Tuesday 28 February 2023

புங்குடுதீவெனும் பெண்ணெழிலே!

புங்குடுதீவு

புங்குடுதீ வெனும் பெண்ணெழிலே யுனை

  போற்றியே வளத்தோர் எம் முன்னையரே

பொங்கிடும் தெற்கு கடற்கரையில் நின்று

  பொற்புடன் காணலாம் இரு சூரியனே

ஓங்கிடும் புகழுடை கண்ணகியாள் கொழு

  வீற்றிருந்த ருளும் பான்மை கண்டே

பாங்கொடும் மகளிர் பாட வெண்மணலில்

  பரவி யாடும் கடல் அலையே.

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

முன்னையர் - முன்னோர்

பொங்கிடும் - பொங்கும் கடல்

இருசூரியனே - மாலையில் சூரியனும் சந்திரனும் வட்டமாக  கிழக்கிலும் மேற்கிலும் தெரியும் [சில நேரம்].

Friday 10 February 2023

பாலைவனத்திடை பாடுகின்றேன்


பாலை வனத்திடை பாடுகின்றேன் - அங்கு
          பவள மல்லிகை பூத்ததுவே
சோலைக் குயில் கூவையிலே - அங்கு
          சோதிசுடர் ஒன்று தோன்றியதே
காலைக் கதிரவன் கனிந்துவர - அங்கு
          காவினம் கோவினம் பாடினதே
மாலை மருதம் வந்ததென்று - அங்கு
          மாமயில் தோகைவிரித் தாடினதே
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
இப்பாடலை 2nd Jan 1990ல் அன்று இரவு மிகவும் மனதிற்கு துன்பமான நேரம் எனது நாட்குறிப்பில் எழுதத் தொடங்கினேன். "பாலைவனத்திடை பாடுகிறேன் - அங்கு" என்பதை மட்டுமே என்னால் எழுதமுடிந்தது. ஏதோ ஒரு சக்தி அப்பாடலை முழுமையாக எழுதவிடாது தடுத்தது. ஒருவருடம் கழித்து 7th Feb 1991 அன்று மகன் வாகீசன், 9 வயதில் GCSE Maths பரீட்சையில் 'A' எடுத்து சித்தியடைந்ததை "Maths whiz kid, 9, gets set to take A-level exam" என இலண்டனில் வெளிவரும் 'Evening Standard' செய்தியாக வெளியிட்டிருந்தது. 'தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது' என்ற திருவள்ளுவர் குறளை என்மனம் அசைபோட்டபடி இருந்தது. 1991ல் GCSE பரீட்சைக்கு A* கொடுக்கும் வழக்கம் இருக்கவில்லை. அன்று எங்களது பதிவுத்திருமணம் நடந்து 12வது வருடம். திருமணப்பரிசாக மகன் எமக்கு அச்செய்தியைத் தந்தான். எனவே மனம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்தது. அன்று இரவு இப்பாடலின் மிகுதியை எழுதி முடித்தேன்.
பவளமல்லிகை

Friday 3 February 2023

ஒளிவெள்ளமே!


ஓங்காரனே எம்தம் ஒளிவெள்ளமே

  ஒண்தமிழின் சுவையெலாம் தந்துநிதம்

நீங்காதே நெஞ்சில் நிலைத்திருப்பாய்

  நாம்நாளுந் தொழுதரற்றி நவிலுநல்

பாங்கான பைந்தமிழ்ப் பாகேட்டுகப்பாய்

  பரிவுடனே பக்தர் வினைநீக்கிடுவாய்

ஏங்காமன ஏழைகள் நாயகனே

  எங்காயினும் செய்பிழை ஏற்றருள்வாய்

இனிதே,

தமிழரசி