Wednesday 16 November 2016

விழியும் கவிதை சொல்லும்


விண்ணின் துளிகள் வீழும் போது
      விளையும் பயிரும் பசுமை காட்ட
மண்ணின் உயிர்கள் மகிழ்ந்து வாழ
      மனதின் இராகம் இசையை யூட்ட
கண்ணின் விழியும் கவிதை சொல்ல
      காணும் காட்சி கருத்தை மீட்ட
எண்ணின் இன்ப எழிலை இரசித்து
      எளிதில் வடிக்க இயலு மோஒ!
இனிதே,
தமிழரசி                                                   

Tuesday 15 November 2016

குறள் அமுது - (126)


குறள்:
ஒருமையில் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் எமாப்பு உடைத்து                           - 126

பொருள்:
ஆமை தனது ஐந்து உறுப்புக்களையும் தேவை இல்லாத போது அடக்கி வைத்திருப்பது போல தனிமையில் இருக்கும் பொழுது ஐம்புலன்களையும் அடக்கமுடியுமாயின் அது வரும் தீமைகளைக் காக்கும் அரணாக நிற்கும்.

விளக்கம்:
இத்திருக்குறள் அடக்கம் உடைமை என்னும் அதிகாரத்தின் ஆறாவது குறளாகும். அந்நாளைய நம்மவர்கள் பெண் குழந்தைகள் ஓடி விளையாடினால் ‘அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்’ என்று அதட்டுவார்கள். அடக்கம், ஒடுக்கம் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை. அடங்கி இருப்பது மீண்டும் வெளிப்படும். ஒடுக்கம் மீண்டும் வெளிப்படாது அப்படியே ஒடுங்கிப் போய்விடலாம். அடக்கத்தை ஒடுக்கமாகக் கருதுவது தவறாகும்.

இத்திருக்குறளில் திருவள்ளுவர் ஐம்புலன்களின் அடக்கத்தைப் பற்றியே கூறுகிறார். ஐம்புலன்களையும் எப்படி அடக்குவது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆமையைச் சொல்கிறார். ஆமை அலைந்து திரியும்போது அது தன் தலையையும் நான்கு கால்களையும் ஆமையோட்டிற்கு வெளியே வைத்திருக்கும். ஓய்வெடுக்கும் போதும் தற்பாதுகாப்பிற்காகவும் தனது ஐந்து உறுப்புக்களையும் ஆமையோட்டிற்குள் இழுத்து அடக்கி வைத்துக்கொள்ளும். அதுபோல் எமது ஐம்புலன்களையும் தேவையான பொழுது தொழிற்பட வைத்தும் தேவையற்ற போது மனதால் அடக்கி வைக்கவேண்டும்.

எப்போது ஐந்தடக்கல் ஆற்றவேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆசைகளையும் இன்பங்களையும் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களே தூண்டுகின்றன. பலருடன் சேர்ந்து இருப்பதைவிட தனிமையில் இருக்கும்போது ஐம்புலன்களே எம்மை ஆட்சி செய்கின்றன. ஒன்று - ஒருமை. ஒன்று அது தனித்தது. ஒருமையில் அதாவது தனிமையில். அதனாலேயே வள்ளுவர் ஒருமையில் ஐந்தடக்கல் ஆற்றச் சொன்னார். 

எமக்கும் உலகிற்கும் நன்மை பயக்கும் செயல்களைச் செய்யும் போது அதனதன் வழியே ஐம்புலன்களையும் தொழிற்பட விட்டு, தீயவழியில் செல்லாது அடக்குவதே ஐந்தடக்கலாகும். எழுமை என்பதை எழு + மை எனப்பிரிக்கலாம். துன்பங்களை ‘மை’ என்பர். எழுகின்ற துன்பங்கள் எழுமையாகும். ஆதலால் தனிமையில் இருக்கும் போது ஆமையைப் போல் ஐம்புலன்களை அடக்குவதால் அது எமக்கு துன்பங்கள் வராது பாதுகாக்கும் அரணாக நின்றுதவும். 

திருக்குறளுக்கு விளக்கம் எழுதிய நம் முன்னோரில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி, பரிமேலழகர் போன்ற பலரும் ஒருமையில் என்பதை ஒருபிறவியில் என்றும் எழுமையும் என்பதை எழுபிறப்பிலும் என்று ஏனோ கருதினர். அப்படிக் கருதுவது சரியில்லை என எண்ணியே ஒருமையில் என்பதைத் தனிமையில் என்றும் எழுமையும் என்பதை எழும் துன்பம் எனவும் கருத்து எழுதியுள்ளேன். தமிழ் உலகு இக்கருத்தை ஏற்றருளும் என நம்புகிறேன்.

Saturday 12 November 2016

தீருமோ இந்த வசை!


இராமச்சந்திரக் கவிராயர் என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நல்ல கவிஞர். பெரும்பான்மையான தமிழ்க்கவிஞர்களை வறுமை தாலாட்டுவது இயல்பே. அதுபோல இவரையும் வறுமை தாலாட்டியது. அந்த வறுமைத் தாலாட்டிடையேயும் சுவையான நல்ல கவிதைகளை தந்திருக்கிறார். வறுமையின் கொடுமையில் இருந்து விடுபட சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் தில்லை நடராசனை வணங்குவதற்காகச் சென்றார். போகும் வழியில் ஒரு பெரும் பணக்காரனின் மாளிகை அவரின் கண்ணெதிரே தெரிந்தது. அந்தப் பெரிய மாளிகையைக் கண்டதும் அந்த மாளிகையைப் போல அதில் வாழ்பவனின் மனமும் மிகப் பெரிதாக இருக்கும் என்பதைக் கண்டுகொண்டார். 

சிதம்பரத்திற்குப் போவதையும் மறந்தார். தில்லை நடராசனையும் மறந்தார். அந்த மாளிகையை நோக்கி நடந்தார். அந்த மாளிகையின் காவலாளியிடம் ‘தன் வறுமையைப் போக்கச் செல்வந்தனைக் காணவேண்டும், என்றார். அவனும் மகிழ்ச்சியோடு அவரை செல்வந்தனிடம் அழைத்துச் சென்றான்.

இவரைக் கண்ட செல்வந்தன், ‘வாரும்!’ என்று வரவேற்றான். ‘நீ யார்? என்று கேட்டான். அதற்கு இவர் ‘வித்துவான்’ என்று கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டார். இவர் ‘வித்துவான்’ என்று சொன்னதும் ‘வித்துவானிடம் எப்படிக் கதைப்பது? தன் அறிவுக்கு மோசம் வந்துவிட்டது’, என்றெண்ண அவனின் சொற்கள் தடுமாறி உடலும் நடுங்க “நீர் வந்த காரியம் ஏது?” என்று அவரைக் கேட்டான்

அதற்கு அவர்
“சீர் உலாவிய காமதேனுவே தாருவே
          சிந்தா மணிக்கு நிகரே
செப்பு வசனத்து அரிச்சந்திரனே”
என்று அவனைப் புகழ்ந்து பாடினாராம். அதாவது தேவ உலத்தில் இருக்கும் செல்வம் நிறைந்த காமதேனுவைப் போன்றவனே! கற்பகதரு போன்றவனே! மணிகளில் சிறந்த சிந்தாமணிக்கு நிகரானவனே! - சொன்ன சொல் தவறாமைக்கு அரிச்சந்திரன் போன்றவனே! என்று பாடினாராம்.

ஒருவர் காமதேனுவின் அருகில் நின்று தமக்கு விருப்பமானதைக் கேட்டால் அவர் கேட்பதை அது கொடுக்கும். அதே போல கற்பகதருவின் நிழலில் இருந்து கேட்பதை அது கொடுக்கும். ஒருவர் நினைப்பதைக் கொடுப்பது சிந்தாமணி. [ஒருவர் நினைப்பதைக் கொடுப்பது சிந்தாமணி. சிந்தாமணி என்பது எமது சிந்தை மணி - நாம் சரியாகச் சிந்தை செய்தால் அவை எமக்கு கிடைக்கும் என்பதையே சிந்தாமணி நினைப்பதைக் கொடுக்கும் என்பர்]. அரிச்சந்திரன் பொய் பேசாதவன். இப்படியெல்லாம் மிக உயர்வாக முன்பின் அறிமுகம் இல்லாத செல்வந்தனை வியந்து பாடினார். இவரின் புகழ்ச்சியைக் கேட்ட அந்த செல்வந்தர் என்ன செய்தார் என்பதை இராமச்சந்திரக் கவிராயர் ஓடோடிச் சென்று தில்லை நடராசருக்குச் சொன்னதை நாமும் கொஞ்சம் பார்ப்போமா?

“வாரும்! நீர் யார்? என்ன, வித்துவான் என்னவும்
மதிமோசம் வந்தது என்றே
வாய் குழறி மெய் எலாம் நடுக்குற்று நீர்
வந்த காரியம் ஏது? எனச்
சீர் உலாவிய காமதேனுவே தாருவே
சிந்தா மணிக்கு நிகரே
செப்பு வசனத்து அரிச்சந்திரனே எனலும்
சினந்து இரு கண்ணும் சிவந்தே
யாரை நீ மாடு கல் மரம் என்று சொன்னதும்
அலால் அரிச்சந்திரன் என்றே
அடாத சொல் சொன்னையே யார்க்கு அடிமையாகினேன்
ஆர்கையில் பெண்டு விற்றேன்
தீருமோ இந்த வசை! என்று உரைசெய் வெகுகொடிய
தீயரைப் பாடி நொந்தேன்
திருமன்றுள் நடுநின்று நடம் ஒன்று புரிகின்ற
தில்லை வாழ் நடராசனே!

காமதேனுவே! கற்பகதருவே! சிந்தாமணியே! அரிச்சந்திரனே! என்று சொன்னதும் அதைக்கேட்ட செல்வந்தன் கோபம் கொண்டு இரண்டு கண்ணும் சிவக்க ‘யாரைப் பார்த்து நீ மாடு[கமதேனு], கல்[சிந்தாமணி], மரம்[கற்பகதரு] என்று சொன்னது மல்லாமல் அரிச்சந்திரன் என்று சொல்லக்கூடாத சொல்லையும் சொன்னாயே! அரிச்சந்திரனைப்போல நான் யாருக்கு அடிமையானேன்? யாருக்கு மனைவியை விற்றேன்? நீ! இப்படிப்பாடிய இந்த வசை அழியுமோ![தீருமோ!]’ எனச் சொல்லும் மிகக் கொடிய கெட்டவரைப் பாடி நொந்து போனேன். அழகிய மன்றத்தின் நடுவே நின்று நடனம் புரிகின்ற தில்லைவாழ் நடராசனே! என்னைப் பார்!! என்று கதறியுள்ளார்.
இனிதே,
தமிழரசி.

Thursday 10 November 2016

கோயில்கள் எவை? கோட்டங்கள் எவை?

புங்குடுதீவு கண்ணகி அம்மன் திருவிழா
தமிழகத்தைப் பிறப்பிடமாக்கக் கொண்ட பேராசிரியர் கோவிந்தராசனார் நம் ஈழத்திருநாட்டின் இசைப்பேரறிஞரான விபுலானந்த அடிகளிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றவர். அவர் சிலப்பதிகாரத்தின் உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்ட சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கட்டிய பத்தினி கோட்டத்தைத் தேடத்தொடங்கினார். அதன் விளைவாகத் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை மதுரையில் இருந்து சேர நாடு நோக்கி ‘கண்ணகி சென்ற பாதையில்’ தேடி அலைந்து, நடந்து திரிந்து தொலைத்தவர்.

பத்தினி கோட்டக் கல்வெட்டு

கடைசியில் அவர் சேரன் செங்குட்டுவன் கட்டிய பத்தினி கோட்டத்தையும் அங்கிருந்த கல்வெட்டொன்றையும் கண்டுபிடித்தார். அக்கோட்டம் தமிழக கேரள எல்லையில் இருக்கிறது. அது இப்போது மங்கல தேவி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இலங்கையில் கஜபாகு மன்னன் கண்ணகிக்குப் ‘பத்தினி கோட்டம்’ கட்டியதை ‘இராஜவளிய’ சொல்கிறது.

மங்கலமடந்தை கோட்டத்து நுழைவாயில்

சிலப்பதிகாரத்தில் கண்ணகியை ‘மங்கல மடந்தை’ என்று கூறும் இளங்கோஅடிகள் வரந்தரு காதையில் கண்ணகி கோட்டத்தை 
“மங்கல மடந்தைக் கோட்டத் தாங்கண்” - (சிலம்பு: 30: 88)
என மங்கல மடந்தை கோட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மங்கல மடந்தையே பின்னாளில் மங்கல தேவியாக மாற்றமடைந்துள்ளார். மங்கல தேவி கோட்டம் இப்போது கோயில் என அழைக்கப்படுவதற்கு ஊடகங்களும் காரணமாகும். ஊடகங்கள் அக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சித்திரா பௌர்ணமி விழா ‘மங்கல தேவி கோட்டத்தில்’ நடைபெறும் என்று சொன்னால், எழுதினால் மக்களும் அதனைப் பின்பற்றுவர் அல்லவா? நாம் வாழும் வீடுகளை மாளிகை என்று சொல்ல முடியுமா? கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமே! இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழும் எமக்கு கோயில்கள் எவை? கோட்டங்கள் எவை? என்ற வேறுபாடு தெரியாது. அதனாலேயே கோட்டத்தைக் கோயில் என்கிறோம்.

வள்ளுவர் கோட்டம்

கலைஞர் கருணாநிதி 1976ல் கட்டிய வள்ளுவர் கோட்டத்தை கோயில் என்று சொல்கிறோமா? இல்லையே! அப்படியிருக்க கண்ணகி கோட்டத்தை - பத்தினி கோட்டத்தை - மங்கலதேவி கோட்டத்தை ஏன் கோயில் என்று  சொல்ல வேண்டும்? பண்டைத் தமிழர் எம்மைப் போல் இல்லாது ஒவ்வொரு தமிழ்ச்சொல்லையும் தமது தேவைக்கு ஏற்றவாறு காரணத்தோடு நன்கு தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினர். எமது அறியாமையால் நாம் செய்யும் இந்தத் தவறு தமிழ் மொழிச் சொற்களின் ஆழ அகலங்களை சுருங்கச் செய்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘ஐயோ’ [aiyo] என்ற சொல் ஒக்ஸ்போட்[Oxford] ஆங்கில அகராதியில் இடம்பெற்றுவிட்டது என்று துள்ளிக் குதிக்கும் நாம் கோட்டம் என்ற சொல் போல எத்தனையோ அரிய தமிழ்ச் சொற்களை பயன்படுத்தாமலே குழி தோண்டிப் புதைக்கிறோம்.

புராண இதிகாசக் கதைகளில் வரும் எல்லாத் தெய்வங்களுக்குமே கோயில்கள் கட்டி குடமுழுக்குச் செய்கிறோம். அதுவே புலம் பெயர்ந்து வாழும் தமிழராகிய எமது நாகரீகமாக இருக்கிறது. அப்படி இருந்தும் எந்தெந்த தெய்வங்களின் இருப்பிடத்தைக் கோயில் என்று அழைக்க வேண்டும் என்னும் மரபு தெரியாது வாழ்கிறோம். இது கோயில். இது இப்படி இருக்க வேண்டும், அது கோட்டம் அது அப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்ல எமது மடாதிபதிகளுக்கும், சுவாமிமார்களுக்கும், கோயில் அறக்காவளர்களுக்கும், சமய மகாநாடுகள் நாடாத்துவோருக்கும் தெரியாதிருப்பது பெரும் வேடிக்கையாகும்.

நம் பண்டைத்தமிழ் முன்னோர்கள் தாம் வணங்கும் தெய்வங்களை பெருந்தெய்வம், சிறு தெய்வம் எனப் பிரித்து வைத்திருந்தனர். பெருந்தெய்வங்களுக்கு வானுயரக் கோபுரங்கள் அமைத்து கோயில்கள் கட்டிய நம் முன்னோர் சிறு தெய்வங்களுக்கு கோபுரங்கள் கட்டி குடமுழுக்குச் செய்யவில்லை. இக்காலத் தமிழரே அப்படிச் செய்கின்றனர். சிறு தெய்வமான மன்மதனை வணங்கக் கண்ணகி மறுப்பதை சிலப்பதிகாரம் சொல்கிறது. 

புங்குடுதீவு ஶ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் வரலாறு ஒன்றே போதும் பெருந்தெய்வ, சிறுதெய்வ வழிபாட்டை எமக்கு எடுத்துச் சொல்ல. 


புங்குடுதீவில் சிறுதெய்வமான கண்ணகிக்கு கோயில் கட்டிக் குடமுழுக்குச் செய்ய நம்மவர்கள் முற்பட்ட போது, அது தமிழர் வழக்கம் அல்ல என்று அறிஞர் பலரும் சொன்னதற்கு அமைய, ‘ ஶ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்மன்’ கோயிலாகவே கட்டப்பட்டு குடமுழுக்குச் செய்யப்பட்டு ராஜகோபுரத்துடன் நிற்கிறது. புங்குடுதீவுக் கண்ணகி அம்மன் கோயில் என நாம் அழைப்பினும் கருவறையில் ஶ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்மன் சிலையே இருக்கிறது. அங்கு கண்ணகி சிலை இல்லை என்பதே உண்மை. இரண்டாம் மண்டபத்தில் வடக்குப்புறமாக தெற்கே கடலை நோக்கியபடி இருக்கும் சிலையே கண்ணகி சிலை.

அத்துடன் பெருந்தெய்வக் கோயில்களில் இருக்கும் சிறு தெய்வங்களுக்கு ஊஞ்சல் பாடல்களும் பாடுவதில்லை. வித்துவான் சி ஆறுமுகம் [மாமா] அவர்கள் பாடிய ஊஞ்சற்பாட்டில் ‘ராஜராஜேஸ்வரி அம்மே ஆடீர் ஊஞ்சல்’ எனவும் ‘ராஜேஸ்வரி ஆடீர் ஊஞ்சல்’ என்றும் சொல்கிறார். மூன்றாவது பாடலில்
“தென்னவனார் செறுக்கறுத்த செல்வி கற்பின்
         தீரமிகு கண்ணகியெம் தெய்வப்பாவை
முன்னாக அமர்ந்தவளே ஆடீர் ஊஞ்சல்
        மோகினி ராஜேஸ்வரியே ஆடீர் ஊஞ்சல்”
என கண்ணகியையும் ராஜேஸ்வரியையும் பிரித்துக் காட்டுகிறார். அப்படிப்பட்ட புங்குடுதீவில் இப்போது சிறு தெய்வங்கள் யாவுமே ராஜகோபுரத்துடன் எழுந்து கோயில்களாக நிற்கின்றன. கோட்டமும் இல்லாது மரத்தின் கீழ் கல்லாய் நின்றவர் கூட கற்சிலையாய் குடமுழுக்கு செய்யப்பட்டு பாலாபிசேகத்தில் நனைகிறார். ஆனால் பால் கறக்கும் பசுக்கள் குடிக்கும் நீருக்கும் புல்லுக்கும் அலைகின்றன.

பொகுட்டு

சங்க இலக்கியத்தில் சங்ககாலப் புலவர்கள் கோயிலையும் கோட்டத்தையும் மிக அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். உயர்ந்த கோபுரங்களுடன் கட்டும் அரண்மனைகளையும் கோயில் எனச் சங்கத்தமிழர் அழைத்ததை பரிபாடலில் உள்ள பரிபாடல் திரட்டு 
“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்து
அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்”
                                                                - (பரிபாடல் திரட்டு 7: 1 - 4)
எனச் சொல்வதால் அறியலாம். மாயவன் ஆன திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரைப் பூப்போல இருப்பது செல்வம் நிறைந்த மதுரை[சீர் + ஊர் = சீரூர்]. தாமரைப்பூவில் உள்ள இதழ்களைப் போன்றன தெருக்கள்[தெருவம்]. இதழ்களின் இடையே உயர்ந்து பீடம் போல் கொட்டைகளைத் தாங்கி நிற்கும் பொகுட்டு போன்றதே அரசனின்[அண்ணல்] அரண்மனை[கோயில்]. 

கோட்டம் என்றால் மேல்வீடு என்ற கருத்தை தரும். படிகளில் ஏறிச்சென்று மேல்வீட்டில்[கோட்டத்தில்] இருக்கும் தேவர்களை வணங்கினர். பெருந்தெய்வங்கள் கைகளில் தாங்கியிருந்த வாள், வேல் போன்ற ஆயுதங்களை கோட்டங்களில் நிறுத்தி வைத்து வணங்கினர். [வள்ளுவ கோட்டத்தைப் போல்] தமது பொழுது போக்கும் இடங்களையும் கோட்டங்களாகக் கட்டினர். கோட்டங்கள் மிக அழகாக உயரமாகக் கட்டப்பட்டாலும் உயர்ந்த கோபுரங்கள் அற்று இருந்தன. வானத்து நட்சத்திரங்களைப் பார்க்கவும் உயரமாய் கோட்டங்களைக் கட்டியிருந்தனர் என்பதை
“மழை நீங்கிய மா விசும்பில்
மதி சேர்ந்த மக வெண்மீன்
உரு கெழு திறல் உயர் கோட்டத்து”
                                                  - (பட்டினப்பாலை: 34 - 36)
‘மழை முகில் அற்ற வானத்தில் சந்திரனைச் சேர்ந்த மக நட்சத்திரத்தின் [மக வெண்மீன்] ஒளியைப்[உருகெழு திறல்] பார்க்கும் இடமாகிய உயர்ந்த கோட்டம்’ என்று பட்டினப்பாலை சொல்கிகிறது. திருமாலின் அவதாரங்களையும் பால முருகனையும் அவனது வேலையும்  கோட்டத்தில் வைத்து வணங்கியதைக் காணமுடிகிறது.

எந்தெந்த தெய்வங்கள் கோயிலில் இருப்பார்கள், யார் யார் கோட்டங்களில் இருப்பார்கள், கோட்டங்களில் வேறு என்னென்ன இருக்கும் என்பதை மிகவிரிவாக இளங்கோ அடிகள் தந்திருக்கிறார்.

இந்திரவிழவூரெடுத்த காதையில்
“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செய்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்”
                                                              - (சிலம்பு: 5: 169 - 173)
“பிறவா யாக்கைப் பெரியோன்[சிவன்] கோயிலும்
அறுமுகச் செய்வேள்[முருகன்] அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன்[பலராமன்] கோயிலும்
நீல மேனி நெடியோன்[திருமால்] கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன்[இந்திரன்] கோயிலும்”
என்று  பண்டைத்தமிழர் வழிபட்ட கோயில்களைப் பட்டியலிட்டுச் சொல்லும் அவரே கனாத்திறம் உரைத்த காதையில்
“அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக் கோட்டம்"
                                                            - (சிலம்பு: 5:  9 -13)
“அமரர் தருக்[கற்பகதருக்] கோட்டம் வெள்யானைக்[ஐராவதம்] கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தங் [தேவ] கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான் [சூரியன்] கோட்டம் ஊர்க் [ஊராரின்] கோட்டம் வேற் [முருகனின் வேல்] கோட்டம்
வச்சிரக் [இந்திரனின் வச்சிராயுதக்] கோட்டம் புறம்பணையான் [ஐயனார்] வாழ்கோட்டம்
நிக்கந்தக் [அருகன்] கோட்டம் நிலாக் [சந்திரன்] கோட்டம்
எனக் கோட்டங்களையும் சிலப்பதிகாரத்தில் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார். 

பாருங்கள் பனைமரத்தை, வெள்ளையானையை, தேவர்களை, சூரியனை, ஐயனாரை, அருகனை, சந்திரனை எல்லாம் கோட்டங்களில் வைத்தே வணங்கினர். முருகனுக்கு கோயிலும் அவன் கை வேலுக்கு கோட்டமும் கட்டியது போல இந்திரனுக்குக் கோயிலும் இந்திரனின் வச்சிராயுதத்திற்கு கோட்டமும் கட்டியுள்ளனர். அதனாலேயே கதிர்ககாமமும் இன்றும் கோயில் ஆகாமல் இருக்கின்றது. ஊர்க்கோட்டம் என்பது பூஞ்சோலைகளின் இடையே, வாவிகளின் அருகே காற்றை நுகரவும் இயற்கையின் அழகைப் பார்த்து மிகிழவும் கட்டப்பட்ட கோட்டமாகும். நிலாக் கோட்டம் மேலே பட்டினப்பாலை சொல்வது போல நட்சத்திரங்களை பார்த்து மகிழக் கட்டியதாகவும் இருக்கலாம். பெருந்தெய்வங்களை கோயில் கட்டி வணங்கியதோடு சிறு தெய்வங்களை கோட்டங்களில் வைத்து வணங்கினர் என்ற உண்மையை சிலப்பதிகாரம் எமக்கு எடுத்துக்கூறியும் நாம் கண்டுகொள்ளவில்லை. 

எல்லாத் தெய்வங்களுக்கும் கோயில் கட்டுவத்தோடு மட்டுமல்லாமல் உள்வீதி வெளிவீதி எங்கும் ஓரடிக்கு ஒரு தெய்வமாக எல்லாத் தெய்வங்களையும் வைத்து எல்லோருக்கும் பாலும் பழமும் கொட்டி குளிப்பாட்டுவதை விட ஓரிரு கடவுளரை வைத்து மனமுருகி வணங்கினால் என்ன? 

எட்டுமணிப் பூசை என்று முருகன் முன் நின்று கண்மூடி மனம் ஒன்றமுன் குருக்கள் பிள்ளையார் திருமுன் நின்று மணியடிப்பார். அங்கே செல்ல முன் அடுத்த பாலமுருகனிடம் போய்விடுவார். இப்படி ஓடி ஓடி ஆலயத்தை சுற்றி வர வேண்டுமா? ஆன்மா இறைவனோடு ஒன்றும் இடமல்லவா ஆலயம். குருக்கள் மணியடித்தபடி ஓடினால் எங்கே மனம் ஒன்றிக் கடவுளை வணங்க முடியும்? நூற்றுக்கு எத்தனை பேர் குருக்களின் பூசை ஓட்டத்தில் சளைக்காது ஓடி மனம் ஒன்றி சுவாமி கும்பிட்டோம் என்று சொல்வோம்? கும்பிடக்கூடியவர் யாராயினும் மற்றவர்கட்கும் அதனைச் சொல்லித்தரலாமே. நீங்கள் பெறும் இன்பம் நாமும் பெறலாமே!

எனவே இயற்கை கொஞ்சி விளையாடும் அமைதியான இடமாய் காற்று ஓட்டமுள்ளதாகத் தமிழரின் கலையை பண்பாட்டை எடுத்துச்சொல்ல ஒரு கோயில் என்றாலும் ஒரு கோட்டம் என்றாலும் கட்டுங்கள். இப்படிக் கட்டுவோர் யாராயினும் உண்டியலை மட்டும் வைக்காதீர்கள். அங்கே எல்லாக் கடவுளரும் வந்து நடனம் புரிவர்.
இனிதே,
தமிழரசி.

Monday 7 November 2016

கன்னியரின் காதலது காட்ட!


விந்தை மிகு இவ்வுலகில் வேடுவனாய் வந்தாய்
         வேதப்பொருள் உரைத்தஅவள் வள்ளியென நின்றாள்
சிந்தை மிக வந்தருளும் செந்தில் வடிவேலவனுன் 
         செய்யதிருப்பாதம் அதை சிந்தையதில் வைத்தாள்
முந்தை மிகு வினைகளற முன்னைத் தவப்பயனாய்
         முழுமுதலாம் முருகனுன் முகமலரைக் கண்டாள்
கந்தம் மிகு சோலையதில் களவுமணம் புரிந்தாள்
         காதல்மிகு கன்னியரின் காதலது காட்ட! 
இனிதே,
தமிழரசி.

Sunday 6 November 2016

மன ஏக்கந்தனைக் கேளீர்!


ஒற்றைப் பனை முற்றம் அதில்
ஓங்கி வளர்ந்து நின்ற
ஒற்றைப் பனை சொன்ன மன
ஏக்கம் தனைக் கேளீர்!

ஒற்றைப் பனை முற்றம் உம்
ஓடும் களம் ஆகும்
வற்றும் கடல் கண்டும் முகம்
வாடா தெம் இயல்பே!

சுற்றம் சூழ யிருந்து கதை
சொல்லி மகிழ் மாதர்
கற்றைக் குழல் வண்ண நிறம்
காட்டு மெம் வனப்பே!

கற்றபே ரறிஞர் கற்பக மென்ன
காலமெ ல்லாம் உகந்து
சற்றுஞ் செருக் கின்றி பழம்
சொரிந்த தெம் இனமே!

பெற்ற செல்வம் யாவும் நும்
பசியைப் போக்கத் தந்து
இற்றை நாள் வரையும் நிதம்
ஈதலெ மது குணமே!

முற்றத் துறந்த முனி போல்
மூர்க்க குணம் இன்றி
வற்று கடல் அருகே வெட்ட
வெளி இடையே எம்
சுற்றம் சூழ கூடலாய் பசும்
சோலை என நின்ற
உற்ற உறவெ ல்லாஞ் செல்
உண்டு வேக மீதம்
விற்று வந்த காசில் கல்
வீடு கட்டி வாழா
வெற்று மனையாய் விடும்
வேடிக்கை மானுடரே கேளும்!

பற்று இன்றிப் போயினும் எம்
பழமை தன்னை உணர்ந்து
முற்றிப் பழுத்த பழங்கள் உமக்கு
மீண்டும் யாம் தருவோம்!

பெற்ற செல்வம் என்றே எமைப்
பேணி வளர்க்க வேண்டும்!
சற்றுங் குறை யின்றி உம்
சந்ததி வாழ வைப்போம்!

மங்கலம் நிறை புங்கைப் பதி
மக்களே மகிழ்ந்து கேளும்!
உங்கள் உயிர் காக்க எங்கள்
உயிர் தந்த தறியீரோ! 
                                         - சிட்டு எழுதும் சீட்டு 128

Saturday 5 November 2016

குறள் அமுது - (125)

குறள்:
“குற்றம் இலானாய் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாய்ச் சுற்றும் உலகு”                            -1025

பொருள்:
குற்றம் இல்லாதவனாக தான் பிறந்த குடி உயர்வதற்காக வாழ்பவனை உலகம் தன் சுற்றமாகச் சூழ்ந்துகொள்ளும்.

விளக்கம்:
இத்திருக்குறள் குடிசெயல்வகை என்னும் அதிகாரத்தில் ஐந்தாவது குறளாக இருக்கிறது. குடிசெயல்வகை என்றால் தான் பிறந்த குடும்பத்தை - குடியை மேன்மை அடையச் செய்தலாகும். நாம் பிறந்த குடி, நமது சுற்றம் என்று சொல்லும் போது அது ஒரு சிறு வட்ட எல்லைக் கோட்டுக்குள் அடங்கி விடும். அப்படி அடங்கிவிடக்கூடிய எமது செயல்திறனின் தன்மையை உலகெலாம் பரவச்செய்யும் ஆற்றல் எம்மிடமே இருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையே இத்திருக்குறள் எடுத்துச் சொல்கிறது.

குற்றம் என்றால் என்ன? என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. ஒருவருக்குக் குற்றமாகத் தெரிவது இன்னொருவருக்கு குற்றமாகத் தெரிவதில்லை. இதுவே இவ்வுலகம் எமக்குக் கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றாகும். எனினும் நம் முன்னோர்கள் முதன்மைக் குற்றங்களை ஐந்தாகப் பிரித்து வைத்துள்ளனர். 
1. பொய் பேசுதல்
 2. மதுவருந்துதல்
 3. களவெடுத்தல்
 4. பிறரது பெண்களை விரும்புதல்
5. கொலை செய்தல் 
இந்த ஐவகைக் குற்றங்களில் இருந்தே மற்றைய குற்றங்கள் எல்லாம் கிளைவிட்டு வளர்கின்றன. இந்த அடிப்படைக் குற்றங்களுக்குக் காரணமாக இருப்பது நமது மனமே. மன எண்ணங்களே ஆசைகளைத் தூண்டி குற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. களங்கம் இல்லா மனதுடன் வாழ்கின்றவரே குற்றம் இலாதவர் ஆவர்.

இன்னொரு வகையில் சொல்வதானால் உலகம் வெறுக்கும் ஆசைகளைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கக் கூடியோரும் குற்றம் இலாதவராய் வாழ்வர். இப்படி குற்றம் அற்று இருப்பவன் தான் பிறந்த குடியை [தமிழ்க்குடியை] பாடுபட்டு உழைத்து முன்னேற்றுகிறான். தன்னலம் கருதாத அவனது செய்கையைக் கண்டவர்கள் அவனை தன் சொந்த உறவாய்க் கருதத்தொடங்குவர். 
அவன் இப்படிப்பட்டவன் என்ற செய்தி மெல்ல மெல்ல ஊர்விட்டு ஊர்சென்று நாடுவிட்டு நாடு சென்று உலகம் முழுதும் பரவும். 

அதுவும் இன்றைய வலைத்தளங்களின் ஊடாக அடுத்த நொடியிலேயே அச்செய்தி உலகை வலம் வந்துவிடும். உலகமே வியப்புற்று அவனைத் தமது உறவாக எண்ணத் தொடங்கும். எனவே குற்றம் களைந்து வாழ்வதோடு தன் குடியையும் வாழவைத்தால் தன் சுற்றம் தன் குடி என்ற எல்லைக் கோடுகள் தகர்த்தப்பட்டு உலகமே சுற்றமாய்விடும்.

குற்றங்கள் செய்யாத ஒருவன் தான் பிறந்த குடியை முதன்மையடையச் செய்ய முனைவானேயானால் உலகம் அவனை தனது உறவு என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும்.

Thursday 3 November 2016

கண்ணிசூடி



எண்ணெழுத் தென ஏய உரைத்திடும்
கண்ணி ரண்டின் காட்சி ஒன்றாய்
எண்ணி மகிழ் ஏக அம்பரையை
கண்ணி சூடிக் காண்போம் நாமே

றிவே திரு
ற்றலே வலிமை  
ளமையே வைரம்
வதே இன்பம்
ண்மையே சிறப்பு
க்கமே ஆக்கம்
ண்ணமே வாழ்க்கை
ழிசையே தெய்வீகம் 
யே அன்பு
ழுக்கமே நேர்மை
வியமே காவியம்
வியமே அழுக்காறு

கலே வறுமை

லையே பெருமிதம் 
றவியே இனிமை
ரளமே திறமை
யமே உலகம்
லே அழிவு
க்கே ஞாலம்
ண்ணீரே அமிர்தம்
ட்பே பெரும்பரிசு
ணிவே நற்பண்பு
ண்ணே பொன்
ற்கையே அழகு
ங்களே செழிமை
ர்களே மென்மை
ணிகமே தந்திரம் 
ழக்கமே முதன்மை 
மே ஆழம்
கற்லே உறுதி
மே கவிதை

மூன்று வயதுடைய எனது பேரன் ஷீனோமயன் ஆத்திசூடி பாடித் திரிவதைக் கண்டு, கண்ணிசூடி எழுதினேன். தமிழ்கூறும் நல்லுலகு இதனை ஏற்றருளும் என நம்புகிறேன்.
இனிதே,
தமிழரசி.

Wednesday 2 November 2016

அடிசில் 109

கொண்டைக்கடலைக் கூட்டுக் கறி
- நீரா -  

தேவையான பொருட்கள்: 
கொண்டைக்கடலை  - 2 டின்
தக்காளி  - 3
வெட்டிய வெங்காயம்  -  1 மே. கரண்டி
இடித்த இஞ்சி  -  1 தே. கரண்டி
மிளகாய்த்தூள்  -  1 தே. கரண்டி
சீரகத்தூள்  - ½  தே. கரண்டி
மிளகு தூள்  - ½  தே. கரண்டி
தடித்த தேங்காய்ப்பால்  -  1 மே. கரண்டி
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
கடுகு  -  ½ தே. கரண்டி
சீர்கம்  -  ½ தே. கரண்டி
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய்  -  தேவையான அளவு

செய்முறை:
1. கொண்டைக்கடலை டின்னைத் திறந்து அதன் நீரை வடித்து தண்ணீரில் கழுவி  வடித்தெடுக்கவும்.
2. தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்க.
3. வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகைப்போட்டு வெடித்து மணம் வரும் போது சீரகம், கறிவேப்பிலை இட்டு, இஞ்சியையும் வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்க.
4. வெங்காயம் பொன்னிறமாக வரும் பொழுது தக்காளி சேர்த்து வதங்க விடவும்.
5. தக்காளி மசிந்து வரும்பொழுது உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுதூள் சேர்த்து கலந்து வேகவிடவும்.
6. தூள் மணம் போனதும் கொண்டக்கடலையைச் சேர்த்து, தேங்காய்ப்பாலும் தண்ணீரும் விட்டு கலக்கி மெல்லிய நெருப்பில் வேகவைத்து குழப்பு தடித்து வரும் பொழுது இறக்கிக் கொள்க.