Wednesday 30 September 2015

வாருங்கள் காத்திட!

அகிலஉலக சிறுவர்தினம் ஆனந்தம் கொண்டு
ஆடுகின்றோமா! மாறாய் நன்மக்களைப் பெற்றும்
மகிழமாட்டா அவலம் உற்றோமே! பிள்ளைகள்
மனமகிழ் நாளிதுவோ! சிறுவர் தமை 
அகிலமெலாம் சீரழிக்கும் சிறுமை சொல்லில்
அடங்காவே! முள்ளுமரக் காட்டில் எங்கள்
கோகிலங்கள் வாழுதே! கொன்றுதின்ன காத்திருக்கு
குள்ளநரிக் கூட்டமே! வாருங்கள் காத்திட!

காலையில் எழுந்து கடமையை முடித்து
கல்வி கற்றிடச் சென்றிடும் பிள்ளைகள்
மாலையில் வந்து மகிழ்ச்சி தருவார்
மாலையும் போச்சு! மரணமே ஆச்சு!
சாலையின் ஓரம் கிடந்த தென்றும்
சாக்கடை நீரில் மிதந்த தென்றும்
சீலையில் சுற்றி சீரெனத் தரும்
சேதியைக் கேட்டு வேகுது நெஞ்சம்!

மானுடப் பண்பு தொலைந் ததுவோ!
மாட்சிமை பெற்றிட வழி எதுவோ!
ஊனுடல் நொந்து உழைத் துழைத்து
உவகை மறந்த மானுடர் நாம்
மானுட இன்ப நுகர்ச்சிலே நல்  
             மக்களைப் பெற்று மனங் களித்தோம்
தேனுடற் செல்வ மக்களைத் தினம்
தினம் காத்து வளர்த்தல் கடமையன்றோ!

கடமையை மறந்து காசுக்கு அலைந்து
காசினி எங்கும் காற்றெனச் சுழன்று
உடமைகள் தேடி உறவுகள் மாள
ஊரையும் தொலைத்து உணர்வை இழந்தும்
மடமையை உணரா மமதை தன்னால்
 மக்களை இழக்கும் நிலை அடைந்தோம்
உடமையுள் உடமையாம் மக்கட் செல்வ
உடமையைக் காக்க வழி சமைப்போமா!

பெருமையும் சிறுமையும் பிறர்தர வாராதாயினும்

பெற்றார் உற்றார் குருதரவரு மாதலால் 
சிறுமையை நீக்கி செழுமை ஊட்ட
சிறுமைகள் உற்ற சிறுவரே எனினும்
வெறுமையை போக்க வேண்டிய அன்பை
வேண்டிய அளவு ஆதரித் தணைத்து
பொறுமையைக் காட்டி காத்திடல் உற்றார்
பெற்றார் ஊரார் உலகோர் பொறுப்பன்றோ!

இல்லிடம் தன்னில் வலைத்தளம் ஊடாய்

இரவு பகலாய் இரகசியம் பேணி
செல்லிடப் பேசி துணையுடன் கூடி
சிரித்து மகிழும் சிறுவர் தம்மை
மெல்லிய சொல்லில் நயமுடன் கடிந்து
மனநலம் காத்து மகிழ்வினை ஊட்டி
கல்வி கற்றிடக் கற்றிடக் கனியும்
கவின் அழகை  காட்டிட வாரீர்!
                                                -  இனிதே,
                                                      தமிழரசி. 

Tuesday 15 September 2015

நல்லை கந்தன்!


நல்லை கந்தன் நயனம் கண்டேன்
நாளும் எம்மை நயத்தல் கண்டேன்

முல்லை முறுவல் முகமும் கண்டேன்
மாளும் எம்மை முகத்தல் கண்டேன்

தொல்லை தவிர்த்து ஆள்தல் கண்டேன்
தாழும் எம்மை தாங்கல் கண்டேன்

எல்லை இல்லா இன்பம் கண்டேன்
ஏழை எமக்கு அருளல் கண்டேன்

வல்லை வந்த வடிவேல் கண்டேன்
வாழ்வாய் எம்முள் வாழ்தல் கண்டேன்
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
நயத்தல் - விரும்புதல்
மாளும் - அழியும்
முகத்தல் - மணத்தல்
தொல்லை - துன்பம்
வல்லை - விரைந்து