதில் களங்கமில்லா நிறைந்த வாழ்வு, தெளிந்த பார்வை, அன்பின் கனிவு, அகன்ற ஞானச்செருக்கு, சொல்லில் மென்மை, விருந்தோம்பல் பண்பு, பொக்கைவாய்ச் சிரிப்பு யாவும் ஒன்றாய் வடித்த வடிவமே இராசமணி அம்மாள்.

ஏழுமாதத்தில் பிறந்த என்னை கண்ணாடிப்பெட்டியில் வைத்திருந்த போது எனக்கு வேளை தவறாது தனது முலைப்பாலை ஊட்டிய மாண்புக்குரியவர். ஆதலால் எனக்குத் தாயுமானவர். என்னைப்போல் அவரின் அன்புக்குப் பாத்திரமானவர்களின் உள்ளம் எனும் மாளிகையில் என்றும் வீற்றிருப்பார்.
இனிதே,
தமிழரசி.

Friday 3 March 2017

ஏழைகள் வாழ்வும் வளமாகும்!



விண்ணில் இருந்து துளிவீழ்ந்தால்
          வீண்ணிலம் தனிலும் நதிபாயும்
கண்ணில் இருந்து துளிவீழ்ந்தால்
          காதல் நெஞ்சில் அலைபாயும்
மண்ணில் இருந்து மரந்தளிர்த்தால்
          மாநிலம் எங்கும் உயிர்வாழும்
எண்ணில் நல்ல குணந்தளிர்த்தால்
          ஏழைகள் வாழ்வும் வளமாகும்!
இனிதே,
தமிழரசி.