Thursday 30 August 2012

தாயே மீனாட்சி!


தாயே மீனாட்சி! தரணியெங்கும் பாழாச்சி!
மாயே நீயானால் மாற்றிடுவாய் எமதாட்சி!
பாயே படுக்காத பாவியார் உளராச்சி!
நோயே இலாது நோன்பிருப்பார் யாராச்சி!
வாயே திறந்து வரம்தரவே வாஆச்சி!
காயே ஆனாலும் கனியாய் தாஆச்சி!
தீயே நீயானால் தீண்டுவார் யாராச்சி! 
நீயே ஆதாரம் நிம்மதியை தாஆச்சி!
இனிதே,
தமிழரசி.

Wednesday 29 August 2012

உள்ளம் உருக உணர்மின்கள்! - 2



தேவாரம் பாடிய மூவரிலே சுந்தரமூர்த்தி நாயனார் இளவரசனாக வளர்ந்தவர். அதனால் இன்ப வாழ்க்கை வாழ்ந்தவர். தனது இன்பவாழ்க்கைக்குத் தேவையானவற்றை இறைவனிடம் கேட்டுப் பெற்றார் என்பதை அவர் பாடிய தேவாரப் பதிகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. 

சுந்தரமூர்த்திநாயனார் கணிகையர் குலத்தைச் சேர்ந்த பரவையாரை திருமணம் செய்து திருவாரூரில் வாழ்ந்து வந்தார். மழை இன்மையால் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வழமை போல சுந்தரரும் உணவுக்கு வழி செய்யும்படி இறைவனிடம் கேட்டார். கேட்டதும் கொடுத்தால் யார் கடவுளை நினைப்பார்? எனவே இறைவனும் சுந்தரரிடம் அன்புடையவராய் இருந்த குண்டையூர்க் கிழார் என்பவர் வீட்டில் நெல்லை மலையாக குவித்தார். குண்டையூர்க்கிழாரும் அந்த நெல் மலையை வந்து எடுத்திப்போகும் படி சுந்தரருக்கு செய்தி அனுப்பினார். 

அந்த நெல்மலையை சுந்தரரால் தனியே எடுத்துச்செல்ல முடியுமா? எனவே திருவாரூரில் இருந்து குண்டையூர் செல்லும் வழியில் திருகோளிலி என்னும் கோயிலுக்கு சென்றார். அந்த திருக்கோளிலி இறைவனிடம் ‘கோளிலியில் குடியிருக்கும் பெருமானே! அடியவனாகிய நான் மிகவும் நீளாமாக நினைந்து உன்னை ஒவ்வொரு நாளும் வணங்குவேன். வாள் போன்ற கண்ணை உடையவளான பரவையார் பசித்துன்பத்தில் வாடாதிருக்க குண்டையூரில் கொஞ்சம் நெல்லைப் பெற்றேன். கொண்டு வர ஆளில்லை. அவற்றைக் கொண்டுவந்து சேர்க்க எவருக்காவது கட்டளை இடு’ என்கிறார். இதனையே ‘நீள நினைந்தடியேன்‘ தேவாரம் சொல்கிறது. தேவாரத்தைப் பாருங்கள்

“நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே!”          
                                                - (பன்னிரு.முறை: 7: 20: 1)

நாம் விரும்பும் பெண்ணுக்காக நாமும் குண்டையூரில் நெல்லுப் பெற்று, அவற்றை எடுத்துவர ஆள் இல்லாது இத்தேவாரத்தைப் பாடினால் இறைவனும் ஆட்களை அனுப்பி வைப்பார். நாமோ எதுவித குறிக்கோளும் இன்றி இத்தேவாரத்தை பாடுகிறோம். இதனால் நாம் அடையும் பயன் என்ன? நாம் பாடும் தேவாரத்தின் கருத்து அறிந்து பாடினால் நன்றல்லவா?

இத்திருக்கோயில் தேவாராரம் பாடிய மூவராலும் பாடப்பெற்ற சிறப்புடையது. இக்கோயிலில் சம்பந்தர் ஒரு பதிகமும், அப்பர் இரண்டு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடி இருக்கின்றனர். சுந்தரர் பாடிய பதிகத்தில் கடைசித் தேவாரம் தவிர்ந்த மற்றைய தேவாரம் யாவும் நெல்லைக் கொண்டு வந்து சேர்க்க கட்டளை இடு எனக் கேட்பதாகவே இருக்கின்றன. 

எனவே திருக்கோளிலிப் பெருமானைப் பாடிய சம்பந்தரின்
“நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் அடல்நெஞ்சே அரன்நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்கும் அவன் கோளிலி எம்பெருமானே”              
                                                - (பன்னிரு.முறை: 1: 62: 1)
என உள்ளம் உருக இந்தத் தேவாரத்தையோ அன்றேல் அப்பரின்

முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை
இன்னம் நான் உன் சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி
மன்னனே அடியேனை மறவலே!”                        
                                                 - (பன்னிரு.முறை: 5: 57: 1)
என்ற தேவாரத்தையோ அல்லது

“மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து கடை முடியா முனம்
கோல வார் பொழில் கோளிலி மேவிய
நீலகண்டனை நின்று நினைமினே!”             
                                                 - (பன்னிரு.முறை: 5: 56: 8)
எனும் தேவாரத்தையோ நாம் பாடலாமே!

ஒருவர் எம்மிடத்து எப்படி அன்புடையராக இருக்கிறார் என்பதை நாம் உணரலாமே அல்லாமல் காட்டமுடியாது. அதுபோல் இறையருள் என்பது ஓர் உணர்வு. அதனை எமது நினைவில் நிள நினைந்து நினைந்து சுவைக்கமுடியும். அந்த நினைவின் சுவையை நாம் பக்தி என்கின்றோம். அதுவே பக்திச்சுவை. 

நினைந்து நினைந்து உணர்ந்து
          நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழுங்கண்
          நீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே
          நன் நிதியே ஞான
நடத்தரசே என் உரிமை
          நாயகனே என்று .....”
இறவனை உள்ளம் உருக உணர்மின்கள்.

திருக்கோளிலி கோயிலை திருக்குவளை என்றும் அழைப்பர். இக்கோயில் சுந்தரர் வாழ்ந்த இடமான திருவாரூரில் இருந்து 20 கிலோ மீற்றர் தூரத்திலும் அவர் நெல் பெற்ற குண்டையூரில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்திலும் இருக்கிறது. இங்கு இருக்கும் சிவலிங்கம் வெண்மணலால் ஆனது.
இனிதே,
தமிழரசி.

Tuesday 28 August 2012

காவியமே! நீ உறங்கு!


ஈழத்து நாட்டுப்பாடல்களில் ஒன்றான தாலாட்டு பாடல்கள் தாய்மாரின் அறிவையுயும், கற்பனையையும், நாட்டின் நிலைமையையும் பொறுத்து பாடப்பட்டு வந்தன. அப்படிப் பாடப்பட்ட தாலாட்டுப் பாடல்கள் அந்தந்தக் கால ஈழத்தமிழரின் நாட்டு நிலைமையை பண்பாட்டை எடுத்துச் சொல்கின்றன. இந்த நாட்டுப்பாடல் 1940ல் பூநகரியில் பாடப்பட்டு வந்த தாலாட்டுப்பாடலாகும். 

இந்தத் தாலாட்டுப்பாடல் தைப்பூச நாளில் குழந்தையைத் தொட்டிலில் முதன்முதல் வளர்த்துவதையும், குழந்தை பிறந்ததை எல்லோர்க்கும் சொல்வதையும், மாமன் மகனை திருமணம் செய்வதையும், பிறந்த குழந்தைக்கு மாமன் அல்லது மைத்துனன்  சித்திரை மாதத்தில் சீர் கொடுப்பதையும் ஈழத்தமிழர் குறிப்பாக பூநகரியைச் சேர்ந்த தீவுப்பகுதி மக்கள் தமது பண்பாடாகக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது.  

ஆரிராரோ! ஆராரோ!
ஆரிராரோ! ஆராரோ!
கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
கண்மணியே! கண்ணுறங்கு! 
காவியமே! நீ உறங்கு!
தைமாதம் பொறந்தவளே!
தங்கவள போட்டுவச்சோம்!
                                       - கண்மணியே! 
மைபூசு கண்ணாளே!
மாவிளக்கே! கண்ணுறங்கு!
தைப்பூசம் வந்தாக்கா
தொட்டிலிடக் காத்திருக்கோம்
வையத்திலுள்ளார்க்கு உம்
வரவு சொல்லிவச்சோம்
வையத்தின் இரத்தினமே!
வடிவழகே! கண்ணுறங்கு!
                                      - கண்மணியே! 
மைத்துனன் மாமன் பையன்
மணமுடிக்க காதிருக்கார்
சித்திரை வந்தாக்கா
சீரோடுதான் வருவார்
நித்திரையில்லாம நீர்
நித்தமும் அழலாமோ!
சிந்தூரப் பசும்பொன்னே!
செம்பகமே! கண்ணுறங்கு!
                                       - கண்மணியே!
                                                  -  நாட்டுப்பாடல் (பூநகரி)
                                   - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

ஈழத்தில் இந்திய அமைதிப்படை இருந்த காலகட்டத்தின் நிலையை எடுத்துச் சொல்லும் இன்றைய தலாட்டுப் பாடல் ஒன்றையும் பார்ப்போம்.

கண்மணியே! கண்ணுறங்கு!
காவியமே! நீ உறங்கு!
பொன்முடிசூடிய பூச்சரமே! - என்றன்
பூங்குயிலே! இன்று கண்ணுறங்கு!
                                             - கண்ணுறங்கு!
நாய்கள் குரைகுது இராவினிலே - இந்தி
இராணுவம் போகுது வீதியிலே
வாய்கள் திறக்கவும் கூடாதாம் - எங்கள் 
வாசலில் தென்றலும் வீசாதாம்
தீயினில் தாயகம் வேகுதுபார் - எட்டு
திக்கிலும் போர்குரல் கேட்குதுபார்
பாய்ந்திடும் வேங்கைகள் வீரத்தையே - நான்
பாலுடன் ஊட்டுவன் வாயினிலே
                                                 - கண்மணியே!
செல் வந்த வேளையில் நீ பிறந்தாய் - இன்று
செல் வந்து உன்னப்பன் போய் முடிந்தான்
வல்லவர் யாவரும் காட்டினிலே - கொடும்
வானரக் கூட்டங்கள் நாட்டினிலே
அப்பன் தமிழ்க்கவி வாணனடா - உன்
அண்ணன் ஒரு புலி வீரனெடா
இப்போது மட்டுமே தூங்கிவிடு! - தமிழ்
ஈழத்துக்காகவே வாழ்ந்து விடு!                              
                                                 - கண்மணியே!
இனிதே,
தமிழரசி.

Monday 27 August 2012

குறள் அமுது - (42)


குறள்:
மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வார்க்கு இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை”                               - 244

பொருள்:
இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களையும் பேணிப்பாதுகாக்கும் கருணை உள்ளம் கொண்டோர்க்கு தன் உயிரைப்பற்றிய கவலை இருப்பதில்லை.

விளக்கம்:
இத்திருக்குறள்  ‘அருள் உடைமை’ என்னும் அதிகாரத்தில் உள்ளது. எல்லா உயிர்கள் இடத்திலும் கருணை காட்டும் தன்மையே அருளுடைமையாகும். கருணை உள்ளம் கொண்ட அருளாளர்கள் தமது உயிரைக் காத்துக்கொள்ள அஞ்சி ஓடி பதுங்கிக் கொள்ளமாட்டார்கள் என்பதை இக்குறளில் திருவள்ளுவர் சொல்கிறார். நாம் செய்த வினை என்று சொல்லும் போது அது நாம் செய்த செயலைக் குறிக்கிறதல்லவா? எனவே வினை என்பது செயலாகும். ‘இல் என்ப தன்னுயிர் அஞ்சும் வினை’ என்னும் பொழுது உயிருக்காகப் பயந்து நடுங்கும் தன்மை - உயிரைப் பற்றிய கவலை இருப்பதில்லை.  

அன்புள்ள நெஞ்சிலே இரக்கம் பிறக்கும். எவரது நெஞ்சில் இரக்கம் இருக்கின்றதோ அவரது நெஞ்சில் அருள் சுரக்கும். அன்பே அருளுக்கு ஆணிவேர். அருள் சுரக்கும் நெஞ்சம் உள்ளோரே அருளாளர் ஆவர். அன்பு ஒரு பசுவைப் போன்றது.  அன்பெனும் பசு அருளெனும் பாலை மனித மனத்திலே சொரியும். அருளாகிய பாலைச் சொரிந்து உலக உயிர்களைப் பாதுகாப்போரே அருளாளர்கள். 

அருள் ஆள்வார் நெஞ்சம் தன்னைப்போல், தன் இனமும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என எண்ணும். அத்தகையோர் தன்னலம் அற்று பொதுநலம் பேணுவர். பிறரின் துன்பத்தை தன் துன்பமாகக் கருதுவர். அதனால் பிறர்படும் துன்பத்தை தாமே மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வர். அது அவர்களுக்குத் துன்பமாகத் தெரிவதில்லை. அத்துன்பத்தை தாம் தாங்குவதால் மற்றையோர் இன்பமாக வாழ்வார்கள் என்று எண்ணி மிக்க மகிழ்வோடு அதனைத் தாங்குவர். அவர்களுக்கு பிறரது துன்பம் மிகப் பெரிதாகத் தெரிவதால் தம் உயிரைப்பற்றிய கவலையோ, ‘அஞ்சினர்க்கு சதமரணம்’ எனும் நிலையோ வருவதில்லை. முதியவராக இருந்தாலும் இளைஞராக இருந்தாலும் தம் வயதுக்கேற்ற ஆசைகளை, இன்பங்களை மறந்து, மற்றவர்களின் நல்வாழ்வுக்காக தம்முயிரையும் கொடுப்பர். 

தாம் பிறந்த தமிழினத்தை தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழவைக்க வேண்டும் என்ற அருள் நோக்கில், தம் இன்னுயிர் பற்றிய கவலை சிறுதுமின்றி தம்முயிரை தற்கொடை கொடுத்த நம் ஈழத்து அருளார்கட்கு தமது உயிருக்காக பயந்து சாகும் நிலை அஞ்சும் வினை இருக்கவில்லை. தாம் வாழாது தமிழும், தம் இனமும் வாழ தம்முயிர் ஈந்த செம்மல்களை திருவள்ளுவரும் 'மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வார்' எனப் புகழ்ந்து போற்றியுள்ளார்.

Tuesday 21 August 2012

சீ தனம்

சீரோடு வாழ்கவென பெண்ணுக்கு

          சீர்தனம் கொடுத்தார் அன்றைய தமிழர்
சீதனம் தாவெனக்கேட்டு பெண்ணை
          சீரழிக்கின்றார் இன்றைய தமிழர்
சீ தனம் என்ன ஆண்மையை வாங்கிட 
          செலவிடும் முதல் அதுவோ!
சீர்தனம் அன்று, இன்று சீ தனம் ஆனதினால்
          சீரழிகின்றதோ பெண்மையும் நன்கு.
                                          - சிட்டு எழுதும் சீட்டு 39

Sunday 19 August 2012

இயற்கை அழகு

ஒன்றை நாம் அழகு என்று கூறும் போது அப்பொருள் பற்றிய உயர்ந்த கருத்தை மற்றவர்க்கு நாம் எடுத்துச் சொல்கிறோம். அழகு என்றால் என்ன? அதன் வரையறை என்ன? எம் கண்ணினுள் கரைந்து எண்ணத்திரையில் விரியும் கவர்ச்சியா அது? எந்த அளவுகோலை வைத்து அழகை அளப்பது? மிக்க கூர்மையான அறிவுள்ளவர்களிடம் கண்ணைத்தவிர வேறு அளவுகோல் இருப்பதில்லை என்பதை திருவள்ளுவர்
“நுண்ணியம் எப்பார் அள்க்கும்கோல் காணும்கால்
கண்அல்லது இல்லை பிற”
எனக் கூறியுள்ளார்.  

அழகு பார்ப்பவர் மனதைக் கவர்ந்து ஒருவரை மகிழ்ச்சி அடையச் செய்கிறது. ஒருவரது கண்ணுக்கு அழகாகத் தெரிந்தது மற்றவர் கண்ணுக்கு அழகற்றதாகத் தோன்றக்கூடும். எனவே உலகில் உள்ள எவருமே அழகிற்கு வரைவிலக்கணம் கூறிவிடமுடியாது. ஒருவரைப் பார்த்து அழகானவர் என்று சொல்லும் போது அவர் ஆரோக்கியமானவர் என்பதையும் சுட்டாமல் சுட்டுகின்றோம். உண்மையில் மனிதரின் வெளியழகு வேறாகவும் உள்ளழகு (மன அழகு) வேறாகவும் பார்க்கப்படுகின்றது. இவ்விரு அழகும் ஒன்று சேர்ந்து இருப்பது மிகமிக அபூர்வம்.

உலகின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் பேரழகுடையவர்களாக இருக்கவில்லை. எனினும் அவர்களிடம் பெண்மை கலந்த மென்மை இழையோடுவதைக் காணலாம். அவர்களிடம் இருந்த அகஅழகே அவர்களின் தனித்தத்துவத்தை மற்றவர்க்கு எடுத்துக்காட்டியது. அதுவே உலகை அவர்களின் பின் செல்லவைத்தது. இதனால் அழகின் உண்மைத் தன்மை எது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். மனித அழகிற்கும் உடலில் உள்ள உறுப்புகளுக்கும் என்ன தொடர்பு? ஒரு சிற்பி வடிக்கும் சிற்பத்தின் ஒவ்வொரு உறுப்பும் கணிதமுறைப்படி நேர்த்தியாகவும் கண்ணிற்கு விருந்தாகவும் இருந்தால் அதனை மிக அழகான சிற்பம் என்கிறோம். அதுபோல் மனிதரின் ஒவ்வொரு உறுப்புகளின் தனிப்பட்ட அழகுகள் யாவும் ஒன்று சேர்ந்தே உடலின் முழு அழகையும் உருவாக்கின்றது.

எனவே எமது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். எமது உடலை அழகு படுத்துவதற்கு முன் ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. ‘அழகில் இயற்கை அழகே, செயற்கை அழகைவிட நிரந்தரமானது’. இது மனித அழகிற்கு மட்டுமல்ல உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் பொருந்தும். உங்களிடம் இருக்கும் அழகிற்கு அழகுசெய்ய, அழகைப்பற்றிய அடிப்படை அறிவு சிறிது இருந்தால் போதும் உங்கள் இயற்கை அழகை நீங்களே மெருகூட்டிக் கொள்ளலாம். முதலில் உங்கள் அழகை நீங்களே எடைபோடப் பழகுங்கள்.

நீங்கள் அமைதியாக வேலையற்று இருக்கும் நேரங்களில் உங்களை நீங்களே அலங்கரித்துப் பாருங்கள். உடை என்றாலும் சரி, ஒப்பனை என்றாலும் சரி எப்படி அலங்கரிக்கும் போது நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் எனக் கருதுகிறீர்களோ அதைப் படம் பிடித்துக் கொள்ளுங்கள். இப்படி வெவ்வேறு விதமாக அலங்கரித்து எடுத்த படங்களை வைத்து எதில் நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்பதை நீங்களே தெரிவு செய்து கொள்ளுங்கள். 

உங்களை அலங்கரிப்பதற்கும் உடை உடுப்பதற்கும் இருபது நிமிடம் போதும். அதற்கு மேல் செலவு செய்ய வேண்டாம். முதன்முதல் அலங்காரம் செய்பவர் என்றால் அரைமணி நேரம் போதும். உங்கள் அலங்காரத்தை நீங்களே செய்வதால் அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு மனநிறைவையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்கிறது. உங்கள் அழகைப் பேண உங்களுக்கென்ற ஒரு தனித்துவத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். மற்றவரைப் பார்த்து அவர்போல் ஒப்பனை செய்ய வேண்டுமென முயற்சி செய்யாதீர்கள்.

ஒவ்வொரு மனிதரினதும் தோலின் தன்மை, தலைமுடியின் தன்மை, முகவடிவம், கண்ணின் வடிவம், உடல் வடிவம், உயரம், எடை என்பவற்றைப் பொருத்தே அலங்காரங்கள் அமையவேண்டும். நம்மில் பலர் இதைப்புரிந்து கொள்வதில்லை. இவை யாவற்றிற்கும் மேலாக பெண்ணின் அழகிற்கு அழகு சேர்ப்பது நளினம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Friday 17 August 2012

அடிசில் 33


வறுத்த பூசணிவிதைகள்
                                                       - நீரா -




















தேவையான பொருட்கள்:
பூசணிவிதைகள்  -  2 கப்
நல்லெண்ணெய்  -  2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்  -  1 தேக்கரண்டி
உப்பு  -  1 சிட்டிகை

செய்முறை:
1.  பூசணிக்காயில் இருந்து விதைகளை நீக்கி கழுவிக்கொள்க.
2.  அவற்றை ஈரம் இல்லாது நன்கு காயவைத்து வைத்துக்கொள்ளவும்.
3.  நல்லெண்ணெய், மிளகாய்தூள், உப்பு மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்க.
4.  இதனுள் பூசணிவிதைகளை இட்டு எல்லா விதைகளிலும் கலவை படும்படி பிசிரிக் கொள்க.
5.  அதனை ஒவனில் சூடாக்கக் கூடிய பாத்திரத்தில் பரவிப் போட்டு, 140°C ல் சூடாகிய ஒவனில் 12 நிமிட நேரம் வைத்து எடுக்கவும்.
6.  மொறு மொறெனச் சாப்பிட விரும்புவோர் பூசணிவிதைகள் வெடிக்கத் தொடங்கும் போது எடுக்கவும்.  

Thursday 16 August 2012

உண்மை

நிந்தனை பெரிதென்றாகில்
          நினைவிழந்து போவது உண்மை
வந்தனை பெரிதன்றாகில்
          வாய்மை வளர்வது உண்மை
சிந்தனை பெரிதென்றாகில்
          சிவமதில் கலப்பது உண்மை
கந்தனைக் காண்பது உண்மை
          கருணையில் திளைப்பது உண்மை
இனிதே,
தமிழரசி.

Wednesday 15 August 2012

பக்திச்சிமிழ் - 34


உள்ளம் உருக உணர்மின்கள்! -1
- சாலினி -
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்ற தேவாரங்களில் அழிந்தவை போக, எண்ணாயிரத்திற்கு மேற்பட்ட தேவாரங்கள் இன்றும் இருக்கின்றன. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய நாமோ ஐம்பது தேவாரங்களுக்கு குறைந்த தேவாரங்களையே சமயச் சடங்குகளிலும் கோயில்களிலும் மீண்டும் மீண்டும் பாடி வருகின்றோம். உதாரணமாக எல்லோராலும் மிக விரும்பிப் பாடப்படும் தேவாரங்களாக ‘தோடுடைய செவியன்,’ கூற்றாயினவாறு,’ பித்தாபிறைசூடி,’ ‘மந்திரமாவது நீறு,’ ‘மங்கையற்கரசி’  ‘நீளநினைந்தடியேன்’ ‘பிடியதன் உரு உமைகொள; போன்ற பலவற்றைச் சொல்லலாம். இவற்றுள் தோடுடைய செவியன், கூற்றாயினவாறு, பித்தாபிறைசூடி மூன்றும் தேவார மும்மூர்த்திகளால் முதன்முதல் பாடப்பட்டவை ஆதலால் பாடுகிறோம். 

மங்கையற்கரசி, நீளநினைந்தடியேன் போன்ற தேவாரங்களை ஏன் பாடுகிறோம்? அவற்றை புரிந்து பாடுகிறோமா? என்ற கேள்வி யாருக்கும் எழுவதில்லையா? இந்த இரண்டு தேவாரத்தையும் சற்றுப்பார்ப்போம். 

பாண்டியப் பேரரசனான நின்றசீர்நெடுமாறனுக்கு இருந்த வெப்புநோயை நீக்க பாண்டியனின் மனைவி மங்கையற்கரசியாரின் அழைப்பிற்கு இணங்க திருஞானசம்பந்தர் மதுரை வந்தார்.  அப்போது திருஞானசம்பந்தர் தன்னுடன் வந்த சிவனடியார்கள் சோழநாட்டில் இருந்து வந்ததால் அவர்களுக்கு; மங்கையற்கரசியார் யார் என்பதையும், பாண்டியனின் மந்திரியாகிய குலச்சிறையார் எப்படிப்பட்டவர் என்பதையும், அந்தக்கோயில் எது என்பதையும், அங்கு எழுந்தருளி இருக்கும் இறைவனின் பெருமை பற்றியும் எடுத்துச் சொல்கிறார். அப்படி அவர் எடுத்துச் சொன்ன திருவாலவாய்ப்பதிகத்தின் ஐந்து தேவரத்தில் அரசியாரையும், ஐந்து தேவாரத்தில் மந்திரியாரையும் குறிப்பிடுகிறார். கடைசித்  தேவாரத்தில் இருவர் பெயரையும் கூறுகிறார். அப்பதிகத்தின் முதலாவது தேவாரமே ‘மங்கையற்கரசி’ எனத்தொடங்கும் தேவாரமாகும். 

அத்தேவாரம் “மங்கையற்கரசி சோழனின் மகள். கையில் வளையல் அணிந்தவர். மானமுடையவர். தாமரை மலர் போன்றவர், பாண்டியனின் பட்டத்தரசி. அவர் நாள்தோறும் வணங்க, எரியும் தீயின் உருவம் உள்ளவன். பூதங்களின் தலைவன். வேதங்களையும் அவற்றின் கருத்தையும் கூறி, அங்கயற்கண்ணியோடு (உமையம்மையோடு) அமர்ந்திருக்கும் திருவாலவாய் இதுதான்”  என்று திருஞானசம்பந்தர் தன்னுடன் வந்த சிவனடியார்களுக்கு சொன்னதையே சொல்கிறது. தேவாரத்தைப் படித்துப் பாருங்கள்.

மங்கையற்கரசி வளவர்கோன் பாவை
          வரிவளைக் கைமடமானி
பங்கயற்செல்வி பாண்டிமாதேவி
         பணிசெய்து நாள்தொரும்பரவ 
பொங்கழல் உருவன் பூதநாயகன்  
         வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் 
         அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே”
நாம் ஏன் இத்தேவாரத்தை எமது வீடுகளிலும், கோயில்களிலும், எமது சமயச் சடங்குகளிலும் விழாக்களிலும் பாடுகிறோம்? நாம் பாடுமிடம் எல்லாம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலா?

சுந்தரமூர்த்தி நாயனாரின் ‘ நீள நினைந்தடியேன்’ தேவாரத்தை தொடர்ந்து காண்போம்.

Tuesday 14 August 2012

இராவணன் என்றாச்சி


ஈழத்தமிழர் தமது குழந்தைகளுக்கு நாட்டுப்பாடல்கள் வாயிலாக தமிழ்ச்சொற்களின் அறிவைப் பெருக்கியது போல கணித அறிவைப் பெருக்கவும் நாட்டுப்பாடல்களைப் பாடியுள்ளனர். எல்லாளன் ஆண்ட திருநாடான அநுராதபுரத்தில் 1950 களின் தொடக்கத்தில் ‘விளாங்குளம்’ என்ற பெயருடன் ஒரு தமிழ் ஊர் இருந்தது. அது 58ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின்  பின்னர் ‘விலாங்குளம’ என்ற சிங்களப் பெயருடன் இருக்கிறது. அந்நாளில் அங்கு  வாழ்ந்த  தமிழர் தமது குழந்தைகளுக்கு  எண்களைக் கற்பிக்கச் சொல்லிக்கொடுத்த நாட்டுப்பாடல் இது. 

இரட்டைவால் குருவியின் இரண்டு வால்களைக் காட்டி ஒன்று இரண்டு என எண்ணிக் காட்டியும், ஒன்று, இரண்டு மூன்று என எண்ண முக்காலியின் கல்களை எண்ணிக் காட்டியும், நான்கை எண்ண குதிரையின் நான்கு கால்களை எண்ணிக் காட்டியும், ஐந்தை எண்ணுவதற்கு  குழந்தைகள் கழுத்தில் அணியும் ஐம்படைத் தாலியில் உள்ள ஐந்து ஆயுதங்களை எண்ணிக் காட்டியும், ஆறு எண்ணுவதற்கு முருகனின் ஆறு முகங்களை எண்ணிக் காட்டியும், ஏழு எண்ணுவதற்கு ஏழு கன்னியர் சிலைகளை எண்ணிக் காட்டியும், எட்டை எண்ண எட்டு திசைகளை எண்ணிக்காட்டியும், ஒன்பதை எண்ண ஒன்பது நிற இரத்தினங்களை  எண்ணிக் காட்டியும், பத்தை எண்ண இராவணனின் தலைகளை எண்ணிக்காட்டியும்; ஒன்றோடு மற்ற எண்களை கூட்டும் கணக்கையும் கற்பித்திருக்கிறார்கள் என்பதை இந்த நாட்டுப்பாடல் காட்டுகிறது.

"ஒன்னும் ஒன்னும் இரண்டாச்சி
இரட்டைவால் குருவி என்றாச்சி
ஒன்னும் இரண்ணும் மூனாச்சி
முக்காலிக் கதிரை என்றாச்சி
ஒன்னும் மூனும் நாலாச்சி
நாலுகால் குதிரை என்றாச்சி
ஒன்னும் நாலும் அஞ்சாச்சி
ஐம்படைத் தாலி என்றாச்சி
ஒன்னும் அஞ்சும் ஆறாச்சி
ஆறுமுகப் பெருமான் என்றாச்சி
ஒன்னும் ஆறும் எழாச்சி
ஏழு சிறுக்கியர் என்றாச்சி
ஒன்னும் ஏழும் எட்டாச்சி
எட்டு திக்குகள் என்றாச்சி
ஒன்னும் எட்டும் ஒம்பதாச்சி
ஒம்பது மணிகள் என்றாச்சி
ஒன்னும் ஒம்பதும் பத்தாசி
பத்துத்தலை இராவணனென்றாச்சி
பத்துக்கடுத்தது என்னாச்சி
பதினொன்னு என்று பேராச்சி."
                                          - நாட்டுப்பாடல் (விளாங்குளம் - அநுராதபுரம்)
                                     - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

நாணல் (1965) படத்தில் P சுசிலாவும் T M சௌந்தரராஜனும் பாடிய ‘விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம்’ என்ற கவிஞர் சுரதாவின் பாடல் வரிகளில் பத்துக்கு மேலாடை தெரியாமல் ராகம் பாட, 
“நிறுத்து..  ராகம் பாடாதே பதிலைச் சொல்லு 
பத்துக்கு மேலாடை
தெரியலயா? ம் சொல்லட்டுமா?
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால் பலகதை உருவாகும்...”  
எனப்பாடல் போகும். இப்படலை எழுதிய சுரதாவும் சிறுவயதில் இது போன்ற நாட்டுப் பாடலைப் பாடிப் பழகியிருப்பாரோ?
இனிதே, 
தமிழரசி.