Tuesday, 20 June 2017

அருகே நண்ணி அருள்வாயே!


வயலூர் உறையும் வடிவேலா
          வழக்கொன் றுண்டு வருவாயே
கயலூர் தடாகத் தாமரையாள்
          கனிந்தே வந்து பிறந்தாளே
மயலார் காதல் மயக்கமதில்
          மனதைத் தொடுத்தே நின்றாளே
அயலார் காணும் அரங்கதனில்
          அருகே நண்ணி அருள்வாயே!
இனிதே,
தமிழரசி.

Monday, 19 June 2017

தென்னன் தமிழை பார்!


வண்ண மகளே வா
வடி வழகே வா
உண்ண உணவு பார்
உறங்க தொட்டில் பார்

கண்ணின் மணியே வா
காதல் மொழியே வா
கலைகள் பலவும் பார்
கருத்தில் இனிக்கும் பார்

மண்ணின் மலரே வா
மழலை ஞிமிரே வா 
மழையின் துளியை பார்
மரத்தின் தளிரை பார்

விண்ணின் மதியே வா
வெற்றித் திருவே வா
விண்ணின் ஒளியை பார்
விளையும் பயிரை பார்

தண்ணென் முகிலே வா
தாவி யணைக்க வா
தென்னன் தமிழை பார்
தெளிந்த சுவையை பார்

                                                     - சிட்டு எழுதும் சீட்டு 142
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
ஞிமிறு - தேனி

Wednesday, 14 June 2017

மும்மூர்த்திகளுக்கும் கற்றாழம் பூவே கறி!


காளமேகப் புலவர் ‘மும்மூர்த்திகளுக்கும் கற்றாழம் பூவே கறி’ என்று கூறியிருக்கிறார். ஏன்? எதற்கு? அப்படிக் கூறினார் பார்ப்போமே?

காளமேகப் புலவரைப் பார்த்த வேறொரு புலவர் “மும்மூர்த்தி என்று சொல்கின்ற வேதன், அரன், மால் மூவரின் பெயர்களும் வர அவர்கள் சாப்பிடும் கறி, உண்ணும் உணவு, வைத்திருக்கும் ஆயுதம், அணியும் அணிகள், ஏறித்திரியும் ஊர்திகள், வாழும் இடங்கள் யாவும் வர ஒரு வெண்பா பாடச் சொல்லிக் கேட்டார்.
அதற்குக் காளமேகப் புலவரும் 
“சிறுவ நளைபயறு நெந்னெற் கடுகுபூ
மறிதிகிரி தண்டு மணி நூல் - பொறியரவம்
வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி”
- (காளமேகம் தனிப்பாடல்: 36)
என்ற வெண்பாவைப் பாடினார். அந்தப் புலவரும் காளமேகத்தின் வென்பாவைத் தனிச் சொற்களாகப் பிரித்து
“சிறுவன் அளை பயறு செந்நெல் கடுகுபூ
மறி திகிரி தண்டு மணி நூல் - பொறியரவம்
வெள்ஏறு புள் அன்னம் வேதன் அரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி”
என்று படித்தார். படித்தவர் திகைத்து ‘மும்மூர்த்திகளுக்கும் கற்றாழம் பூவா கறி!’ என்று கேட்டார்.

காளமேகப் புலவரும் சிரித்துக் கொண்டே ‘பிரமா பயற்றையும், சிவன் பிள்ளைக் கறியையும், திருமால் வெண்ணெயையும் கறியாக தின்றனர். மூவருக்கும் முறையே செந்நெல், நஞ்சு[ஆலகால விடம்], மண்  உணவாகும். தண்டம், மறி, சக்கரம் ஆயுதமாகும். பூணூல், புள்ளியுள்ள பாம்பு, கௌத்துவமணி அணியாகும். அன்னம், வெள்ளை ஏறு, கழுகு வாகனமாகும். தாமரைபூ, கைலைமலை, பாற்கடல் வாழும் இடமாகும்’ என்று சொன்னார். அதனைக் கேட்ட புலவரும் மகிழ்ச்சியடைந்தார். 

பிரமா[வேதன்] சிவன்[அரன்] திருமால்[மால்]
கறி பயறு பிள்ளை[சிறுவன்] வெண்ணெய்[அளை]
உணவு செந்நெல் நஞ்சு[கடு] பூமி[கு]
ஆயுதம் தண்டம்[தண்டு] மான்மறி[பூமறி] சக்கரம்[திகிரி]
அணி பூணூல்[நூல்] பாம்பு[பொறியரவம்] கௌத்துவமணி[மணி]
ஊர்தி அன்னம் வெள்ளைஏறு[வெற்றேறு] கழுகு[புள்]
வாழுமிடம் தமரைப்பூ[பூ] கைலைமலை[கல்] பாற்கடல்[தாழம்-தாழி]
இனிதே,
தமிழரசி.

Sunday, 11 June 2017

உழப்பே தலை!


ஒருவனைப் பார்த்து அவன் பெரிய உழைப்பாளி என்று பெருமையாகப் பேசுகிறோம். அதுபோல்  இன்னொருவனை ஒரு உழைப்பும் இல்லாமல் துன்பப்படுகிறான் என்றும் சொல்கிறோம். உழைப்பு என்றாலே துன்பப்படுதல் அல்லது வருந்துதல் என்ற கருத்தைத்தான் தரும். 

அவன் பெரிய உழைப்பாளி என்னும் பொழுதும் அவன் பெரிதாகத் துன்பப்படுகிறான் என்றே சொல்கிறோம். அவன் படுந்துன்பம் அவனுக்குப் பொருளைப் பணத்தைத் தருகிறது. அதனால் அவனை மதிக்கிறோம். உழைப்பு இல்லாமல் இருப்பவன் உண்மையில் துன்பப்படவில்லை. பொருள் இல்லாமையே அவன் படுந்துயரமாகும். ஆதலால் துன்பப்படுவதே தலைசிறந்தது என்பது நம்மவர் கண்ட முடிவாகும்.

உழைப்பு என்னும் சொல் உழப்பு என்னும் சொல்லில் இருந்து பிறந்த சொல்லாகும். தொல்காப்பியத்தில் உழப்பு என்ற சொல் இருக்கிறது. நாம் வெளிநாட்டிற்கு வந்து துன்பப்படுவது போல இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டிற்கு பொருள் தேடிச்சென்றவன் தான் சென்ற நாட்டில் பட்ட துன்பத்தை மிகவும் விளக்கமாகக் கூறுவதை தொல்காப்பியர்
“சென்ற தேஎத்து உழப்பு நனிவிளக்கி”
                                                   - (தொல்: பொ:144: 51)
என்கிறார்.

தாயுமான சுவாமிகள் ‘என் உள்ளத்தை அறிவாய்! படுந்துன்பத்தை அறிவாய்! நான் ஏழை, தள்ளிவிடுவீராயின் தவித்துப்போவேன்’ என இறைவனிடம் கூறியதை
“உள்ளம் அறிவாய் உழப்பு அறிவாய் நான்ஏழை 
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே”
                                                    - (பராபரக் கண்ணி: 33)
 பராபரக் கண்ணி சொல்கிறது. இதில்  துன்பப்படுவதை அறிவாய் என்பதை உழப்பு அறிவாய் என்கிறார்.

பட்டினத்தார்  துன்பத்தால் வரும் உயர்வையும் துன்பப்படாது சோம்பி இருப்பதால் வரும் இழிவையும் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் மிக அழகாகச் சொல்கிறார்.
“உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையற வுளவோ”
துன்பப்பட்டு முயல்வதால் கிடைக்காத உறுதிப்பாடுகளும் இருக்கின்றனவா? சோம்பலால் கிடைக்காத துன்பங்களும் இருக்கின்றனவா? இல்லையே! எனவே உழப்பே தலை! உழைப்பே தலை!!
இனிதே,
தமிழரசி.

Saturday, 10 June 2017

புங்கைநகர் வாழும் எங்கள் புனிதம்மா!

Photo: Pungudutivu Today

புங்கைநகர் வாழும் எங்கள் புனிதம்மா
பொற்கரந்தனைப் பிடித்தோம் அருளம்மா
தங்கைவருந்தி யுழைப் போரைப் பாரம்மா
தண்ணீர்க்கு வழியுமில்லை ஏனம்மா
செங்கயல் பாயும் செழுங்கழு நீரும்
செந்நெலும் பொலிந்திடச் செய்திடம்மா
நங்கையர் வாழ்வு நாளும் நலியுதம்மா
நம்மின முய்ய  நயந்திடம்மா
இனிதே,
தமிழரசி.

Friday, 9 June 2017

பஞ்ச வண்ண அணிலே!


பஞ்சு போன்ற மயிரும் - நல்
பவள மூக்கு முடைய
பஞ்ச வண்ண அணிலே - உன்
பழமை என்ன சொல்வாயா

பஞ்சிக் கால் தன்னிலே - தீம்
பழம் பிடித்து உண்ணும்
பிஞ்சு விரலின் கீறல் - ஏன்
படுவ தில்லை சொல்வாயா

அஞ்சி ஓடும் போதும் - நின்
அழகு கொஞ்சம் கூடும்
எஞ்சி விட்ட பழத்தின் - ருசி
ஏறுவ தேன் சொல்வாயா

குஞ்சம் போல் வாலும் - கருங்
கண்ணு முள்ள அணிலே
கெஞ்சி மெல்ல கேட்கிறேன் - உன்
கொஞ்சு மொழியிற் சொல்வாயா
                                            - சிட்டு எழுதும் சீட்டு 141
இனிதே,
தமிழரசி.

Tuesday, 6 June 2017

சங்ககால உணவு உண்போமா! - 3

முண்டகம் [கடல்முள்ளி]

தமிழகம் எங்கும் சங்ககாலத்தில் இயற்கைவளம் நிறைந்திருந்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆட்டுக்கிடாய் கட்டி வளர்த்த வயலில் விரால் மீன்கள் துள்ளிக் குதித்தன. அந்த ஆட்டுக்கிடாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டை இட்டு உழக்கிய சேற்றில் உழாமலே விதைத்தனர். கரும்புப் பாத்தியில் நெய்தல் மலர்கள் பூத்துக் குலுங்கின.
“தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்
ஏறுபொருத செறு உழாது வித்துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்”
                                                    - (பதிற்றுப்பத்து: 13: 1 - 3)
இப்படி இயற்கை வளம் நிறைந்திருந்தால் பலவையான உணவுப் பொருட்களும்  நிறைந்தே இருந்தன. கரும்பு ஆலைகளில் கரும்பை இட்டு சாறு எடுக்கும் அளவுக்கு கரும்புச் செய்கை மேன்மை அடைந்திருந்தது. 

மழை விளையாட்டாகப் பொழிய மூங்கில் வளரும் மலைத்தொடரில் கொலைவெறியுடைய யாளி தாக்க யானைக்கூட்டம் கதறுவது போல  கரும்பைப் பிழிந்து எடுக்கும் எந்திரத்திரங்களின் சத்தம் ஓயாது கேட்டது. கரும்புச் சாற்றிலிருந்து வெல்லம் [விசயம்]  உண்டாக்குவதால் ஆலைகளைப் புகை சூழ்ந்திருந்தது. அவ்வாலைகளில் கரும்புச் சாற்றை விரும்பியோர் வாங்கிக் குடித்தனர் என்பதை
“மழை விளையாடும் கழைவளர் அடுக்கத்து
அணங்கு உடை யாளி தாக்கலின் பலவுடன்
கணஞ்சால் வேழம் கதழ்வு உற்றாங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை
விசயம் அடூஉம் புகைசூழ் ஆலை தொறும்
கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின்”
                                                    - (பெரும்பாண்: 257 - 262)
என பெரும்பாணாற்றுப்படை சொல்கிறது. கரும்புச்சாற்றை நானிலமக்களும் விரும்பிக் குடித்தனர்.

கோடை காலத்தில் நெய்தல் நில மகளிர் என்ன செய்தார்கள் என்பதை மாங்குடி மருதனார் படம் பிடித்து புறநானூற்றில் காட்டியுள்ளார். வண்டு மொய்க்க விரிந்த மலர்கள் மணம் வீசும் கடற்சோலை உடைய நெய்தல் நிலம். கடல்முள்ளிப் பூவால் கட்டப்பட்ட மாலையும் வளையலும் அணிந்த மகளிர் பெரிய பனையின் நுங்கின் நீரும், கரும்பின் இனிய சாறும், தென்னையின் [தாழை] சுவையான இளநீருடன் சேர்த்துக் கலந்த அந்த முந்நீரை உண்டு, கடலினுள் நின்ற புன்னைமரத்தில் ஏறி கடலில் [முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் மூன்றும் சேர்ந்த கடல் நீர்] பாய்ந்து நீந்தி விளையாடினர். 

“வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குவவுத் தாழைத்
தீ நீரொடு உடன் விராஅய்
முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயுந்து”
                                                 - (புறம்: 24: 10 - 16)
சங்ககாலப் பெண்கள் மரத்தில் ஏறி கிளையிலிருந்து பாய்ந்து நீந்தி விளையாடியதை பல சங்க இலக்கியப் பாடல்கள் பதிவுசெய்து வைத்திருக்கின்றன. பெண்கள் நீந்தினாலே கற்பு கரைந்து போய்விடும் என நினைப்போர் இக்காலத்திலும் வாழ்கின்றனர். அத்தகையோர் சங்ககாலப் பெண்களைப் பற்றி என்ன நினைப்பரோ!
முந்நீர்

சங்ககால மகளிர் கோடை வெயிற் தாகத்தைத் தீர்க்கக் குடித்த முந்நீரை நான் சுவைத்துக் குடித்திருக்கிறேன். உங்களுக்காக….

சங்ககால மகளிர் குடித்த முந்நீர்

தேவையான பொருட்கள்:
நுங்கு  -  1
இளநீர்  -  1
கரும்புச்சாறு  -  ½ கப்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்துள் வெட்டிய நுங்கின் நீரை விடவும்.
2. நுங்கின் கண்களின் மேலுள்ள தோலை அகற்றி சிறு துண்டுகளாக வெட்டி நுங்கின் நீருடன் சேர்க்கவும்.
3. அதனுடன் வெட்டிய இளநீரையும் விட்டு அதன் வழுக்கலையும் வெட்டிப் போடவும். [வழுக்கல் இருந்தால்]
4. இக்கலவைக்குள் கரும்புச்சாற்றையும் விட்டு நன்கு கலந்து கொள்க.
5. முந்நீரைக் குவளைகளில் விட்டுப்பரிமாறவும்.

குறிப்பு:
இளநீரின் சுவைக்கு எற்ப கரும்புச்சாற்றை கூட்டிக் குறைத்துக் கலந்து கொள்ளலாம். முந்நீர் குளிர்மையாக இருக்கும். ஆதலால் ஐஸ்கட்டி சேர்க்கத் தேவையில்லை.
இனிதே, 
தமிழரசி.