Friday 1 May 2020

புங்குடுதீவின் அடப்பனான், மணியகாரர் இருவரும் யார்?

புங்குதீவின் கடலினுள் இருக்கும் உயிருள்ள பவளப்பாறை
பேரன் மயன் பார்க்கிறார்


இன்றைய புங்குடுதீவின் கடற்கரை எங்கும் சிப்பியும் சோகியும் சங்கும் உடைந்து சிறு சிறு சிதலங்களாய் விரவிக் கிடக்கின்றன. இன்று மட்டுமல்ல காலங்காலமாக விரவிக்கிடக்கும் அந்தச் சிதலங்களைப் பார்த்ததுண்டா? உங்கள் கால்களை நெருடும் போது அவை சொன்னது என்ன?

இறந்த பவளப்பாறைகள் மட்டும் அல்ல உயிருள்ள பவளப்பாறைகளும் அங்கு இருப்பதை என் புங்குடுதீவு உறவுகளில் எத்தனை பேர் அறிவீர்கள்? எம்மூரின் பவளப்பாறைகள் உங்களில் எவருக்காவது ஏதாவது சேதி சொன்னதுண்டா? யாராவது அவை ஏன் இருக்கின்றன என எப்போதாவது எண்ணிப் பார்த்தீர்களா? சிப்பித்துறை எங்கே போயிற்று? நாம் ஏன் சிப்பித்துறையை மறந்தோம்? அங்கிருந்து முத்தும் பவளமும் எகிப்துக்கும் ரோமுக்கும் சென்றதே!

இவற்றை நாம் தெரிந்து கொள்வதற்குக் காரணமாக வாழ்ந்த அடப்பனானும் மணியகாரரும் எங்கே? புங்குடுதீவில் அடப்பனான், அடப்பனான் வளவாகவும், மணியகாரர், மணியகாரர் வளவாகவும் இன்றும் வாழ்கின்றனர் என்பது தெரிகின்றது. அவர்கள் யார்? அவர்களின் சந்ததியினர் எவராவது புங்குடுதீவில் அல்லது உலகின் எந்த மூலையிலாவது வாழ்கின்றீர்களா? இருப்பீர்களேயானால் எனக்கு அறியத் தாருங்கள். நான் எழுதும் புங்குடுதீவின் வரலாற்று நூலுக்கு மிகவும் வேண்டிய செய்தியை உங்களிடம் பெறவேண்டும். 

இனிதே,                                                                                         

தமிழரசி.