Wednesday, 29 May 2013

ஔவையார் பெண்ணை பேடு என்றாரா? - பகுதி 2


நம் பண்டைத்தமிழ் முன்னோர் உலகினில் பிறப்போரில் சிலர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறுவதையும், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுவதையும் அறிந்திருந்தனர். அதனால் இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் இலக்கண நூலோர் தம் தன்மையில் மாறுபடுவோரை தமிழில் அழைக்கும் சொல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் இலக்கணம் வகுத்தனர். அதனைத் தொல்காப்பியமும்
"ஆண்மை திரிந்த பெயர் நிலைக்கிளவி
ஆண்மை அறிசொற்கு ஆகுடன் இன்றே”
என்று சொல்கிறது.

ஆண்மை தன்மையில் இருந்து மாறியவரது பெயர்ச்சொல் ஆண்மையை அறியும் சொல்லுடன் சேர்ந்து வராது. ஆண்மை அறி சொல் என்றால் என்ன? இவன் ஆண் என்பதை அறியும் சொல் - ஆண்பால் என்பதை அறியும் சொல். மருத்துவன், அமைச்சன், வந்தான், படித்தான் என ‘ன்’ ஆகிய னகர மெய் எழுத்தில் முடியும் ஆண்பாலைக் குறிக்கும் சொல் ஆண்மை அறிசொல்லாகும். ஆண் தன்மையில் இருந்து மாறி (திரிந்து), பேடான பின்னர் பேடி வந்தான் என்றோ, பேடி படித்தான் என்றோ வராது. பேடி வந்தாள் எனவும், பேடி படித்தாள் எனவும் வரும்.

இதேபோல் பெண்தன்மையில் இருந்து மாறியவரது பெயர்ச்சொல் பெண்மையை அறியும் சொல்லுடன் சேர்ந்து வராது. பெண்தன்மையில் இருந்து மாறி (திரிந்து) பேடான பின்னர் பேடன் வந்தாள் என்றோ, பேடன் படித்தாள் என்றோ வராது. பேடன் வந்தான் எனவும், பேடன் படித்தான் எனவும் வரும். இதனையே தொல்காப்பியர்

“ஆண்மை திரிந்த பெயர் நிலைக்கிளவி
ஆண்மை அறிசொற்கு ஆகுடன் இன்றே”
என்றும்

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே
உயர்தினை மருங்கின் பால்பிரிந்து இசைக்கும்”
என்கிறார்.

அதாவது பேடு மாற்றமடைகின்ற தன்மையைப் பொறுத்து ஆண்பால் பெண்பாலாகவும், பெண்பால் ஆண்பாலாகவும் சொல்லப்படும். 
“இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே”
என்பதால் சொல்லின் இறுதியைக் கொண்டு ஆணா, பெண்ணா என்பதை அறியமுடியாது என்கிறார்.

மகாபரதமும் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறிய இரு பேடு பற்றியும் சொல்கிறது. அருச்சுனன், உருபசியின் சாபத்தின் மூலம் பிருகந்நளை என்ற பேடியாய் மாறினான் என்னும் இடத்தில் வீரம் மிக்க ஆண்மையாளனாகாக் சொல்லப்பட்ட அருச்சுனன், ஆண்தன்மை மாறி(ஆண்மை திரிந்து)  பிருகந்நளை என்ற பேடியாய் வீணனாய் நிற்கின்றான். பெண்ணாகப் பிறந்த அம்பை, பீஷ்மரால் பலவந்தமாகக் கடத்தப்பட்டு அவளது திருமணம் நின்றதால் சிகண்டி என்ற பேடனாய் மாறி பீஷ்மரைக் கொல்லுமிடத்தில் பேரழகுள்ள மங்கையாக சொல்லப்பட்ட அம்பை, பெண்தன்மை மாறி (பெண்மை திரிந்து) சிகண்டி என்ற பேடனாய் மாவீரனாய் நிற்கின்றாள். மகாபாரதம் மிக அழகாக ஆண் பேடியாக மாறுவதையும், பெண் பேடனாக மாறுவதையும் காட்டுகிறது. 

திருவள்ளுவர், ஆண்தன்மையில் இருந்து மாறி, பெண்தன்மை அடைந்த பேடியை, பயந்து நடுங்கும் தொடைநடுங்கியாக
“பகையகத்து பேடிகை ஒள்வாள்”
எனக்காட்டுகிறார்.

முதுமொழிக்காஞ்சியோ அஞ்சவேண்டியதற்கு அஞ்சாதிருத்தல் பேடியின் தன்மை என்கின்றது.
“கழி தறுகண்மை பேடியின் துவ்வாது”
அளவுக்கு அதிகமான வீரம் ‘கழி தறுகண்மை’ எனப்படும். பெண்தன்மையிலிருந்து மாறி ஆண்தன்மை அடைந்த பேடனை முதுமொழிக்காஞ்சி சொல்கிறது.

பேடியர் தமது கையை எருமையின் கொம்பு போல் வளைத்துப் பிடித்திருப்பர் என அகநானூற்றில் மருதனிளநாகனார் கூறியுள்ளார். இந்த உண்மையை நீங்கள் நேரிலும் சினிமாப்படங்களிலும் பார்த்திருப்பீர்கள். மணிமேகலை போன்ற சங்ககால நூல்களிலும் பேடுபற்றிய செய்திகள் இருக்கின்றன. எவருமே பேடு என்பதை பெண் என்று சொல்லவில்லை.

எம்மால் போற்றப்படும் சைவப்பெரியோர் என்ன சொன்னார்கள் பார்ப்போமா? திருஞானசம்பந்தர் இறைவனை
“பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்
          ஆடலை உகந்த எம் அடிகள்”
என்று மூன்றாம் திருமுறையில் கூற, 
“பெண்ணல்லை ஆணல்லை பேடுமல்லை
          பிறிதல்லை ஆனாயும் பெரியோய் நீயே”
என திருநாவுக்கரசர் ஆறாம் திருமுறையில் கூறியிருக்கிறார். இருவருமே பெண், ஆண், பேடு என மூன்றையும் கூறியிருப்பதைப் பாருங்கள். எனவே மனிதப்பிறப்பில் காலங்காலமாக பெண், ஆண், பேடு என்ற முப்பிறப்பும் இருப்பதைக் காணலாம். 

கல்வெட்டு : வரலாறு.கொம்

இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டில் கூட ‘பேடு’ எனும் சொல் எடுத்தாளப்பட்டு இருக்கிறது. அக்கல்வெட்டு, தேனிமாவட்டம் அருகே 2006ம் ஆண்டு பங்குனி மாதம் தஞ்சைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா இராஜனின் வழிகாட்டலில், அவரது மாணவர்கள் செய்த நடுக்கல் ஆய்வின் போது கிடைத்தது. அதில்
“கல் பேடு தீயன் அந்துவன் கூடல் ஊர் ஆகோள்”
என எழுதப்பட்டுள்ளது.

சங்ககால இலக்கியங்கள் நடுகற்கள் பற்றியும் ஆகோள் பற்றியும் நிறையவே சொல்கின்றன. ஆகோள் என்றால் பசுக்களை கவர்ந்து வருதலாகும். ஓர் அரசனின் போர் வீரர்கள், வேறோர் அரசனின் எல்லைக்குள் இருக்கும் பசுக்களைப் பிடித்து வருவார்கள். அதனால் இரு அரசர்களுக்கும் இடையே போர் நடக்கும். அக்கல்வெட்டு கூறும் பேடு தீயன் அந்துவன் அப்படி நடந்த போரில் இறந்துள்ளான். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய பேடன் என்பதை அவனின் பெயரைக் கொண்டு அறியலாம். அப்பெயர் தீயன் அந்துவன் என னகர மெய் எழுத்தில் முடிவதைப் பாருங்கள். அந்த நடுக்கல்லுக்கு உரிய பேடு தீயன் அந்துவன் - சிகண்டி போல் ஒருவரே.

இனி ஔவையாரின் பாடலுக்கு வருவோம்.   
“.............  கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது”
என்று சொன்ன ஔவையார் சங்ககால ஔவையார் போல இறுமாப்பு மிக்கவர். கம்பரையே
“எட்டேகால் இலச்சணமே! ஏமனேறும் பரியே!” என்றெல்லாம் திட்டி கடைசியில்
“ஆரையடா சொன்னாயடா” என்று கேட்டவர்.
அவரா பெண்களைப் பேடு என்று சொல்லியிருப்பார்?

“அரிது அரிது மானிடராதல் அரிது”
பெண்ணில்லாமல் எப்படி மானிடராக முடியும்?  பெண், ஆண், பேடு மூன்றையும் பெற்றெடுப்பவள் பெண் தானே! அது மட்டுமல்ல உலக இயற்கையின் உயிர்ப்பிலே உயிர்கள் யாவும் தொடர்நடை போடுவதும் பெண்ணாலே. பண்டைய தமிழ் இலக்கியங்கள் மானுடப்பெண்ணை, பேடு என்று சொல்லவில்லை. ஔவையார் பெண்ணைப் பேடு என்றாரா? நான் சொன்ன தரவுகளைக் கொண்டு நீங்களும் சிந்தித்துப் பாருங்கள் உண்மை புரியும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment