Sunday 28 March 2021

சிந்தை திறைகொடுத்தேன்

இணுவில் கந்தசுவாமி கோயில் தேர்

 சித்திரத்தேரினில் சிரித்துநீ வரும்போது

   சிந்தை திறைகொடுத்தே னந்தா

உத்தரநாளினில் உத்தமா உனைக்காண

   எத்தரும் வருவாரோ எந்தா

இத்தரைவாழ்வினில் இருமையும் அருள்வாயின்

   இச்சைகள் இலதாகுஞ் சேந்தா

பத்தரின்நெஞ்சினில் பற்றியே இருப்பாயின்

   பழவினை மாளாதோ கந்தா

இனிதே,

தமிழரசி.

Thursday 25 March 2021

வந்தருள்வாய் கந்தா!



எந்தா எனக்கு இரங்காயோ
            என் மனத்தே யுனையிருத்தி
கந்தா கந்தா எனக் கூவிடினும்
            நின்செவி வன்செவி தானோ
முந்தா வினைகள் அறுப்பாயோ
            முன்னவனே அருட் கண்ணவனே
வெந்தா போகும் இவ்வுடல்
            வந்த ருள்வாய் கந்தா
இனிதே,
தமிழரசி.

Sunday 14 March 2021

குறள் அமுது - (145)



குறள்: இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

  பிழைத்தது ஒறுக்கிற் பவர்                                                                                       - 779


பொருள்: செய்த சபதத்தை முடிப்பதற்காகச் சென்று சாகும் வீரரை அது நடக்கவில்லை என இகழக்கூடியவர் யார்?


விளக்கம்: இத்திருக்குறள் படைச்செருக்கு என்னும் அதிகாரத்தில் உள்ள ஒன்பதாவது குறளாகும். போர் வீரர்களின் செருக்கையே படைச்செருக்கு என்பர். போர் வீரர்களுக்கு தமது வீரத்தின் மேல் இருக்கும் அளவுகடந்த நம்பிக்கையால் வருவதே படைச்செருக்கு. 

ஒரு செயலைச் செய்வேன் எனச்சூளுரைப்பது இழைத்தது எனக் கூறப்படும். தப்பாமல் முடிப்பேன் என்பதை இகவாமை என்பர். 

தப்பாமல் செய்து முடிப்பேன் எனச் சூளுரைப்பதை இழைத்தது இகவாமை என்றார். சூளுரைத்து போருக்குச் செல்லும் வழக்கம் பண்டைக் காலம் தொட்டு இருந்து வருகிறது.


பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் போருக்குப் புறப்பட முன்னர்

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி

மாங்குடி மருதன் தலைவன் ஆக

உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைக என் நிலவரை 

எனச் சூளுரைத்துச் சென்றதைப் புறநானூறு காட்டுகின்றது. சூளுரைத்துப் போருக்குச் செல்வோர் வெற்றி பெறுவதும் உண்டு. வீரமரணம் அடைவதும் உண்டு.


ஏன் சூளுரைத்துப் போர் செய்யச் சென்றனர்? மனிதவாழ்வின் தேவைகளை இன்பங்களை  மற்றவர்கள் சுரண்டும் போதும் அழிக்கும் போதும் நெஞ்சம் தொதிக்கின்றது. எடுத்துக்காட்ட தாயகத்தில் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதைக் கூறலாம். அச்செயல் இன மத வேறுபாடு அற்று அன்று வாழ்ந்த கற்றோர் மனதை எரித்தது.


இத்தகைய சீண்டல்கள் தமிழரை 

நல்லோர் இல்லாத் தொல்பதி வாழ்தலில் 

கொல்புலி வாழும் காடு நன்றே

என்னும் கோட்பாடு உடையவர்கள் ஆக்கியது. ஆம் இலங்கையும் ஒரு தொல்பதியே. மூவாயிரத்து இருநூறு வருடங்களுக்கு முற்பட்ட இருக்கு வேதத்தில் இலங்கையின் பெயரும் உண்டு. அத்தகைய பெருமை மிக்க தொல்பதியான இலங்கையில் நல்லோர் இன்மையாலேயே இந்நிகழ்வுகள் நடக்கின்றன.


ஓர் இனத்தின் பண்பாட்டை இழிவு படுத்திய பொழுதும் இனவழிப்புகளின் போதும் உண்டாகிய  மானமே சூளுரைத்து போருக்குச் செல்லத் தூண்டியது.  தம்மினதுக்காக சபதம் செய்து செல்வோரில் இறந்தோர் தொகை, வெற்றி அடைந்தோர் தொகையிலும் கூடுதாலாக இருப்பினும் அவர்களை யாரும் இகழ்ந்து பேசுவதில்லை.


எந்தச் செயலானாலும்

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்" - 664

என்ற உண்மையையும் திருவள்ளுவரே எமக்குக் கற்றுத் தந்துள்ளார்.

இனிதே,

தமிழரசி.


Friday 12 March 2021

ஆழ்கடலில் தத்தளித்த ஆறுமுகன்

பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் 18 வயதில் பயிற்சி பெற்ற ஆசிரியராகவும்
ஹோமியோபதி மருத்துவத்தில் தங்கப்பதக்கம் வென்றதையும் பார்த்து
அவரது அண்ணன் நீ மு தியாகராஜா அவர்கள் 1932ல் வெளியிட்ட 
POST CARD 


இயற்கையின் சீற்றம் பலரின் வாழ்க்கைப் பாதையைப் புரட்டிப் போடுவதுண்டு. அதுவே மிகச்சிலரின் வாழ்க்கையை புடம் போட்டு மிளிரவைப்பதும் உண்டு. பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களின் வாழ்க்கையை இயற்கையின் சீற்றம் மெருகூட்டியது.  1931ம் ஆண்டு ஆறுமுகன் அவர்கள் ஹோமியோபதி மருத்துவம் கற்பதற்காக இந்தியா சென்றிருந்தார். 1914ம் ஆண்டு பங்குனி மாதம் 12ம் திகதி பிறந்த ஆறுமுகன் அப்போது பதினேழு வயது இளஞன்.

அந்நாளில் புங்குடுதீவின் மிகச்சிறந்த சுழிகாரரான நாகனாதி என்பவரோடு வள்ளத்தில் புங்குடுதீவு திரும்பிய அன்று பெருஞ் சூராவளி வீசியது. 1931ல் வீசிய அச்சூராவளி தென்கிழக்கு ஆசியாவையே கதிகலக்கியது. அதில் சிக்குண்டு வள்ளம் உடைந்து கடலினுள் மூழ்க, கடலின் சுழியலையில் அகப்பட்டு தத்தளித்து குலதெய்வமான குமரவயலூர் முருகனை நினைத்துக் கதறினார். 

ஆறுமுகனின் கதறல் கேட்ட முருகன் என்ன செய்தார் என்பதை

ஆழிக்குள் வீழ்ந்தஎனைச் சுழியலை அமிழ்த்திட

அதல பாதால மருவியே

ஆசைக்கோர் மூச்சுவிட வழியின்றி அலையுண்டு

அதினின்று மேலேற நான்

வாழ்விக்க வேண்டுமென நின்பாத நம்பியே

வழிபட்டு அவல முற்றேன்

வானோர் தொழும்வள்ளலே மகரமீனாக வந்து

வாயினிற் பற்றி வந்தாய்

நாழிக்கொரு நெற்கொண்டு நானில வுயிர்காத்த

நங்கையுமை தந்த நாதா

நாதமுடிவான வொருசோதி நடராசர் பெற

வேதபொருள் ஓது குருவே

வாழிதிரு வடிகளென ஓதிமுனிவோர்க டொழ

வேல்கடவு வேத முதலே

வானவர்க் கரசந்தரு யானையும் குறவர்பெறு

மானையும் மணந்த பெருமானே

- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்

இப்பாடலில் பாடியுள்ளார். 



கூர்வாய் மகரமீன் ஒன்று அவரை வாயினிற் கவ்விவந்து பாலைதீவில் இட்டுச் சென்றதாம். மூன்றாவது நாள் மீனவர் துணையோடு மண்டதீவுக்குச் சென்று அங்கிருந்து புங்குடுதீவுக்குச் சென்றார். அதனால் அவரது இரண்டாவது அண்ணன் தியாகராஜா அவர்கள் ஒவ்வொரு வருடமும் பாலைதீவு அந்தோனியாருக்கு திருவிழா செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். [மேலே படத்தில் இளைஞனான ஆறுமுகனின் பக்கத்திலிருப்பவர்]. அவர் சொன்ன கூர்வாய் மகரமீன் டொல்பினாக [Dolphin] இருக்கலாம் என நினைக்கிறேன். அந்நிகழ்வை பண்டிதர் அவர்கள் பத்துப்பாடல் கொண்ட பத்தும் பதிகமுமாகப் பாடியிருந்தார். எனக்கு இப்பாடல் ஒன்றே கிடைத்தது.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் எதற்கும் பயப்படாத நெஞ்சத் துணிவுள்ளவராக இருந்தார். 

அஞ்சினர்க்குச் சதமரணம் அஞ்சாத நெஞ்சத்து

ஆடவனுக் கொருமரணம் அவனிமிசைப் பிறந்தோர்

துஞ்சுவரென் றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்கும்

துன்மதிமூடரைக் கண்டால் புன்னகை செய்பவன் நான்.

என்றபாடல் அவரின் மந்திரமாக இருந்தது.

சிறுவயதில் இருந்தே தன் குடியும் நாடும் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததால் 

 குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்

மடிதற்று தான்முந் துறும் 

என்னும் திருவள்ளுவன் வாக்குப்படி இயற்கையின் சீற்றமும் அரவணைப்பும் அவரைப் புடம்போட்டு மிளிரச்செய்தனவோ!

என் தந்தைக்கு சுழியோடக் கற்றுக் கொடுத்ததோடு கல்விகற்க வள்ளத்தில் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று வந்த சுழிகாரர் நாகனாதி பாடித்திரிந்த  வலச்சி மக வருவாளாஎன்ற நாட்டுப் பாடலை என் தந்தையின் 107வது பிறந்தநாளான இன்று புங்குடுதீவு உறவுகளுக்கு அறியத்தருகிறேன்.

ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!

பாட்டுப்பாட மனமிருக்கா! ஏலேலங்கடி ஏலேலோம்!

பாட்டுப்பாட மனமிருக்கு! பக்கதுணைக்கு யாரிருக்கா!

ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!

பக்கதுணைக்கு படகிருக்கு! ஏலேலங்கடி ஏலேலோம்!

பக்குவமாய் பாத்து துடுப்பு போடணுமே!

ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!

துடுப்பெடுத்து போடயில ஏலேலங்கடி ஏலேலோம்!

தூக்கும்ந்த கடலலய அடுத்தடுத்து மடக்கணுமே!

ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!

அடுத்தடுத்து மடக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்!

அள்ளிவரு மீனலய வலவீசி பிடிக்கணுமே!

ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!

வலவீசி பிடிக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்!

வலயறுந்து போகாம வாரி எடுக்கணுமே!

ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!

வாரி எடுக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்!

வாளமீனு வளத்திமீனு வகவகயாய் பிரிக்கணுமே!

ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!

வகவகயாய் பிரிக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்!

வலச்சிமக வருவாளா! வலகைய தருவாளா!

ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!

- நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)

இனிதே,

தமிழரசி.