Sunday 21 February 2021

சங்கே நீ முழங்கு!

தமிழ்த்தாய்


தாய் மொழி தமிழே

நின் தாள் பணிந்தோம்

வாய் மொழி தமிழாய்

வந் துளம் புகுந்தாய்

சேய் மொழி யாவையும்

செழிப் புறச் செய்தாய்

தாய்மொழி தரணிக் என்றே

 சங்கே நீ முழங்கு!

இனிதே,

தமிழரசி

Friday 19 February 2021

குறள் அமுது - (144)

குறள்: மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் - 969


பொருள்: உடலில் உள்ள மயிர் நீக்கப்பட்டால் உயிர்வாழாத கவரிமா போன்றவர் தமது மானத்துக்காக உயிர்விடுவர்.


விளக்கம்: இது மானம் என்னும் அதிகாரத்தில் உள்ள ஒன்பதாவது திருக்குறளாகும். உலகில் வாழும் அசையும் உயிரினங்கள் யாவற்றிற்கும் தற்காப்பு என்று கருதக்கூடிய மான உணர்ச்சி இருக்கிறது. அவை தம் கடைசி மூச்சை இழக்கும் வரையும் உயிர்வாழ மானத்துடன் போராடும்.


அப்படியிருக்க மனிதரின் மானத்தை எடுத்துக்காட்ட திருவள்ளுவர் ஏன் கவரிமா என்ற ஒரு விலங்கைச் சொன்னார்? இத்திருக்குறளில் கவரிமா என்று இருக்கிறதே அல்லாமல் கவரிமான் என்று இல்லை. 'மா' என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுப்பெயர் என்று சூடாமணி நிகண்டு சொல்கிறது. கவரி மயிரை உடைய விலங்கை பண்டைய தமிழர் கவரிமா என்றனர். அரியணையில் இருக்கும் அரசர்களுக்கு கவரி வீசுவார் அல்லவா! அக்கவரியை கவரிமாவின் மயிரைக் கொண்டே செய்வர்.


கவரிமா இனம் எருமை  இனத்தைச் சேர்ந்தது. அது இமயமலையில் வாழும் என்பதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இமயமலைப் பகுதி பனியால் மூடப்பட்டு இருக்கும். பனிக்குளிரின் தாக்கத்தைத் தாங்க கவரிமாக்களின் மயிர்கள் மிக நீண்டு அடர்த்தியாக வளர்ந்திருக்கும். மனிதர் தமது குளிரைத் தாங்கும் உடைககளுக்காகவும் போர்க்கும் கம்பளத்துக்காகவும் கவிரிமாவின் மயிரை வெட்டினர். 


கவரிமா மயிரை மிக இகுவாக வெட்டி எடுக்க முடியாது. அது தனது மயிரை வெட்ட வருபவரை முட்டும், உதைக்கும், துள்ளும், கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடும்.  கவரிமா தன் உடல் பெப்பத்தைக் காக்கும் மயிருக்காக உயிரைக் கொடுத்துப் போராடும்.  சுதந்திரமாக உயிர் வாழ்வதற்காகவே கவரிமா போராடுகிறது. இந்தப் போராட்டத்தில் தோற்றவை குளிரில் நடுங்கி இறந்து போகின்றன.


நாம் செம்மறி ஆட்டின் மயிரையும் wool லுக்காக வெட்டி எடுக்கிறோம். ஆனால் பனி பொழியும் காலத்தில் வெட்டி எடுப்பதில்லை. அதுவும் தன் மயிரைக் காத்துக்கொள்ளப் போராடுகிறது. செம்மறியின் போராட்டம் கவரிமாவின் போராட்டம் போல் வீறு கொண்டு இருக்காது. எது தன் தேவைக்காக மிகமிக வீறுகொண்டு போராடுகிறதோ அதன் செயல் சிறந்த செயலாகக் கணிக்கப்படுகிறது. அதனாலேயே திருவள்ளுவர் கவரிமாவின் செயலை மானமுள்ள மனிதரின் செயலுக்கு எடுத்துக்காட்டினார்.


மானம் என்பது உலக உயிர்களின் உணர்வோடு கலந்த ஓர் உயர்ந்த உயிர்த்துடிப்பாகும். அதைத் தன்மானம் என்றும் சொல்லலாம். தன்மான உணர்ச்சியானது உயிரை ஒரு பொருட்டாக நினைக்க விடாது. தனக்கென உள்ளதை அல்லது உள்ளவற்றை பிறர் எடுக்கும் போதும் தம்மைச் சீண்டும் போதும் உண்டாவதே தன்மானம். தமிழர் தமது வாழ்க்கைப் போராட்டத்தில் பெருமையையும் சிறுமையையும் கண்டனர். தனது பெருமைக்கு அழிவு வந்த இடத்து மனவுளைச்சளுடன் அடிமையாக வாழும் வாழ்வை வெறுத்தனர். அதனால்மானம் அழியுங்கால் வாழாமை முன்னினிதேஎன்னும் கோட்பாடு உடையவராய் வாழ்ந்தனர். 


மனிதவாழ்வுக்கு உரம் ஊட்டுவது மானமே. அந்த உரத்தையே வீரம் என்றும் சொல்கிறோம். அந்த வீரமே மனிதனை விலங்கு நிலையில் இருந்து மனிதநிலைக்கு மாற்றியது. பண்டைத் தமிழர் வீரத்தைப் போற்ற, அதுவே காரணம்.  மானவீரம் உள்ளோர் தம் நாட்டின், இனத்தின் புகழுக்கு, பெருமைக்கு, பண்பாட்டிற்கு இழுக்கு வந்தால் தமக்கு வந்தது போலவே எண்ணிச் சாடினர்.


அத்தகையோரே ஈழத்தமிழ் இனத்தின் மானத்திற்காய்  தமது உயிரை  முள்ளிவாய்க்கால் மண்ணில் காவியமாக்கினர்.

இனிதே,

தமிழரசி.

Tuesday 9 February 2021

ஆடிடும் அழகனே என்னெதிர் வாராயோ!



ஆடிடும் அழகனே என்னெதிர் வாராயோ

ஆனந்தத் தாண்டவம் ஆடிட வாராயோ

நாடிடும் அடியவர் குறைகளைய நாளும்

நானில அரங்கினில் ஆடிட வாராயோ

பாடிடும் பண்ணும் பழந்தமிழ் தீஞ்சுவையும்

பரிவுடன் கேட்டே ஆடிட வாராயோ

தேடிடும் அன்பர் தெளிந்தநல் மனதினில்

திருவருட் தாண்டவம் ஆடிட வாராயோ

இனிதே

தமிழரசி. 

Sunday 7 February 2021

மாவலிகங்கையில் சோழமன்னன்

மாவலிகங்கை

இலங்கை வரலாற்றில் சங்ககாலம் தொடக்கம் சேர, சோழ, பாண்டியர்களாகிய தமிழ் மூவேந்தரின் தொடர்புகளைக் காணலாம். முதலாம் இராசராச சோழன் கி பி 993ல் இலங்கையின் வட பகுதியைக் கைப்பற்றினார். அப்போது அநுராதபுரம் இலங்கையின் தலைநகராக இருந்தது. பொலநறுவையைத் தலைநகராக்கி அதற்குஇராஜராஜ ஜனநாத மண்டலம்எனப்பெயர் சூட்டினார். எட்டு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு இருந்த சோழநாடு இராஜராஜ ஜனநாத மண்டலத்துடன் சேர்ந்து ஒன்பது மண்டலமாகியது. அதன் பின்னர் மகன் முதலாம் இராஜேந்திர சோழன் இலங்கை முழுவதையும் கைப்பற்றி ஆட்சி செலுத்தினான். அப்போது மாவலிகங்கை அவன் ஆட்சிக்குள் இருந்தது.

புங்குடுதீவில் கோட்டைகட்டி வாழ்ந்த வீரமாதேவிமாவலி கங்கையில் இருந்து இரத்தினங்களையும் முத்துக்களையும் சோழேசன் அள்ளிச் சென்றான்என்கிறாள். அந்தச் சோழேசன் முதலாம் இராசராச சோழனா? அன்றேல் முதலாம் இராஜேந்திர சோழனா என்பது தெரியவில்லை. இரத்தினங்கள் மலையில் பிறப்பன.  அவை மலையில் இருந்து வீழும் அருவியோடு மாவலி கங்கையில் உருண்டோடி வரும். ஆனால் முத்துக்கள் வருமா? நன்னீர் ஆற்றில் வாழும் சிப்பிகள் முத்துக்களை ஈனும். இன்றும் வட அமெரிக்காவில் ஓடும் மிசிசிப்பி ஆறு போன்ற ஆறுகளில் முத்துக்கள் பிறக்கின்றன. 

காளமேகப்புலவரும் இந்நிகழ்ச்சியை சோழேசன் என்றே பாடியுள்ளார். காளமேகப் புலவர் வசை பாடக் காளமேகம் என்று பெயர் பெற்றவர். அதற்கமைய எவரையும் புகழ்வது போல இகழ்வதும் உண்டு.

காவலன் எங்கள் கனவைப்பாஞ் சோழேசன்

மாவலி கங்கை மணிவாரி - ஆவனலென்

றப்புளங்கை தோய்க்க வதில்வா ரியமுத்தை

கொப்புளமென் றூதுங் குரங்கு

அதாவது

"காவலன் எங்கள் கனகவைப்பாம் சோழேசன்

மாவலி கங்கை மணிவாரி - ! அனலென்று

அப்புளங்கை தோய்க்க அதில் வாரிய முத்தை

கொப்புளம் என்று ஊதும் குரங்கு

எங்கள் காவலனும் பொற்செல்வம் போன்ற சோழமன்னன் மாவலி கங்கைக் கரை மணிகளை வாரி அள்ளினான். அவை நெருப்புத் தழல் போல் தெரிந்ததால் ! அனல் எனக்கூறி மாவலிகங்கை நீரினுள் கையை விட்டான். அக்கையில் வாரிய முத்துக்களை நெருப்புச் சுட்ட கொப்புளம் என குரங்கு ஊதியதுஎன்கிறார். ஈழத்துக் குரங்கேபூஎன ஊதித் தள்ளும் முத்தையா வாரி அள்ளிக் கொண்டுவந்தார் என்ற இகழ்ச்சியும் இப்பாடலில் இருக்கிறது.

பாண்டியன் சீமாற சீவல்லபனும் மனைவியும்

வீரமாதேவி தனது மூதாதையரான பாண்டியன் சீமாற சீவல்லபன் இலங்கையின் பொன்னையும் இரத்தினங்களையும் முத்துக்களையும் மட்டுமல்ல புங்குடுதீவு கள்ளியாற்றங் கரையிலிருந்து அகிலையும் முத்தையும் பவளத்தையும் அள்ளிச் சென்றது போல சோழர்கள் மாவலி கங்கையில் மணிகளையும் முத்துக்களையும் வாரிச் சென்றார்கள் என்கிறாள். முதலாம் இராசராச சோழனுக்கு 100 வருடங்களுக்கு முன்னரே சீமாற சீவல்லபன் ஈழத்துச் செல்வங்களை அள்ளிச் சென்றான் என்பதை சிம்மனூர் செப்பேடும் சொல்கிறது.

இனிதே,

தமிழரசி.