Saturday 28 August 2021

தேரோடும் வீதியெல்லாம்


தேரோடும் வீதியெல்லாம் தேடவைத்தான்

  தேனூறும் தமிழிசை மாந்தவைத்தான்

யாரோடும் பகையிலா பழகவைத்தான்

  யானெனும் தன்மையை ஓடவைத்தான்

ஊரோடும் உலகோடும் வாழவைதான்

  ஊற்றெனவே தன்னருளை பாயவைத்தான்

கூரோடும் வேலனெனை எழுதவைத்தான்

  குமரையா என்றேஎ கூவவைத்தான்

இனிதே,

தமிழரசி.

Friday 27 August 2021

குறள் அமுது (149)


குறள்:

கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும் - 525


பொருள்:

சுற்றத்தாருக்கு வேண்டியதைக் கொடுத்தும் இனிமையாகப் பேசியும் வாழ்பவர் தொடர்ந்து சுற்றத்தால் சூழப்படுவர்.


விளக்கம்:

தத்தமது சுற்றத்தாருடன் சேர்ந்து வாழ்வதற்கு ஏற்ற வழியைத் திருவள்ளுவர் இக்குறளில் கூறியுள்ளர். இத்திருக்குறள் சுற்றம்தழால் எனும் அதிகாரத்தில் உள்ள ஐந்தாவது குறளாகும். தாய், தந்தை,  உறவினர், நண்பர், அயலவரென எம்மைச் சூழ்ந்து வாழ்வோர் யாவரையும் சுற்றம் என்பர். தழால் என்பது இங்கு தழுவி என்னும் கருத்தில் வருகிறது.  சுற்றதாரைத் தழுவி அதாவது எம்மோடு அணைத்து வாழவேண்டும். இன்னொரு வகையில் சொல்வதானால் உறவினர் சூழ வாழ்தலாகும்.


சுற்றத்தாருடன் சேர்ந்து வாழ்தலைச் சுமையாகக் கருதும் இந்தக் காலத்தில் கொரனா சுற்றத்தாரின் அருமை பெருமைகளை எமக்கு அறிவுறுத்துகின்றது. எம் மனநிலையை அடுதடுத்து நிகழும் இழப்புகள் ஓர் உலுக்கு உலுக்கி வைதிருக்கின்றது. ஏன் நாம் சுற்றத்தாரை சுமையாகக் கருதக்கூடாது? நாலடியார்


அடுக்கல் மலைநாட தன் சேர்ந்தவரை

எடுக்கலம் என்னார் பெரியோர் - அடுத்தடுத்து

வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே

தன்காய் பொறுக்கலாக் கொம்பு

- (நாலடியார்: 21: 3)

என அதற்கான விளக்கத்தைத் தருகிறது. அடுக்கடுக்கான மலைகளுடைய நாட்டை உடையவனே! ஒரு மரத்தில் பெரிது சிறிதாக பலபல காய்கள் காய்த்தாலும் அக்காய்களைத் தாங்காத கிளை இல்லை. அதுபோல் பெரியோரும் தம்மைச் சார்ந்தவர்களைத் தாங்க மாட்டோம் எனச்சொல்லார். எடுக்கல் என்பது தாங்குதல், தூக்குதல், சுமத்தல் போன்ற கருத்துக்களைத் தரும். எடுக்கல் என்பதன் எதிர்ச்சொல் எடுக்கலம் ஆகும். சிலவேளை காற்றடித்து கிளைகள் முறியும். ஆனால் மரஞ்செடிகள் தாமாகக் காய்களை தமக்குச் சுமையென வீழ்த்துவதில்லை.


ஓரறிவுள்ள மரங்களே காய்கனிகளை மட்டுமல்ல மரத்தில் வாழும் வௌவால், புழு, பூச்சி போன்றவற்றை கூடுகட்டி வாழும் பறவைகளை தாம் இறந்த பின்னரும் வாழவைக்கின்றன. எனவே சுற்றம் சூழ வாழ்தல் இனிமையானது. சுற்றதாருக்கு வேண்டியவற்றை அன்போடு கொடுத்தும் இனிமையாகப் பேசியும் வாழ்ந்தால் என்றும் சுற்றதார் சூழ மகிழ்வோடு வாழலாம். 

Monday 23 August 2021

வள்ளலே அருள்வாய்!

 


எல்லாமே  நீ யானால்

  என்நெஞ்சினில் யார் உறைவார்

கல்லாமல் கற்ற பாடங்கள்

  கோடி கருத்தினை அறிவார்

இல்லாதே ஆயினும் சிந்தையில்

  இருந்து ஆக்கியே வைப்பார்

வல்லமை தருவாய் வயலூர்

  வதியும் வள்ளலே அருள்வாய்

இனிதே,

தமிழரசி.

Saturday 21 August 2021

கதை என்பது தமிழ்ச்சொல்லா?


இந்நாளில்கதைஎன்னும் சொல் தமிழ்ச்சொல் இல்லை என எழுதியும் பேசியும் வருகின்றனர். ஏன் எழுதுகின்றனர் என்பதுவும் தெரியவில்லை. வடமொழியின் 'கதா' எனும் சொல்லிலிருந்து தமிழ்ச்சொல்லான 'கதை' எனும் சொல் பிறந்திருக்கும் என்ற ஐயப்பாடும்  இருக்கிறது.  

காது, கதை, கதைத்தல் என்னும் சொற்கள்கதுஎன்னும் வேர்ச்சொல் அடியாகப் பிறந்த சொற்களாகும். கது - பற்று. கது என்பது முதனிலைத் தொழிற்பெயர்ச் சொல். கது முதனிலை திரிந்த தொழிற்பெயராக மாறும் பொழுதுகாதுஎன வரும். கேட்கும் ஓசைகளை, ஒலிகளைப் பற்றுவதால் காது என்கிறோம். 

கதுவுதல்/கதுவல் -  பற்றுதல் என்னும் கருத்தைத் தரும். கதுமெனல் - விரைவாக, உடனே பற்றுதல்.     

வல் வாய் உருளி கதுமென மாண்ட” 

                                                       - (பதிற்றுப்பத்து: 7: 11)

கது + [தொழிற் பெயர் விகுதி] = கதை

கேட்போர் மனதை உடனே பற்றிப்பிடிப்பதால் கதை என்கிறோம். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறியுள்ள அரங்கேற்று காதை, கடல் ஆடு காதை, வேனிற்காதை, வழக்குரை காதை, நடுகற்காதை போன்ற காதைகள் எல்லாம் கதையையே குறிக்கின்றன. காது + ஐ = காதை.

பண்டைத் தமிழரிடம் கதை சொல்லும் வழக்கமும் கதை கேட்கும் பழக்கமும் இருந்ததா என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.

தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம் உரைநடையை நான்கு வையாகப் பிரித்துக் கூறுமிடத்தில்

பாட்டிடை வைத்த குறிப்பினானும்

பாவின்று எழுந்த கிளவி யானும்

பொருள் மரபில்லா பொய்மொழி யானும்

பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்று

உரைவகை நடையே நான்கென மொழிப 

                                                    -(தொல்.பொரு: 166)

என்கின்றது

இதில் வரும் பொய்மொழி என்பது இக்காலக் கட்டுக்கதை. நகைமொழி என்பது நகைச்சுவைக் கதை. இப்பாடலுக்கு விளக்கம் தரும் உரையாசிரியரான பேராசிரியர்தம்முள் நட்புக் கொண்ட யானையும் குருவியும் எந்த எந்த இடங்களுக்குச் சென்று என்ன என்னவெல்லாம் செய்தன என்பதை ஒருவன் புனைந்து உரைப்பதுஅதனுள் அடங்கும் என்கிறார்.

சங்க இலக்கியங்களில் இருக்கும் பாடல்கள் யாவும் சங்ககால மக்களின் அகவாழ்வையும் புறவாழ்வையும் கதை கதையாகத் தருகின்றன. ஆற்றுப்படை நூல்களும் பரிசிலர்க்கு எங்கெல்லாம் சென்று அங்கெல்லாம் எத்தகைய காட்சிகளைக் கண்டு என்னவெல்லாம் உண்டு யார் யாரிடம் பரிசு பெறலாம் என ஆற்றுப் படுத்துகின்றன. இலங்கையின் மாந்தைக்குச் சென்றால்மடை நூல்’ [சமையல் நூல்] கூறுவது போல் சமைத்த உணவை உண்ணலாம் என்னும் கதையை சிறுபாணாற்றுப்படை

பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள்

பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்

வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த

இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து

விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி

ஆனா விரும்பின் தான் நின்று ஊட்டி” 

                                                    - (சிறுபாணா: 240 - 245)

எனச் சொல்கிறது. இலங்கையில் இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே சமையல் நூலைப் படித்து உணவு சமைத்து உண்டனர் என்னும் கதையை, வரலாற்றை நாம் அறியலாம். எனவே நம் தமிழ் முன்னோர் கதையைச் சொல்லியும் கேட்டும் இருக்கின்றனர். கதை என்பது கது எனும் வேர்ச்சொல் அடியாகப் பிறந்த தமிழ்ச்சொலே.

இனிதே,

தமிழரசி.