Friday 28 April 2017

முத்தமிழ் எனும் சொல்லைச் சொன்னவர் யார்?

சீத்தலைச் சாத்தனார்

முதன் முதலில் முத்தமிழ் என்ற சொல்லைச் சொன்னவர் யார்?

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கதுங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா”
                                                    - (நல்வழி: கடவுள் வாழ்த்து)
என்று ஔவையார் கேட்டிருப்பதால் அவரே சொன்னார் எனச் சிலர் சொல்கின்றனர். இவ்வெண்பாவில் ‘சங்கத் தமிழ் மூன்று’ எனக் கூறியுள்ளாரே அல்லாமல் முத்தமிழ் எனும் சொல்லைச் சொல்லவில்லை.

வேறு சிலர் கம்பன் சென்னான் என்கின்றனர். அவர்கள் கம்பன் சொன்னதாகக் குறிப்பிடும் பாடலில் தேவர்நாடு கூடத் தமிழர் நாட்டிற்கு இணையாகாது என்பதை எடுத்துக் காட்டக் கம்பன் ‘முத்தமிழைக்’ கூறுகிறான்.
“அத்திருத்தகு நாட்டினை அண்டர் நாடு
ஒத்திருக்கு மென்றால் அது ஒக்குமோ
எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்
முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்”
என ‘முத்தும் முத்தமிழும் தேவர் நாட்டில் கிடைக்குமா? ஆதலால் தமிழ் நாட்டிற்கு தேவர் நாடு ஒப்பாகாது’ எனக் கூறியுள்ளான். கம்பன் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். எனவே அக்காலத்திற்கு முன் எவராவது கூறியிருக்கிறார்களா?

சித்தர்களில் ஒருவரான குதம்பைச் சித்தரும்
முத்தமிழே கற்று முழங்கு மெய்ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி”
எனப்பாடியிருக்கிறார். அவரும் பிற்காலத்தவேரே. அகத்தியரை ‘முத்தமிழ் முனிவர்’ எனச்சொல்லும் ‘காஞ்சிபுராணமும்’ பிற்காலத்தைச் சேர்ந்ததே.

'முத்தமிழ்க் காப்பியம்' என்னும் பெயர் சிலப்பதிகாரத்திற்கு உண்டு. ஏனெனில் பாடல்கள் இடையே உரைநடை வருவதாலும் இசையுடன் கூடிய நாடக வெண்பாக்கள் இருப்பதாலும் முத்தமிழ்க் காப்பியம் என்கின்றோம். சிலப்பதிகாரத்தை முத்தமிழ்க்காப்பியம் என்று யார் எப்போது சொன்னார் என்பதை அறியமுடியவில்லை.

திருவள்ளுவரின் திருக்குறளைப் புகழ்ந்து சங்ககாலப் புலவர் பலரும் பாடியுள்ளனர். அத்தொகுப்பு ‘திருவள்ளுவமாலை’ என அழைக்கப்படும். அதில் ஒரு வெண்பா
மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்”
என இருக்கிறது. அதில் சீத்தலைச் சாத்தனார் இவ்வெண்பாவை இயற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரே மணிமேகலையை இயற்றியவர். 'முத்தமிழ்' என்ற சொல்லை முதன் முதல் மொழிந்தவர் சீத்தலைச் சாத்தனார் எனக் கருதுவதே பொருந்தும்.

முத்தமிழ் என்றால் என்ன?
மன எண்ணங்கள் அறிவு, உணர்ச்சி, செயல் எனும் மூன்று வடிவங்களாலும் வெளிப்படும். எம் மன எண்ணத்தின் சிந்தனைச் சிதறல்கள் எழுதும் எழுத்தாலும் எழுப்பும் ஒலியாலும் சொற்களாக வெளிவருகின்றன. பண்டைத்தமிழர் இயற்கையிடம் இருந்து தாம் இயல்பாய் அறிந்ததை மற்றவர்கட்குச் சென்னதால் அதை இயற்றமிழ் என்றனர். இயல்பாய்ப் பிறந்த தமிழ் இயற்றமிழ் ஆயிற்று. அறிவார்ந்த தமிழே இயற்றமிழ் எனினும் பொருந்தும்.

இன்பமோ துன்பமோ கோபமோ வீரமோ எதுவானாலும் அங்கே உணர்ச்சியே முன்னிற்கும். குயிலின் குரல் கேட்டு அதனோடு இணையாகக் கூவத் தூண்டுவது எது? குயிலின் குரல் நம் உணர்ச்சியைத் தூண்ட அந்த மயக்கத்தில் கூவுகிறோம். அதாவது எமது மனம் குயிலின் குரலோடு இசைகிறது. இவ்வாறு இன்பத்திலோ துன்பத்திலோ பிறரை இசைவிப்பது இசைத்தமிழாகும். எனவே உணர்ச்சியைத் தூண்டும் தமிழை இசைத்தமிழ் எனலாம்.

அறிவும் உணர்ச்சியும் ஒன்றுசேரும் பொழுது செயல் நிகழும். இயலும் இசையும் சேரும்போது நடிப்பு நிகழும். செயலே நாடகங்களில் காட்சியாக்கப்படுகிறது. இயலும் இசையும் இணைந்தே நாடகக் காட்சியாய் ரசிகனின் மனதில் எழுச்சியை ஏற்படுத்துகிறது. செயல் வடிவில் வெளிப்படும் தமிழை நாடகத் தமிழ் என்கிறோம் என்பதே உண்மை.

இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் சேர்ந்ததே தமிழ்மொழி. அதுவும் தமிழ்மொழியின் தனிச்சிறப்பில் ஒன்றாகும்.
இனிதே,
தமிழரசி.

Thursday 27 April 2017

கிள்ளி எறியாதீர்கள்!

வேப்பஞ்செடி[இதுவே வேப்பமரக வளரும்]
இயற்கையாகவே நம் வீடுகளுக்குப் பக்கதில், படலையடியில், கிணற்றடியில் தோட்டத்தில் மெல்ல முளைத்து பச்சை தழைகாட்டும் செடிகளை சின்னஞ் சிறுசெடியென எண்ணி கிள்ளி எறியாதீர்கள். வெட்டி எரிக்காதீர்கள். ஏனெனில் அவையே வளர்ந்து நாம் சுவாசிக்கும் காற்றையும், வெய்யிலுக்கு இதமான நிழலையும் குடிக்கும் தண்ணீருக்குத் தேவையான மழையையும் தரும் மரங்களாய் வளர்கின்றன. மரங்கள் இல்லையேல் சுவாசிக்கும் காற்றையும் உண்ணும் உணவையும் குடிக்கும் நீரையும் கோடி கோடியாகத் தொகுத்து வைத்திருப்போரும் வாங்கிவிட முடியாது. அவர்களாலும் உயிரோடு வாழ இயலாது. மற்றோரின் நிலை என்னாவது? புவியின் தன்னிறைவைப் பாதுகாப்பதும் மனித நேயமேயாகும்.

திருவள்ளுவரும்
“இளைதாக முள்மரம் கொல்க”
என்று எமக்குத் துன்பம் தரும் முட்செடிகளை சிறுசெடியாக இருக்கும் போது அழிக்கச் சொன்னாரே தவிர நன்மை தரும் மரங்களை அழிக்கச் சொல்லவில்லை.

அண்ணன்மார் பயன் தரும் மரஞ் செடி கொடிகளை வெட்டி எறிந்து அவ்விடத்தில் வேறுபயிர் செய்தால் கூட அவர்களது தங்கையைக் காதலிப்பது தப்பு என்னும் கருத்து பண்டைத் தமிழரிடையே இருந்திருக்கிறது. அதற்குக் காரணம் ‘பயனுள்ள மரஞ் செடி கொடிகளை வெட்டுவோரின் தங்கைக்கு எப்படி பிறரது துன்பத்தை உணர்ந்து இரக்கங்காட்டும் குணமிருக்கும்?' எனும் எண்ணமேயாகும். அதனை
“நறுந்தண் தகரம் வகுள மிவற்றை
வெறும்புதல் போல் வேண்டாது வேண்டி - எறிந்துழுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு
நொந்தினைய வல்லளோ நோக்கு” 
                                    - (திணைமாலை நூற்றைம்பது: 24)
என்று ‘திணைமாலை நூற்றைம்பது’ சொல்கிறது. ஆனால் இன்றைய தமிழராகிய நாமோ மரங்களுக்கும்   உயிருண்டு என்று எண்ணுவதே இல்லை. 
தகரை
நறுமணம் கமழும் குளிமையான தகரை [தகரம்] மகிழ் [வகுளம்] போன்றவற்றை பயனற்ற புதர்களைப் போல விரும்பாது [வேண்டாது] வெட்டியெறிந்து பயிர் செய்யவிரும்பி [வேண்டி] உழுது, சிவந்த தினையை விதைப்போரது தங்கை பிறர் படுந்துன்பத்திற்காக [நோய்க்கு] மனம் நொந்து வருந்த [இனைய] வல்லவளோ என்பதைப் பார்ப்பாயாக [நோக்கு]!’ எனக்கூறுகிறது. 

அன்றைய தமிழினம் மரத்தை வெட்டி எறிபவர்களது வீட்டுப் பெண்ணை திருமணம் செய்வது துன்பந்தரும் என்ற நிலைப்பாட்டில் வாழ்ந்திருக்கிறது. இன்றோ மண்ணும் மரமும் வெறும் தூசுக்குச் சமம் கட்டும் கட்டிடங்களே என்றும் நிரந்தரம் என நினைக்கிறது.

மரஞ்செடி கொடிகளால் சூழப்பட்டு சுரங்கப்பாதை [அதரிடை] போலச் காட்சிதரும் வழியில் மிக மென்மையான தளிரோடு கூடிய துவளும் கொப்புடன் நின்ற சிறுசெடி வளர வளர உள்ளே வயிரமாகி வளர்ந்து முதிர்ந்த மரமாகும் போது ஆண் யானைகளைக் கட்டும் கட்டுத்தறியாகப் பயன்படும். அது போல ஒருவன் அறிவிலும் பொருளிலும் வலியவனாக உயர்ந்தநிலைக்குத் [தாழ்வின்றி] தன்னை ஆக்கிக் கொள்ளலே மனிதவாழ்வாகும் என்பதை
“ஆடு கோடாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்” - (நாலடியார்: 192)
என நாலடியார் பகருகிறது.

எனவே பயனுள்ள இளஞ்செடிகொடிகளைக் கிள்ளி எறியாதீர்கள். அவை வளர்ந்து சுற்றுச் சூழலின் மாசைத் தூய்மையாக்க மாதம் மும்மாரி பொழியும். நீர்வளம் பெருகும். வயல்கள் செழிக்கும். பயிர்கள் விளையும். உலக உயிர்கள் யாவும் இன்புற்று வாழும். வறுமையை வறுமையடையச் செய்யும்.  
இனிதே,
தமிழரசி.

Monday 24 April 2017

வாழிய புங்குடுதீவு எனக் கூவாய்!



உயிரும் மெய்யும் உன்தாள் உவப்ப
தயிரும் நெய்யுந் தருபாலும் - பயிரும்
நற்றிருவும் நீரும் நிலனும் சிறக்க
பொற்புடன்றிகழ் புங்கையூ ரே

அமிழ்தாம் தமிழே! அழகிய குயிலாய்
ன்றோர் மகிழ னந்த வெள்ளம்
யற்கையின் நாத னிமையைக் கூட்ட
கையும் அறனும் தலின் இன்பமும்
யிராய்க் கொண்ட ண்மையோர் வாழும்
ர் புங்கை யூரெனெப் பலரும்போற்ற
ழில்தரு சோலை ங்ஙனும் சூழ
ரொடு பொலிந்து ற்றங்கள் நிறைந்து
ந்தார் செழிக்க வண்ணம் வளர
ள்ளியோர் தங்கள் ள்ளொளி ஒளிர
ங்கியே மானுடர் ர்புடன் வாழ
டத மரங்கள் அவ்விதழ் மலர
கமும் காசும் அகந்தொறும் பெருக
வாழிய புங்குடுதீவு எனக் கூவாய்!
                                         
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
நற்றிருவும் - நல்ல செல்வமும்
எங்ஙனும் - எவ்விடத்திலும்
ஏர் - உழவு
ஏற்றங்கள் - நீரேற்றங்கள்
ஐந்தார் - பனைமரம்
ஐவண்ணம் - மருதோன்றிமரம்
ஒள்ளியோர் - அறிவுடையோர்
ஒள்ளொளி - அறிவு
ஓர்புடன் வாழ - சிந்தித்து வாழ
ஔடதம் - மருந்து
அவ்விதழ் - அழகிய பூவிதழ்
அஃகமும் - தானியங்களும்

குறிப்பு:
புங்குடுதீவிற்கு 2014ல் சென்ற பொழுது போர்க்கோல மேகம் கொட்டிய குண்டுமழையில் நனைந்து சிதறுண்டிருந்த அதன் நிலையைப் பார்த்த நெஞ்சக்கனலோடு 10 - 04 - 2014 அன்று தமிழின் பன்னிரு உயிரெழுத்தும் ஆயுதவெழுத்தும் அகர வரிசையில் வர எழுதியது. [தமிழை அழகிய குயிலாகமாறி, புங்குடுதீவை வாழ்த்த வேண்டுதல்]

Friday 21 April 2017

நிறை செல்வம் தருக!


சிங்காரத் திருவே நின்
       சீர் கேட்க வேண்டும்
மங்காத பொருள் யாவும்
       மனை தோறும் வேண்டும்
எங்கானும் மறந்தாலும்
       எமக் கருள வேண்டும்
நீங்காது ளத்திருந்து
       நிறை செல்வம் தருக!
இனிதே,
தமிழரசி.

Thursday 20 April 2017

குறள் அமுது - (133)

குறள்:
“ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்”

பொருள்:
அறிஞர்களுக்கு முன்பு நாமும் அறிஞர்களாகப் பேசவேண்டும். அறிவிலார் முன் நாமும் வெண்சுண்ணாம்பு போல ஒன்றும் அறியாதவராகக் காட்டிக் கொள்ள வேண்டும்.

விளக்கம்:
இத்திருக்குறள் ‘அவை அறிதல்’ அதிகாரத்தில் நான்காவது குறளாக உள்ளது. ஒன்றைப் பேசுவதற்கு முன்பு சூழ உள்ளோரின் பண்பை அறிந்து கொள்வதை அவை அறிதல் என்கிறார். அந்நாளில் அரசர்க்குத் தூது செல்வோர் முன்பின் அறியாத மாற்றான் நாட்டு அரச அவையில் தூதை எடுத்துச் சொல்லவேண்டும். அவையில் இருப்போரின் செய்கையைக் வைத்தும் அவர்கள் சொல்வதைக் கொண்டும் தன்னைச் சூழ்ந்திருப்போர் எத்தன்மையர் என்பதை அறிந்து பேசவேண்டும் என்பதையே இவ்வதிகாரம் சொல்கிறது.

ஒளியார் - ஒளியுள்ளோர், அதாவது அறிவொளி உள்ள அறிஞர்கள் முன்னிலையில் பேசும் பொழுது ஒள்ளியராய் - அறிவுமிகுந்தவராகப் பேசவேண்டும். ஆராய்ந்து கற்ற கல்வியறிவும் உலகியல் அறிவும் வேண்டியதை வேண்டியவாறு பேசும் திறனும் உடையோரே அறிவொளியுடையோர். அத்தகைய அறிஞர்களின் முன் ஒன்றை எடுத்துச் சொல்லும் பொழுது ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பதற்கு இணங்க சொல்வதைச் செவிமடுத்து, நன்மை தீமைகளை எண்ணிப்பார்த்து தக்க பதிலைச் சொல்வர்.

வெளியார் - இதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். ஒருவருக்கு அறிவு நிறைந்திருக்க வேண்டிய இடம் வெளியாய் வெற்றிடமாய் இருப்பது ஒன்று. அறிவு வெளிறி மங்கிப்போய் இருப்பது மற்றொன்று. எப்படிப் பொருள் கொள்ளினும் அறிவில்லாத பேதையரையே திருவள்ளுவர் வெளியார் என்கின்றார்.  பேதையர் முன்பு ஒன்றைச் சொல்லப்போனால் நாலடியார் சொல்லும் ‘கற்கிள்ளி கை இழந்தோர்’ நிலை சொல்வோருக்குக் கிட்டும். கருங்கல்லைக் கிள்ள முடியுமா? அப்படிக் கருங்கல்லை கிள்ளிப் பார்ப்பவர்களின் விரல், நகம் முன்போல் இருக்குமா? அதனை  பேதைமை எனும் பகுதியில் நாலடியார்
"தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணங்குதும் என்பர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப
கற்கிள்ளி கையிழந் தற்று"                                - (நாலடியார்: 336)
எனச் சொல்கிறது.

அதனால் திருவள்ளுவர் அறிவுடையோருக்கு ஓர் எச்சரிக்கை செய்கிறார். அறிவற்ற வெளியார் முன்பு ‘வான்சுதை வண்ணமாக இரு!’ என்கிறார். வால்[வெண்மை] + சுதை[சுண்ணாம்பு] = வான்சுதை. சுண்ணாம்பு வெண்மையாய் நிறமற்று இருப்பது போல அறிவுடையோர் வெளிறி ஒன்றும் தெரியாதவர் போல் இருக்க வேண்டுமாம்.

அறிஞர்களோடு அறிஞராய் இரு! அறிவிலிகளோடு அறிவிலி போல இரு! என்பதே திருவள்ளுவர் கூறும் செய்தியாகும்.

Wednesday 19 April 2017

சங்ககால உணவு உண்போமா! - 2

அவரைப்பருப்பு

சங்க இலக்கியத்தில் இருக்கும் பாடல்களில் அதிக பாடல்களை இயற்றிய பெருமைக்கு உரியவர்களில் கபிலரும் ஒருவர். அவர் சங்ககால மக்களின் வாழ்வியலை மிகத்தெளிவாகத் தமது பாடல்களில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவரது சங்க இலக்கியப்பாடல்கள் அவரை சங்கப்புலவனாக மட்டும் காட்டவில்லை. அதற்கும் மேலாக இலக்கியவாதியாய், இசை நுணுக்கம் அறிந்தவராய், அரசியல் சாணக்கியம் தெரிந்தவராய், சான்றோனாகக் காட்டுகிறது. இவற்றோடு கபிலர் ஒரு சாப்பாட்டுப் பிரியர் என்பதையும் சங்க இலக்கியத்தில் காணலாம்.

சங்ககாலத்தில் வாழ்ந்த சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் அரசன் கபிலரின் பாடல்களைக் கேட்டு அவருக்கு நூறாயிரம் காணம் பொன்னும் ‘நன்றா’ என்ற குன்றின் மேல் ஏறி நின்று தன் கண்ணின் பார்வைக்கு எட்டிய தூரத்தில் தெரிந்த நாடெல்லாம் பரிசாகாக் கொடுத்தான். அவற்றையெல்லாம் கபிலரும் பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்தார். 

ஒருநாள் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனனின் அரண்மணைக்கு வந்த கபிலரை அவன் கைகொடுத்து வரவேற்றான். கபிலரின் கையைப்பற்றிப் பிடித்தவன் வியப்படைந்தான். அவன் ஓர் அரசன். செல்வச்செழிப்பில் கூப்பிட்ட குரலுக்கு ஏவல் செய்ய எத்தனையோ பேர் இருக்க வாழ்ந்து பட்டுமெத்தையில் தூங்கி எழுபவன். அப்படிப்பட்ட அவனின் கை வன்மையாக இருக்க கபிலரின் கை மிகவும் மென்மையாக இருந்தது. அதுவே அவனை வியப்படைய வைத்தது. அதனால் கபிலரை பார்த்து, ‘அவரின் கை மென்மையாக இருப்பதற்கான காரணம் என்ன?' எனக் கேட்டான்.

கபிலர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? நம் எல்லோரையும் அதிர்ச்சியில் வீழ்த்தும் பதில் அது. கபிலரைப் பெரும்பாலானோர் அந்தணர் என்று எழுதுகின்றனர். எனெனில் மாறேக்கத்து நப்பசலையார் எனும் சங்ககாலப் பெண்புலவர் கபிலரை ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ [புறம்: 126] எனப் புகழ்ந்து இருப்பதால் அப்படி எழுதுகிறார்கள். அவ்விதம் எழுதுவோருக்கு கபிலரின் அந்தப்பதில் மிகவும் அதிர்ச்சியையே கொடுக்கும்.

"போரில் மிகவும் ஆற்றலுடையவனே! யானைப்போரில் யானையை ஏவி இழுத்துப் பிடிக்கின்றாய். குதிரைகளை அவற்றின் வாரைப்பிடித்து அடக்குகின்றாய். தேர்மிசை நின்று வலிமையான வில்லில் ஏற்றிய அம்பினை எய்கின்றாய். பரிசிலர்க்கு கிடைத்தற்கு அரிய அணிகளை வாரி வழங்குகின்றாய். நின் கை அதனால் உரம் பெற்றிருக்கிறது," எனக் கூறியவர் தொடர்ந்து
“புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்
மெல்லிய பெரும”                                     
                                                           - (புறம்: 14: 12 - 16)
‘புலால் மணம் வீசும் பச்சை இறைச்சியை [பைந்தடி - steak] பூமணக்கும் புகையில் வாட்டி எடுத்த துண்டும், இறைச்சித் துவையலும், கறிசோறும் உண்டு வருந்துவதல்லாமல் வேறு தொழில் செய்தறியமாட்டாததால் எம்கை மிக மென்மையாக இருக்கிறது’ என்றார். கபிலர் அந்தணர் என்றால் ஊன் உண்டதாகச் சொல்லி இருப்பாரா! புலவர்கள், அறிஞர்கள் கைவருந்தி உழைப்பதில்லை. அவர்களின் அறிவே பெரும்பாலான வேலைகளைச் செய்கிறது. அதனால் கபிலரின் கை மிக மென்மையாக இருந்துள்ளது.

கபிலர் கூறிய ஊன்துவை எத்தகைய சுவையுடையது என்பதை ஔவையார் தனக்கும் தன்சுற்றத்தார்க்கும் அதியமான் நெடுமான் அஞ்சி கொடுத்தனவற்றிச் சொல்லும் இடத்தில்
“அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி”
                                                          - (புறம்: 390: 17 - 18)
எனக் கூறுகிறார். ‘அமிழ்தம் போன்ற இறைச்சித் துவையலும்[ஊன்துவை], உணவையும்[அடிசில்] வெள்ளியாலான வெண் கலத்தில் தந்து உண்பித்தான்’ என்கின்றார். எனவே ஊன்துவை அமிழ்தம்போன்ற நல்ல சுவையுள்ளது என்பதை நாம் அறியலாம். அதிகமான் நெடுமான் அஞ்சி கி மு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்பர். ஆகவே தமிழர் ஊன்துவையலை இரண்டாயிர வருடங்களுக்கு மேலாக உண்டு வருகின்றனர்.

ஊன்துவை அடிசிலை அரசரும் உண்டனர் என்பதை பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பரணர் காட்டுகிறார்.
“சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடா பீடர் உள் வழி இறுத்து”
                                                     - (பதிற்றுப்பத்து: 45: 13 - 14)
‘பகைவர்க்குப் புறமுதுகு காட்டாத பெருமையுள்ள வீரர் உள்ளம் மகிழ தனக்கு வேறு சோறு எனப்பிரிக்காது இறைச்சித் துவையலுடன் ஆன உணவை அரசனும் உண்டான்’ என்கிறார். 

சான்றோரும் அரசரும் விரும்பி உண்ட ஊன்துவை என்ன நிறத்தில் இருந்தது என்பதை பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்தில் காக்கைபாடினியார் நச்செள்ளையார் குறிப்பிட்டுள்ளார்.
“செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
வால்ஊன் வல்சி”                                
                                                       - (பதிற்றுப்பத்து: 55: 7 - 8)     

இறைச்சியின் செந்நிறம் [செவ்வூன்] தெரியாதபடி அவரைப்பருப்புடன் [முதிரை] சேர்த்து அரைத்த வெண்ணிறத் துவையலும் வெண்ணிற இறைச்சி [வால்ஊன்] கலந்த சோறும் [வல்சி]’ என்கிறார்.  எனவே அவரைப்பருப்பு சேர்ந்த இறைச்சித் துவையலோடு கோழி இறைச்சி [வெண்ணிற இறைச்சி] புரியாணி சாப்பிட்டிருகிறார்கள். 

நெல், அரிசி, சோறு, உணவு போன்றவற்றை வல்சி எனும் சொல் குறிக்கும். சங்ககால கோழி இறைச்சித் துவையலை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

சங்ககாலத்தமிழரின் கோழி இறைச்சி வெண்துவையல்

தேவையான பொருட்கள்:
கோழி இறைச்சி [எலும்பு நீக்கிய] - 100 கிராம்
அவரைப்பருப்பு  -  50 கிராம்
தேங்காய்ப்பூ  -  1 மே. கரண்டி
வெண்மிளகு  -  2  தே. கரண்டி
தோல் நீக்கிய இஞ்சி  -  1” துண்டு
தோல் நீக்கிய உள்ளி  -  1 பல்
தேசிக்காய் புளி  -  தேவையான அளவு
உப்பு  - தேவையான அளவு

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு கோழி இறைச்சியை வேகவைத்து எடுக்கவும்.
2. இன்னொரு பாத்திரத்தில் அவரைப் பருப்பை முக்கால் பதத்தில் வேகவைத்து எடுக்கவும்.[குழையவிட வேண்டாம்].
3. இவை ஆறியதும் மீதிப்பொருட்களையும் சேர்த்து அவித்த நீரில் சிறிதுவிட்டு துவையல் போல் நன்கு அரைத்து எடுக்கவும்.

குறிப்பு:
இந்த ஊன் வெண்துவையலை புரியாணியுடன் மட்டுமல்ல நாண், பாண் போன்றவற்றில் பூசியும், இடியப்பம், இட்டலி, தோசை போன்றவற்றுடனும் உண்ணலாம்.
இனிதே,
தமிழரசி.

Wednesday 12 April 2017

முயற்சியும் நட்பும்


இவ்வுலகத்தில் வாழும் மனிதரின் வாழ்க்கைப் பாதை எல்லோர்க்கும் ஒன்றாய் இருப்பதில்லை. ஓர் இனமாய் இருந்தாலும் ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் வாழும் வாழ்க்கை ஒன்றாவதில்லை. எப்படித்தான் அவர்போல வாழவேண்டும் இவர்போல வாழவேண்டும் என எண்ணுவோரும் அந்த இலக்கை அடைவதில்லை. அல்லது அவர்கள் நினைத்ததைவிட பலமடங்கு சிறந்த இலக்கை அடையலாம்.

‘முயற்சி திருவினை ஆக்கும்’ எனும் பழமொழி முயற்சி செய்வோர் செல்வத்தில் கொழிப்பர் என்கிறது. அந்த முயற்சியை எறும்பு போலவும் செய்யலாம். எலியைப் போன்றும் செய்யலாம். புலி மாதிரியும் செய்யலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் எத்தகைய முயற்சி செய்வாருடன் நாம் நட்புக்கொள்வது நல்லது என்பதை நாமே ஆராய்ந்து அறியவேண்டும். சங்ககால அரசனான சோழன் நல்லுருத்திரன் எவ்வகையால் முயற்சி செய்து வெற்றி அடைந்தாருடன் நட்புக் கொள்வது சிறந்தது என்பதை தன் அநுபவத்தால் கண்டு சொன்னதைப் புறநாநூறு 

“விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
வல்சிகொண்டு அளைமல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணாதாகி வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
இருங்களிறு ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மை யொடு
இசைந்த வைகல் உளவா கியரோ”
                                                                        - (புறம்: 190)
என எடுத்துச் சொல்கிறது.

‘நன்றாக விளைந்திருக்கும் சின்னஞ்சிறிய இடத்தைப் பார்த்ததும் அங்கு வளைந்து தொங்கும் நெற்கதிர்களைத் திருடிச் சென்று தனது வளையினுள் நிறைத்து வைத்திருக்கும் எலி போன்ற முயற்சியை உடையோராய்த் தேடும் பொருளைத் தமக்கென இறுக்கிப் பிடித்து வாழ்வோரோடு சேரும் நட்பு இல்லாதொழியட்டும். கொடிய காட்டுப்பன்றி தனது இடதுபக்கத்தே வீழ்ந்து கிடப்பினும் அன்று அவ்விடத்தில் அதை உண்ணாது பெரிய யானையை வலப்பக்கத்தில் அடித்து வீழ்த்தி உண்ணும் பசித்த புலிபோன்ற முயற்சியுள்ள வலிமையுடையோரது நட்புபோடு சேர்ந்ததாய் நாட்கள் இருக்கட்டும்’ என்கிறான்.

தமக்கெனப் பொருளைப் பதுக்கி வைக்கின்ற உளமில்லாதார் [உளம் இலாளரோடு - நல்லமனமில்லாதார்] நட்பைக் கைவிட்டும், மெலிவு இல்லாது [மெலிவில்] உள்ளத்தில் வலிமையுடையார் [உரனுடையார்] நட்பை [கேண்மை] நாள்தோறும் [வைகல்] வளர்த்துக் கொள்ளவும் வேண்டுமாம்.
இனிதே,
தமிழரசி.  

Saturday 8 April 2017

நாகர்கோயில் நங்கையைப் போற்றுவமே


Photo Source: Dinamalar

நானில மீதினில் நாகர்கோயில்
          நங்கையைப் போற்றுவமே
தானினி தென்று இருந்தின்பங்காணா
          தன்மையைப் புகழ்வோமே
வானிடையுயர்ந்த தென்னைமரமேறி
          வாழ்வதை வாழ்த்துவமே
தேனினுமினிய செந்தமிழ்போல
          திருவொடு வாழிய! வாழியவே!!
                                                                           - சிட்டு எழுதும் சீட்டு 136
இனிதே,
தமிழரசி.

Friday 7 April 2017

ஏழைகட்கு இரங்கு தயைவோடு!

முருகன் வேடத்தில் வள்ளி

வண்ணமயில் ஏறிவரு வடிவேலா
            வாழ்க்கை இதுவென்ன பலகோடு
கண்ணுமயில் அவள்றனை காத்திடு
            காதலால் என்றுமுன் அருளோடு
எண்ணமயில் மீதினில் அமர்ந்தே
            ஏழைகட்கு இரங்கு தயையோடு
பொண்ணுமயில் வள்ளிதன் மணாளா
           பாதம் பணிந்தேன் பரிவோடு 
இனிதே,
தமிழரசி.

Saturday 1 April 2017

குறள் அமுது - (132)


குறள்:
“மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை”                              - 345

பொருள்:
பிறப்பைப் போக்க முற்படுவோருக்கு இந்த உடம்பும் அதிகமகும். வேறு தொடர்புகள் எதற்கு?

விளக்கம்:
இத்திருக்குறள் துறவு எனும் அதிகாரத்திலுள்ள ஐந்தாவது குறளாகும். உலகப் பற்றுக்களில் இருந்து விடுபடுதலே துறவாகும். எமது வாழ்க்கைப் பயணத்தில் எது? எப்போது? எங்கே? எப்படி? நடக்கும் என்று எவரும் அறுதியிட்டுக் கூறமுடியாது. இவ்விதி உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது. செல்வச்செழிப்பில் மிதந்தோர் வறுமையில் வாடுவதும், நேற்று இருந்தோர் இன்று இல்லாது போதலும், நோயற்று வாழ்ந்தவர் நோயில் வீழ்வதும், மாடமாளிகைகள் இடிந்து மண்ணாவதும் அன்றாடம் காணும் துன்பக் காட்சிகளே. 

அக்காட்சிகள் மனிதனுக்கு வாழ்க்கையின் நிலையில்லாத் தன்மையை உணர்த்தியது. நிலைமாறுகின்ற இந்த உலக இயற்கையை இயக்குவது எதுவோ அது நிலைத்த பொருளாக இருக்கவேண்டும். அந்த நிலைத்த பொருளை அடைந்தால் பிறப்பால் வரும் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என மனித அறிவு கூறிற்று. அதற்கு வழி என்ன? உலக ஆசைகளைப் பற்றுக்களை நீக்கினால் பிறப்பால் வரும் துன்பத்தை அறுக்கலாம் எனக் கண்டனர்.

அப்படி பிறப்பை அறுக்கும் - பிறப்பை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டோருக்கு அதை நீக்குவதற்குத் துணையாக இருக்கும் உடம்பும் கூடுதலானதே. ஏனெனில் உலகப் பற்றுக்களில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வோருக்கு தமது உடம்பின் மீதான பற்றும் நீங்கிப் போகும். உண்மையான துறவறத்தை மேற்கொள்வோரின் மனம் தமது பிறவித்துன்பத்தை நீக்குவதிலேயே குறியாக இருக்கும். அத்தகையோருக்கு உலகதில் இருக்கும் வேறு தொடர்புகள் எதற்கு?

இல்வாழ்வைத் துறந்து துறவறத்தை மேற்கொண்ட சுவாமிமார்கள் பட்டும் பீதாம்பரமும் வைடூரிய நகையும் பாதபூசையும்  கனகாபிஷேகமும் கிரீடமுமாக விலைமதிப்பில்லாக் கார்களில் பவனி வந்து பட்டுமெத்தையில் பகல் நித்திரை கொள்கிறார்கள். அரசியல், களியாட்டங்கள், வேடிக்கைகள், விருந்துகள், மாலை, மரியாதை என்று உலகை வலம் வருகிறார்கள். பற்றுக்களைத் துறந்தோம் எனக்கூறித் துறவறம் போனோருக்கு இந்தத் தொடர்பாடுகள் தேவையா? என்பதே திருவள்ளுவரின் கேள்வியாகும்.


துறவறத்தைக் கடைப்பிடிப்போர் உலகத்தோடு வேறு தொடர்புகளை வைத்திருத்தல் சரியற்ற செயலாகும். ஏனெனில் அவர்களுக்கு அவர்களது உடலுடன் ஆன தொடர்புகூட வேண்டத்தகாத ஒன்றாகும். உடம்புடன் உள்ள பற்று அறும்பொழுதே பிறப்பை அறுக்க முடியும்.