Sunday 14 November 2021

புங்குடுதீவிலுள்ள கள்ளிக்காடு, திகழி என்பன உங்களின் பிறப்பிடமா?

கள்ளிக்காடு என்னும் பெயருக்கு ஏற்ப புங்குடுதீவுக் கள்ளிக்காட்டில் 
மண்டி வளர்ந்திருக்கும் கள்ளி மரங்கள் 2019
(Photo credit goes to Sanjula)

புங்குடுதீவு உறவுகளே! புங்குடுதீவில் உள்ள உங்ளது இடங்களின் பெயர்களை மாற்றி எழுதுவோரை அப்படி எழுதவேண்டாம் என்று கூறுங்கள். அதுவும் புங்குடுதீவு வரை படத்தில் இடங்களின் பெயர்களை வேறு பெயரில் எழுதுவது வரலாற்றுத் தவறு என்பதை உணர்ந்து திருத்துங்கள்.  திகழி என்னும் இடத்தைஅகழிஎன எழுதுவது நகைப்புக்கு இடம் அளிக்கும். புங்குடுதீவைச் சூழ கடல் நீரே அரணாக இருக்கும் போது அதைவிட இன்னும் ஓர் அகழியின்(நீரால் ஆன அரண்) தேவை இருந்திருக்குமா?


தமிழரின் புகழ் பெற்ற கடற்கரைப் பட்டனங்கள் திகழி என அழைக்கப்பட்டன. பண்டைய நாளில் உலகின் மேற்கேயும் கிழக்கேயும் புங்குடுதீவின் திகழிக்கு இருந்த புகழை அங்கு கிடைத்த ரோமாபுரிக் காசுகளும், சீனமட்பாண்டங்களும் எடுத்துச் சொல்கின்றன. அதனைக் கருத்தில் கொண்டு திகழிக்குளத்தை புனரமைத்தோர் அதனைப் புனரமைத்தனரா என்பது கேள்விக்குறியே. அந்த வேலை அப்படியே நிற்பது போலத் தெரிகிறது. தொடர்ந்து செய்யப்புகும் பொழுதாவது அது ஒரு பண்டைய வரலாற்று இடம் என்பதைக் கருத்தில் கொண்டு உங்கள் பார ஊர்திகளை அம்மண்ணில் இறக்குங்கள்.  வரலாற்றுக் கண் கொண்டு தேடினால் எமது திகழியில் புங்குடுதீவின் மிச்ச எச்ச வரலாறும் கிடைக்கலாம். 


திகழியில் பிறந்தோரோ, காணிவைத்திருப்போரோ திகழியை அகழி என எழுதுவோருக்கு அப்படி எழுதவேண்டாம் என எடுத்துச் சொல்லுங்கள். சிலவேளை புங்குடுதீவின் திகழி எந்தநிலையில் இருந்தது என்பதை ரோம, சீன வரலாறுகளும் சொல்லக்கூடும். அப்படி அவை சொல்லும் பொழுது நீங்கள் அகழி என எழுதினால் எப்படி அவ்விடத்தை இனங்கான முடியும்? ஏனெனில் புங்குடுதீவில் மட்டுமல்ல புத்தளத்திலும் திகழி என்னும் பெயருடைய கடற்கரைப் பட்டனம் இருந்தது. இப்போது அது சிறு கிராமமாக இருக்கிறது. அதனை மனதிற் கொண்டு எங்கள் புங்குடுதீவின் திகழியின் வரலாற்றை அழிந்து போகாது காக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

புங்குடுதீவில் உள்ள திகழிக்குளத்தை சிவப்பால் அடையாளம் இட்டுள்ளேன். 


வரலாற்றுப் பெருமை மிக்க திகழி என்ற பெயரும், கள்ளிக்காடு என்ற பெயரும் புங்குடுதீவு வரைபடங்களில் இல்லை. அதுவும் புங்குடுதீவு ஒன்றியங்கள், நலன்புரிச்சங்கம் போன்றவற்றில் இருக்கும் புங்குடுதீவு வரைபடங்களிலும் இல்லாது ஒழிந்ததேனோ! இப்படத்தில் புங்குடுதீவில் உள்ள கண்ணாத்தீவை ஆங்கிலத்தில் Kanantivu எனக்குறித்திருப்பதைப் பாருங்கள். இது ஒரு வரலாற்றுத் தவறாக ஒருவர் கண்ணுக்கும் தெரியவில்லையா? மடத்துவெளி வலைத்தளத்திலும்ஆம்பல்குளத்தை ஆமைகுளம் எனப் பதிவுசெய்துள்ளனர். அதனைத் திருத்துங்கள். மடத்துவெளிக்கும்  எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆமைக்குளத்தை ஆம்பல் குளமாக மாற்றுங்கள். 

உலகெல்லாம் பரந்து வாழும் புங்குடுதீவின் உறவுகள் யாவரும் நன்கு கற்றவர்கள் என்றே நான் கருதுகிறேன். ஊர்ப்பற்றும் மொழிப்பற்றும் இனப்பற்றும் மிக்கவர்கள். ஆனால் எக்காரணத்தாலோ வரலாற்றுப்பற்று இல்லாதிருப்பது சற்றே மனவருத்தத்தைத் தருகிறது. எம் உறவுகளிடம்   மட்டுமல்ல பெரும் பான்மையான தமிழரிடம் எமது இடங்களை, மரஞ்செடி கொடிகளை, பறவைகளை, பூச்சி, புழுக்களை, அவற்றின் பெயர்களை வரலாறாக்கப் பேண வேண்டும் என்னும் எண்ணம் இல்லவே இல்லை. அதனாற்றான் ஏதிலராக வாழ்கிறோமா?  


திகழியைப்போல் கள்ளியாறும் புங்குடுதீவின் வரலாற்றின் ஊற்றிடமாகும். இவை உங்கள் பிறப்பிடமாயின் புங்குடுதீவு வரைபடத்தில் அப்பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.  புங்குடுதீவில் வாழ்ந்த நம் முன்னோர் கள்ளிக்காடு இருந்த இடத்திற்கு அருகே ஓடிய ஆற்றையேகள்ளி ஆறுஎன அழைத்தனர். கள்ளிக் காட்டின் மேலும் கள்ளியாற்றின் மேலும் எமக்கு ஏதும் கசப்புணர்வோ! புரியவில்லை. புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் (UK)  குறிப்பிடும் புங்குடுதீவின் இடப்பெயர்களில் கள்ளிக்காட்டை காணவில்லை. கள்ளிக்காட்டில் துர்க்கை அம்மன் கோயிலும் இருக்கிறது. அங்கு வாழ்ந்தோரும் பிறந்தோரும் இருக்கிறீர்களே! நீங்களாவது கொஞ்சம் எடுத்துச் சொன்னால் உங்கள் இடத்தின் பெயர் அதில் இடம் பெறும். அடுத்தடுத்த வருடத்தில் வரயிருக்கும் நமது நாட்டின் வரைபடத்தில்  ஏன் Google Earthல் கூட உங்கள் இடத்தை, வீட்டை நீங்கள் பார்க்கலாம். இதனை புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் (UK) செய்யும் என மனதார நம்புகிறேன்.


புங்குடுதீவு (Swiss) ஒன்றியம் புங்குடுதீவின் வரைபடத்தில் கள்ளியாறு களியாறென எழுதப்பட்டுள்ளது. அப்படி எழுதவேண்டாம் என்று ஏழு வருடங்களுக்கு முன்பே சொன்னேன். இதுவரை எதுவித மாற்றமும் செய்யவில்லை. கள்ளி ஆற்றை களியாறு என எழுதுவது மாபெரும் வரலாற்றுத் தவறு என்பது அவர்களுக்குப் புரியவில்லைப் போலும். எனவே Swissஇல் வாழும் புங்குடுதீவு உறவுகள் நீங்களாவது எடுத்துச் சொல்லுங்கள். வருங்காலத் தலைமுறையினராவது எமைப்பார்த்து சிரிக்காது இருக்கட்டும். புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ், கனடா போன்றவையும் இவற்றைக் கருத்தில் கொள்வது நன்று.

மூன்றாம் நந்திவர்மன் வெட்சியூரில்[இரத்மலானையில்] கட்டிய 

நந்தீஸ்வரர் கோயிலை போர்த்துக்கீசர்கள் உடைக்கும் காட்சி. கி பி 1518.


ஏனெனில் வெட்சியூரில்[இரத்மலானை] நந்திக் கோயிலைக் கட்டிய நந்திவர்மன் கி பி 825 - கி பி 866 அரசுசெய்தவன். அவனும் புங்குடுதீவின்  கள்ளியாற்றில் உலாப்போய் இருக்கிறான். அவன் தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டிய ராஜராச சோழன் பிறப்பதற்கு 100 வருடங்களுக்கு முன்பே நம் கள்ளிக்காட்டின் அகிலையும் நம்மூர் முத்தையும் பவளத்தையும் எடுத்துச் சென்றான். எமக்காக இல்லாவிடினும்  மூன்றாம் நந்திவர்மனின் வரலாற்றுக்காக எனினும் கள்ளியாற்றின் பெயரைப் போற்றிக் காப்போமா

இனிதே,

தமிழரசி.

Saturday 6 November 2021

மாநிலம் காத்திட வாராய்!


ஊன் உருகும் ஓசை கேட்குதா

உணர்வினில் ஒன்றியே நிதம்

வான் உருகி மழை வீழினும்

வன்னிலம் எங்கனும் வெய்ய

கான் உருகி கனல் காய்ந்தெரி

கானல் ஆவது காணலையா

மான் உருவ வள்ளி மணாளா

மாநிலம் காத்திட வாராய்!

இனிதே,

தமிழரசி.