Saturday 29 October 2022

ஏழையர் நெஞ்சின் எந்திழையாள்


ஆரணம் போற்றிடும் ஆரணியாள் - அவள்

  நாரணன் நம்பி சோதரியாள்

காரணம் காரியம் தானறிவாள் - நல்ல

  காரியம் யாவிலும் கைதருவாள்

பூரணப் பொற்குடம் ஏந்திடுவாள் - உயர்

  பொன்மலைப் பிறந்த பார்வதியாள்

ஏரண நூலின் நுட்பொருளாள் - இங்கு

  ஏழையர் நெஞ்சின் ஏந்திழையாள்

இனிதே,

தமிழரசி.

சொல்விளக்கம்:

ஆரணம் - வேதங்கள்

பூரணம் - நிறைந்த

பொன்மலை - இமயமலை

ஏரணம் நூல் - தர்க்க நூல்

நுட்பொருளாள் - நுட்பமான கருத்தாவாள்

ஏந்திழையாள் - உயர்ந்த சிறப்புகளுக்கு காரணமாக விளங்குபவள்

Thursday 27 October 2022

ஓடமது ஆடிவரும்


ஓடிவரும் செம்புனலில்
            ஓடமது ஆடிவரும்
பாடிவரும் பச்சைக்கிளி
            பச்சைமலை தேடிவரும்
ஆடிவரும் அழகுமயில்
            ஆனந்தமாய் ஓடிவரும்
நாடிவரும் பெண்மயிலும்
            நாணமதைக் காட்டிவரும்
இனிதே,
தமிழரசி.

Sunday 9 October 2022

பயிற்றுவாய் அவர்தமையே!


தண்ணளியே மின் ஒளியாய்

  தாரணிக்குத் தந்துதவும்

விண்ணளியே நீள் விசும்பின்

  வான்மழைபோல் வரந்தரவே

கண்ணளியைக் கண் காட்ட

  கலங்குவார் கருத்துநிறை

பண்ணளியாய் வந்தமர்ந்து

  பயிற்றுவாய் அவர்தமையே

இனிதே,

தமிழரசி.

சொல்விளக்கம்:

தண்ணளியே - கருணை மிகுதியே

மின் ஒளியாய் - மின்னும் சூரியஒளியாய்

தாரணிக்கு - உலகிற்கு

விண்ணளியே - விண்ணின் அருளே

நீள் விசும்பின் - பெரிய மேகத்தின்

கண்ணளியை - கண்ணின் அருளைக்

கலங்குவார் - அருளுக்காக ஏங்குவார்

கருத்துநிறை - எண்ணத்தில் நிறைந்து

பண்ணளியாய் - பண்பாடும் வண்டாய் [தேனியாய்]

பயிற்றுவாய் - ஆனந்த தேனாகிய முத்தியின்பத்தைக் கற்பிப்பாய். 

Saturday 1 October 2022

காற்சிலம்பு தந்த பரிசு

 

இயற்கை வளத்தை அள்ளித்தெளித்து ஓடிக்கொண்டிருந்தது காவிரி எனும் பொன்னி நதி. அதனால் சோழநாடு சோறுடைய நாடாக இருந்தது. நாட்டிலோ சோற்றுக்கு பஞ்சம் இல்லை. ஆனால் மனிதமனங்கள் இருண்டு கிடந்தன. உண்மையான புலமைக்கு - கல்விக்கு மதிப்பில்லை. கம்பனுக்கோ இளம் வயது. எப்படியோ சோழ அரண்மணையில் அவைப்புலவரில் ஒருவராக இடம் பிடித்திருந்தார். அவைக்களப் புலவரிடையே இருந்த வித்துவக் காச்சல் அவரை தலைதூக்க விடவில்லை. சோழ அரசனோடு கொண்ட கருத்து வேறு பாட்டால் அவனைப் பார்த்து

காதம் இருபத்து நான்கொழியக் காசினியை

ஓதக்கடல் கொண்டு ஒளித்ததோ - மேதினியில்

கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா நீமுனிந்தால்

இல்லையோ எங்கட்கு இடம்

- கம்பர் தனிப்பாடல்

எனப்பாடி, சோழநாட்டைவிட்டு புறப்பட்டார்


கால் போனபோக்கில் சென்றார். நடந்த களைப்பும் பசியும் அவரை வாட்டியது. செல்லும் ஊர்களில் எதிரே வருவோரிடம், அங்கு வேலை கிடைக்குமா? எனக்கேட்பார். அவரைப் பார்த்தோர் சிரித்து நழுவிச் சென்றனர். அவரது தோற்றம் கூலிவேலை செய்பவர் போல இருக்கவில்லை. கடைசியாக ஒருவன், ‘அடுத்த ஊரில் வேலி என்பவள் சுவர்கட்ட கூலியாள் தேடினாள் போய்ப்பார்என்றான். கம்பரும் அவள் வீடுதேடிச்சென்றார்.


அவளும் இடிந்து கிடந்த சுவரைக்கட்ட கூலியாக நெல் தருவதாகக் கூறினாள். கம்பர் சுவரைக்கட்டுவார் கட்டி முடியும் வேளையில் சுவரிடிந்து விழும். மீண்டும் மீண்டும் கட்டக்கட்ட சுவரும் இடிந்திடிந்து வீழ்ந்தது. பசியால் சோர்ந்து படுத்தார். வேலி சுவரைக்கட்டும்படி கம்பரை எழுப்பினாள். பசிமயக்கத்துடன் 

மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட்டு இங்குவந்து

சொற்கொண்ட பாவின் சுவையறிவார் ஈங்கிலையே 

விற்கொண்ட வாணுதலாள் வேலிதருங் கூலி

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே

- கமபர் தனிப்பாடல்

என்ற பாடலை சரஸ்வதியை நினைந்து நினைந்து பாடியபடி சுவரைக் கட்டினார். சுவர் இடிந்து விழாதிருந்தது. சுவர் இடியாததைப் பார்த்த வேலிக்கு பெரும் வியப்பு. எத்தனை காலமாக எத்தனை பேர் கட்டினார்கள் அந்தச்சுவரை. வியப்பின் எல்லையில் கம்பரை, நீங்கள் யார்? எனக்கேட்டு அறிந்தாள்.  அவளது மகிழ்ச்சி கம்பரின் வயிற்றுப் பசியைப் போக்கியது. 


இப்படி பல இடங்களில் கூலிவேலை செய்தும் உடுத்த உடை அழுக்கானால் துணி வெளுப்போரிடம் அதைக் கொடுத்து அவர்களைப் பாடியும் பாண்டி நாடு நோக்கி நடந்தார். அப்படிப் போகையில் அவரது தலைமயிரும் மீசையும் தாடியும் வளர்ந்திருந்தது. அந்தக் கோலத்தில் பாண்டிய அரசனிடம் போக முடியாது. அதனால் முடிதிருத்துவோன் ஒருவனிடம் சென்றார். அவனிடம் நட்பாகி தன்னை ஆணழகன் ஆக்கிக்கொண்டார். அவனுக்கும் ஒரு பாடலை எழுதிக்கொடுத்தார்.


பாண்டிய அரசனிடம் அடைப்பக்காரனாக [அரசனுக்கு வெற்றிலையுடன், பாக்கு, சுண்ணாம்பு, கராம்பு, காசுகட்டி போன்றவற்றை வைத்து மடித்துக் கொடுப்பவனாக] வேலைக்கு அமர்ந்தார். பாண்டிய அரசசபையில் ஒவ்வொருநாளும் கம்பராமாயண விரிவுரை நடந்தது. கம்பரும் பாண்டிய நாட்டுப்புலவோரின் விரிவுரையைக் கேட்டு மகிழ்ந்தும், வியந்தும், முகத்தை சுழித்தும் தன் மனநிலையை வெளிப்படுத்தியபடி இருந்தார். 


கம்பரின் செய்கையைக் கண்ட பாண்டியன், ‘கம்பராமாயணம் தெரியுமா?’ என்று கம்பரைக் கேட்டான். 

நான் கம்பரிடம் அடைப்பக்காரனாக இருந்தேன். கம்பர் சொன்னவற்றைக் கேட்டிருக்கிறேன்என்றார். 

பாண்டிய அரசனும்இன்றிலிருந்து நீயே கம்பராமாயணத்தை விரிவாக விளக்கிச்சொல்என்றான்.


அதனைக்கேட்ட அவைப்புலவோரின் முகங்கள் ஓடிக்கறுத்தன. ஆனால் பாண்டிய நாட்டு அரண்மைனையில் இருக்கும் அடைப்பக்காரனின் கம்பராமாயண விரிவுரை தமிழ்நாடு எங்கும் மெல்லப் பரவியது. காற்றோடு காற்றாக கம்பரின் நண்பனான முடிதிருத்துபவன் காதுக்கும் எட்டியது.  அடைப்பக்காரனாக இருப்பவன் தனது நண்பன் என நினைத்த அவன் பாண்டியநாட்டிற்கு வந்தான். ஏனெனில்  நண்பன் என்றமுறையில் அவனுக்கும் கம்பர் வெற்றிலை மடித்துக் கொடுத்திருக்கிறார்.


பாண்டிய நாட்டில் கம்பரைத்தேடி அலைந்து கடைசியில் கம்பர் எழுதிக்கொடுத்த பாடலை அவைப்புலவர் ஒருவரிடம் காட்டி கம்பரின் இருப்பிடத்தை அறிந்து அங்கு சென்றான். அங்கே கம்பரைக் கண்டு மகிழ்ந்துபாண்டிய அரசனுக்கு முடிதிருத்தும் வேலையை தனக்கு வாங்கித்தரும்படி கேட்டான். அவரும் அவ்வேலையை வாங்கிக் கொடுத்தார். அவனும் கம்பனோடு இருந்தான்.


முடிதிருத்துபவனின் பாடலைப் படித்த அவைப்புலவர் மற்றப் புலவர்களுக்கு அவனை அடைப்பக்காரனின் தம்பி என்று சொன்னார். அவைப்புலவருக்கு பாடலின் கடைசி இரண்டு அடியும் தெரிந்ததால்

தென்புலியூர் மேவும் சிவனருள்சேர் அம்பட்டத்

தம்பிபுகான் வாசலிலே தான்

மற்றவர்களுக்கும் அவ்வடிகளைச் சொன்னார். அது ஒரு சிலேடைப் பாடல் [இருகருத்தைத் தரும் பாடல்]. அதில் சிதம்பரத்தில் வாழ்ந்த தம்பிபுகான் எனும் மருத்துவனையும் புகழ்ந்து கம்பர் எழுதியிருந்தார். படித்து பட்டம் பெறுகிறோம் அல்லவா? பாண்டித்தியம் பெற்றவரை பட்டர் என்பர். பாடலின் உட்கருத்தை அறியாத அவைப்புலவோர் அம்பட்டத்தம்பி இருப்பதைக் கண்டு மனங்கொதித்தனர். 


முடிதிருத்துபவனுக்கு வேண்டிய அளவு பொருளை அள்ளிக் கொடுத்தனர். அவனை அடைப்பக்காரனின் தம்பி என அரசனிடம் சொல்லவைத்தனர்.

அரசனும்முடிதிருத்துபவன் உன் தம்பியா?’ எனக் கேட்க, அடைப்பக்காரரும்ஆம்எனத்தலை ஆட்டினார்.


அவர் மறுநாட்காலையில் அரசனிடம் ஒரு காற்சிலம்பைக் கொடுத்தார்அந்தக் காற்சிலம்பின் அழகும் அது செய்யப்பட்ட நேர்த்தியும் கண்ட பாண்டிய அரசன், ‘இவ்வளவு பெறுமதியான கற்சிலம்பைப் பார்த்ததில்லை! என வியந்தான். 

எப்படி இந்தச் சிலம்பு உன்னிடம் வந்தது? மற்றச்சிலம்பு எங்கே? என்று கேட்டான்.

அடைபக்காரரும்பரம்பரையாக அடைப்பக்காரராக இருப்பதால் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன் அன்றைய அரசர் பரிசாகக் கொடுத்த காற்சிலம்பு இது. முன்னோர் சொத்தைப் பிரித்தபோது மற்றச்சிலம்பு தம்பிக்குப் போய்விட்டது என்றார். 

முடிதிருத்துபவனை அழைத்து காற்சிலம்பைக் கேட்க, அவன் தான் அடைப்பக்காரரின் தம்பி இல்லை என்பதையும் அவைப்புலவோர் தந்த பொருளுக்கு ஆசைப்பட்டு பொய் சொன்னதாகச் சொன்னான்.


அரசனின் கையிலிருப்பது சரஸ்வதியின் காற்சிலம்பு என அடைப்பக்காரர் கூறினார். 

அரசனால் அதை நம்பமுடியவில்லை. ‘ஒற்றைச்சிலம்புடன் சரஸ்வதி இருப்பாரோ!’ எனச் சிரித்து, ‘மற்றக் காற்சிலம்பை என் முன்னர் சரஸ்வதி தருவாரா?’ எனக்கேட்டான்.

சரஸ்வதி வருவார். தருவார்என்றார், அடைப்பக்காரர்.

கல்லிலிருந்து வெளிப்பட்டு வருவாரா?’ எனக்கேட்டான் பாண்டிய அரசன்.

ஆம்! கல் வைக்கும் இடைத்தை சந்தனத்தால் மெழுகி குங்குமத்தால் கோலமிட்டு வையுங்கள்என்றார் அடைப்பைக்காரர்.

அப்படியே!’ என்ற அரசன் எழுந்து சென்றான்.


கொழுமண்டபத்தில் சந்தனத்தால் மெழுகி குங்குமத்தால் கோலமிட்டு அதன் நடுவே வெண்பளிங்குக்கல் மீது மல்லிகைபூக்கள் தூவியிருந்தது.

அடைப்பக்காரர் கணீரென்ற குரலில்ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை என்று சரஸ்வதி அந்தாதியின் முதலாவது காப்புச் செய்யுளைப் பாடத்தொடங்கினார்.  அடுத்து இரண்டாவது காப்புச் செய்யுளாக

படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ்பூந் தாமரைபோற் கையும் - துடியிடையும்

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்

கல்லும் சொல்லாதோ கவி

அடைப்பைகாரர் கல்லும் சொல்லாதோ கவி என பாடி முடிக்கும் போது வெண்பளிங்குக் கல்லில் இருந்து ஓர் ஒளிக்கீற்று எழுந்தது. அது அக்கல்லின் மேல் சரஸ்வதியாக ஒற்றைக்காற் சிலம்புடன் அடைப்பக்காரரான கம்பன்முன் அமர்ந்திருந்தது.

சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலாசனத் தேவி

செஞ்சொல் தார்தந்த என்மனத் தாமரையாட்டி 

என்று சரஸ்வதி அந்தாதியைப் பாடத்தொடங்கினார்


மூன்றாவது பாடலில்

உரைப்பார் உரைக்கும் கலைகள் எல்லாம் எண்ணில்

உன்னையன்றித் தரைப்பால் ஒருவர் தரவலரோ தண்

தரளமுலை வரைப்பால் அது தந்து இங்கெனைவாழ்வித்த

மாமயிலே விரைப்பாசடை மலர்வெண் தாமரைப்பதி மெல்லியலே

என சரஸ்வதி தன்னை வாழ்வித்த பாங்கை குறிப்பிடுகிறார்.


பதினொராவது பாடலில்

ஒருத்தியை ஒன்றும் இலா என்மனத்தின் உவந்து தன்னை

இருத்தியை வெண்கமலத்து இருப்பாளை எண்ணெண் கலைதோய்

கருத்தியை ஐம்புலனும் கலங்காமல் கருத்தை யெல்லாம்

திருத்தியை யான்மறவேன் திசைநான் முகன் தேவியையே

ஒன்றுமில்லா தன் மனதில் மகிழ்ந்திருந்து திருத்தியதை மறவேன் என்கிறார்.


சரஸ்வதி அந்தாதியிலே உச்சம் தொடும் பாடல் பதின்மூன்றாவது பாடலாக இருக்கின்றது. கம்பர் காட்டும் வேதம் என்பது இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதங்கள் அல்ல. சிந்தையின் ஊடே புகுந்து இருள்கற்றிக் கலைமாது உணர்த்த உணர்ந்த வேதம். எத்தனை பெரிய உண்மை.

புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்து இருளை

அரிக்கின்றது ஆய்கின்ற எல்லா அறிவின் அரும் பொருளைத்

தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்து முற்ற

விரிகின்றது எண்ணெண் கலைமாது உணர்த்திய வேதமே


யாருக்கு ஒளியாய் யாருக்கு இருளாய் சரஸ்வதி விளங்குவாள் என்பதை

அருளாய் விளங்கு மவர்க்கு ஒளியாய் அறியாதவர்க்கு

இருளாய் விளங்கும் நலங்கிளர் மேனி இலங்கிழையே

என்றவர் இருபத்தொன்பதாவது பாடலில்

புரியார்ந்த தாமரையும் திருமேனியும் பூண்பனவும்

பிரியாது என்நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே

திருமேனியும் பூண்பனவும்எனப்பாடும் பொழுது சரஸ்வதி எழுந்து தன் காற்சிலம்பு இல்லாத காலை நீட்ட அரசனிடம் இருந்த சிலம்பு மறைந்தது.

கம்பரும் அழியாப்பெரும் சீர்தருமே என சரஸ்வதி அந்தாதியைப் பாடி முடித்தார்.

பாண்டிய அரசனும் கம்பன் தனக்கு அடைப்பக்காரராய் இருந்ததை எண்ணி மனங்கலங்கினான்.

சரஸ்வதியின் காற்சிலம்பு தந்த பரிசே கம்பனின் சரஸ்வதியந்தாதி.

இனிதே

தமிழரசி.