Saturday 14 September 2019

மண்ணின் மைந்தர் மறக்கலாமோ!



பண்ணின் இசையை பூவின் எழிலை
விண்ணின் மதியை வீழும் புனலை
திண்ணின் திடத்தை தெய்வ வடிவடிவை
கண்ணின் மணியை கருத்தின் தெளிவை
பெண்ணின் பரிவை பெருமைச் செறிவை
எண்ணின் எழுத்தை ஏழைச் சிரிப்பை
தண்ணின் குளிரை தாயின் மனத்தை
மண்ணின் மைந்தர் மறக்கலாமோ!
இனிதே,
தமிழரசி.

Sunday 1 September 2019

புங்குடுதீவுக் கரையோரம் இருக்கும் பெருவளம்

புங்குடுதீவு அளத்து வெளி   (Photo credit goes to Sanjula)

இயற்கைவளம் புங்குடுதீவில் பண்டைக்காலம் தொட்டு நிறைந்தே இருந்தது. இன்றும் அள்ளி எடுத்து பத்திரமாகப் பாதுகாக்கும் அளவிற்கு பலவகை வளம் கொட்டிக் கிடக்கிறது. நம்முன்னோர் அவ்வியற்கை வளத்தை எப்படிப் பெருக்கிப் பாதுகாத்து வாழ்ந்தனர் என்பதை அறியாது வாழ்கிறோம்

இங்கு சொல்ல விழையும் பெருவளமும் புங்குடுதீவுக் கரையோரமெங்கும் நிறைந்தே கிடக்கிறது. இருப்பினும் புங்குடுதீவில் வாழ்வோருக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் எமக்கும் அதன் அருமை தெரியவில்லை. ஆனால் நம் முன்னோர் அதனை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தி நோயற்ற வாழ்வு வாழ்ந்தனர். சங்ககாலத் தமிழரும் அளத்து வெளியில் சென்றிருக்கிறார்கள்.

பண்டைத்தமிழர் அளம், அளத்து, அளத்துச்செடி, அளத்துக்கீரை, உமரி, உமரிச்செடி, உமரிப்பூண்டு, உமரிக்கீரை, உமிரி, உவரி, உவரிச்செடி, கொள்ளியம், சிறுமரி, காட்டுமரி, சிறுவுமரி, பவளப்பூண்டு எனப் பல பெயர்களால் இச்செடியை அழைத்ததை அறிய முடிகிறது. நம்மவர்கள் கொட்டனி என்பர். திரிகோணமலைப் பகுதியில் கடலவரை எனச் சொல்லும் வழக்கம் உண்டு. அளம் என்னும் இச்செடியின் பெயரை ஒட்டியே உப்பு விளையுமிடம் உப்பளம் எனப்பெயர் பெற்றது. அளச்செடி நிறைந்த இடத்தில் இயற்கையாக உப்பு விளைந்ததால் அந்த இடத்தை உப்பளம் என்றனர்.

இச்செடி சங்ககாலப் பழமையானது. அதனை நற்றிணையில் உலோச்சனார் என்னும் சங்க காலப்புலவர்
"கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு
நெடுநெறி ஒழுங்கை நிரைசெலப் பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப"
                                                     - (நற்றிணை 354: 8 - 10)
எனச் கூறுவதால் அறியலாம். கடுமையான வெயிலில் கடல் நீர் கொதிக்க கல்லாய் விளைந்த உப்பைக் கொண்டு, நீண்டவழியில் நிரை நிரையாக வண்டிகள் செல்வதைப் பார்ப்போர் 'அளத்து வெளியில் செய்கின்ற ஆரவாரம்' போன்றதாம்.

இதன் தாவரவியற் பெயர் Salicornia Brachiata. மேல்நாட்டினர் இதனை Sea Asparagus எனச் சொல்வர். பரிஸிலுள்ள கடலுணவு விற்கும் உணவகத்தில் [அவர்களது] Sea Asparagus Salad சாப்பிட்டீர்களானால் அதன் விலை என்ன என அறியமுடியும். கேரளாவிலும் கடலுணவில் உமரி கலந்து உண்ணும் வழக்கம் இருக்கிறது. நம்முன்னோரும் கொட்டனியை அதிகநீரில் அவித்து கடலுணவுடன் உண்டிருக்கிறார்கள். சூட்டுக்குப் போய் மீன்பிடித்து கொட்டனியோடு உண்டு சுவைத்தோர் பலராவர். ஊறுகாயாகவும் உண்டனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது உப்பும் கிடைக்கவில்லை. அதனால் சமைக்கும் உணவில் உமரியை உப்புக்கு ஈடாகப் பயன்படுத்தினர். வீக்கம், நீரழிவு, தொய்வு போன்ற பல நோய்களுக்கு மருந்தாகியது. கடலில் தூர தேசம் பிரயாணம் செய்யோர் இதை மருந்தாகக் கொண்டு சென்றனர். வைக்கோல் போலக் காய்ந்த உமரிக்கீரை ஆடு, மாடு, செம்மறியாடு, கழுதை போன்றவற்றுக்கு உணவாகியது.

இதில்செலெனியம் [Selenium]’ இருக்கிறது. இதய நோய்களுக்கும் தைரொயிட் பிரச்சனைகளுக்கும் செலெனியம் நல்லது. இதில் விட்டமின் A, B1, B15, C, D, கனிமங்கள், அமினோஅசிட் போன்றவை இருக்கின்றன. எனினும் ஒவ்வொரு நாளுமோ அதிகமாகவோ உண்ணக்கூடாது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவாகப் பயன்படுகிறது. 

புங்குடுதீவின் கரையோரமெங்கும் தானே வளர்ந்து பசுமையாய், மஞ்சளாய், செம்மஞ்சளாய், சிவப்பாய் பலபல நிறம் மாறி கண்ணுக்கு விருந்தளிக்கும் இந்தச் செடியின் அருமை தெரியாது காய்ந்து சருகாக விடுகிறோம். கொஞ்சம் மரஞ்செடி நேயம் வைத்து தீவுப்பகுதிக் கடற்கரையோர நிலமெங்கும் உமரியை விளைவித்து ஏற்றுமதி செய்திருக்கலாம். கடற்கரையோர நிலமும் பறிபோகாதிருக்கும்.

பச்சைத் தங்கம்  (Photo credit goes to Sanjula)

அபுதாபியின் பாலைவன உவர்நிலத்து உப்பு நீரில் இத்தாவர இனத்தை வளர்த்தெடுகிறார்கள். அவர்கள் இச்செடியைபச்சைத் தங்கம்- ‘Green Gold’ என அழைக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா? இந்த வருடம்[2019] தை மாதம் 17ம் திகதி Etihad Airways Boeing 787 எனும் ஜெட் விமானம் அபுதாபியில் இருந்து ஏறக்குறைய ஏழு மணி நேரம் பறந்து ஆம்ஸ்ரடாம் வந்தது. இத்தாவரத்தின் எண்ணெய்யும் ஜெட் எண்ணெய்யும் கலந்த எண்ணெயில் அந்த ஜெட் பறந்து திரிகிறது. அதனால் அளத்து பச்சைத் தங்கமாய் மிளிர்கிறது. 

மேலேயுள்ள படத்தில் புங்குடுதீவு பாணாவிடைச் சிவன்கோயிலின் அருகே இருக்கும் 'அளத்து வெளியில்' என் பெயரன் மயன் எவ்வளவு மகிழ்வோடு பச்சைத் தங்கத்தை கையில் அள்ளியெடுத்து குதித்தோடி வருகிறார் என்று பாருங்கள். 
இனிதே,
தமிழரசி.