Saturday 31 December 2022

வாழிய என்றே 2023ஐ வரவேற்போம்


எந்தமிழர் எங்கும் ஏற்றமாய் வாழ

  எம்நெஞ்சி லன்பும் இன்பமும் பெருக

சொந்தமும் பந்தமும் சேர்ந் தணைக்க

  செவ்விதழ் மலர சிரித்திடும் பாலகர்

தந்தனத் தோம் என்று பாட்டிசைக்க

  தளிர் மேகம் தண்மழை தூவ

வந்தனம் கூறி வாழிய என்றே

  வந்திடும் புத்தாண்டை வரவேற்போம்

இனிதே,

தமிழரசி.

Thursday 22 December 2022

நுடங்கும் ஒளியே!


சிற்றம்பலவா என்று நின்சீரடியே நம்பி

சிந்தித் திருப்போர்தம் சிந்தையுள்ளே

முற்றுமுழுதாய் நிறைந்து மூர்த்தியுன் வடிவு

மொய்ப்புடன் காட்டும் மென்னியலே

வற்றாயின்ப வெள்ளத்து ஆழ்த்தி வாழ்விக்கும்

வாழ்வே வாராநெறி தனையேஎ

கற்காமுறையிற் கற்றிடவைக்கும் கற்பனைப் பொருளாய்

காண்பதற்கரிதாய் நுடங்கும் ஒளியே!

இனிதே,

தமிழரசி.

சொல்விளக்கம்:

மொய்ப்பு - பெருமிதத்துடன் ஆன வலிமை

மென்னியல் - மென்மையான இயல்பு

வாராநெறி - மீண்டும் பிறந்து வராத வழி

கற்காமுறை - கற்று அறியாத முறையில்

கற்றிட வைக்கும் - கற்க வைக்கும்

நுடங்கும் - நுட்பமாக ஒடுங்கும்

Friday 9 December 2022

வாழும் உலகிற் பறப்போம்


கூவும் குயில் குரலில் கண்கள் மெல்ல விழித்து

கன்னித் தமிழ் பாடல் கவிதை தனைச் சுவைப்போம்

மேவும் கதிர் ஒளியில் மேயும் கன்றைப் பார்த்து

மெல்லப் போய் அணைத்து முத்த மிட்டு மகிழ்வோம்

தாவும் முயல் பின்னால் தயங்கித் தயங்கிச் சென்று

தளிரைக் கொஞ்சங் கொடுத்து தின்னு மழகை ரசிப்போம்

வாவும் வண்ணப் பூச்சி வண்ணந் தனை வரைந்து

  வட்ட மிட்டுத் திரிந்து வாழும் உலகிற் பறப்போம்

இனிதே,

தமிழரசி.

சொல்விளக்கம்:

மேவும் - பரவுதல்

தாவும் - தாவிப் பாயும்

வாவும் - அசைதல்/பறத்தல்/பாய்தல்

குறிப்பு:

பேத்தி மகிழினி பாடியாடித் திரிய எழுதியது.

Saturday 3 December 2022

புங்கைவாழ் பெருமாட்டியே!

புங்குடுதீவு கண்ணகி அம்மன் 


எண்ணங்கள் பலவுடைய

ஏழையர்க்கு அருளவென்றே

வண்ணங்கள் பலவுடைய

வனங்களைப் படைத்தவர்க்கு

உண்ணவுணவு அளித்து

உவந்து காக்குமெம்

பெண்ணவளே கண்ணகியே

 புங்கைவாழ் பெருமாட்டியே!

இனிதே,

தமிழரசி.