Tuesday 31 December 2019

வாராய்! புத்தாண்டே! வாராய்!!



கீற்றென மின்னல் மின்னிட
கொட்டியே மேகம் முழங்கிட
ஆற்றினில் அருவி பாய்ந்திட
ஆனந்த வெள்ளம் தவழ்ந்திட
காற்றினில் கீதம் பரவிட
கானகம் மெல்ல விழித்திட
போற்றியே உயிர்கள் களித்திட
பொன்னும் மணியும் பொலிந்திட
நாற்றிசை எங்கும் புகழ்ந்திட
நன்றாய் நம்மவர் வாழ்ந்திட
வெற்றியே என்றும் சூழ்ந்திட
வாராய்! புத்தாண்டே! வாராய்!
இனிதே!
தமிழரசி.

Thursday 12 December 2019

வயலூர் மைந்தாய்!



நைந்துனையே நினைந்தறியா
       நம்பன் அருணகிரிக்கு
பைந்தமிழின் சுவையறிய
       சந்தத்தமி ழருளி
முந்தைவினை போயகல
       முத்தைதரு கொடுத்த
விந்தையென் சொலாய்
        வயலூர் மைந்தாய்!
இனிதே,
தமிழரசி.

Sunday 1 December 2019

வேலொடு வந்தான்




மாவிலைப் பந்தரின் தோரணம் ஆட
மரகத வீணையின் பண்ணொலி கேட்க
ஆலிலைத் துயின்றவன் காவிலை நண்ணி
ஆனந்த வெள்ளத்து அருவியில் மூழ்கி
மூவிலைச் சூல முக்கணன் மகனாம்  
முருகனை எண்ணி முறையினிற் றொழுதும்
கோவிலைக் காணா கருத்தழிந் தழவே
கோவண ஆண்டி வேலொடு வந்தான் 
இனிதே,
தமிழரசி


Saturday 16 November 2019

கறிவேப்பிலையா? வேப்பிலையா?

என்ன இலை? கண்டுபிடி!
பன்னெடுங்காலமாகப் பயன்படும் உண்மையான கறிவேப்பிலை


உலக இயற்கையானது உயிர்கள் யாவும் வாழத்தேவையான உணவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. உயிர்கள் எவையும் உணவின்றி உயிர் வாழாஉயிர்களின் உடம்பானது உணவை முதலாகக் கொண்டு வாழ்வதை புறநானூற்றில் குடபுலவியனார் எனும் புலவர்,
"உண்டி முதற்றே உணவின் பிண்டம்"
                                                          - (புறம்: 18: 20)
என அழகாகக் கூறிச்சென்றுள்ளார்.

மனிதனின் பகுத்தறிவு உலக உயிர்களில் இருந்து அவனை வேறுபடுத்தி  வைத்துள்ளது. பண்டைய மனிதன் தனக்கு வேண்டிய உணவு வகைகளில் எவை நல்லவை எவை கெட்டவை என்பதைப் பகுத்து அறிந்து கொண்டான். மனித இனங்கள் பகுத்தறிவின் வளர்ச்சிக்குத் தகுந்தபடியும் சுற்றுச்சூழலின் இசைவாக்கத்துக்கு ஏற்றவாறும் தத்தமது உணவு முறைகளை வகுத்துக் கொண்டன. 

தமிழினமும் உலகத்தில் வாழும் மனிதர் யாவரும் நோயற்று  நீண்டகாலம் வாழத் தேவையான நல்ல உணவுகளைக் கண்டறிந்து கொடுத்ததில் பெரும்பங்கு ஆற்றியுள்ளது. அதனை 2400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தொல்காப்பியம்
"மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார்"
                                                              - (தொல்: மமரபியல்: 79)
எனக் கூறுவதால் அறியலாம். அது மட்டுமல்ல குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலத்திற்கும் உரிய உணவுகளை வகைப்படுத்தி வைத்திருந்தனர். ஒன்றுக்கொன்று மாறுபாடு இல்லாத உணவை உண்பதால் எமது உயிருக்கு கேடு வராது என்பதையும் நம்முன்னோர் அறிந்திருந்தனர். திருவள்ளுவர் தமது திருக்குறளில்
"மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு"
                                                               - (குறள்: 945)
என அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

திப்பிலி, இஞ்சி, மஞ்சள், மிளகு, கறுவா, ஏலம், கராம்பு, மா, பலா, வாழை எனத் தமிழினம் உலகிற்கு வழங்கிய உணவுவகைகளைப் பெரும் பட்டியல் இடலாம். சங்க காலத்திற்கு முன்பே பண்டைத் தமிழர் மிளகைக் 'கறி' எ அழைத்தனர்கறியை [மிளகை] உலகநாடுகளுக்குப் பண்டைத் தமிழர் ஏற்றுமதி செய்தனர். கறி[மிளகு] போட்டு சமைத்ததால் கறி ஆயிற்று. கறி எனும் சொல் உலகமொழிகளிலெல்லாம் வழங்கி வருவது தமிழன் உலகிற்குக் கொடுத்த உணவுக் கொடையின் உச்சம் எனலாம். அக்காலம் தொடக்கம் தமிழரின் உணவில் கறி இருக்கிறது. கறி சமைக்கும் போது  தாளித்துப் போடுவோம். கறிவேப்பிலை இல்லாமல் ஒரு தாளிதமா? 

சங்க காலத்தில் புதிதாகத் திருமணம் முடித்த இளம்பெண் தன் கணவனுக்கு சமைத்துப் பரிமாறியதை குறுந்தொகையில் கூடலூர் கிழார் எனும் புலவர்
"முளிதயிர் பிசைந்த காந்தண் மென்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந் திட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே"
                                                         - (குறுந்தொகை:167)
புளித்த தயிரைப் பிசைந்த கையைக் கழுவாது பட்டுச்சேலையில் துடைத்து, சேலையை [இடுப்பில்] செருகிக் கொண்டு தாளிதப்புகை கண்ணில் மணக்கத் தான் துழாவிச் சமைத்த புளிக்குழம்பை 'இனிது' என்று கூறி கணவன் உண்ண அவளது முகத்தில் மெல்லிய மகிழ்ச்சி இழையோடியதை படம்பிடித்து வைத்திருக்கிறார்.  இதில் வரும் குய்ப்புகை என்பது தாளிதப்புகையாகும்.

கஞ்சகம் என்பது கறிவேப்பிலை. கறிவேப்பிலை போட்டதை 
"கஞ்சக நறுமுறி அளைஇ"
                                                        - (பெரும்பாணாற்றுப்படை:328)
எனப் பெரும்பாணாற்றுப்படை சொல்கிறது.

தமிழர் 2400 வருடங்களுக்கு மேலாக கறிவேப்பிலைக்யைப் போட்டுத் தாளித்து சமைக்கின்றனர். இவ்வளவு நீண்ட வரலாற்றைக் கொண்ட கறிவேப்பிலை எங்கே போயிற்று? உலக சந்தையில் எப்போது போலிக் கறிவேப்பிலை வந்தேறியது? யாருக்காவது தெரியுமா? கொஞ்சக்காலமாக எமக்கு உண்மையான கறிவேப்பிலை கிடைப்பதில்லை. இன்று சமையலில் தாளிப்பதற்காக கறிவேப்பிலையைப் போட்டேன். எனக்கு வேப்பிலை மாதிரித் தெரிந்தது.

தாளிதத்துள் போட்ட போலிக் கறிவேப்பிலை


கறிவேப்பிலை என விற்கப்படுவது

இப்படங்களில் இருப்பவை கறிவேப்பிலையா? வேப்பிலையா? என்ன இலை?  தற்போது உலகெங்கும் நம்மவர்கள் சந்தைப்படுத்தி விற்கும் இலை; வேப்பிலையும் இல்லை கறிவேப்பிலையும் இல்லை. இதனை மானுடநேயம் கருதி எழுதுகிறேன். கறிவேப்பிலையின் இலையில் என்றுமே நெளிவுகள் இருந்ததில்லை. மிக மிக நுட்பமாக மெல்ல மெல்ல, கொஞ்சம் கொஞ்சமாக கறிவேப்பிலையுடன் கலந்து சந்தைப்படுத்தி இப்போது அதனையே கறிவேப்பிலை எனக்கூறி விற்பனை செய்கின்றனர். இதனால் எமக்கு வரப்போகும் பக்க விளைவுகள் என்ன? சிந்திக்கவேண்டிய நிலையில் நுகர்வோர் ஆகிய நாம் இருக்கின்றோம். இந்தச் சந்தைப் படுத்தலை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மனிதநேயம் உள்ளோர் யாவருக்கும் இருக்கின்றது என நம்புகிறேன்.

Googleலார் கூட போலிக் கறிவேப்பிலையை கறிவேப்பிலையாகக் காட்டத் தொடங்கிவிட்டார். Amazonனார் இரண்டையும் விற்பனை செய்கிறார். சிலர் தெரிந்தும் பலர் தெரியாமலும் செய்வதை googleலாரும் Amazonனாரும் அறிவார்களா? Wikiளும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள். கறிவேப்பிலை, போலிக் கறிவேப்பிலை இரண்டையும் ஒன்றென எண்ணிப் போடுகின்றனர். நாம் கடைகளில் வாங்கும் மிளகாய்த் தூளில் கூட போலிக்கறிவேப்பிலை காட்சி தருகிறது. கறிவேப்பிலை எது என்னும் உண்மையை அறியாது போட்டுள்ளனர் என நினைக்கிறேன். அவர்களும் அதனைத் தவிர்ப்பது  நன்று.

நம்முன்னோர் கண்பார்வைக் கோளாறுகள் ஏற்படாது 90, 98 வயது வரையும் வாழ்ந்ததற்கு கறிவேப்பிலையும் ஒரு காரணமாகும். தலைமயிர் கருமையாக நன்கு வளர கறிவேப்பிலை எண்ணெயைப் பயன்படுத்தினர்.  வயிற்றுளைவு, வாந்திபேதி, சிறுநீரகக் கோளாறு, பித்தப்பைக் கோளாறு, நீரழிவு, மூலநோய், போன்றவற்றிற்கு மற்ற மருந்துப்பொருட்களுடன் சேர்த்து கறிவேப்பிலைச் சூரணம் செய்து கொடுத்தனர். கறிவேப்பிலை மரம் மண்ணில் உள்ள கனிமங்களில் தங்கக் கனிமத்தை எடுத்து வைத்திருப்பதால் கறிவேப்பிலை வேரை நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தினர். அதனால் கறிவேப்பிலை மரத்தின் இலை, பட்டை, வேர் என யாவுமே மருந்தாகப் பயன்பட்டன. 

தமிழர்களால் பல ஆயிரவருடங்களாக உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்ட கறிவேப்பிலை எப்படி இருக்கும் என்பதை தெரியாது வாழ்கிறோமா? ஏன் இந்த நிலை? கொஞ்சம் சிந்தித்து செயற்படுவோம். எம் இளம் தலைமுறையினருக்கு உண்மையான கறிவேப்பிலையை பாதுகாத்துக் கொடுப்போமா? பணத்துக்காக போலி கறிவேப்பிலை விற்பவர்கள் தயவு செய்து கறிவேப்பிலை என்று கருவேம்பை சந்தைப்படுத்தாதீர்கள். வேம்பும் கருவேம்பும் வேறுவேறானவை. கறிவேப்பிலை வேறு கருவேப்பமிலை வேறு. கருவேப்பமிலையை உணவில் சேர்க்கும் போது வயிற்றுப் பொருமல் ஏற்படும். கறிவேப்பிலை அதனைத் தடுக்கும். கருவேம்பு உணவுப்பொருட்களுடன் மாறுபாடு அடைவதால் வயிற்றுப் பொருமல் ஏற்படுகிறது. 

"மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு"
என திருவள்ளுவர் சொன்னது போல போலி கருவேப்பிலையை மறுத்து உண்போமா! உயிர்க்கு ஒரு கேடும் வராது. இன்னும் என்ன என்ன இலைகள் சந்தைக்கு வருமோ! விழிப்போடு இருப்போம்.
இனிதே,
தமிழரசி.

Saturday 14 September 2019

மண்ணின் மைந்தர் மறக்கலாமோ!



பண்ணின் இசையை பூவின் எழிலை
விண்ணின் மதியை வீழும் புனலை
திண்ணின் திடத்தை தெய்வ வடிவடிவை
கண்ணின் மணியை கருத்தின் தெளிவை
பெண்ணின் பரிவை பெருமைச் செறிவை
எண்ணின் எழுத்தை ஏழைச் சிரிப்பை
தண்ணின் குளிரை தாயின் மனத்தை
மண்ணின் மைந்தர் மறக்கலாமோ!
இனிதே,
தமிழரசி.

Sunday 1 September 2019

புங்குடுதீவுக் கரையோரம் இருக்கும் பெருவளம்

புங்குடுதீவு அளத்து வெளி   (Photo credit goes to Sanjula)

இயற்கைவளம் புங்குடுதீவில் பண்டைக்காலம் தொட்டு நிறைந்தே இருந்தது. இன்றும் அள்ளி எடுத்து பத்திரமாகப் பாதுகாக்கும் அளவிற்கு பலவகை வளம் கொட்டிக் கிடக்கிறது. நம்முன்னோர் அவ்வியற்கை வளத்தை எப்படிப் பெருக்கிப் பாதுகாத்து வாழ்ந்தனர் என்பதை அறியாது வாழ்கிறோம்

இங்கு சொல்ல விழையும் பெருவளமும் புங்குடுதீவுக் கரையோரமெங்கும் நிறைந்தே கிடக்கிறது. இருப்பினும் புங்குடுதீவில் வாழ்வோருக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் எமக்கும் அதன் அருமை தெரியவில்லை. ஆனால் நம் முன்னோர் அதனை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தி நோயற்ற வாழ்வு வாழ்ந்தனர். சங்ககாலத் தமிழரும் அளத்து வெளியில் சென்றிருக்கிறார்கள்.

பண்டைத்தமிழர் அளம், அளத்து, அளத்துச்செடி, அளத்துக்கீரை, உமரி, உமரிச்செடி, உமரிப்பூண்டு, உமரிக்கீரை, உமிரி, உவரி, உவரிச்செடி, கொள்ளியம், சிறுமரி, காட்டுமரி, சிறுவுமரி, பவளப்பூண்டு எனப் பல பெயர்களால் இச்செடியை அழைத்ததை அறிய முடிகிறது. நம்மவர்கள் கொட்டனி என்பர். திரிகோணமலைப் பகுதியில் கடலவரை எனச் சொல்லும் வழக்கம் உண்டு. அளம் என்னும் இச்செடியின் பெயரை ஒட்டியே உப்பு விளையுமிடம் உப்பளம் எனப்பெயர் பெற்றது. அளச்செடி நிறைந்த இடத்தில் இயற்கையாக உப்பு விளைந்ததால் அந்த இடத்தை உப்பளம் என்றனர்.

இச்செடி சங்ககாலப் பழமையானது. அதனை நற்றிணையில் உலோச்சனார் என்னும் சங்க காலப்புலவர்
"கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு
நெடுநெறி ஒழுங்கை நிரைசெலப் பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப"
                                                     - (நற்றிணை 354: 8 - 10)
எனச் கூறுவதால் அறியலாம். கடுமையான வெயிலில் கடல் நீர் கொதிக்க கல்லாய் விளைந்த உப்பைக் கொண்டு, நீண்டவழியில் நிரை நிரையாக வண்டிகள் செல்வதைப் பார்ப்போர் 'அளத்து வெளியில் செய்கின்ற ஆரவாரம்' போன்றதாம்.

இதன் தாவரவியற் பெயர் Salicornia Brachiata. மேல்நாட்டினர் இதனை Sea Asparagus எனச் சொல்வர். பரிஸிலுள்ள கடலுணவு விற்கும் உணவகத்தில் [அவர்களது] Sea Asparagus Salad சாப்பிட்டீர்களானால் அதன் விலை என்ன என அறியமுடியும். கேரளாவிலும் கடலுணவில் உமரி கலந்து உண்ணும் வழக்கம் இருக்கிறது. நம்முன்னோரும் கொட்டனியை அதிகநீரில் அவித்து கடலுணவுடன் உண்டிருக்கிறார்கள். சூட்டுக்குப் போய் மீன்பிடித்து கொட்டனியோடு உண்டு சுவைத்தோர் பலராவர். ஊறுகாயாகவும் உண்டனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது உப்பும் கிடைக்கவில்லை. அதனால் சமைக்கும் உணவில் உமரியை உப்புக்கு ஈடாகப் பயன்படுத்தினர். வீக்கம், நீரழிவு, தொய்வு போன்ற பல நோய்களுக்கு மருந்தாகியது. கடலில் தூர தேசம் பிரயாணம் செய்யோர் இதை மருந்தாகக் கொண்டு சென்றனர். வைக்கோல் போலக் காய்ந்த உமரிக்கீரை ஆடு, மாடு, செம்மறியாடு, கழுதை போன்றவற்றுக்கு உணவாகியது.

இதில்செலெனியம் [Selenium]’ இருக்கிறது. இதய நோய்களுக்கும் தைரொயிட் பிரச்சனைகளுக்கும் செலெனியம் நல்லது. இதில் விட்டமின் A, B1, B15, C, D, கனிமங்கள், அமினோஅசிட் போன்றவை இருக்கின்றன. எனினும் ஒவ்வொரு நாளுமோ அதிகமாகவோ உண்ணக்கூடாது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவாகப் பயன்படுகிறது. 

புங்குடுதீவின் கரையோரமெங்கும் தானே வளர்ந்து பசுமையாய், மஞ்சளாய், செம்மஞ்சளாய், சிவப்பாய் பலபல நிறம் மாறி கண்ணுக்கு விருந்தளிக்கும் இந்தச் செடியின் அருமை தெரியாது காய்ந்து சருகாக விடுகிறோம். கொஞ்சம் மரஞ்செடி நேயம் வைத்து தீவுப்பகுதிக் கடற்கரையோர நிலமெங்கும் உமரியை விளைவித்து ஏற்றுமதி செய்திருக்கலாம். கடற்கரையோர நிலமும் பறிபோகாதிருக்கும்.

பச்சைத் தங்கம்  (Photo credit goes to Sanjula)

அபுதாபியின் பாலைவன உவர்நிலத்து உப்பு நீரில் இத்தாவர இனத்தை வளர்த்தெடுகிறார்கள். அவர்கள் இச்செடியைபச்சைத் தங்கம்- ‘Green Gold’ என அழைக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா? இந்த வருடம்[2019] தை மாதம் 17ம் திகதி Etihad Airways Boeing 787 எனும் ஜெட் விமானம் அபுதாபியில் இருந்து ஏறக்குறைய ஏழு மணி நேரம் பறந்து ஆம்ஸ்ரடாம் வந்தது. இத்தாவரத்தின் எண்ணெய்யும் ஜெட் எண்ணெய்யும் கலந்த எண்ணெயில் அந்த ஜெட் பறந்து திரிகிறது. அதனால் அளத்து பச்சைத் தங்கமாய் மிளிர்கிறது. 

மேலேயுள்ள படத்தில் புங்குடுதீவு பாணாவிடைச் சிவன்கோயிலின் அருகே இருக்கும் 'அளத்து வெளியில்' என் பெயரன் மயன் எவ்வளவு மகிழ்வோடு பச்சைத் தங்கத்தை கையில் அள்ளியெடுத்து குதித்தோடி வருகிறார் என்று பாருங்கள். 
இனிதே,
தமிழரசி.

Friday 23 August 2019

குறள் அமுது - (142)


குறள்: புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று  
   இகழ்வார்பின் சென்று நிலை         

                                                                            - 966

பொருள்: புகழ் இல்லையானால் விண்ணுலகமும் சேர்க்காது. எனவே தன்மானத்தை இழந்து இகழ்வார் பின்சென்று நிற்பதால் கிடைக்கும் பயன் என்ன?

விளக்கம்: இத்திருக்குறள் மானம் என்னும் அதிகாரத்தில்  உள்ள ஆறாவது குறளாகும். ஒருவன் தன் நிலையிலிருந்து தாழாது இருத்தலே மானமாகும். 

திருவள்ளுவர் இக்குறளில் ஏழு சொற்களில் நான்கு விடயங்களைச் சொல்கிறார். முதலாவது தன்மானத்தை ஒருவர் இழந்தால் தம்மை இழிவுசெய்வோரின் பின்னே சென்று நிற்கும் நிலை உருவாகும். இரண்டாவது அப்படி நிற்பதால் இவ்வுலகில் என்றும் அழியாது நிற்கும் புகழை இழக்கும் நிலை ஏற்படும். மூன்றாவது புகழில்லை எனின் தேவர் உலகமும் கிடையாதது. நான்காவதாக இவற்றால் வரக்கூடிய நன்மை என்ன? எனக் கேள்வியும் எழுப்புகிறார். இக்கேள்வி மனித சிந்தனையைத் தீட்டும் நல்ல கேள்வியாகும். 

நல்லோர்கள் தமது மானத்துக்கு கேடு வரும் எனில் பரந்து விரிந்த விண்ணுகலமே கையில் கிடைத்தாலும் வாங்க மாட்டார்கள் என்பதை

“……………………………………… - இடமுடைய

வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்

மானம் அழுங்க வரின்     - 300

என நாலடியார் கூறுகிறது. 

விண்ணுலக வாழ்வைவிட மானம் உயர்ந்தது. ஆதலால் படை வீரர்கள் உலகெங்கும் சுற்றித் திரியும் புகழை விரும்புவதால் உயிர்வாழ விரும்புவதில்லை. அதனை

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்      - 777 

என படைச்செருக்கு என்ற அதிகாரத்தில் திருவள்ளுவரே கூறுகிறார். அவர் சொன்னது போல எம்மினத்தின் மானத்தைக் காப்பதற்கு தம் உயிரை விரும்பாத [வேண்டா] மாவீரர் உயிர்க்கொடை கொடுத்து, முள்ளிவாய்க்கால் மண்ணில் குருதிக் களமாடினர். இன்றும் எம்மாவீரர் புகழ் உலகெங்கும் சுழல்கிறதே.

பிறரை இழிவுசெய்வோரை இகழ்வார் என்பர். அதனைச் சொல்லாலும் செயலாலும் செய்வர். ஒருவரின் உயர்வை, பெருமையை இகழ்தலை விட ஓர் இனத்தை இழிவுபடுத்தல் என்பது பல்லாயிரக் கணக்கானோரை கிளர்ந்து எழச் செய்யும். 1956ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த 65 ஆண்டுகளாக இனக்கலவரங்களாலும் போராலும் நடந்த இழிவுகளை ஈழத்தமிழினம் அறிந்தேயிருக்கிறது. அவை எத்தனை வகைகளில்? எத்தனை இடங்களில்? நடந்தன ஒன்றா இரண்டா? எண்ணில் அடங்கா. 

இனக்கலவரங்களின் போது தமிழனாய்ப் பிறந்த குற்றத்திற்காக கொதிக்கும் தாரில் தூக்கி வீசியும், உயிரோடு தூபிகளில் கட்டி எரித்தும், வீட்டோடு எரித்தும், பொருளுக்காக நகைகளுக்காக கை கால்களை வெட்டியும் கற்பை அழித்தும் மனங்களித்தனரே. தமிழரின் பொருளாதாரத்தைச் சிதைத்துச் சின்னாபின்னம் ஆக்கினர். அந்நாளில் போர் ஆயுதங்களைக் கனவிலும் நினைத்தறியாத, கையில் எடுத்து அறியாத பச்சிளம் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் எனக் கொன்று குவித்தனரே!

ஈழத்தமிழ் இளைஞரின் சிறந்த அறிவையும் ஆற்றலையும் தரப்படுத்தல் எனும் போர்வையில் கிள்ளி எறிந்து இழிவு செய்தனரே! நம்மினத்தின் அறிவுச் சுரங்கமாய் இருந்த யாழ்நூலகத்தை எரியூட்டியது ஏன்? அது இழிவு இல்லையா? இவ்வாறு இகழ்வோரின் பின் சென்று கைகட்டி வாய் புதைத்து வாழ முடியுமா? அதனையே திருவள்ளுவர் இக்குறளில் 'என்மற்று இகழ்வார் பின்சென்று நிலை?' எனக்கேட்கிறார்.

ஈழத்தமிழினம் தன்மானத்துடன் வாழ்வதற்கு கொத்துக் குண்டுகளாலும் இரசாயனக் குண்டுகளாளும் முள்ளிவாய்க்கால் மண்ணும் அதில் இருந்த எல்லா உயிர்களும் வெடித்துச் சிதறி பற்றி எரிந்ததே! தமிழரின் குருதி, நீர் நிலைகள் எங்கும் ஆடியதே! பனைமர உச்சியிலும் படிந்ததே. அந்நிலையிலும் இனமானங்காக்க முள்ளிவாய்க்கால் மண்ணில் செந்நீரால் பாய்விரித்துக் வீரக்களமாடி கண்ணீரில் நாம்மிதக்க அன்று மாவீரர்களாய் வீரவரலாறு படைத்து தம்முயிர் கொடுத்த அனைவரையும் போற்றுவோம்.

இனிதே,

தமிழரசி.