Sunday, 5 May 2013

என்னில் யாரும் எனக்கினியாரில்லை!

 பக்திச்சிமிழ் - 54

பாரதியார் தாம் பிராமணராக இருந்தும் நம் தமிழ்ச்சாதியைப் பார்த்து 
“பார்ப்பானை ஐயன் என்ற காலமும் போச்சே”
எனப்பாடி ஒரு நூற்றாண்டாகியும் நாம் இன்னும் விடாப்பிடியாக ஐயர்மார் கால்களில் விழுந்து எழும்புகின்றோம். இன்றைய ஐயர்மாரின் முன்னோரை, நம் தமிழ் முன்னோர் ஏன் ‘பார்ப்பான்’ என அழைத்தனர் என்பதை தமிழர்களாகிய நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். 1951ல் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தமிழ்விழா ஒன்று நடைபெற்றது. அதில் இலங்கை, இந்திய அறிஞர்கள் கலந்து கொண்டனர். பண்டிதர்  மு ஆறுமுகன் (எனது தந்தை) பார்ப்பானை அய்யன் என்ற காலமும் போச்சேஎன்ற தலைப்பில் தனது உரையை நிகழ்த்தினார்.

அப்போது அவர், ‘நான் பார்ப்பனருக்கு எதிரியல்ல. தமிழுலகம் சங்ககாலத் தமிழரின் வாழ்வியலின் உண்மையை அறியவேண்டும் என்பதற்காகவேபார்ப்பானை அய்யன் என்ற காலமும் போச்சேஎன்ற தலைப்பை எனது கருப்பொருளாக எடுத்தேன்.
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த 
வளைகளைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன
என்ற அகநானூற்றுப் பாடல் வரிக்கு பொருள் கூறுவோர் பலர், வேளாளப் பார்ப்பனர் எனவும், யாகம் பண்ணாத ஊர்ப்பார்ப்பான் எனவும் கூறி, சங்க காலத்தில் பார்ப்பனர் சங்கு அறுத்ததற்கு காரணம் கூறி மழுப்புகிறார்கள். அப்பாடலின் பொருள் மிகத்தெளிவாகவே உள்ளது. ‘வேளாப்பார்ப்பான்என்ற சொல்லே சங்ககாலத்தில் பார்ப்பனர் என்ன தொழில் செய்தார்கள் என்பதை சொல்கிறது. வேள் + + பார்ப்பான் = வேளாப்பார்ப்பான். வேள் என்றால் வேள்வி, ஆ என்பது பசு. வேள்விக்கு வேண்டிய பசுவைப் பார்த்தவனே வேளாப்பார்ப்பான். மேற்பார்வையாளர் என்றும் கண்காணி (கங்காணி) என்றும் சொல்வதைப் போன்றதே பார்ப்பான். அது அவர்களது தொழில், சாதி அல்ல. அப்படி வேள்விப் பசுவைப் பார்த்த பார்ப்பானுக்கு வேள்விப்பசு சொந்தமானது அல்ல. அவன் பார்க்கும் பசுக்கள் எல்லாம் ஒருநாள் வேள்வித்தீயில் வெந்து நீறு ஆகிவிடும். அப்போது அவன் வாழத் தொழில் வேண்டாமா? உயிர்ப் பசுவை வேள்வித்தீயில் இடும் பார்ப்பானுக்கு, அரத்தால் சங்கை அறுத்து சங்கின் தலையை வேறாக்கும் தொழில் செய்வது கடினமா?’ எனப் பேசிக்கொண்டிருந்தார். அவர் கூறிய உரைப்பொருத்தங் கண்டு அறிஞர் மு வரதராசன் அவர்கள் எழுந்து பண்டிதர் ஆறுமுகனாரைக் கட்டித் தழுவியமை உண்மை வரலாறு, என வித்துவான் சி ஆறுமுகம் ஈழநாடு பத்திரிகையில் பண்டிதர் இறந்த பொழுது எழுதி இருந்தார்.

இந்த அகநானூற்றுப் பாடலைவிட, பார்ப்பனர் என்ன தொழிலைச் செய்தனர் என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா? சங்ககாலப்புலவரான நக்கீரரை பிராமணராகக் கருதி ‘சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்?‘ எனக்கேட்டதாக திருவிளையாடல் படத்தில் காட்டிய காட்சியை உங்களில் பலர் பாத்திருப்பீர்கள். சங்ககாலப் பிராமணர் சங்கறுத்து வளையல் (காப்பு) செய்ததை இவை காட்டவில்லையா?

ஆனால் நம்மில் பலர், இன்று பிராமணர்கள் யாவரையும்  தெய்வப்பிறவிகள் என்று எண்ணி அவர்கள் சொற்களை வேதவாக்காக ஏற்றுக்கொள்வதும், அவர்களே கோயிலிலுள்ள சிலைகளைத் தொடத் தகுதியானோர் என நம்பி அவர்கள் கால்களில் வீழ்ந்து எழும்புவதும் அவற்றை பெருமையாகப் பேசுவதும், பார்க்கப் பார்க்க உலகிற்கு நாகரிகத்தை அள்ளி வழங்கிய தமிழரா நாம் என எண்ணி மனம் வேகின்றது? தமிழர்களே! நாம் நம் வருங்காலச் சந்ததியினருக்கு இச்செயலையா தற்காலத் தமிழனின் நாகரிகம் எனவிட்டுச் செல்லப் போகிறோம். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

 திருநாவுக்கரசு நாயனார் சொன்னது போல 
“ஆவுரித்துத் தின்னும் புலையரேனும் 
          அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!”
என்பது முற்றும் முழுவதும் உண்மையாகும். ஆனால் பிராமணனர்களாகிய தாமே மற்ற மனிதரைவிட சாதியில் உயர்ந்தவர்கள் என மமதையில் நிற்போரின் கால்களில் விழுந்து எழுவது எந்தவகையில் சரி என்பதை நாமே முடிவெடுக்க வேண்டும்.

‘தெய்வம் உண்டென்று இரு’ என்பதை முழுமையாக நம்புபவள் நான். அதில் எனக்கு எதுவித கருத்து வேறுபாடும் இல்லை. நம் தமிழ் மூதாதையர் சொன்ன கடவுள் கொள்கையை கடைப்பிடிப்பவள் நான். அவர்களது கடவுட்கொள்கையின் உண்மையை உணர்ந்தவள் என்ற வகையிலேயே நம்மவர் நிலையை கோயில்களில் பார்த்ததால் எழுதுகிறேன்.

நாம் ஒன்றை உணர்ந்து கொள்ளவேண்டும். உலக உயிர்கள் யாவும் உயிர் என்னும் தன்மையில் ஒன்றே தான். அதிலும் மனிதர்களாக இருக்கும் நம் உயிர் - ஆன்மா எப்படி ஆளுக்கு ஆள் வேறுபடும்? அப்படி வேறு படுத்துவது மடமை ஆகாதா? ஆன்ம ஈடேற்றம் ஆளுக்கு ஆள் வேறுபடலாம், ஆன்மா ஒன்றே தான். குருக்கள் காலில் விழுந்து எழும் நமது ஆன்ம பலம் அவர்களது ஆன்மபலத்தை விட கூடுதலாக இருக்கமாட்டாதா? சற்றே சிந்தித்து பாருங்கள். உண்மை புரியும்.

எனவே எமக்கு (உயிருக்கு) இனியவர் யார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவ்வாறு நாம் சிந்தித்துப் பார்போமேயானால்  எம்மைவிட எமக்கு இனியவர்கள் யாரும் இல்லை என்பதை உணர்வோம். திருநாவுக்கரசு நாயனார் 'என்னில் யாரும் எனக்கினியார் இல்லை' எனக்கூறுகிறார். சிலவேளைகளில் நாமே நமக்குத் தீங்கு செய்து கொள்கிறோம். ஆதலால் எப்படி ‘என்னில் யாரும் எனக்கு இனியார் இல்லை‘ எனக்கூறமுடியும் எனச்சிந்தித்து தொடர்ந்து சொல்கிறார். ‘என்னிலும் இனியன் ஒருவன் இருக்கிறான், அவன் நமது உயிர்க் காற்றாய் புறத்தே போயும் அகத்தே வந்தும் எனக்குள்ளே நிற்கின்றான்’ என்கிறார்.

என்னில் யாரும் எனக்கினியார் இல்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுளே உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்கு
என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே”    
                                      - (ப.திருமுறை: 5: 21: 1)

எம் உயிர்ப்பாய் வெளியேயும் உள்ளேயேயும் சென்றுவருவது எது? காற்று. அதிலும் உயிர்க்காற்று. அதனை இன்று ஒட்சிசன் என்கிறோம். அந்த மூச்சு நின்றுபோனால் நம் ஆட்டம் அடங்கிப் போகும். பிராமணர்களை வரவழைத்து ‘நெய் சொரிந்து தீவளர்த்து’ சுற்றுச்சூழலை தூய்மை அற்றதாக மாற்றி அல்லல் படுவதைவிட, நமக்குள்ளே இருக்கும் இறைவனை நாம் தேடலாமே.
இனிதே, 
தமிழரசி. 

No comments:

Post a Comment