Thursday, 9 May 2013

ஔவையாரும் அதியமான் நெடுமான் அஞ்சியும்

Photo: source Tamil Wikipedia
‘ஔவைக் கிழவி நம் கிழவி அமிழ்தின் இனிய சொற்கிழவி’ என சிறுவயதில் படித்தது பலருக்கு ஞாபகம் இருக்கும். அந்த ஔவைக் கிழவி யார்? எப்போது வாழ்ந்தார்? என்பவற்றை ஆராய்ந்து பார்த்தால் ஔவையார் என்ற பெயருடன் பலர் சங்ககாலம் தொடக்கம் வாழ்ந்ததை அறியலாம். நம் தமிழ் முன்னோர்கள் பெண்களில் மூதறிஞர்களை ஔவையார் என அழைத்தனர் போலும். இதனை தமிழ் இலக்கிய வரலாறு எமக்குக் காட்டுகிறது. அவர்களில் சங்க கால ஔவையாரை இங்கு பார்ப்போம்.

அதியமான் நெடுமான் அஞ்சி சங்ககால அரசர்களில் ஒருவன். அவனது அன்பைப் பெற்ற சங்ககால ஔவையார் அரசர்களும் புலவர்களும் போற்ற பெருமதிப்புடன் வாழ்ந்தவர். சங்ககால ஔவையாரின் வாழ்க்கை வரலாற்றை சுவைத்தே பாரதியார்
“நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வையும்
          நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
          செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்”         -(பாரதியார் பாடல்)
என புதுமைப் பெண்ணை படைத்திருப்பார் என எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் பாரதி கூறிய அத்தனை இயல்புகளூம் இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் வழ்ந்த சங்ககால ஔவையாரிடம் அதிகமாகவே இருந்திருக்கின்றன.

அதிகமான் நெடுமான் அஞ்சியும் ஔவையாரின் தமிழ்ப்புலமைக்காகவும், எவருக்கும் தலைவணங்காத அவரது இயல்புக்காகவும் அவர் மேல் மதிப்பும் பற்றும் வைத்திருந்தான். ஒருநாள் அதியமானின் அரண்மனைக்கு வந்த ஒருவர் அதிசய நெல்லிக்கனி ஒன்றை அவனிடம் கொடுத்தார். அந்நெல்லிக் கனியை உண்பவர் நீண்டநாள் சுகமாக வாழலாம் என்பதை அதியமான் அறிந்தான். அக்கனியை ஔவையாருக்குக் கொடுத்தான். அதியமான் நெல்லிக்கனியை ஔவையாருக்குக் கொடுத்ததை சிறுபாணாற்றுப்படையில்
“........................... ....... மால் வரை
கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
அரவக் கடல் தானை அதிகனும் .............”           - (சிறுபாணாற்றுப்படை: 99 - 103)
நல்லூர் நத்தத்தனார் கூறியுள்ளார். 

அதிகமான் நெடுமான் அஞ்சி தான் வாழ்வதைவிட ஔவையார் வாழ்ந்தால் தமிழ் வாழும் என நினைத்தான். ஆதலால் ஔவையாரும் தனக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமானை சிவபெருமான் போல இவ்வுலகில் நிலைத்து வாழ வாழ்த்தியுள்ளார். 
“வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கடந்தகழல் தொடி தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க, எமக்கு ஈந்தனையே”                - (புறம்: 91)
‘வெற்றிவாளை ஏந்தி, பகைவரின் பல போர்க்களங்களை கடந்த கால்களையும், தொடியணிந்த கையில்  நுரைக்கும் தேனுமுடைய அதியர் கோமானே! வெற்றிச் செவத்தையும் பொன்மாலையையும் உடைய அஞ்சியே! பழமை வாய்ந்த பெரிய மலையின் பிளவினுள் அரிதாக வளர்ந்த சிறிய இலையுள்ள நெல்லியின் இனிய கனியை, அதன் அருமையை எனக்கு சொல்லாது உன் மனத்துள் வைத்துக் கொண்டு, சாகாது இருக்க எனக்கு தந்தாய். ஆதலால், நீலமணி போன்ற கழுத்தை உடைய சிவன் போல நிலைபெற்று நீ வாழ்வாயாக! என வாழ்த்தியுள்ளார்

அப்படி அதியமானின் அன்பையும் பெருமதிப்பையும் பெற்ற ஔவையார் ஒருமுறை அவனைப் பார்த்து பரிசில் பெற சென்றிருந்தார். ஏதோ காரணத்தால் அவன் ஔவையாரை அழைக்க காலதாமதம் ஏற்பட்டது. அதனால் ஔவையார் கோபத்துடன் ‘வாயிற்காவலனே! வாயிற்காவலனே! வள்ளல்களின் செவிகளில் செறிவு நிறைந்த தமிழ் மொழியை விதைத்து, தாம் நினைத்ததை முடிக்கும் உறுதியான நெஞ்சுடன், பாராட்டினைப் பெறுவதற்காக துன்பத்துகுள்ளாகி, பரிசு பெற்று வாழ்கின்ற பரிசிலர்க்கு (புலவோர்க்கு - கலைவல்லார்க்கு) கதவை மூடாத வாயிற்காவலனே! கடுஞ்சிங்கம் போலத் தோற்றம் அளிக்கும் நெடுமான் அஞ்சி, தன் தகுதியை அறிய மாட்டானோ? அல்லது என் தகுதியும் அறிய மாட்டானோ?

அறிவும் புகழும் உடையவர் பசியால் இறந்தார் என்று சொல்லக்கூடிய வறுமையில் இந்த உலகம் இல்லை. அதனால் எங்கள் இசைக்கருவிகளை கலப்பையினுள் (கலைப்பை) போட்டு சுருக்கிக் கொண்டோம் மரம்வெட்டும் தச்சனின் கைத்தொழிலை அறிந்த சிறுவர்கள் கோடாலியுடன் காட்டினுள்  சென்றால் வெட்ட மரம் கிடைக்காது போகுமா? எந்தத் திசையில் சென்றாலும் அந்தத் திசையில் சோறு கிடைக்கும்’ என்று சொல்லிய புறநாநூற்றுப் பாடலின் முழுவதையும் பார்ப்போம்.
“வாயிலோயேஎ! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழ்இ வித்தித் தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறியலன் கொல் என்அறியலன் கொல்
அறிவும் புகழும் உடையவர் மாய்ந்தென
வறுந்தலை உலகம் அன்றே; அதனால்
காவினம் கலனே சுருக்கினம் கலப்பை
மரங்கொல் தச்சன் கைவல் சிறார்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”                   -(புறம்: 206)

ஔவையாருக்கு அதியமான் மேல் கோபம் ஏற்படக் காரணம் என்ன? ஔவையாரின் தகுதியை நன்கு அறிந்தவன் அதியமான். அதனாலேயே அவன் ஔவையாருக்கு நீண்டநாள் சுகமாக வாழவைக்கும் நெல்லிக்கனியைக் கொடுத்தான். அப்படிப்பட்டவன் ஔவையார் வந்தது அறிந்தும் காலதாமதம் செய்ததாலேயே அவருக்கு அவன் மேல் கோபம் ஏற்பட்டது. அந்தக் கோபத்தை இப்பாடலின் 
“கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி!
தன்அறியலன் கொல்? என்அறியலன் கொல்?
அறிவும் புகழும் உடையவர் மாய்ந்தென
வறுந்தலை உலகம் அன்றே; அதனால்
காவினம் கலனே! சுருக்கினம் கலப்பை!”
என்னும் வரிகள் எடுத்துச் சொல்கின்றன.

ஔவையாரின் அறிவுச் செருக்கை “அறிவும் புகழும் உடையவர் பசியால் இறந்தார் என்று சொல்லக்கூடிய வறுமையில் இந்த உலகம் இல்லை. அதனால் எங்கள் இசைக்கருவிகளை கலைப்பையினுள் போட்டு சுருக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டோம்” எனச் சொன்னவை காட்ட யாருக்கும் அஞ்சாத அவரது இயல்பை
“மரங்கொல் தச்சன் கைவல் சிறார்
மழுவுடைக் காட்டகத்து அற்றே!
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!”
என்னும் தொடர்கள் காட்டுகின்றன அல்லவா?

எனினும் அதியமான் நெடுமான் அஞ்சி இறந்த பொழுது ஔவையார் பாடிய பாடல்கள் நெஞ்சை உருக்குபவை. அதியமானின் புகழ் இன்றும் இருப்பதற்கு ஔவையாரின் பாடல்களே காரணம்.


அதியமான் வாழ்ந்த காலம் கி மு முதலாம் நூற்றாண்டிற்கு முந்தியது என அதியமானின் பெயர் பொறித்த முத்திரை மோதிரம் ஒன்றால் தெரியவருகின்றது. டாக்டர் இரா கிருஷ்ணமூர்த்தி (தினமலர் ஆசிரியர்) தாம் எழுதிய ‘சங்ககாலம் என்பது எப்போது? என்ற கட்டுரையில் கரூரில் அதியமானின் முத்திரை மோதிரத்தை தான் வாங்கியதாகவும், அம்மோதிரத்தில் தமிழ்ப் பிரமி எழுத்தில் அதியமான் என எழுதப்பட்டிருந்தை தொல் எழுத்தறிஞர் கே ஜி கிருஷ்ணன் படித்து சொன்னார் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த முத்திரை மோதிரத்தின் படத்தை மேலே படத்தில் காணலாம். எனவே சங்ககால ஔவையார் கி மு முதலாம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment