Saturday 27 December 2014

ஆசைக்கவிதைகள் - 100

சோளக்கொல்லை 

வானாவாரி மண் உழுது
  புழுதி மணம் வீசவந்த
சோனாவாரி மழை நீரை
  பார்த்தெடுத்து விதைத்த
சோளவிதை முளைத்து நல்ல
  சோளக் கதிர் சாயயில
கிளியினங்கள் சிறகடிக்கும்
  மயிலினங்கள் கூத்தாடும்
சோளக்கொல்லை காண
  கண் கோடி வேணும் 
                                                                                  - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

குறிப்பு:
சொல்விளக்கம்    
வானாவாரி -  மழை நீரில் பயிர் செய்யும் நிலம். ஈழத்தமிழர் வானாவாரி என்பதை தமிழகத்தார் மானாவாரி என்பர்.
சோனாவாரி - சோ எனப் பெய்யும் மழை/ நீரை அள்ளி ஊற்றுவது போலப் பெய்யும் மழை
கொல்லை - வானாவாரிக் காடு/ மழையை நம்பி இருக்கும் நிலம்/ எள்ளு, கொள்ளு போன்ற தானியங்களை பயிரிடும் நிலம். 

Thursday 25 December 2014

குறள் அமுது - (100)


குறள்:
“இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று”                              - 308

பொருள்:
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் மூழ்க்கியது போன்ற துன்பத்தைச் செய்தாலும் மீண்டும் சேர்வார்கள் ஆயின் கோபங்கொள்ளாது இருத்தல் நன்றாகும்.

விளக்கம்:
இத்திருக்குறள் வெகுளாமை என்னும் அதிகாரத்தில் உள்ளது. பூக்கள் அடுக்கடுக்காக சுழன்று இருக்கும் பூங்கொத்தை இணர் என்பர். கடம்ப மலரை ஐங்குறுநூறு 
“வலஞ்சுரி வால் இணர்” 
எனச்சொல்லும்.  

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிலே தீச்சுடர்கள் அடுக்கடுக்காக சுவாலித்து சுழன்று எரிவதால் இணர் எரி என்றார். நெருப்பானது சுவாலித்து சுழன்று எரியும் பொழுது யாரும் அதன் அருகே செல்ல முடியாது. அவ்வளவுக்கு அந்த நெருப்பு சுற்றாடலையே வெம்மை ஆக்கும். அப்படிப்பட்ட இணர் எரியில் ஒருவரைத் தோய்த்து எடுத்தால் எப்படி இருக்கும்? அவர் உயிருடன் இருப்பாரா? இருப்பினும் எப்படி இருப்பார்?

ஒருவரோடு ஒருவர் மனத்தால் நட்புக்கொள்வதை புணர்தல் என்ற சொல்லால் இக்குறளில் வள்ளுவர் குறிக்கின்றார். எமக்குத் துன்பத்தை செய்பவர் சுவாலித்து எரியும் நெருப்பில் மூழ்கடித்தது போன்ற பெருந்துன்பத்தைச் செய்தாலும் மீண்டும் வந்து எம்முடன் சேர்வார் ஆயின் அவர்கள் மேல் கோபம் கொள்ளாது இருத்தல் நன்மையைத் தரும். ஏனெனில் தீயைவிட கோபத்தீ பொல்லாதது. தீ அதில் போட்டவரை மட்டுமே எரிக்கும். கோபத்தீயோ பல சந்ததியினரை, பல நாடுகளைக் கூட  எரித்து முடித்திருக்கிறது.

பற்றி எரியக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே ஒரு சிறு நெருப்புப் பொறியால் பெரிய காட்டையே எரித்து சாம்பலாக்க முடியும். ஆனால் ஒரு கண நேரத்தில் மனிதருக்கு வரும் கோபத்தீயோ வாய்ப்புகள் இல்லா இடத்தில் அடங்கி இருந்து, பல நூற்றாண்டுகளின் பின்னர் கூட மாபெரும் அழிவை ஏற்படுத்தும். கோபப்படுவதால் எவருக்கும் ஒருவித நன்மையும் கிடைப்பதில்லை.

எனவே எமக்கு எத்தகைய கொடிய தீமை செய்தவர் மேலும் நாம் கோபம் கொள்ளல் ஆகாது, கோபத்தால் எதுவித நன்மையும் உண்டாவதில்லை,  என்பதைச்  சொல்லாமல் சுட்டும் குறள்.
“இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று” 

இயேசு நாதர் ‘உன்னை ஒருவன் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு’ எனச் சொன்னதாக பைபிளின் புதிய ஏற்பாடு [மத்தேயு 5: 39] சொல்கிறது. கோபம் மனிதருக்கு தீமையை உண்டாக்கும் என்றே இயேசுவும் அதனைக் கூறினார். கோபம் இருப்பவரிடம் அன்பையும் கருணையையும் காண்பது அரிதாகும். உண்மையில் இயேசு விண்ணக வாழ்வுக்கு வழிகூறியவர். திருவள்ளுவர் வையக வாழ்வுக்கு வழிகூறியவர். ஆதலால் நாம் கோபம் கொள்ளாதிருக்க கற்றுக்கொள்வோம்.

Friday 19 December 2014

பண்டைத்தமிழர் கண்ட முப்பொருள் கொள்கை

பக்திச்சிமிழ் - 85

பண்டைய தமிழர்கள் உலகின் மேலும் உலக உயிர்கள் மேலும் பற்று உடையவர்களாக வாழ்ந்தார்கள். இந்த உலகமும் அதில் வாழ்கின்ற உயிர்களும் யாரல்? எப்படி? தோன்றி அழிகின்றன என்ற கேள்விக்கு அவர்கள் கண்ட விடையே கடவுள். அதனால் கடவுள் என்ற மெய்ப்பொருளை அவர்கள் உருவகித்துக் கொண்டார்கள். சுருங்கச் சொல்லப்போனால் இந்த உலகையும் உயிர்களையும் இயக்குவது கடவுளே என்ற முடிவுக்கு வந்தனர். ஆதலால் கடவுள், உயிர், உலகம் என்கின்ற முப்பொருள் கொள்கை உடையவர்களாகப் பண்டைத் தமிழர் இருந்தனர். முழு உலகையும் தழுவியதாய் அக்கொள்கை இருந்தது. அது தமிழர் நெறி என அழைக்கப்பட்டது. பிற மொழிகளும், பிற சமயக் கொள்கைகளும் தமிழரிடம் வேரூன்ற முன்னர் இருந்த முப்பொருள் கொள்கை அது.

முழுவுலகம் ——>  கடவுள், உயிர், உலகம்  ——>  தமிழர் நெறி 

தமிழர் முழு உலகம் தழுவிய தமது முப்பொருள் கொள்கையை பிறமொழி, பண்பாடுகளின் கலப்பால் மனிதனுக்காக மாற்றிய போது அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருட்கொள்கை பிறந்தது. 


மனிதன் ——> அறம், பொருள், இன்பம் ——> தமிழர் சமய நெறி 

இந்த மூன்றாலும் முத்தியை அடையலாம் என்றனர். அதுவே தமிழர் சமய நெறியாகும்.

சமண, பௌத்த, வைணவ, சாக்த மதங்களால் பின்னிப்பிணைய முற்பட்ட தமது சமயக் கொள்கையை அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும், அறிவார்ந்த உண்மைகள் உடையதாகவும் மாற்றினர். மனிதனுக்காக இருந்த முப்பொருள் கொள்கையை மாற்றி, உயிருக்காக சைவ சித்தாந்தக் கொள்கையை உருவாக்கினர். அதுவே பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் கொள்கை. அதனை சைவசமய நெறி என அழைத்தனர்.

 உயிர்  ——>  பதி, பசு, பாசம் ——>   சைவசமய நெறி

கடவுளை பதி என்றும் ஆன்மாவை பசு என்றும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் பாசம் என்றும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு பண்டைய தமிழர் தமது கடவுட்கொள்கையை உலகிற்காகவும், மனிதனுக்காகவும், உயிருக்காகவும் பிரித்து - தனித்தனியான முப்பொருள் கொள்கை உடையோராய் வாழ்ந்தனர். 

அத்துடன் உலகம் தழுவியதாய் இருந்த அவர்களது முப்பொருள் என்ற சொல் கால ஓட்டத்தால் மனிதனுக்காகவும், உயிருக்காகவும் சுயநலம் கருதி மாறி அமைந்ததையும் காண முடிகின்றது.
இனிதே,
தமிழரசி.

Thursday 18 December 2014

அருட்திரு அந்தாதி


உள்ளத்திருந்தே உணர்ச்சி தந்து
கள்ள மலத்து கழிவை அகற்றி
தெள்ளு தமிழில் தினமும் பாட
அள்ளி எனக்கு அருளைத் தாராய்.

தாராதிருந்தால் தளர்ந்தே போவேன்
வாராய் இங்கே வடிவேல் அழகா
ஊரார் பலரும் உவப்ப என்றும்
தீரா வினைகள் தீர்த்து அருள்வாய்.

அருளாதொழிந்தால் அலைந்தே போவேன்
மருளால் மயங்கி மமதை கொண்டே
பொருளாம் இன்பப் பொருளை எண்ணி
இருளில் மூழ்கி இருத்தல் நன்றோ

நன்றேயாயின் நயந்தே செய்க
ஒன்றேசொல்வன் உளத்துள் வைக்க
கன்றே தாயைக் கதறி அழைத்து
நன்றே பாலை நயத்தல் அறிவாய்.

அறிவாய் என்னும் அறிவைத் தந்தாய்
பொறிவாய்ப் பட்டு புழுவாய்த் துடித்து
நெறியை மறந்து நிலத்துள் உலந்து
பறியாம் உடலை புதைத்தல் அழகோ

அழகே ஆயினும் அளந்தே செய்க
உழவுக்கு பாச்சும் உவப்பு நீரை
விழலுக்கு இறைத்தல் விரயம் தானே
நிழலாய் நின்று நினைவில் நிலைப்பாய்

நிலைப்பாய் ஆயின் நெஞ்சம் உவக்க
கலைகள் பயின்று கவலை இன்றி
இலைகொள் மரத்தின் இசைவாய் இருக்க
அலையாய் அருளை அள்ளித் தருவாய்

தருவாய் என்னும் தகைமை அறிந்து
திருவாய் மலரும் திருவே உன்னை
முருகாய் எண்ணி மனத்துள் வைத்தேன்
பருகா இன்பம் பருகிட வைப்பாய்

வைப்பாய் என்றே வைப்பாம் உன்னை
துப்பாய் நினைத்து துதிக்கும் என்னை
தப்பாய் எண்ணி தள்வாய் ஆயின்
உப்பாய் கரையும் உடலும் வெந்து

வெந்து உடல் வீழ்ந்து நீறாய்
சந்ததி தொழும் சமாதி யாகுமுன்
பந்தம் அறுத்து பரிவொடு அருளை
செந்தமிழ் தேனாய் சொரிக உள்ளத்து

இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
கள்ளமலத்து - ஆணவமலத்தின்
அலைந்து - தாழ்ந்து 
மருளால் - மாயையால்
மமதை - செருக்கு
நயந்தே - விரும்பியே
பொறிவாய்ப்பட்டு - ஐம்பொறிகளிடையே அகப்பட்டு
உலந்து - காய்ந்து
பறியாம் - பை போன்ற [மீன் போடும் பை]
இலைகொள் மரத்தின் இசைவாய் இருக்க - இலை நிறைந்த மரத்தில் கனிகள் இருப்பது தெரிவதில்லை, அவை போலிருக்க
அலையாய் - கடல் அலைபோல் மீண்டும் மீண்டும்
தகைமை - தன்மை
பருகா இன்பம் - முத்தி இன்பம்/பேரின்பம்
வைப்பாம் - அடைதற்கரிய பொருளாகிய
துப்பாய் - அறிவாய்

Tuesday 16 December 2014

காக்கையோடு ஒப்பார்


முத்தி முத்தி என்றே முப்போதும் பேசிடுவார்
பக்தி சிறிதும் இன்றி பலகதை தாம்பகர்வார்
அத்திக் கருளிய அம்பிகை பாகன் என்பார்
சித்திக் கருளியவன் சேவடி போற்றும் என்பார்
உத்தி பலதும் செய்தெமை மகிழ வைப்பார்
கொத்தி திருடும் அந்த காக்கையோடு ஒப்பார்
முத்தி என்றே ஏய்திடும் மூடச் சாமிமாரே!
                                                              - சிட்டு எழுதும் சீட்டு 95

Monday 15 December 2014

ஆசைக்கவிதைகள் - 99

அணைத்திருப்ப தெப்போது!

அந்திக்கு வாரனென்னு
ஆணையிட்டு போன மச்சான்
வாரங்கள் பல போயும்
வாராதிருப்ப தென்ன!
   
முந்திரிக்கு கீழே
முத்து மணல் பாயினிலே
அந்தி மங்கும் வேளயில
          அணைத்திருப்ப தெப்போது!
                                                                                  நாட்டுப்பாடல் (திரிகோணமலை)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Sunday 14 December 2014

குறள் அமுது - (99)

குறள்:
மக்கள்மெய் தீண்டல் உடகின்பம்       
                                         மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு                                
                                                   - 65

பொருள்:
பிள்ளைகளின் உடலைத்தொடுதல் உடலுக்கு இன்பத்தைக் கொடுக்கிறது. அவர்கள் சொல்லும் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பத்தைக் கொடுக்கிறது.

விளக்கம்:
திருவள்ளுவர் புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தில் பிள்ளைகளால் பெற்றோருக்குக் கிடைக்கும் இன்பம் பற்றி இக்குறளில் கூறியுள்ளார்.

இளம் தாய் தந்தையர் குழந்தை பிறந்ததும் குழந்தையைத் தழுவியே ஆனந்தம் அடைகின்றனர்.  ஐந்து ஆறு மாதம் செல்ல அக்குழந்தை மெல்ல மழலை பேசத் தொடங்குகிறது. குழந்தை சொல்லும் எதுவித கருத்தும் அற்ற சொற்களுக்கு ஏற்ப தாமும் கதைத்து இன்பம் அடைவர். குழந்தைகளின் மழலை பெற்றவர்களை மட்டும் இன்பம் அடையச் செய்வதில்லை. அது கேட்போர் எவரையும் இன்பம் அடையச் செய்யும். அதனை
“நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை”      
                                                    - (அகம்: 16: 4 - 5)
என அகநானூறு குறிப்பிடுகிறது. நாக்கைப் பயன்படுத்தாமல் 'ப்பு' 'பும்பு' 'ப்ர்' என்றெல்லாம் சிரிப்பை உண்டாக்கும் இனிய சொல்லைச் சொல்லும் குழந்தைகளை யாவரும் விரும்புவராம்.

குழந்தையின் இன்பமான சொற்களைக் கேட்டும் கொஞ்சியும் மகிழ்ந்த தாய் தந்தையர், தம் பிள்ளைகள் வளர்ந்த பின்பும் அவர்களை அணைத்துக் கொஞ்சி மகிழவும், அவர்கள் சொல்லும் அறிவார்ந்த சொற்களைக் கேட்டு மகிழவும் ஆசை கொள்வர். ஆதலால் “பெற்றமனம் பித்து பிள்ளைமனம் கல்லு” என்னும் பழமொழிக்கு அமைய கல்லுமனப் பிள்ளைகளாய்  இருப்பது நன்றல்ல. 

அதுவும் படிப்பிற்காகவும் உழைப்பிற்காகவும் உயிருக்காகவும் புலம்பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் வயதான தாய் தந்தையரின் இந்த ஆசைகளை பிள்ளைகள் உணர்வதில்லை. உங்கள் பெற்றோரிடம் மின்னஞ்சலில் சுகம் கேட்காது, அலைபேசியில் அவர்களுடன் பேசி உங்கள் குரலைக்கேட்டு இன்பம் அடையச் செய்வதோடு உங்கள் குழந்தைகளையும் அழைத்துச் சென்று கொஞ்சி மகிழவும், சொற்களைக் கேட்டு மகிழவும் செய்யுங்கள். உங்களுக்கும் முதுமை வரும். ஆதலால் பிள்ளையைத் தழுவும் போது உடலுக்கு இன்பமும் சொற்களைக் கேட்கும் போது செவிக்கு இன்பமும் கிடைக்கிறது என்பதை மறவாதீர்கள்.

Tuesday 2 December 2014

நித்த மணாளர்

எம் சிந்தையின் உள்ளே

உலகெங்கும் வாழும் மனித இனங்கள் தத்தமக்கு என்று பண்பையும் பண்பாடுகளையும் கலைகளையும் படைத்துக் கொண்டது போல் கடவுள் கொள்கைகளையும் படைத்துக் கொண்டன. பண்டைய தமிழினம் படைத்துக் கொண்ட கடவுட்கொள்கையை 'சைவ சமயம்' என்கிறோம்.  எம்மைப் படைத்த கடவுளைப் படைத்தவரும் நாமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதல் நம்மில் பலரிடம் இல்லாது போனதற்கு மூடநம்பிக்கைகளும் அவற்றை பின்பற்றுவோரின் வழிகாட்டலில் நடைபெறும் சமயச் சடங்குகளுமே காரணமாகும். 

தன்னம்பிக்கை உள்ள மனிதராய் நாம் நம்மை நிலை நிறுத்த முயல்வோமேயானால் நாம் யாரையும் தலைவணங்கத் தேவை இல்லை. தன்னம்பிக்கை என்பது அகங்காரம் அல்ல. தன்னம்பிக்கை வேறு, அகங்காரம் என்றும் இறுமாப்பு எனவும் தலைக்கணம் என்றும் திமிர் எனவும் சொல்வன வேறு. தன்னம்பிக்கை உள்ளவனே தன்னை நம்புவான். தன்னை நம்பாதவன் எப்படி கடவுளை நம்பமுடியும்? நம் சிந்தையின் உள்ளே சிவனை வைப்பதற்கோ, சித்தத்தை சிவன்பால் வைப்பதற்கோ தன்னம்பிக்கை மிக மிக தேவையல்லவா? 

காதலும், பக்தியும் கூட தன்னம்பிக்கை உள்ளோருக்கே கைகூடும். நான் யார்? என் எண்ணங்கள் எங்கிருந்து எழுகின்றன? எதனால்? எப்படி? யாரால் அவை எழுகின்றன? போன்ற சிந்தனை எழுவதற்கும், எம்மையே நாம் ஆராய்ந்து பார்ப்பதற்கும் தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கை உள்ளோரே தம்மைத் தாமே ஆராய்ந்து பார்ப்பர். கடவுதல் என்றால் வினவுதல், கேட்டல் என்ற கருத்துக்களையும் தரும். எங்கே கேள்வி எழுகின்றதோ அப்போதே நாம் அதனை ஆராயத் தொடங்கிவிட்டோம் தானே? எங்கும் நிறைந்திருக்கும் இயற்கையை நாம் நம் உள்ளத்துள் கடவுதல் செய்வதாலேயே உலகை இயக்கும் சக்தியை கடவுள் என்கிறோம்.

தன்னம்பிக்கை உள்ளவனாய் கடவுளை நம்பும் எந்த ஒரு மனிதரும் பிறரின் கால்களில் வீழ்ந்து வணங்க மாட்டான். தன்னம்பிக்கை உள்ளோருக்கு அச்செய்கை நாணத்தைத் தரும். நம் ஒவ்வொருவரது சிந்தையிலும் சிவனைக் காணமுடியும் என்பதை எம் முன்னோர் எமக்குச் சொல்லிச்சென்றுள்ளனர். அப்படி இருக்க ஏன் நாம் சுவாமிமார்களின் கால்களிலும் கோயில் குருக்கள்மார் கால்களிலும் வீழ்ந்து வணங்க வேண்டும்? அதற்கு ஏன் பல கோயில்களின் அறக்காவலர்களும் துணை போகிறார்கள் என்பது எவராலும் விளங்கிக்கொள்ள முடியாத பெரும்புதிரே! 

தேன் சிந்தும் திருவாசகத்தை சொன்ன மாணிக்கவாசகர் என்ன சொல்கிறார் பாருங்கள்!
"நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத் திருப்பரால் அன்னே என்னும்
சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்"
                                            - (ப.திருமுறை: 8: 17: 3)

காதலில் வீழ்ந்த தன் மகள் என்ன சொல்கிறாள் என்பதை ஒரு தாய் சொல்வதாக இத்திருவாசகம் சொல்கிறது. “அன்னையே! என் உள்ளத்தே இருக்கும் காதலன் எப்போதுமே கல்யாணமாப்பிள்ள [நித்த மணாளர்] போலவே இருப்பார். பேரழகுடையவர். தென்னனின் பெருந்துறையில் வாழ்கின்ற அவர் என் உள்ளத்தில் இருக்கின்றவர். மிகவும் உயர்ந்த குணங்களை உடையவர் [அத்தர்], எனக்கு என்றும் ஆனந்தத்தைத் தருபவர் அம்மா” என்று மகள் தாய்க்கு கூறுகிறாள்.

அதாவது மாணிக்கவாசகக் காதலிக்கு அவரின் “சிந்தையின் உள்ளே சிவன்” காதலனாய் இருந்தார் என்பதையே இத்திருவாசகம் சொல்கிறது. அத்துடன் சிற்றின்பமே பேரின்பத்திற்கு வழிகாட்டுகிறது  என்பதையும் சொல்கிறது. மாணிக்கவாசகரின் சிந்தையில் மட்டுமா சிவன் இருப்பான்? நாமும் மனிதர்கள் தாமே! கொஞ்சம் சிவனைச் சிந்தை செய்தால் என்ன? சுவாமிமாரைத் தேடிப் போய் கால்களில் வீழ்ந்து கிடக்கும் அந்த நேரத்தில்; இருந்த இடத்தில் இருந்து சிந்தை நிறைய சிவனைச் சிந்திக்கலாமே! 

மாணிக்கவாசகரைவிட மிக அற்புதமாக திருமூலர் சொல்கிறார். சிந்தை வேறு சிவன் வேறில்லை. இரண்டும் ஒன்றுதான். எமது சிந்தைக்குள் இருந்து சிவனும் வெளிப்பட்டு வருவான். எதுவித சந்தேகமும் இன்றித் தெளிவாகச் சிந்தனை செய்யக்கூடியவர்கட்கு சிந்தையின் உள்ளே சிவன் பெரிய சிம்மாசனம் போட்டு இருப்பானாம். இதோ அந்தத் திருமந்திரம்.
“சிந்தை அது என்னச் சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளிய வல்லார்கட்குச்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே”
                                               - (திருமந்திரம்: 2853)

சிவனைக் காண இதைவிட இலகுவான வழி வேறு இருக்கிறதா சொல்லுங்கள்? அருணகிரினாதரால் கூட அரைநிமிட நேரம் தவவழியில் முறையாய், சிந்தை செய்ய முடியவில்லை. அதற்காக நாம் முயற்சி செய்யாமல் இருக்க முடியுமா? முடிந்த நேரத்தில் சிந்தையில் சிவனை வைத்து, சிந்தை தெளிய சிந்தை செய்தால் என்ன?
இனிதே,
தமிழரசி.

Monday 1 December 2014

நயந்து காணல் அழகோ!



குறைகள் பலதும் உடையேன்        
        குணமோ சிறிதும் இலனேன்
மறைகள் ஏதும் அறியேன்
மமதை கொண்டு உழல்வேன்
பறைகொள் பாடல் கேட்டு
பரதம் ஆடும் பெம்மான்
நறைகொள் பாதம் தன்னை
நயந்து காணல் அழகோ!
இனிதே,
தமிழரசி.