Saturday 30 November 2013

குறள் அமுது - (81)


குறள்:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு                                       - 1029

பொருள்:
தனது குடும்பத்தின் பெருந்துன்பத்தையே இல்லாமல் செய்பவனது உடம்பு, துன்பங்களை ஏந்தும் பாத்திரம் அல்லவா!

விளக்கம்:
இத்திருக்குறள் குடிசெயல்வகை எனும் அதிகாரத்தில் உள்ளது. கொள்கலம் என்பது பொருளைத் தாங்கி வைத்திருக்கும் பாத்திரம். இடும்பை என்றால் மாபெரும் துன்பம். அத்தகைய இடும்பைக்கும் துன்பம் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். பெரும் துன்பங்களைக் கண்டும் துன்பப்படாதவர்கள், துன்பத்தையே துன்பப்பட வைப்பார்கள் என்பதும் வள்ளுவன் வாக்கே. வறுமையிலும், துன்பத்திலும், துயரத்திலும் மனங்கலங்காதிருக்கும் ஆற்றல் எல்லா மனிதரிடமும் இருப்பதில்லை. அத்தகையோர் இலட்சத்தில் ஒருவரே இருப்பர்.

அந்த இலட்சத்தில் ஒருவரிடத்திலும் தான் என்னும் சுயநலமற்றுப் பொது நலன் பேணுவோர் எத்தனை பேர் இருப்பர்? அவர்களை இனங்காண முடியுமா? முடியும். அவர்கள் தாம்  பிறந்த குடும்பம், தாம் பிறந்த குடி எனப் பொது நலம் பேணி, தமது உடலைப் பேணாது வருத்தி தம் குடும்பத்தின் அல்லது பிறந்த குடியின் எல்லாத் துன்பங்களையும் தாமே சுமப்பர். அவர்கள் துன்பங்களைச் சுமப்பதால் மற்றவர்கள் துன்பம் அற்று இன்பமாக வாழ்கின்றனர். இப்படி தான் பிறந்த குடும்பத்தின் நமைக்காக துன்பங்களைச் சுமப்பவரது உடலை கொள்கலம் என்கிறார். 

அப்படிப் படாத பாடுபட்டு உழைப்போரும் தமது உடலை வருத்துவர் அல்லாமல், உயிரை கொட்டிக் கொடுப்பரோ! ஈழத்தமிழ் இனத்தைச் சூழ்ந்த பெருந்துன்ப இருளை நீக்க, தம் ஆசைகளைப் பாசங்களைத் துறந்து, இன்னுயிரை கொல்கலமாக்கி கடலிடையே மின்னலிட்டு, தீயாய் மிளிர்ந்து, உலகுக்கு ஈழத்தமிழினதின் ஆற்றலை வெளிச்சமிட்டுக் காட்டிய நம் பிள்ளைகள் திருவள்ளுவரின் இக்குறளுக்கு ஒருபடி மேலே சென்று 
“இடும்பைக்கே கொல்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உயிர் ஆனார்கள். 

Friday 29 November 2013

அடிசில் 71

இரசப்பொடி       
                                    - நீரா -


















தேவையான பொருட்கள்:
மல்லி - 250 கி
மிளகு - 100 கி
சீரகம் - 100 கி
மிளகாய் வற்றல் - 50 கி
கறிவேப்பிலை - கொஞ்சம்
துவரம் பருப்பு - 150 கி

செய்முறை:
1. துவரம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்க.
2. இளஞ்சூட்டில் மிளகாய் வற்றல், கறிவேற்பிலை இரண்டையும் சாதுவாக வறுத்துக் கொள்க.
3. வறுத்தவற்றுடன் மல்லி, மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து ஈரமில்லாத காற்றுப்போக முடியாத போத்தலில் போட்டு வைத்துப் பாவிக்கவும்.


பின் குறிப்பு:

ஒரு பாத்திரத்தில் தக்காளி அல்லது பழப்புளி சேர்த்த தண்ணீரைச் சூடாக்கி  உள்ளி, இரசப்பொடி, உப்பும் போட்டுக் கொதிக்கவைத்து திடீரென இரசம் வைத்துக்கொள்ளலாம்.

Thursday 28 November 2013

பெண்கனி நின்றாள் - 2



ஶ்ரீரங்கம் குழலூதும் பிள்ளை கோயிலின் கருவறையின் புறச்சுவரில் சிலைகளாய் இருக்கும் பெண்கனிகளில் ஒருத்தி 

சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்கும் இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே”
என்ற திருஞானசம்பந்தரின் தேவாரத்திற்கு ஏற்ப கிளியிடம் கெஞ்சுவதுபோல் நிற்கிறாள். 

வலக்கையில் தாமரைமொட்டைப் பிடித்திருக்கும் அவளின் விரல்களில் கிளி அமர்ந்திருந்து கொஞ்சுகிறது. அவள் கூறுவதை கூர்ந்து கேட்பது போல சிற்பி அக்கிளியை வடித்திருக்கிறான். அவளின் காலருகில் கீழே தொங்கும் சங்கிலியால் ஆன கூட்டினுள் மற்றுபோர் கிளி நிற்கிறது. அக்கிளிகூட மேலே அண்ணாந்து அவளைப் பார்த்தபடி அவள் சொல்வதையெல்லாம் செவிமடுப்பது போல நிற்கிறது. அவள் இருகும் இடமோகுழலூதும் பிள்ளை கோயில். எனவே இளம்பிறையாளன் திருநாமத்தை சொல்லுமாறு கிளியிடம் அவள் கேட்டிருக்க மாட்டாள். ஆயர்பாடியில் கண்ணன் செய்த அற்புதங்களை சொல்லு கிளியே! என்று கேட்டிருப்பாள். அவள் கிளியிடம் எவற்றைக் கேட்டு கெஞ்சினாள் என்பதை

“கல் எடுத்து கல்மாரி காத்தாய் என்றும்
          காமருபூங் கச்சியூரகத்தாய் என்றும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்
          வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும்
மல் அடர்த்து மல்லாரை அன்று அட்டாய் என்றும்
          மாகீண்ட கைத்தலத்து என்மைந்தா என்றும்
சொல் எடுத்துத் தன்கிளியைச் சொல்லே என்று
          துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே!”   
                                - (நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்: 2064)

என்று நாலாயிரத்திவ்வியப் பிரபந்தப் பாடல் எமக்கு எடுத்துரைக்கிறது. 

இவளுக்கு அப்பால் இரு இளமங்கையர்கள் வீணை ஏந்தி நிற்கிறார்கள். ஒருத்தியின் இரண்டு கரங்களையும் வீணைத் தண்டையும் மனக்குருடர் யாரோ உடைத்துவிட்டனர். மற்றவள் கரங்களால் வீணையை மார்மேல் தாங்கி இடக்கர விரலால் வீணையை மீட்டுகிறாள். அம்மங்கையின் வலக்கையும் வீணையின் நடுப்பகுதியும் உடைபட்டு இருப்பினும் அந்த அழகுப் பதுமையின் முகத்தில் சிந்தும் உயிர்த்துடிப்பு மீண்டும் மீண்டும் அவள் அழகைப் பருகச் சொல்கின்றது.

அப்பெண்கனி, திருமங்கை ஆழ்வார் பாடிய 
“கல் உயர்ந்த நெடுமதிள் சூழ் கச்சிமேய
          களிறு என்றும் கடல்கிடந்த கனியே என்றும்
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி
          அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலைமேல் தாங்கி
          தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல்விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே
          மென்கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே”    
                            - (நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்: 2066)
போல் நிற்கின்றாள். 

அப்பெண்கனிகளின் தலையலங்காரங்களும், நகைகளும், உடைகளும் எப்படியெல்லாம் அன்றைய பெண்கள் ஒப்பனைக் கலையைப் பேணினார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன.

நான்முகனால் சீதையைத் தவிர கம்பன் கேட்டது போல் பல பெண்களைத் தரமுடியவில்லை. ஆனால் குழலூதும்பிள்ளை கோயில் சிற்பியால் சீதையை விட அழகு சிந்தும் பெண்கனிகளைப் படைக்க முடிந்திருக்கிறது. சிற்பியின் சிந்தையின் நிறைவை அப்பெண்கனிகளின் சிலைகளில் காணலாம்.
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
மேலே உள்ள சிற்பத்தின் கொண்டையையும், உச்சி முதல் பாதம்வரை உள்ள நகைகளையும் ஏன் அவள் அணிந்திருக்கும் ஆடையின் விளிம்பு மடிப்புச் சுருக்குகளையும் கழுத்து மாலையில் உள்ள பூக்களையும் இவ்வளவு நேர்தியாக சிற்பி செதுக்கி இருப்பது கலைக்காகவே வாழ்ந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
[ வீணையை முலைமேல் தாங்கல்: பண்டைத் தமிழர் நரம்பிசைக் கருவிகளை வாசிக்கும் போது வெப்பநிலை மாற்றத்தால் அவற்றின் சுருதி மாறாது இருக்க அவற்றை மார்போடு அணைத்து வாசித்தார்கள் என்னும் அறிவியல் கருத்தை சங்க இலக்கியம் காட்டுகிறது.]

Wednesday 27 November 2013

செஞ்சுடர் வீசி மிளிர்கிறதே!



















இந்து சமுத்திர நித்திலமாய்
          இலங்கிய நல் தீவெதுவோ!
முந்து சமயநெறி கண்டார்
          முழுதுணர்ந்த தீவெதுவோ!

சந்தங் கமழு தமிழ்ப்பாடல்
         சங்கம் கண்ட தீவெதுவோ!
உந்த மானிட நாகரீகம்
         உலகுக்கு ஈந்த தீவெதுவோ!

இந்திய புத்தன் போதனையை
          இடற வைக்கும் தீவதுவே!
சிந்திய இரத்தம் போதாதென்று 
          சாடி யடக்கும் தீவதுவே!

அந்திய கிரியை செய்வதையும்
          அடக்கி ஒடுக்கும் தீவதுவே!
முந்தியே இறந்தோர் கல்லறையை
          முட்டி உடைக்கும் தீவதுவே!        
          
உந்தீ கிழித்து கருவெடுத்து
          உயிர் கருக்கி உருக்கிடினும்!
நந்தீந் தமிழை மறப்போமா
          நயந்தே பாரீர் நம்தீவை!!

உந்து சமுத்திர அலையிடையே
          ஓங்கொளி வீசி மிளிர்கிறதே!!
செந்தமிழ் தாயின் தீவதுவாய்
          செஞ்சுடர் வீசி மிளிர்கிறதே!!   

Sunday 24 November 2013

இருந்தும் பயனில்லை!


மனித வாழ்க்கை ஒவ்வொருவொருக்கும் ஒவ்வொரு வகையான பாடங்களை நாளும் நாளும் கற்பித்துக்கொண்டே இருக்கின்றது. அந்தப் பாடங்களை மனிதர்களாகிய நாம் நன்கு புரிந்து கொள்வதில்லை. சிலவேளைகளில் அவற்றை நாம் புரிந்து கொள்வதற்கான வேளைகள் மீண்டும் மீண்டும் நம் வாழ்க்கையில் வரக்கூடும். அப்போதும் எமது அறியாமையினால் மட்டுமல்ல அளவு கடந்த அன்பால் அவற்றை நாம் பொருட்படுத்தாது இருப்போம். ஆதனால் மனித வாழ்க்கையில் தாம் கற்ற பாடத்தை மிகத்தெட்டத் தெளிவாகப் பல சான்றோர் எழுதிவைத்துச் சென்றுள்ளனர்.
மனிதர் தம் பிள்ளைகளின் மேல் அளவு கடந்த அன்பைச் செலுத்துகின்றனர். அந்த அன்பின் காரணமாக அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாததால் அவர்கள் வளர்ந்ததும் பெற்றோரை மதிப்பதில்லை. தாம் மட்டும் ஏதோ வானத்தில் இருந்து வந்தவர்கள் போல வயதான பெற்றோரைச் சுமையாக எண்ணிப் புறக்கணிப்பர். அந்தப் புறக்கணிப்பிலும் பல நிலைகள் இருக்கின்றன. இந்நாளில் mobile phone என்றும் facebook என்றும் email என்றும் skype என்றும் sms என்றும் எத்தனையோ வகையான செய்தித் தொடர்பு இணைப்புகள் எல்லோரிடமும் இருக்கின்றன. கண நேரத்தில் உலகம் முழுவதும் மனிதரோடு மனிதர் தொடர்பு கொள்ள முடியும்.

வயதான பெற்றோர் தமது பிள்ளைகளிடம் இருக்கும் அத்தனை செய்தித் தொடர்பு இணைப்பிலும் ஒரு குறித்த நேரத்துள் தொடர்பு கொண்டாலும் பிள்ளைகள் கண்டு கொள்வதில்லை. அற்றைக் கேட்கவோ பார்க்கவோ தமக்கு நேரமில்லை என்றோ. email பார்ப்பதில்லை என்றோ, sms பார்ப்பதில்லை என்றோ பதில் வரும். ஆனால் இருபத்திநாலு மணி நேரமும் அவற்றுடன் தான் வேலை செய்வர். பெற்றோரின் கண்முன்னே மற்றோரின் அழைப்புக்கு அக்கணமே பதில் கொடுக்கும் பிள்ளைகள் பெற்றோர் அழைப்பை அலட்சியம் செய்வர். அதுவும் பெற்றோர் தமது பிள்ளையை மிகவும் அறிவுள்ள பிள்ளை என்று பாசத்தைக் கொட்டி வளர்த்திருப்பர். அப்படி அறிவான குழந்தைகள் வளர்ந்ததும் பெற்றோர் விபத்துக்கு உள்ளாகி நின்று phone செய்தாலும் எடுக்காது அலட்சியம் செய்தால் அந்தப் பெற்றோரின் மனம் எத்தகைய வேதனையில் துடிதுடிக்கும் என்பதைச் சொல்ல வார்த்தைகளே எந்த மொழியிலும் கிடையாது. அப்படிப்பட்ட பிள்ளைகளை ஆபத்துக்கு உதவாப்பிள்ளை என்று சொல்வர்.

நம் முன்னோரும் ஆபத்துக்கு உதவாப்பிள்ளைகளைக் கண்டிருக்கின்றனர். மனிதரிடமிருந்தும் எதுவித பயனும் கொடாத ஏழு விடயங்களுள் முதலாவதாக ஆபத்துக்கு உதவாப்பிள்ளையைச் விவேகசிந்தாமணி சொல்கிறது.

“ஆபத்துக்கு உதவாப்பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத தீர்த்தம் பயனில்லை ஏழுந்தானே”               
                                                    - (விவேக சிந்தாமணி)

1. ஆபத்துக்குதவாப்பிள்ளை: தன்னைப் பெற்ற தாய் தந்தையருக்கு ஆபத்தான நேரம் உதவாத பிள்ளை இருந்தும் பெற்றோருக்கு அப்பிள்ளையால் பயன்கிடைக்காது.

2. அரும்பசிக்கு உதவா அன்னம்: அன்னம் என்பது இங்கு உணவைச் சுட்டி நிற்கிறது. மிகவும் சுவையாகச் சமைத்து வைத்த உணவை எல்லோருக்கும் கொடுத்த பின், மிக்கபசியுடன் சாப்பிட எடுக்கும் போது கீழே வீழ்ந்தாலோ, கெட்டுப் போயிருந்தாலோ அந்த உணவால் ஒருவித பயனும் கிடைக்கப்போவதில்லை. சிறு குடலைப் பெருங்குடல் விழுங்குவது போல பசியால் வயிறு காந்தும் போது அப்பசியைத் தீர்க்க முடியாத உணவால் என்ன பயன் கிடைக்கும்?

3. தாபத்தைத் தீராத் தண்ணீர்: கடலில் பயணம் செய்யும் போது நா வரண்டு தாகம் ஏற்பட்டால் சூழ உள்ள கடலின் நீரைக் குடிக்க முடியுமா? கைக்கெட்டிய தூரத்தில் தண்ணீர் இருந்தும் தாகத்தைப் போக்கமுடியாத அந்நீர் எதுவித  பயனையும் கொடுப்பதில்லை.

4. தரித்திரம் அறியாப் பெண்டிர்: தரித்திரம் என்றால் வறுமை. தமது குடும்பத்தின் நிலைமையை  உணராது ஆடம்பரமாக வாழும் மனைவி இருந்தும் எதுவித நன்மையும் உண்டாகாது. [கணவனுக்கும் இது பொருந்தும். குடும்பத்தின் வரவுக்கு ஏற்றபடி செலவு செய்யத்தெரியாத பெண்களை தரித்திரம் அறியாப் பெண்டிர் எனக் குறிப்பிடுகிறார்.]

5. கோபத்தை அடக்காவேந்தன்: தமக்கு வரும் கோபத்தை அடக்கத் தெரியாத ஆட்சியாளர்களால் கொலைகளும் போர்களும் ஏற்படுகின்றன. ஆதலால் அத்தகைய ஆட்சியாளர்களின் கீழ் வாழ்தலால் எதுவித பயனுமில்லை.

6. குருமொழி கொள்ளாச் சீடன்: தன்னைப் படிப்பித்த ஆசிரியர் கற்றுக்கொடுத்ததை நினைவில் வைத்திராத மாணவராலும் பயன் கிடைப்பதில்லை.

7. பாபத்தைத்தீராத்தீர்த்தம்: கோயிலில் இருக்கும் தீர்த்தக்குளத்தில் தாம் செய்த பாபம் போக மூழ்கி எழுந்தும் பாபம் தீராவிட்டால் அத்தீர்த்தத்தாலும் பயனில்லை. [தீர்த்தத்தின் சிறப்பால் பெயர் பெற்றது கீரிமலைத் தீர்த்தம். முற்காலத்தில் கீரிமலைத் தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்த மாருதப்புரவல்லி தன் குதிரைமுகம் நீங்கப் பெற்றாள் என்பது மாவிட்டபுரக் கோயில் வரலாறு. ஆனால் தமிழரைக் கொன்று குவித்த பாபம் தீரத் தனித்தே தீர்த்தம் ஆடியோருக்கு கீரிமலைத்தீர்த்தம் பாபத்தைத் தீர்த்ததா! பாபம் செய்வோரின் பாபங்களை கழுவிக்கழுவி எடுத்தெடுத்து இனிமேல் பாபங்களை கழுவி எடுக்கமுடியாத அளவு பாபங்களால் கீரிமலைத் தீர்த்தம் நிறை கரைசலாகிவிட்டது போலும். அன்றேல் செய்த பாபத்தின் அளவு தீர்த்தத்தை விடப்பல கோடி மடங்கு பெரியதோ! இன்றும் அதன் தாக்கம் இலங்கையில் எதிரொலிக்கின்றதே! 

இந்த ஏழும் இருந்தாலும் அவற்றால் பயன் எதுவும் உண்டாகாது.

இனிதே,
தமிழரசி.

Thursday 21 November 2013

பரமானந்த வாழ்வு தாவே!


பெருநிதியே போகமே பேரின்ப வெள்ளமே
திருநிதியாய் தெய்வமாய்த் தோன்றும் பொருளெலாம்
உருநிதியாய் பொருந்தி யென்றும் பிறப்பறுக்கும்
அருள்நிதியே பரமானந்த வாழ்வு தாவே!

Wednesday 20 November 2013

நெஞ்சம் மறந்ததில்லை

1983 இனக்கலவரம் - பொரளை

நெஞ்சம் மறந்ததில்லை - அது 
          நினைவை இழந்ததில்லை
தஞ்சம் கேட்கவில்லை - எம்
          தாய்மண் கேட்டுநின்றோம்!

துஞ்சும் புன்னுடலை - சற்று
          துணியற்றே உருவி
வஞ்சம் ஏதுகொண்டு - அன்று
          வதைத்து மகிழ்ந்தீரோ!

விஞ்சை மிகுஉலகில் - உடன்
          வீழ்ந்து எழும்பயிராய்
கொஞ்சும் தமிழ்க்கன்னி - தன்
          கோல் ஓச்சிடஎழுவாள்! 
இனிதே,
தமிழரசி.

Tuesday 19 November 2013

ஆசைக்கவிதைகள் - 79

பால் எடுக்கு நேரத்தில!
[Photo: source Wikipedia]

கேகாலையில் இருந்த ஒரு இரப்பர் தோட்டத்தில் அழகிய பெண்கள் ரப்பர் மரத்தைக் கீறி பால் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் அழகை ரசித்து மகிழும் தொப்பித்துரை என்பவன் அப்பெண்களைச் சீண்டுவதற்காக அங்கே வந்தான். அவனுக்கு முன்னே அவனது பெரிய தொந்தி [தொம்பை] தொங்கிக் கொண்டு நின்றது. அவர் வருவதைப் பார்த்திருந்த அப்புகாமி என்பவர் தொப்பித்துரையிடம் ஓடிவந்து ‘இப்ப தோட்டத்துரை வாரார் ஆனபடியால் அந்தப் பெண்களைச் சீண்ட நேரம்  சரியில்லை’ என்கிறார்.

தோட்டத்துரை வாரார் என்பதைக் கேட்ட தொப்பித்துரை ஓட்டம் பிடித்தான். ரப்பர் தோட்டங்கள் மலைப்பாங்கான இடமாதலால் அவன் ஓட அவனின் தொம்பை மேழும் கீழும் தொங்கிக் குலுங்க நிலை தடுமாறி விழுந்தான். அவன் விழுந்த இடத்தில் இருந்த கருங்கற்கள் அவனின் தொம்பையைக் கிழித்துவிட்டது. அவனது தொம்பை கிழிந்ததைப் பார்த்துச் சிரித்த ரப்பர் தோட்டத்து பெண்களின் பாடல் இது. 

இந்தப்பாடல் ரப்பர்த் தோட்டத்து துரைமார், அங்கே வேலை செய்யும் பெண்களைச் சீண்டியதைக் காட்டுவதோடு, அந்தச்சீண்டலை எதிர்க்கத் துணிவில்லா விட்டாலும், துரைமாரைக் கிண்டல் அடித்து பாடிச் சிரிக்கத்துணிந்த பெண்களாக தமிழ்ப்பெண்கள் இருந்ததையும் ஒரு வரலாற்றுப் பதிவாக எமக்குச் சொல்கிறது.

பெண்கள்: ரப்பர் மரக்காட்டு உள்ள
                            பால் எடுக்கு நேரத்தில
                  தொப்பிதுர வந்தாரு
                            தொம்பதொங்க நின்னாரு

                  ஆள் வரவ பாத்திருந்த
                            அப்புகாமி ஓடியந்து
                  தோட்டதுர வாராரு
                           தோதில்ல என்னாரு

                  தொப்பி துர ஓடயில
                           தொம்ப தொம்பி ஆடயில
                  தப்பி விழுந்தாரு
                            தொம்ப கிழிஞ்சாரு
                                                                   -  நாட்டுப்பாடல் (கேகாலை)
                                                                                 (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Monday 18 November 2013

குறள் அமுது - (80)

குறள்: 
ஒளிஒருவருக்கு உள்ள வெறுக்கை இளிஒருவருக்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்”                                        -      971

பொருள்:
மற்றாவர்களால் செய்யமுடியாததைச் செய்வேன் என்று எண்ணும் எண்ணத்தைக் கொடுக்குகின்ற ஊக்கமாகிய செல்வமே ஒருவனுக்கு பெருமையத்தரும். அப்படிச்செய்வதைவிட்டு எப்படியும் உயிர்வாழ்ந்தால் போதும் என எண்ணுதல் இழிவைத்தரும்.

விளக்கம்:
நாம் யார் என்பதை நம்மை அறியாதோருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது நமது புகழால் ஏற்படும் பெருமையாகும். ஆதலால் பெருமைக்கு ஒளியென்ற பெயரும் உண்டு. நாம் செய்து முடிக்க நினைத்த ஒன்றை உள்ளத்துள் மீண்டும் மீண்டும் நினைப்பதால் ஊக்கத்தை உள்ளம் என்பர். மிகப்பெருஞ்செல்வம் வெறுக்கை என்று கூறப்படும். எனவே திருவள்ளுவர் ஊக்கமிகுதியாகிய பெருஞ்செல்வத்தை உள்ள வெறுக்கை என்று குறிப்பிடுகிறார். ஊக்கமெனும்  மிகப்பெருஞ் செல்வத்தை உடையவனே புகழால் ஏற்படும் பெருமையை அடைவான். எதனையும் செய்யாது ஊக்கமில்லாமல் வாழ்வோம் என இருத்தல் இழிவாகும். 

நான் இங்கு வந்த காலத்தில் என்னைப் பார்த்து நீங்க பாக்கியா? என்று கேட்பார்கள். நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவள் இல்லை ஶ்ரீலங்கன் என்று சொல்வேன். அது எங்கே இருக்கிறது என்று வினவுவார்கள்? ஏனெனில் ஶ்ரீலங்கா என்ற பெயரே 1972ல் தானே ஏற்பட்டது. அத்துடன் உலகவரைபடத்தில் ஓர் எறும்புபோல் இருக்கும்  இலங்கையை அந்நாளில் அறிந்திருந்தோர் எத்தனை பேர்? வயதான சிலருக்கு சிலோன் என்றால் புரியும். அப்படிப்பட்ட நிலையில் நாம் ஶ்ரீலங்காவையும் யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் எடுத்துச்சொல்ல என்ன பாடுபட்டோம் என்பது அன்று இருந்தோருக்குத் தெரியும்.

ஆனால் இன்று அந்த நிலையிலா நாம் இருக்கிறோம்? இன்று ஶ்ரீலங்காவின் பெயர் உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒளிவீச யார் காரணம்? ஈழத்தமிழன் என்று ஓர் இனம் உண்டு. அது பண்டைக்காலம் தொட்டு ஈழத்திருநாட்டில் வாழ்ந்து வருகிறது. அந்த ஈழத்தமிழினம் அறிவும் ஆற்றலும் எதற்கும் அஞ்சா மாவீரமும் உடையது என்று உலகுக்கு எடுத்துக்காட்டியது யார்? ஊக்கமிகுதியாகிய பெருஞ்செல்வத்தை தமதாக்கி, ஈழத்தமிழினம் என்னும் பெருமையோடு வாழ்ந்தால் வாழ்வோம் அன்றேல் இறந்து மடிவோம் என்று களமாடி நின்ற மாவீரர்கள் அல்லவா?
“ஒளிஒருவருக்கு உள்ள வெறுக்கை இளிஒருவருக்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்” 

என்னும் இந்த வள்ளுவன் குறளுக்கு இலக்கணமாய் ஈழத்தமிழரின் பெருமையை உலகெங்கும் ஒளிரவைத்த எம் மாவீரரைப் போற்றுவோம். ஒளி ஏற்றுவோம்.

Saturday 16 November 2013

அடிசில் 70

புடலங்காய்ப் பச்சடி
  - நீரா -


தேவையான பொருட்கள்:
குறுணலாக வெட்டிய புடலங்காய் - 2 கப்
குறுணலாக வெட்டிய வெங்காயம் - 1
குறுணலாக வெட்டிய பச்சைமிளகாய் - 2
கட்டித்தயிர் - ½ கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ½ மே. கரண்டி
கடலைப் பருப்பு - 1 தே. கரண்டி
கடுகு - ½ தே. கரண்டி
ஒடித்த செத்தல் மிளகாய் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம் 

செய்முறை:
1. புடலங்காயை ஆவியில் அரைப்பதமாக அவித்துக் கொள்க.
2. ஒரு பாத்திரத்தில் வெட்டிய வெங்காயம், வெட்டிய பச்சை மிளகாய்  இட்டு அத்துடன் தயிர், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்க.
3. அதற்குள் அவித்த புடலங்காயைப் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும்.
4. ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டுச் சூடாக்கவும்.
5. எண்ணெய் சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, செத்தல் மிளகாய், கறிவேப்பிலை இவற்றை முறையே ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும்
6. புடலங்காய்க் கலவையுள் தாளிதத்தைக் கொட்டிக் கலந்து பரிமாறவும்.

Friday 15 November 2013

பெண்கனி நின்றாள் - 1

ஶ்ரீரங்கம்

எவரோடும் ஒப்பிட்டு உவமை கூறமுடியாத ஓவியக் கலைஞன் நான்முகன். எத்தனை கோடி வகை வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. அத்தனையையும் படைத்தவன் நான்முகன். அவனால் படைக்கப்பட்டவள் சீதை. அவளின் அழகை எடுத்துச் சொல்லமுடியாது. சடப்பொருட்களான குன்றும் கல்லும் புல்லும் பார்த்து மகிழ்ந்து உருக நின்றாளாம்.

“சொல்லும் தன்மைத்து அன்று அது குன்றும் சுவரும் திண்
கல்லும் புல்லும் கண்டு உருக பெண்கனி நின்றாள்
அதைக் கம்பன் பார்த்தான். இவளைப் போல ஒரு பெண்ணைப் படைக்க முடியுமென்றால் நான்முகன் இன்னும் பல பெண்களைப் படைத்துத் தரலாமே! என்று கூறுகிறான்.
“……. …… இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை
தரும்தான் என்றால் நான்முகன் இன்னும் தரலாமே

மிகச்சிறுவயதில் அப்பாடல்களைப் படித்தபோது மலையையும் கல்லையும் உருகவைக்கும் அழகுடன் பெண்கள் இருக்கிறார்களா என எண்ணினேன். உங்களுக்கும் அப்படித் தேன்றும். கம்பன் சொன்ன சீதையின் எழிலிலும் மேலான எழிலுடன் இருக்கும் பெண்களைக் காணவேண்டுமா? அதற்கு ஶ்ரீரங்கம் குழலூதும் பிள்ளை கோயிலுக்குப் போகவேண்டும்.

நான் குழலூதும் பிள்ளை கோயிலில் இருந்த ஒரு சிலையைப் பார்த்த போது ஒரு சிறுபையனும் அச்சிலையைப் பார்த்தான். பார்த்தவன் தன் கரங்களால் கண்ணை மூடிக்கொண்டான். பின்னர் விரலை மெல்ல விரித்து விரல் இடுக்கால் அச்சிலையைப் பார்த்தான். அவனை நான் பார்த்து சிரிப்பதையும் பார்த்தான். அவன் முகம் முழுவதும் வெட்கத்தால் சிவக்க தாயிடம் ஓடி, தாயின் பின்னே மறைந்து நின்று நான் பார்க்கிறேனா என்று என்னைப் பார்த்துப் பின் சிலையைப் பார்த்து வெட்கப்பட்டான். அச்சிறுவனை அப்படி வெட்கப்பட வைத்த சிலையாய் நின்ற பெண்கனியில் ஒருவித ஆடையும் இருக்கவில்லை.

அங்கே திருநாவுக்கரசு நாயனாரின்
“முன்னை அவனுடைய நாமம் கேட்டாள்
          மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
          பெயர்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அத்தனையும் அன்னையையும் அன்றே நீத்தாள்
           அகன்றாள் அகவிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
          தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!

என்ற தேவாரத்துக்கு அமைய தன்னை மறந்தவளாய், தன் பெயரை அறியாதவளாய், அரங்கத்து நாயகனின் அரவணைப்புக்கு ஏங்கித் தவித்து, முகத்திலே நாணம் மின்ன, தலையைக் கொஞ்சம் சரித்து, சிற்ப இலக்கணத்துக்கு மெருகேற்றி ஒரு பெண்கனி நிற்கிறாள். உடலில் ஆடையே இல்லாமல், நிற்கும் இந்தப் பெண்ணின் நாணத்தைக் கல்லில் வடித்த அந்தச் சிற்பி, தன் படைப்பாற்றலால் நான்முகனைத் தோற்கடித்து விட்டான். அந்தப் பெண்கனியின் உடல் முழுதும் நாணம் கனிந்து நிற்கிறதே! கருங்கல்லுக்கே நாணத்தை ஊட்டிய சிற்பியை நான்முகன் வெல்ல முடியுமா?

குழலூதும் பிள்ளை கோயில் என்னும் பெயருக்கு ஏற்ப அங்கு சிலையாய் நிற்கும் பெண்கள் எல்லோரும் கண்ணன் மேல் காதல்கொண்டு கனிந்து உருகுபவராகவே நிற்கின்றனர். எனவே ஆழ்வார்கள் அருளிச் செய்த திருப்பாசுரங்களுக்கு ஏற்றாற் போலவே சிற்பிகள் அந்தப் பெண்கனிகளை சிலைவடித்தனர் போலும்.

கண்ணன் மேல் கொண்ட காதலால் ஆண்டாள் தன்னை மறந்து செய்த செயல்களைப் பார்த்த அவளின் வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார்.

“காறை பூணும் காண்ணாடி காணும் கையில் வளைகுலுக்கும்
கூறை உடுத்தும் அயர்க்கும் தங்கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறிநின்று ஆயிரம்பேர்த் தேவன் திறம் பிதற்றும்
மாறில் மாமணி வண்ணன் மேல்இவள் மாலுறு கின்றாளே”     
                                   - (நாலாயிர திவ்வியப்பிரபந்தம்: 293)

என நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் பாடி இருக்கிறார். அந்தப் பாசுரத்தின் முதல் இரு அடிகளுக்கும் விளக்கம் தருபவள் போல் ஒரு பெண்கனி நிற்கிறாள். அவளது இடையோ அது இல்லையோ என இடப்பக்கமாக ஒடிந்து இருக்கிறது. இடப்பக்கம் இடை ஒடிவதால் ஒய்யாரமாய் வலப்பக்கம் சரிந்து நின்று, இடக்கையில் இருக்கும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்து வலக்கையால் நெற்றியில் பொட்டு வைக்கிறாள். முகத்தில் காதல் கதை சொல்ல அவள் நிற்கும் நிலை பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். 

அவளை மட்டுமல்ல அவள் அணிந்திருக்கும் அணிகலங்கள், ஆடைகள், தலையலங்காரம்  எல்லாவற்றையுமே மிகநுட்பமாகச் சிற்பி செதுக்கி வைத்திருக்கிறான். இவ்வளவு அணிகலங்களையும் ஆடையையும் என்றாவது நான்முகன் படைத்தானா? ஆதலால் பெண்கனிகளைப் படைப்பதில் நான்முகனைவிட சிற்பிகள் படைப்பாற்றல் மிக்கவர்களே!  கண்ணாடி காணும் அந்தப் பெண்கனியை மேலே உள்ள படத்தில் பாருங்கள். அவளின் மூக்கை உடைத்தவர்களை என்னென்று சொல்வது?
இனிதே,
தமிழரசி.

சொல் விளக்கம்:
நாமம் - பெயர்
வண்ணம் - அழகு / குணம் / சிறப்பு 
பிச்சியானாள் - பித்துப்பிடித்தவளானாள் 
அத்தன் - தந்தை 
அன்னை - தாய் 
அகவிடத்தார் - தன்வீட்டார் 
ஆசாரம் - வழக்கம் 
தலைப்பட்டாள் - தொடங்கினாள்
தாள் - அடி 
 காறை - கழுத்தில் அணியும் அணிகலன் 
 அயர்க்கும் - காதலால் உண்டாகும் மனக்கவர்ச்சி 
 கொவ்வை - கொவ்வைப் பழம் 
 செவ்வாய் - சிவந்த உதடு
 திருத்தும் - சரி செய்தல் 
 மாறில் - பகையில்லாத [மாறு - பகை]
 மாலுருதல் - மையல் கொள்ளல்

Tuesday 12 November 2013

வறுமையும் வாழ்வும்


மண்ணில் பிறந்தவன் மண்ணில் வாழ்ந்து மண்ணிலே மடிகின்றான். ஆனால் இக்குழந்தை வறுமைப் பிடியில் சிக்குண்டு மண்ணோடு மண்ணாக வாழ்கின்றான். இந்தக் குழந்தை இப்படித் தூங்க மானுடராக வாழும் நாமும் காரணம் என நினைக்கும் போது நெஞ்சம் துவள்கிறது. 
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனிலும் கொடிது இளமையில் வறுமை”

இது ஔவையார் கண்ட முடிவு. அவர் அப்படிக் கூறக்காரணம் என்ன? அதனை நீதி நூல் எனப்போற்றப்படும் நாலடியார் எடுத்துச்சொல்லும். நுட்பமான அறிவற்று இருப்பதே வறுமையாகும். நல்ல கல்வியறிவைப் பெற்றிருப்பதே மிகப்பெரும் செல்வமாகும். 
நுண்ணுணர்வு இன்மை வறுமை அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்”         
                                                         - (நாலடியார்: 251: 1 - 2)
மனிதர்களாகிய எம்மிடம் இருக்கவேண்டிய செல்வம் அறிவாகும். வறுமை என்பது அறிவில்லாத் தன்மையே. நாம் நினைப்பது போல் பொருளும் பொருள் இன்மையும் அல்ல என்கின்றது நாலடியார். இளமையில் பெற்ற அறிவே என்றும் நிலைத்து அழியாது நிற்கும். ஆதலால் இளமையிலே அறிவுக்கு வறுமை வரலாமா?

மனித வாழ்க்கை என்றும் வசந்தமாக இருப்பதில்லை. மாடமாளிகை கூட கோபுரம் என வாழ்ந்த அரசனும் ஆண்டியாகி வறியவனாய் மாறலாம். உலகிலுள்ள இன்பங்களை எல்லாம் மகிழ்வோடு சுவைத்து வாழ்வதற்கு வேண்டிய பொருள் இல்லா நிலையை வறுமை என்கிறோமா? இல்லவே இல்லை. பொருள் இல்லா நிலைமை ஏழ்மையாகும். ஏழ்மையும் வறுமையும் ஒன்றல்ல. வறுமை என்றால் என்ன? வறுமை என்பது ஒரு சிறு துன்பமல்ல. அதாவது துன்பங்களாலும் துயரங்களாலும் வரும் வெறுமையை வறுமை எனலாம்.

தனி மனிதனுக்கு வரும் வறுமை அவனது சோம்பலால், விடாமுயற்ச்சி இன்மையால், நோய்களால் எனப்பல காரணங்களால் வரும். ஆனால் இயற்கையின் சீற்றத்தாலும், அரச பயங்கரவாதத்தாலும், போர்களாலும் ஏற்படும் வறுமை மனித சமுதாயத்தையே சீரழிக்கின்றது. மனித இனம் காலங்காலமக இயற்கையுடன் போராடிப் போராடி அதனை மெல்ல மெல்ல வெற்றி கொண்டு வாழப்பழகிவிட்டது. ஆனால் மனித இனத்தை மனிதனே சீரழிக்கும் சிறுமையில் இருந்து வெற்றி பெறமுடியாது திண்டாடுகிறது. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் உலகெங்கும் வறுமை தாண்டவமாட அதுவே காரணமாகும். 

வறுமையால் மண்ணுடன் உப்பைச் சேர்த்த ரொட்டி [ஹெயிடி - Haiti]

பொருள் வைத்திருப்போரே வறுமை எனும் பெரும் துன்பத்தால் துடிக்கும் போது,  அரசபயங்கர வாதங்களால் வறுமை ஆக்கப்பட்டு இருப்போர் நிலையை நாம் கொஞ்சம்  நினைத்துப் பார்க்க வேண்டும். 

உலக வல்லரசுகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் இருக்கும் பேராசையும் போராசையும் சேர்ந்து மனிதகுலத்தை வறுமை பிழிந்து எடுக்கிறது. பேராசையால் பதுக்கும் செல்வமும், போராசையால் கொட்டிச் சிதறடிக்கப்படும் நாடுகளும், பொருள்களும், இயற்கை வளங்களும் இருந்தாலே போதும் வறுமை என்ற சொல்லை வறுமை அடையச் செய்யலாம். ஆனால் அவர்களின் தன்னலமும் ஆணவமும் அவற்றுக்கு இடங்கொடுக்குமா? இந்த ஆணவப் பூனைகளுக்கு மணிகட்டுவது யார்?

உண்மையான வறுமையின் பலபடி நிலைகளை சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பலரும் எமக்காகச் சொல்லோவியமாய் வரைந்து வைத்துள்ளார்கள். 

கணவன் எப்போது பொருளோடு வருவார் என்று
“நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்கும் மனைவி”
வீட்டுக்கூரை இற்றுப்போய் மழை பொழிய சுவர் நனைகிறது. நனையும் சுவரிலிருந்து பல்லி கனைக்கிறது. பல்லி எந்தத் திசையில் இருந்து கனைக்கிறது. அவர் பொருளுடன் வருவார் என்று பல்லி சொல்கிறதா? எனப் பல்லிச் சாத்திரம் பார்த்துக்கொண்டு நனையும் சுவரையுடைய வீட்டில் மனைவி காத்திருக்கிறாள்.  

பொருள்தேட மதுரைக்குச் சென்ற கணவனோ
“எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் [காற்றால்] மெலிந்து
கையது கொண்டு மெய்யது [உடலைப்] பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள்[பெட்டிக்குள்]இருக்கும்
பாம்பென உயிர்க்கும் [மூச்சுவிடும்]
ஏழையாளனாய்”
இருக்கிறார். சத்திமுற்றப்புலவர் தமது வறுமையை சொல்லோவியமாக வடித்த பாடல் இது.

வறுமையால் உரித்த உடும்பு போன்ற உடலாக மாறினோர்

இந்தப் படத்தில் உள்ளோர் போல் ‘உடும்பின் தோலை உரித்தது போல விலாஎலும்பு எழும்பித் தெரியும் சுற்றதாரின் கடும்பசியைத் தீர்த்து வைப்பாரைக் காணாமல்’ இருப்போரை கோவூர்க்கிழார் என்னும் சங்ககாலப் புலவர் காட்டுகிறார்.
“உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது”          - (புறம்: 68: 1 - 2)

வறுமையின் பிடியில் சிக்குண்டு வாழ்ந்தோர்கள் இப்படி உடும்பின் தோலை உரித்தது போன்ற தோற்றதுடன் மட்டுமா வாழ்ந்தார்கள்? வறியவர்களின் உடை எப்படி இருந்தது பார்ப்போமா? ஈரும் பேனும் இருந்து அரசாட்சி செய்ய, வேர்வையால் நனைந்து நனைந்து இற்றுப்போய், அதனை வேறு நூலால் தைத்து தைத்து அவையும் அறுந்து தொங்கும் கந்தையுடன் இருந்ததை முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர் சொல்கிறார். 
“ஈரும் பேனும் இருந்து இறைகூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துன்னல் சிதார்”                                                 
                                            - (பொருநர் ஆற்றுப்படை: 79 - 81)

வறுமையில் வாடுவோருக்கும் தன்மானம் என்பது உண்டு. அதனை பொருள் படைத்தோர் நினைத்துப் பார்ப்பதே இல்லை. ஊர் ஊராகச் சென்று பாடல் பாடி பரிசுபெற்று வாழும் பாணர்கள் சங்ககாலத்தில் வாழ்ந்தார்கள். எனினும் அவர்களுக்கு என்று சொந்த ஊர்களும் வீடுகளும் இருந்தன. அவர்கள் பலவகை இசைக்கருவிகளை வாசித்தார்கள். அவற்றில் ஒன்று கிணை என்று அழைக்கப்பட்டது. அது ஒருவகை தாள இசைக்கருவியாகும். கிணையை வாசிக்கும் இளம் பெண்ணை கிணைமகள் என்று அழைத்தனர். சங்ககாலப் புலவரான நல்லூர் நத்தத்தனார் தமக்கு வந்த வறுமையை தனது சுற்றத்தவளாகிய கிணைமகளின் செயலோடு படம் பிடித்து எமக்காகத் தந்திருக்கிறார்.

சங்ககாலத் தமிழர் வாசித்த கிணை எனும் இசைக்கருவி

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது 
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த
பூழி பூத்த புழற்காள் ஆம்பி
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்”                                                
                                        - (சிறுபாணாற்றுப்படை: 130 - 140) 

நல்லந்துவனார் தனது சுற்றத்தாருடன் இருந்த வீட்டின் சமையல் அறை. அங்கே நெருப்பைப் பல நாளாகக் காணாத அடுப்படியில் திறாவாத கண்ணுடன் சாய்ந்த செவியோடுள்ள குட்டிகளை ஈன்ற நாய் படுத்துக் கிடக்கிறது. நாய்க்குட்டிகள் தாய்நாயின் கறவாத பால் முலையை இழுத்து பால் குடிக்க முயற்சி செய்கின்றன. தாய்நாய் குட்டிகளை ஈன்ற வேதனையோடு, உணவில்லாது பசியும் வாட்ட, பால் சுரக்காத முலையில் குட்டிகள் பால் குடிக்க முயல்வதால் ஏற்படும் வலியை பொறுக்க முடியாது ஈனக்குரலில் குரைக்கிறது. மரத்துடன் சேர்ந்த பழைய சுவரை கரையான் கூட்டம் புற்றெடுத்து அரித்துக் கொட்டிக்கிடக்கும் புழுதியில் காளன்கள் பூத்துக்கிடக்கின்றன. காளான் முளைக்கும் வரையும் நெருப்பைக் காணாத அடுப்படி அது. 

அந்தளவு வறுமை இருக்கும் இடத்தில் தாங்கமுடியாத பசி வாட்ட உடல்வற்றி இடைமெலிந்த கிணைமகள் குப்பையில் முளைக்கும் வேளைக்கீரையை பெரிய நகத்தால் கிள்ளிக்கொண்டு வந்தாள். உப்புக்கும் வழியில்லாததால் உப்பில்லாமல் சமைத்தாள். குப்பையில் முளைக்கும் கீரையை உப்பில்லாமல் சமைத்து உண்பதை ‘வறுமை வருவது உலகஇயல்பு’ என்று அறியாத மடையைர்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக வீட்டின் தலைவாயிலை அடைத்து அந்த வறுமையிலும் சுற்றத்தாருடன் சேர்ந்து உண்டனர். மனித உயிரை அழிக்கும் பசி வருத்தம் உண்டாக வறுமையே காரணமாகும்.

பொருளோடு வாழ்ந்த மனிதன் வறுமை அடைந்தால் அவன் நிலைமை எப்படி இருக்கும் பார்ப்போமா?

உலகம் போற்ற பேரறிஞனாய் சபைகளில் முழங்கித் திரிந்தவன், வறுமை வந்ததும் அத்தைகைய சபைக்கு செல்லவும் வெட்கப்படுவான். கருத்துகள் சொல்லவும் நாணப்படுவான். மாவீரனின் வீரம் குறைந்து போகும். விருந்தினரைக் கண்டால் எதை உண்ணக் கொடுப்பது என்ற உள்ளக்குமுறலில் மனம் வெதும்புவான். மனைவி கேட்பதை எப்படிக் கொடுப்பது என்று மனைவிக்கே பயப்படும் நிலை உருவாகும். கெட்டவர்களுடன் கூட்டுச்சேர வைக்கும். மாமேதையாய் இருந்தவனின் அறிவும் குறைய உலகமெலாம் அவனைப் பழிக்குமாம். 
“தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனியாட்கு அஞ்சும் புல்லருக்கு இணக்கம் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே         
                                              - (விவேக சிந்தாமணி)

பொருள் வைத்திருந்தவகள் வறுமையில் வாடும் போது அங்கே விருந்தினர் வந்தால் அவர்கள் நிலை எப்படி இருக்கும்? அந்த நிலை தனக்கு வந்ததை மிக அழகாகச் சொல்கிறார் பெருங்குன்றூர் கிழார் என்னும் சங்ககாலப் புலவர்.

“உள்ளிய
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
அறிவுகெட நின்ற நல்கூர்மையே”                 - (புறம்: 266: 10 - 13) 

‘என்னை நினைத்து வந்த விருந்தினரைக் கண்டு அவர்களுக்கு விருந்து கொடுக்க வழியின்றி ஒளித்து வாழ்கிறேன். அத்தகைய நன்மையற்ற வாழ்க்கையை உடைய ஐம்பொறிகளால் ஆன உடம்பில் தோன்றி என் அறிவு அழிந்து போகக் காரணமாய் வறுமை நிற்கிறது’ என்கிறார்.

சங்ககாலப் புலவர்களையே அறிவுகெட வைத்த வறுமையும் வாழ்வும் என்றென்றும் ஒன்றைவிட்டு ஒன்று நீங்காதவையே. இருப்பினும் மானுடக் குழந்தைகளை இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் வறுமையில் வாடவும் எரிந்து சாகவும் விடுவது தகுமா? தகுமா??
இனிதே,
தமிழரசி.