Sunday 26 September 2021

வித்தகநெஞ்சனே வர்ண ராமேஸ்வரா!


தத்துவப்பாடலும் ஈழத் தனித்துவப்பாடலும்

  தந்தனை என்பது நின்புகழோ

இத்தரைமீதினில் தன்புகழ் நிறுத்திட

  தத்தித் தரிகிட போடுவாரிடையே

வித்தகநெஞ்சனே வர்ண ராமேஸ்வரா

  வையகம் யாவுமே நின்புகழானதே

வித்துவக்காச்சலுக்கு அப்பால் ஆனவா

  வியலகம் சென்றது விந்தையிலவே!

இறப்பும் பிறப்பும் எவர்க்கும் பொதுவே. எதற்காக வாழ்ந்தோம் என்னும் தன்மை முகம் தெரியாதோரையும் விரும்பவைக்கும். தன்முகம் அறியாதோரையும் விரும்பவைத்த இசையாளன். இன்று உலகில் உள்ள தமிழ் நெஞ்சங்கள் அவருக்காக மனம் நொந்து துடிக்கின்றன. இந்த இசையாளனின் குரல்தாயகக் கனவினைபலரின் நெஞ்சில் நிலைக்க வைத்தது. பாடல்களின் கருத்தின் ஆழம் பல நெஞ்சங்களை அழவைத்து சிந்திக்கச் செய்தன. அதனால் அறிவாலும் உணர்வாலும் வர்ணராமேஸ்வரனின் இசையோடு கலந்தவர் பலராவர். பாடலை எழுதி, பாடி, வயலின், வீணை, மிருதங்கம், Keyboard போன்ற இசைக் கருவிகளை வாசித்த பன்முகக் கலைஞன்.

யாழ் இராமநாதன்கல்லூரி நுண்கலைக்கூட இசை ஆசிரியர் வர்ணகுலசிங்கம் அவர்களின் மகனாய்ப் பிறந்து யாழ்பல்கலைக்கழகத்தில் இசை விரிவுரையாளராய் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்த அன்பும் பண்பும் நிறைந்த இசையாளன் இயற்கையுடன் இசைந்ததுவும் பொலிவு தானோ?

இனிதே,

தமிழரசி