Saturday 1 June 2013

பேடி யாச்சே என்னிலையே!


வந்தாறு முல்லை என்ற இடத்தில் வீரவாலிபன் ஒருவன் இருந்தான். அவன் அழகிய இளம் பெண் ஒருத்தி தெருவில் போவதைப் பார்த்தான். அவளது முகத்தைக் கூட அவன் பார்க்கவில்லை. அவளது பின்னழகே அவனை அவள் மேல் மையல் கொள்ள வைத்தது. அதனால் அவனின் ஆண்மை எல்லாம் போய்,  இப்போது அவள் பின்னே அலைந்து திரியும் பேடியாய்விட்டான்.

அவள் அவனைக் காதலிக்கவில்லையென்றால் அவனால் தவம் செய்வதற்குக்கூட வனவாசம் போக முடியாது. ஏனெனில் அவனிருக்கும் வந்தாறு முல்லை மிகப்பழைமை வாய்ந்த ஓர் ஊர். அங்கே மக்கள் நடமாட்டமே கூடுதலாக இருக்கும். அப்படியான ஊரில் வாழ்பவர்களால் உண்மையாக மனதை அடக்கி தவம் செய்ய முடியுமா? தவம் செய்வோம் என முயற்சித்தாலும் சுற்றுச்சூழல் அவனை முற்றுந்துறந்த முனிவனாகவிடுமா? எனவே அப்போதைய தனது நிலையை அவள் கேட்கவேண்டும் என்பதற்காக பாடிய நாட்டுப்பாடல்.

 வாலிபன்: சின்னாளம் பட்டு சேலகட்டி
                           தெருவால நீயும் சென்றாயே!
                 பின்னால பாத்த உன்னழகே
                           பேடி யாச்சே என்னிலையே!
                 வந்தாறு முல்ல காட்டுக்குள்ள
                           வனவாசம் போனா என்னாகும்?
                                          -  நாட்டுப்பாடல் (வந்தாறுமுல்லை)
                                                     - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

குறிப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வந்தாறு மூலை என அழைக்கப்படும் இடம் முன்னாளில் 'வந்தாறு முல்லை' என அழைக்கபட்டதை இந்த நாட்டுப்பாடல் சொல்கின்றது என நினைக்கிறேன். அந்நாளில் சின்னாளம் பட்டுச் சீலை வந்தாறு முல்லைக்கும் போயிருக்கிறது என்பதையும் இந்நாட்டுப் பாடலால் அறியலாம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment