Wednesday 30 March 2016

ஷீனோ கட்டும் கோட்டை!


சிற்பி யென இருந்து 
         சின்னக் கரம் தன்னால்
மற்ற எண்ணம் இன்றி
         மயன் அவன் ஆக
சுற்றி ஓடும் வண்டி
         சுழன்று வீசும் தீயை
பற்றி எரியுந் தீயும்
         பகைவர் தமைக் காய்க்க
தொற்றி ஏறும் பகைவர்
         துடித்து வீழ்வர் நிலத்து
கற்ற தெலாம் நினைந்து
         கற்பனை யைக் கலந்து
ஷீனோ கட்டும் கோட்டை
         கொடி பறக்கும் கோட்டை
இனிதே,
தமிழரசி

Tuesday 29 March 2016

அரற்றி மகிழ்வேன்



அழகர்மலைக் கோயிலிலே ஆடி மகிழ்ந்தேன்
            அங்கே கள்ளழகன் காட்சி தர
                        ஆடி வந்தாண்டி

குழகனவன் குறும்பதனை பார்த்து மகிழ்ந்தேன்
            குண கடலும் குட கடலும்
                        குமைய நின்றாண்டி

மழகர்மலை மயிலிறகை சூடி மகிழ்ந்தேன்
            மன மகளாம் எனைக் கண்டு
                        மயங்கிப் போனாண்டி

அழகர்மலை வாயிலிலே கூடி மகிழ்ந்தேன்
            அனு தினமும் அவன் பெயரை
                        அரற்றி மகிழ்வேன்


Monday 28 March 2016

குறள் அமுது - (113)


குறள்: இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
          நோய்நோக்கு ஒன்றுஅந்நோய் மருந்து                  
                                                                                  - 1091

பொருள்: இவளுடைய மைதீட்டிய விழிகளில் இரண்டு வகையான பார்வைகள் உள்ளன. ஒரு பார்வை நோயை உண்டாக்கும். மற்றப் பார்வையோ அந்த நோய்க்கு மருந்தாகும்.

விளக்கம்: இத்திருக்குறள் ‘குறிப்பறிதல்’ என்னும் அதிகாரத்தில் உள்ளது. ஆனால் குறிப்பறிதல் என்ற பெயரில் திருக்குறளில் இரண்டு அதிகாரங்கள்  இருக்கின்றன.  இவ்வதிகாரங்கள்  இரண்டும் ஒரே பெயரைக் கொண்டிருப்பதற்கான காரணத்தை அறிய கீழுள்ள linkஐ அழுத்திப் பார்க்கவும்.

இன்பத்துப்பாலில் உள்ள குறிப்பறிதல் என்னும் அதிகாரத்தில் இருக்கும் முதலாவது திருக்குறள் இது. ஒர் இளம் பெண்ணின் இருவகையான பார்வை பற்றி இக்குறள் சொல்கிறது. காலங்காலமாக இவ்வுலகின் ஒரு தனிப் பொது மொழியாக இருப்பது காதல் மொழியே. அதற்கு இன, மத வேறுபாடு தெரியாது. அந்தக் காதல் மொழிக்கு வரிவடிவம் கொடுத்த பெருமை நயன மொழிக்கே உண்டு. விருப்பு, வெறுப்பு, கருணை, காதல் போன்ற ரசங்களைப் பேசுவது கண்கள் தானே.

இளைஞன் ஒருவன் ஓர் இளமங்கையைக் கண்டான். அதற்கு முன்பும் அவன் பல மங்கையரைக் கண்டிருக்கிறான். அந்த மங்கையர்களில் காணத ஏதோ ஒன்று, அவளிடம் அவனை ஈர்த்தது. மீண்டும் பார்க்கத் தூண்டியது. பார்த்தான். அவளின் மைதீட்டிய விழிகளின் கண்வீச்சில் தான் சிக்குண்டை உணர்ந்தான். அவளது பார்வை என்னைக் கொல்லுதே! என்று சொன்னபடி அவளை திரும்பவும் பார்த்தான். அவளின் பார்வை அவனை மெல்லத் தடவிச் சென்றது. அவனுக்கு அவனது கண்களையே நம்பமுடியவில்லை. 

அந்த மங்கையின் முதல் கண்வீச்சு அவனுள் காதல் கிருமிகளைத் தூவிச்சென்றுவிட்டது. அவன் காதல் நோயால் தவித்தான். தவித்தவன் நினைவில் அவளது இரண்டாவது கண்வீச்சு மெல்லத் தடவிக் கொடுத்தது. அந்தக் கண்வீச்சின் வருடல் குளிர்ச்சியைக் கொடுத்து இதமாய் அவனின் காதல் நோய்க்கு மருந்தானது.

“மைதீட்டிய விழிகளையுடைய இவளிடம் இரண்டு பார்வைகள் உள்ளன. ஒன்று காதல் நோயைத் தரக்கூடியது. மற்றொன்று காதல் எனும் நோய்க்கே மருந்தாகக் கூடியது” எனக் கூறுகிறான்.

Sunday 27 March 2016

அடிசில் 95

பாதாம் அல்வா
- நீரா -
  

தேவையான பொருட்கள்: 
பாதாம் பருப்பு  -  1 கப்
சீனி  -  ½ கப்
பால்  -  ½ கப்
நெய்  -  ½ கப்
குங்குமப்பூ  -  ½ சிட்டிகை
ஏலப்பொடி  -  ½ சிட்டிகை
உப்பு  -  ¼ சிட்டிகை

செய்முறை: 
1. பாதம் பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்கி எடுத்தவும்.
2. தோல் நீக்கிய பாதாம் பருப்புடன் பால் சேர்த்து ரவையைப் போல் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
3. அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைவாசி நெய்விட்டு மிதமான நெருப்பில் சூடாக்கி, அதனுள் அரைத்த பாதாம் விழுதைப் போட்டு கிளரவும்.
4. விழுது இறுகிவரும் போது மீதி சீனியையும் குங்குமப்பூவையும் சேர்த்து கிளரவும். மீண்டும் கலவை இளகி இறுகத்தொடங்கும் போது உப்பையும் ஏலப்பொடியையும் சேர்க்கவும்.
5. நெருப்பைக் குறைத்து, மிகுதி நெய்யையும் சேர்த்து அடிப்பிடியாது தொடர்ந்து கிண்டவும். கலவை கரண்டியோடு திரண்டு வரும் போது இறக்கவும்.

குறிப்பு:
சூடாக உண்டால் சுவையாக இருக்கும்.
பாதாம் பருப்புக்குப் பதிலாக முந்திரிப் பருப்பும் பாவிக்கலாம்.