Saturday 30 June 2012

திரண்டோமே நாமும் தீரத்தோடே!




















“கார்கால மேகம் காற்றோடு மோத
          கானகத்து மயிலும் களிப்போடு ஆட
நீராற்று அருவி நிலத்தோடு மோத
         நீராடு மாதர் நிரைநின்று ஆட
ஊரோடு உலகம் எதிர்நின்று மோத 
         உவப்பாரை காண உறவெல்லாம் வாட
தீராத கோபம் தினமுமே மூள
         திரண்டோமே நாமும் தீரத்தோடே”
                                      - சிட்டு எழுதும் சீட்டு 34

Friday 29 June 2012

அடிசில் 28


மைசூர் பருப்பு ரசம்
                                                       - நீரா -
தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு  -  1 மேசைக்கரண்டி 
தக்காளி  -  1
மல்லி  -  1 மேசைக் கரண்டி
மிளகு  -  1  தேக்கரண்டி
நற்சீரகம்  -  1  தேக்கரண்டி
உள்ளிப்பூடு  -  5 - 6 (பல்லு)
மிளகாய் வற்றல்  -  2
கறிவேப்பிலை  -  சிறிதளவு 
பழப்புளி  -  சிறிதளவு
உப்பு  -  சிறிதளவு 

செய்முறை:
1.   இரண்டு கப் தண்ணீர்விட்டு மைசூர்பருப்பை  நன்கு அவித்து கடைந்து கொள்ளவும்.
2.  ஒரு கப் தண்ணீரில் பழப்புளியை கரைத்து வைக்கவும்.
3.  மல்லி, மிளகு, சீரகம், உள்ளிப்பூடு, தக்காளி ஐந்தையும் ஒன்றரைக்கப் தண்ணீர்விட்டு அரைக்கவும்.
4.  கடைந்த மைசூர்ப் பருப்பினுள் கரைத்த புளியையும்,  அரைத்த கலவையையும் சேர்த்து உப்பும்  கறிவேப்பிலையும் போட்டு கலந்து கொதிக்கவிடவும்.
5.  மிளகாய் வற்றலை சுட்டு அதனுள் போடவும்.
6.  நன்கு கொதிக்கும் போது இறக்கவும்.
குறிப்பு:
1.  ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கலாம்.
2.  விரும்பியவர்கள் தாளிதம் செய்து போட்டுக்கொள்ளலாம்.

Thursday 28 June 2012

சங்ககாலத் தந்தையர் - பகுதி 2


சங்ககாலக் கன்னியரை மட்டுமல்ல காளையரையும் தந்தையர் அன்பாகவும் பண்பாகவும் அறிவோடும் வளர்த்துள்ளனர். 
“..................... நளி கடல்
திரைச்சுரம் உழந்த திண்திமில் விளக்கில்
பன்மீன் கூட்டம் என் ஐயர்க் காட்டிய
எந்தையும் செல்லுமார் இரவே” 
பெருங்கடலின் அலைகளில் சிக்கிச் சுழலும் படகின் விளக்கொளியில் தன் அண்ணன்மார்க்கு பலவகையான மீன் கூட்டங்களைக் காட்ட, என் தந்தையும் இரவு சென்றார்’ என்கிறாள் ஒரு சங்க காலக் கன்னிகை. சங்ககாலத் தந்தை இரவு நேரத்திலும் கடல்வாழ் மீன்களின் கூட்டத்தை தன் மக்களுக்குக் காட்டி, கடல்வாழ் உயிரினம் பற்றிய அறிவை வளர்த்தமை நெஞ்சை தொடுவதாகும்.
பிள்ளைகளின் பெயரைக் கூறியும் சங்ககாலத் தந்தையர் அழைக்கப்பட்டிருக்கின்றனர். 
செம்பொற்சிலம்பின் செறிந்த குறங்கின்
அம்கலுழ் மாமை, அஃதை தந்தை
அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்”         - (அகம்: 96: 11 - 13)
செம்பொன்னால் செய்த சிலம்பையும், குறங்கு செறிபூட்டிய தொடைகளையும், அழகொழுகும் மாமை நிறத்தையும் உடைய அஃதை என்பவளின் தந்தை என இச்சோழ அரசனை மருதம் பாடிய இளங்கடுங்கோ குறிப்பிடுகிறார்.
அதேபோல் அணிகலன் அணிந்திருக்கும் பணைத்த தோள்களையுடைய ஐயை என்பவளின் தந்தை மழைபோல் வாரி வழங்கும் தித்தன். அவனும் ஒரு சோழ அரசனே. அதனை 
“இழையணி பணைத்தோள் ஐயை தந்தை
மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்”               - (அகம்: 6: 3 - 4)
என பரணர் கூறியுள்ளார்.
அகுதை என்பவன் பெரும் வீரன். நான் முன்னே சொன்ன அஃதையும் இந்த அகுதையும் ஒருவர் அல்ல. அஃதை சோழ அரசன் மகள். இந்த அகுதை பாண்டியப்படை மறவன். இவனைக் கபிலர் ‘மணநாறு மார்பின் மறப்போர் அகுதை’ எனப் புறநானூற்றில் புகழ்ந்துள்ளார். இவனின் தந்தையை ‘அகுதை தந்தை’ எனப் பரணரும் குறுந்தொகையில் குறிப்பிடுகின்றார். அகுதையின் தந்தை வெள்ளிப்பூண் போட்ட தலைக்கோல் வைத்திருக்கும் ஆடல் மங்கையருக்கு பெண்யானைகளைப் பரிசாகக் கொடுத்தாராம்.
“இன்கடுங்கள்ளின் அகுதை தந்தை
வெண்கைடைச் சிறுகோல் அகவன் மகளிர்
மடப்பிடி பரிசின் மான”
என்கிறார் பரணர்.
இதில் சிறுகோல் என்பது தலைக்கோல். அதனை 
“இருங்கழை இறும்பின் ஆய்ந்து கொண்டறுத்த
நுணங்கு கண் சிறுகோல் வணங்கிறை மகளிரோடு”   
                                                   - (அகம்: 97: 9 - 10)
என மாமூலர் அகநானூற்றில் சொல்வதால் அறியலாம். அரசர் கையில் செங்கோல் இருப்பது போல பரதக்கலையில் தலைசிறந்து விளங்குபவருக்கு கையை அலங்கரிக்கக் கொடுப்பதே தலைக்கோல். ஐயை தந்தை, அகுதை தந்தை என பிள்ளைகளின் பெயரைக் கூறி தந்தையரை அழைக்கும் வழக்கம் பண்டைக் காலத் தமிழரிடமிருந்து தொடர்ந்து வருகின்றது. 
சங்ககாலத் தந்தையர் தம் மக்களுக்கு செய்து கொடுத்த தங்கநகைகள் பற்றிய செய்திகளையும்  சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. மகளொருத்தி தனக்கு தோளில் அணியும் எல்வளை வேண்டும் என அழுதாள். ஆனால் தந்தையோ காப்புகள் கழன்று விழாதிருக்க முன்கையில் அணியும் தொடி செய்து கொடுத்தார். அவள் காதல் வசப்பட்ட பொழுது தோள் மெலிந்தாள். அவளது உடல் மெலிய கையில் இருக்கும் காப்புகள் தானே கழன்று விழும். அதனால் அவளின் காதல் பெற்றோருக்குத் தெரியவந்திருக்கும். தந்தை செய்து கொடுத்த தொடி காப்புகள் கழன்று விழாது தடுப்பதால் அவளது காதலை பெற்றோர் அறியவில்லை. எனவே தந்தையின் செயலை எண்ணி மகள் மனதுக்குள் பாராட்டும் காட்சியை
‘திருந்து கோல் எல்வளை வேண்டி யான் அழவும்‘     
                                                    - (நற்றிணை: 136)
எனத் தொடங்கும் நற்றிணைப்பாடல் காட்டுகிறது. சங்ககாலத் தந்தையர் மட்டுமே பிள்ளைகளுக்கு நன்மை செய்தார்கள் என நினைக்க வேண்டாம். பிள்ளைகளும் தந்தையர்க்கு உதவி செய்ததை சங்க இலக்கியம் எடுத்துச் சொல்கிறது. 
அன்னிஞிமிலி என்பவளின் தந்தை கோசர்களின் ஆட்சிக்காலத்தில் மாடுமேய்க்கும் தொழில் செய்து வந்தார். அவருடைய மாடொன்று ஒருவரின் வயலில் புகுந்து அங்கு முளைத்திருந்த பயறை மேய்ந்தது.   அது கோசர்களின் அவையில் விசாரணைக்கு வந்தது. அன்னிஞிமிலியின் தந்தை, தமது மாடு பயறை மேய்ந்ததை ஒப்புக்கொண்டபோதும், கோசர்கள் அவரின் கண்களை பெயர்த்து எடுத்தனர். இதனை அறிந்த அன்னிஞிமிலி, ‘தன் தந்தையின் கண்களைப் பறித்தவர்களை யான் பழிவாங்குவேன். அதுவரை பாத்திரத்தில் உணவு உண்ணமாட்டேன். தூய ஆடை உடுக்கமாட்டேன்’, என சூளுரத்தாள். அவள் தந்தையின் கண்கொண்டவர் அரசனாக இருந்த போதும் அவள் அதற்குப் பயப்படவில்லை. அதனை ஒரு தவமாகவே மேற்கொண்டாள். கோசர்கள் செய்த கொடுமையை திதியன் என்பவனுக்கு கூறி, அவன் துணையோடு தன் வஞ்சினம் முடித்து தந்தையை மகிழ்வித்தாள். அந்த வரலாற்றுப் பதிவை
“பாசிலை அமன்ற பயறு ஆபுக்கென
வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து, அருளாது
ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பிய
செருஇயல் நல்மான் திதியற்கு உரைத்து அவர்
இன்உயிர் செகுப்பக் கண்டு சினம்மாறி
அன்னிமிஞ்லி............”                                        - (அகம்: 262)
என பரணர் அகநானூற்றுப் பாடலில் எழுதியுள்ளார். 

அழகிய பெண்ணின் தந்தையை எப்படி தன் வசமாக்கி அவளை அடையளாம் என நினைக்கும் இளைஞன் ஒருவனையும் அகநானூறு காட்டுகிறது. 
வேறு நாட்டு இளைஞன் ஒருவன் கடற்கரையில் ஓர் அழகிய இளமங்கையைக் கண்டான். காதல் கொண்டான். ‘பொன் போன்ற பூக்களைச் சூடியிருக்கும் கூந்தலை உடையவள். கடற்கரையில் விளையாடிக் களைத்திருக்கும் அவளுக்கு விலையாக கப்பல் நிறைந்த பொருளைக் கொடுத்தாலும் என்னால் அடைய முடியாதவள். கடல் முத்துக்களை வாரிக் கொணர்ந்து அவற்றைப் பிரித்து எடுக்கும் பெருந்துறைக்கு உரிமையானவன் அவளுடைய தந்தை. ஆதலால் நம் நாட்டைவிட்டு இங்கு வந்து, அவளின் தந்தையுடன் சேர்ந்து அவளின் உப்பளத்தில் வேலை செய்தும், ஆழ்கடலுக்கு மரக்கலத்தில் சென்றும், அவனைப் பணிந்தும் அவனோடு இருந்தால் ஒருவேளை, அவனது மகளை எனக்கு மணம் செய்து தருவானோ?’, என நினைக்கின்றான். 

“பொன் அடர்ந்தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்
பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள்
திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய்தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப்பொருள் கலம்நிறை கொடுப்பினும்
பெறல் அருங்குரையள் ஆயின் அறம் தெரிந்து
நாம் உறை தேஎம் மரூஉப்பெயர்ந்து அவனொடு
இருநீர் சேர்ப்பின் உப்புடன் உழுதும்
பெருநீர்க்குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன் கொல்லோ தானே! விரிதிரைக்
கண் திரள்முத்தம் கொண்டு ஞாங்கர்த்
தேனிமிர் அகன்கரைப் பகுக்கும் 
கானலம் பெருந்துறைப் பரதவன் எமக்கே?”      
                                                  - (அகநானூறு: 280)
என அம்மூவனார் கூறுவதிலிருந்து, இரண்டாயிர வருடங்களுக்கு மேலாகியும் காதல் செய்யும் இளைஞர்களின் மாறாத உளப்பாங்கையும் காணலாம்.
பெண்களின் அழகில் மயங்கி பெண்கேட்டு வந்த அரசரையும், அரசரென்றாலும் பெண் கொடுக்க மறுக்கும் தந்தையரையும் தொடர்ந்து காண்போம்.
இனிதே, 
தமிழரசி.

Tuesday 26 June 2012

தோல் அழகு 2


மனிதர்களாகிய எமது தோலின் நிறம் மட்டும் இல்லாமல் அவற்றின் தன்மையும் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. மனிதரின் தோலின் தன்மையைக் கொண்டு அதனை ஐந்து வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.
  1. வறண்ட தோல்
  2. எண்ணெய்த்தன்மையான தோல்
  3. இரண்டும் கலந்த தோல்
  4. நுண்ணுணர்வுள்ள தோல்
  5. வயதான தோல்
இவற்றில் உங்களுடைய தோல் எந்தத் தன்மையைச் சேர்ந்தது என்பதை நீங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றபடியே உங்களுக்கு தேவையான அழகுசாதனப் பொருட்களை நீங்கள் வாங்கிப் பாவிக்க வேண்டும். உங்களின் தோலின் தன்மையை எப்படி அறிந்து கொள்வது? இரவு படுக்கைக்கு போகும் முன் எந்தவித கிறீமும் பாவியாது, காலையில் எழுந்ததும் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள். முகம் வறண்டும் தவிடுபோல் தோல் உரிந்தும், முக்கியமாக மூக்கின் மேற்பகுதி சிவந்து இடை இடையே தோல் உரிந்து காணப்பட்டாலும், உங்களுக்கு முகப்பரு வருவதில்லை என்றாலும், சில அழகுசாதனப் பொருட்களை பாவிக்கும் போது மட்டுமோ அன்றேல் மாதவிடாயின் போது மட்டுமோ வந்தாலும் உங்களுக்கு வறண்ட தோல் இருக்கிறது.
இந்த வறண்ட தோல் உங்களது பரம்பரைத் தன்மையாலும் மிகவும் கொழுப்புக் குறைந்த உணவுகளை உண்பதாலும், குளிராலும் ஏற்படலாம். குளிர்காலங்களில் எல்லாவகைத் தோல்களுமே வறண்ட தன்மையை அடைகின்றன. எனவே மேலே சொன்ன பரிசோதனையை சாதாரண வெப்பநிலை உள்ள நாளில் செய்து கொள்ளுங்கள். பார்ப்பதற்கு வரண்ட தோல் பொலிவற்று மங்கிக் காணப்படுவதற்குக் காரணம், தோலின் மேற்பரப்பில் இறந்த தோற்கலங்கள் ஒட்டி இருப்பதால் புதுத்தோற்கலங்களின் உற்பத்தி தடைப்படுவதேயாகும். மிகவும் மென்மையாக தேய்த்துக் கழுவுவதால் இந்த இறந்த தோலை அகற்றலாம். அதனால் புதுத்தோற்கலங்கள் உண்டாகி உங்கள் வறண்ட தோலைப் பொழிவடையச் செய்யும்.
எந்தத் தன்மையான தோலாக இருந்தாலும் அதை ஈரத்தன்மையாக (Moisturising) வைத்திருப்பதில் தான் தோலின் பராமரிப்பு தங்கி இருக்கின்றது. தோலின் இயற்கையான ஈரத்தன்மையை வெப்பமும் குளிரும் பாதிக்கும். இயற்கையான குளிரையும் வெப்பத்தையும் விட செயற்கையான குளிரும் (air conditioning), வெப்பமும் (central heating) தோலை அதிகமாக பாதிக்கின்றன. தோலை தேய்த்துக் கழுவுவதற்கு கொஞ்சம் ஓட்மீலை தூளாக்கி நீரில் பசைபோல் கரைத்து தோலில் பூசி இரண்டு நிமிடத்தின் பின் நன்றாகக் கழுவுங்கள். இது கடைகளில் விற்கும் ஸ்கிரப்ஸ் (scrubs) விடவும் மிகவும் நல்லது. 
வறண்ட தோல் உள்ளவர்கள் அதிகூடிய வெப்பமுள்ள நீரில் குளிப்பது நல்லதல்ல. விதைகளோ, உப்போ உள்ள ஸ்கிரப்ஸ் (scrubs) பாவித்தால் அவற்றிலுள்ள கூர்மையான நுனிகள் உங்கள் தோலை பாதிப்படையச் செய்யும். ஈரத்தன்மை கூடிய மொய்ஸ்ரைசிங் (moisturising) கிறீம்களை பாவியுங்கள். 
நன்றாக கீரை, பழங்கள், காய்கறிவகைகள் எண்ணெய்யுள்ள மீன்கள் சாப்பிடலாம். வறண்ட தோல் உங்கள் வயதை கூட்டிக் காட்டும். எனவே நன்றாக தண்ணீர் குடித்து தோலின்வறட்சியை நீக்க   கவனம் எடுங்கள்.

Monday 25 June 2012

அருளைத் தாராய்


உள்ளத்திருந்தே உணர்ச்சி தந்து
கள்ள மலத்து கழிவை அகற்றி
தெள்ளு தமிழில் தினமும் பாட
அள்ளி எனக்கு அருளைத் தாராய்.

தாராதிருந்தால் தளர்ந்தே போவேன்
வாராய் இங்கே வடிவேல் அழகா
ஊரார் பலரும் உவப்ப என்றும்
தீரா வினைகள் தீர்த்து அருள்வாய்.
இனிதே,
தமிழரசி.

Saturday 23 June 2012

அணையா விளக்கு ஏற்றுவோம்



விளக்கு என்றால் என்ன? எமக்குத் தெரியாததை தெரிய வைப்பதே விளக்காகும். அதனாலேயே ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு 'அதனை விளக்கு' எனச் சொல்லுவோம். எனவே உண்மைப் பொருளை விளக்கிக்காட்டுவதே விளக்காகும். அதாவது என்ன என்று அறிய முடியாத ஒன்றை இன்னது என்று அறியத்தருவது விளக்காகும். 

எரிமலையாய் வெடித்துச் சிதறியும், காட்டுத்தீயாய்  பற்றி எரிந்தும் ஆதிமனிதனின் வாழ்வில் பலவகையான துன்பங்களைத் தீ உண்டாக்கியது. அந்தத் தீயைக் கண்டு பயந்த மனிதன் அதை வழிபடத் தொடங்கினான். அதுவே தீ வழிபாடு. அவ்வழிபாடு தீபவழிபாடு, திருவிளக்கு வழிபாடுகளுக்கு வழி காட்டியது. கார்த்திகைத்தீப வழிபாடும், தீபாவளியும்  (தீபம் + ஆவளி = தீபங்களை வரிசையாக ஏற்றிக் கொண்டாடும் பண்டிகையும்) தீபவழிபாட்டின் முதன்மையைக் காட்டுகின்றன.
தீப விளக்குகள் - திருவிளக்கு, அகல் விளக்கு, அன்ன விளக்கு, கலங்கரை விளக்கு, பாவை விளக்கு, தோழி விளக்கு, ஈழநிலை விளக்கு, ஈழச்சியல் விளக்கு, ஈழவிளக்கு, குடவிளக்கு, குத்து விளக்கு எனப் பலவகைப்படும். விளக்கு இருளை நீக்குவதால் அதில் இலட்சுமி இருப்பதாகக் கருதுதியே திருவிளக்கு என அழைக்கின்றனர். மின்மினிப் பூச்சிபோல் விட்டுவிட்டு பிரகாசிக்கும் விளக்கே அன்னவிளக்காகும். அதனை வேள்வித் தூணின் உச்சியில் வைக்கப்பட்டிருந்த அன்னவிளக்கு [ஓதிம விளக்கு; ஓதிமம் - அன்னம்] விடிவெள்ளி [வைகுறுமீனின்] போல் விட்டு விட்டு பிரகாசித்தது என்பதை பெரும்பாணாற்றுபடை
“வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனின் பையத் தோன்றும்”                        
                                                     - (பெரும்பா: 316 - 317)
எனக்கூறுவதால் அறியலாம்.
பல சங்க இலக்கிய நூல்கள் பாவை விளக்கைப்பற்றிச் சொல்கின்றன. பெண் உருவப்பாவை விளக்கை ஏந்திய நிலையில் இருப்பதால் பாவை விளக்கு என அழைக்கப்பட்டது. முல்லைப்பாட்டு 
“பாவை விளக்கில் பரூஉ சுடர் அழல
இடம் சிறந்து உயரிய ஏழுநிலை மாடத்து”        
                                                     - (முல்லைப்: 85 - 86)
என பாவைவிளக்கை விளக்குகிறது. இக்காலத்தில் செம்பினால் செய்யப்பட்ட பாவைவிளக்கினையும் கோயில் தூண்களில் கற்சிற்பங்களாக இருக்கும் பாவை விளக்கினையுமே காண்கிறோம். பாவை விளக்கை தீப இலட்சுமி, தீப நாச்சியார் என்றும் சொல்வர். ஆண் பாவை விளக்குகளும் உண்டு. அதனை திருவிளக்குச் சீலர் என்றும், ஶ்ரீவிளக்குச் சீலர் என்றும் அழைப்பர். 
கோயில்களில் தாம் செய்த வேண்டுதல் நிறைவு பெற்றதற்காக பாவைவிளக்கைச் செய்து அக்கோயிலுக்குக் கொடுத்து இருக்கிறார்கள். அதனை பெண்களே செய்திருப்பதை பாவைவிளக்குப் படிமத்தின் பீடத்தில் உள்ள குறிப்புகளும் கல்வெட்டுகளும் எடுத்துச் சொல்கின்றன. திருவாரூர் கோயிலுக்கு 'பரவைநங்கை' என்ற பெண் பல பாவைவிளக்குகளை செய்து கொடுத்திருப்பதாகக் கல்வெட்டு சொல்கிறது. 

முதலாம் இராஜராஜ சோழனின் பட்டத்தரசியாகிய உலகமகாதேவி கோயிலுக்கு கொடுத்த விளக்குகளின் பட்டியலில் இடம்பெறும் தோழி விளக்கு, ஈழச்சியல் விளக்கு இரண்டும் ஈழத்தைச் சேர்ந்த விளக்குகளாகும். பாவைவிளக்குகள் இரண்டு முதுகுப்புறமாக ஒட்டியிருப்பது தோழி விளக்காகும். ஈழச்சியல் விளக்கு என்பது ஈழ அச்சியல் விளக்காகும். முதலாம் இராஜராஜ சோழனின் காலத்தில் இலங்கை அவனின் ஆட்சியின் கீழ் இருந்ததை ஈழத்து விளக்குகளும் சொல்கின்றன.
“அம்முனா அம்மணி” என்ற பெயரை உடைய மராட்டிய இளவரசி தன் காதல் நிறைவேறினால் இலட்சம் பாவைவிளக்கு ஏற்றுவதாக திருவிடைமருதூர் கோயிலில் வேண்டிக்கொண்டாள். அவளின் காதல் நிறைவேறி பிரதாபசிம்மனை மணந்ததும், கோயிலில் இலட்சம் பாவைவிளக்கு ஏற்றி அப்பாவை விளக்குகளிடையே தானும் ஒரு பாவைவிளக்காக அகல்விளக்கேந்தி நின்றாள். திருவிடைமருதூர் கோயில் சந்நிதி முன், தீபஒளி ஏந்தி நிற்கும் பாவைவிளக்கின் பீடத்தில் இச்செய்தியை இன்றும் காணலாம். 
எமது மனவிளக்கை ஏற்றி வழிபட்டால் சோதிவடிவான இறைவன் அருளொளி விளக்காக - அறிவொளியாக நம் மனதில் சுடர்விடுவான். அதனையே இரண்டாயிர வருடங்களுக்கு மேலாக பாவையர் [பெண்கள்] ஏற்றி வழிபடும் பாவைவிளக்கு காட்டுகிறது. 

திருமூலரின் திருமந்திரம் 
“மனத்து விளக்கினை மான்பட ஏற்றிச்
சினத்து விளக்கினை செல்ல நெருக்கி
அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கு மாயா விளக்கே
என்கின்றது. 

மனமாகிய விளக்கை அறியாமை என்னும் இருள் நீங்க [மான்பட] ஏற்றி, கோபமெனும்[சினத்து] விளக்கை வெறுத்து அழித்து [செல்ல நெருக்கி], மற்றைய ஐம்புல விளக்குகளின் திரிகளையும் ஒரே நேரத்தில் தூண்டினால் எமது மனத்தின் உள்ளொளி விளக்கானது அணையா[மாயா] விளக்காக நின்று சுடர்விடும். 
இனிதே,
தமிழரசி.

குறள் அமுது - (36)


குறள்:
“குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்”                                              - 1028

பொருள்:
தான் பிறந்த குடியின் உயர்வுக்காக பாடுபட்டு உழைப்பவர்க்கு காலநேரம் ஒன்றும் கிடையாது. சோம்பலால் என் குடும்பத்தில் உள்ளோர் வாழ நானா பாடுபட வேண்டும் என எண்ணி மானத்துடன் இருந்தால் அக்குடி கெட்டழிந்து போகும்.
விளக்கம்:
இத்திருக்குறள் 'குடி செயல் வகை' அதிகாரத்தில் எட்டாவது குறளாக இருக்கிறது. ஒருவன் தான்பிறந்த குடியை - குடும்பத்தை மேன்மை அடையச் செய்தலே குடி செயல் வகையாகும்.
பயிரை வளர்ப்பவரை பயிர்செய்வார் என்பது போல தான் பிறந்த குடியை வளர்ப்பவரே குடிசெய்வார். மடி என்பது சோம்பல். சோம்பலை வளர்ப்பது மடிசெய்தலாகும். தான் பிறந்த குடியை, குடும்பத்தை செழிக்கச் செய்ய விரும்புகின்றவர்க்கு இரவு, பகல், மழை, வெயில், பனி என்ற கால மாற்றங்கள்[பருவ மாற்றங்கள்] தெரிவதில்லை. அவரின் பார்வையில், செயலில் எண்ணத்தில் எல்லாம் தாம் பிறந்த குடியின் மானமே பெரிதாகத் தெரியும். அங்கே தன்நலம் மறந்து பொதுநலம் பேணப்படும்.
நாம் பிறந்தகுடி தமிழ்க்குடி. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. கல்லும் மண்ணும் எப்படி தோன்றியது என்பதை அறிந்திருந்த தமிழ்க்குடி. விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் தமது இரு கண்களாகக் காத்த குடி, தமிழ்க்குடி. இன்று உலகெங்கும் பத்துக்கோடி தமிழர் இருந்தும், குடிசெய்வார் யாருமில்லாக் குமுறும் குடி, தமிழ்க்குடி. மடிசெய்வார் பலர்கூடி, தாமே குடிசெய்வார் எனக்கூறி குழறுபடி செய்யும் குடி, நம் தமிழ்க்குடி.
இத்தனை கோடி தமிழர் இருக்க நான் மட்டுமா செய்யவேண்டும்? நான் செய்யப்போனால் எத்தனை பேர் என்னைப்பற்றியும், என்குடும்பத்தைப்பற்றியும் பேசுவர், எழுதுவர் என்ற தன்மான எண்ணத்தாலும் பலர் பொதுத்தொண்டு செய்ய வருவதில்லை. காய்க்கின்ற மரம் கல்லடிபடும் என்பதை அவர்கள் நினைப்பதில்லை. நாம் தமிழர் என்பதையும் மறந்து, தமிழனா அவன் திருந்தமாட்டான் என ஏதேதோ எல்லாம் கூறி நமது அறியாமையையும் சோம்பலையும் வளர்க்க காரணம் கற்பித்துக்கொண்டு வீணே இருந்தால் நம் குடி வாழுமா? 
எவரொருவர் தன்நலம் அற்று, பிறர்நலம் பேணத் தொடங்குகிறாரோ அவர் மான அவமானம் கடந்தவராக, ஆனால் தன் குடிமானம் போற்றுபவராக வாழவேண்டும். அப்படி வாழ்ந்தால் அவர் பிறந்த குடி உயர்வடையும். தன்மானம் பெரிதென எண்ணி சோம்பலால் தன் குடும்பத்தின் தன்குடியின் வளர்ச்சியைக் கருதாதிருப்பின் அவரது குடி கெடும். தமிழ்க்குடியில் பிறந்த ஒவ்வொரு தமிழனும் சோம்பலை வளர்க்காது தமிழ்க்குடியை வளர்க்க வேண்டும் என்பதை  தம் நினைவில் நிறுத்தச் சொல்லும் திருக்குறள் இது.

Thursday 21 June 2012

வாரி அணைத்துக் கொஞ்சலாம்




மனிதன் பண்டைய நாள் தொட்டு, இன்றுவரை ஊஞ்சல் கட்டி ஆடுகிறான். குருவிகளைப் போல் மிருகங்களைப் போல கொடிகளிலும், விழுதுகளிலும் ஆடியமனிதன் இன்று  எத்தனையோ வகை வகையாக ஊஞ்சல் செய்து ஆடுகிறான். ஆனால் இன்றும்  நாட்டுப்புறங்களில் ஆலம் விழுதில் ஊஞ்சல் செய்து ஆடும் வழக்கமும், ஆழம் விழுதில் தொங்கி ஆடும் வழக்கமும் இருக்கிறது. அப்படி ஆழமர விழுதில் ஊஞ்சல் ஆடுவது மிகவும் ஆனந்தமாக இருக்கும். ஈழத்தமிழரும் அந்த ஆனந்தத்தை இரசித்தவர்களே.
அந்நாளில் பாலியாற்றங்கரையில் வாழ்ந்த விடலைப் பையன் ஒருவன் வாழ்ந்தான். அவன் ஒரு கன்னிப்பெண்ணுடன் ஆலமர விழுதில் கட்டிய ஊஞ்சலில் எப்படி ஆடினான் என்பதை தன் நண்பர்களுக்குக் கூறுவதாக அமைந்துள்ள ஒரு நாட்டுப்புற ஊஞ்சற்பாடல் இது.
ஆண்: “ஆலமரத்து விழுதிலே
                     ஊஞ்சல் கட்டி ஆடலாம்
          ஆள ஆள பாத்துமே
                     ஆனந்தமாய் ஆடலாம்”
ஆண்:  “கீழ கண்ணால் பாத்துமே
                      கிறுகிறுக்க செய்யலாம்  
             மேல கீழ போகயில
                       மெதுவாகொஞ்சம் வருடலாம்”
 ஆண்: “சேலமெல்ல நழுவயில
                      திருத்துமழகை ரசிக்கலாம்
             வாலகுமரி தன்னையே
                     வாரியணைத்துக் கொஞ்சலாம்”
                                         -  நாட்டுப்பாடல் (பாலியாறு)
                            - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
 
வவுனிக்குளத்தை 'பாலிவாவி' என பண்டைத் தமிழர் அழைத்தனர். 'வாவி' என்றதும் சிங்களமொழிச் சொல் எனச்சிலர் கருதுகின்றனர்.  சிங்களத்தில்  'wewa' என்பதையே தமிழில் வாவி என்கிறார்கள் என்கின்றனர். அது பிழையான கருத்தாகும். சிங்களமொழி தோன்ற  முன்பே தமிழில் வாவி என்னும் சொல் இருக்கிறது.   முதலாம் கரிகாற்சோழன் கி மு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். அவனைப் பாடிய சங்ககாலப் புலவரான கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலையில்
"செறுவும் வாவியும் மயங்கி நீரற்று
அறுகோட்டு இரலையொடு மான்பிணை உகளவும்"
                                                  - (பட்டினப்பாலை: 244- 245)
என நீர்நிலைகளில் ஒன்றாக வாவியையும் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டுப்பாடல் பாடப்பட்ட இடமான பாலியாறு இன்றும் வவுனிக்குளத்திற்கு நீரைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. 
இனிதே,
தமிழரசி.

Wednesday 20 June 2012

இரசிக்கப் பிறந்தவள்




சுத்தம் சுகந்தரும், அந்த 
சுகத்தை சுவைத்தவள் இவள்
இருக்கும் இடம் சுத்தம்
உடுத்த உடை சுத்தம்
விரித்த விரிப்பு சுத்தம்
வைத்த காய்கறி சுத்தம்
சுத்தம் என்னும் ஓடையில்
சுகத்தை நுகர்ந்த காரணத்தால்
நரை திரை மூப்பு
நலித்திடவில்லை இவளை,
முதுமையின் சுகத்தை முற்று
முழுதாய் இரசிக்கப் பிறந்தவள்.
இனிதே,
தமிழரசி.
                                          

Tuesday 19 June 2012

அடிசில் 27

வல்லாரைத் துவையல்

                                           - நீரா -














தேவையான பொருட்கள்:
வல்லாரைக் கீரை  -  1 பிடி
காய்ந்த மிளகாய்  -  3
உரித்த சின்ன வெங்காயம்  -  5
துருவிய தேங்காய்  -  1 மேசைக் கரண்டி
கடலைப் பருப்பு  -  1 தேக்கரண்டி 
கறிவேப்பிலை  
உப்பு  -  தேவையான அளவு
பழப்புளி  -  சிறிதளவு
செய்முறை:
1.  வல்லாரையை சுத்தம் செய்து கழுவுக.
2.  ஒரு பாத்திரத்தை சூடாக்கி காய்ந்த மிளகாயையும், கடலைப் பருப்பையும் மணம் வர வறுத்துக் கொள்க.
3.  இவற்றுடன் மற்றைய பொருட்களையும் மிக்ஸியுள் போட்டு சிறிது நீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
குறிப்பு:
விரும்பினால் காய்ந்தமிளகாயையும், கடலைப்பருப்பையும் வறுத்து எடுக்காது, 1 தேக்கரண்டி எண்ணெய்யில் பொரித்தும் எடுக்கலாம்.