Friday 10 May 2013

குறள் அமுது - (64)


குறள்:
“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”                   - 127

பொருள்:
எவற்றைக் காக்காவிட்டாலும், நாக்கை காத்துக் கொள்ளவேண்டும். அப்படி காக்கத் தவறினால் சொல்லிழுக்காகிய வசைக்கு உட்பட்டு சிறைப்படுவர்.

விளக்கம்:
பாதுகாக்கப்பட வேண்டியனவற்றுள் எவற்றைப் பாதுகாக்கத் தவறினாலும் நாக்கை அடக்கிக் காக்க வேண்டும். கோபத்தை அடக்கிக் காக்க முடியாவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.  நாவை அடக்கிக் காக்காது, சொல்லத் தகாத சொற்களால் எடுத்தெறிந்து பேசுவதால், அச்சொற்கள் கேட்போர் மனதைப் புண்ணாக்கி, கடும் கோபத்தை உண்டாக்கும். இப்படி நாவை அடக்காது ஒருவர் மாறி ஒருவர் தர்க்கப்படுவதால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும். அது உயிர் இழப்பையும் கூட உருவாக்கலாம்.

விளையாட்டாகப் பேசியது வினையாக முடிவதும் உண்டு. அடங்காக் கோபம் பல கேடுகளை உண்டாக்கி சிறைக் காவலில் இருக்கவைக்கும். சிறைக்காவலையே ‘சோகாப்பர்’ எனத்  திருவள்ளுவர் குறிக்கிறார்.  ‘சோ’ என்பது ஒருவகை காவல் அரண் ஆகும். 

தப்பிப் போக முடியாத பலவகைப் பொறிகளோடு செம்பால் செய்யப்பட்ட அரண், சோஅரண் எனப்படும். சோஅரணை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்
“...........................தம்பியொடும் கான்போந்து
சோஅரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே”
என்கிறார்.  சோஅரண் இராவணனின் இலங்கையிலும், வாணன் ஆண்ட சோணிதபுரதிலும் இருந்ததை இலக்கியங்கள் சொல்கின்றன.

மனிதருக்கு நாவடக்கமே மிகவும் வேண்டியது. நாவை அடக்குங்கள் இல்லையேல் பழிச் சொல்லுக்கு உள்ளாகி சிறைக்காவலில் இருக்க நேரிடும் என இக்குறள் கூறுகிறது.  

No comments:

Post a Comment