Saturday 31 August 2013

முத்தியை அடையும் நாள் எந்நாளோ!


உலகமே தேன்றுவதும் அழிவதுமாக இருக்கிறது. அத்தகைய உலகில் வாழும் உயிரினங்கள் நிலையாக நிலைத்து வாழ்ந்திட முடியுமா? அதனாற்தான் உயிரினங்களும் தோன்றுவதும் மறைவதுமாக இருக்கின்றன. இந்த தோன்றலுக்கும் மறைதலுக்கும் இடையே உயிர் சுமந்து வாழ்வது ஒரு பெரும் போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் என்று இங்கு யாரும் மார்தட்ட முடியாது. ஆனால் அப்படி வெற்றி பெற்றவர்களாக எம்மால் கருதப்படுவோரை முத்தியடைந்தோர் என்று அழைக்கிறோம். அந்த முத்தியும் எத்தகையது என்பதை உணர்ந்தோர் யார்? தேனூறும் திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகரே இராவணனின் மனைவி வண்டோதரிக்கு இறைவன் திருவருள் செய்ததை
“உந்து திரைக் கடல் கடந்து அன்று
          ஓங்குமதில் இலங்கை அதனில்
பந்து அணை மெல் விரலாட்கு அருளும்
           பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே                      
                                           - (திருவாசகம்:43:5)
என்கிறார்.‘பரிசறிவார் எம்பிரானாவாரே’ என வண்டோதரிக்கு இறைவன் கொடுத்த முத்தி எனும் பரிசு எப்படிப்பட்டது என்பதை இறைவனே அறிவார் என்கிறார். 

ஆதலால் முத்தி அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என உய்த்து உணரமுடியுமே அல்லாமல் இத்தகையது என்று கூறமுடியாது. முத்தியின் தன்மையை பலரும் பலவிதமாகச் சொல்ல முனைந்திருக்கின்றனர். அவர்களுள் தாயுமானசுவாமிகள்  முத்தியின் தன்மையை நாம் விளங்கிக் கொள்ளக்கூடியதாய் மிகவும் இலகுவாக 
துச்சப் புலனால் சுழலாமல் தண்ணருளால் 
உச்சிக் கதிர்ப்படிகம் ஒவ்வுநாள் எந்நாளோ”              
                                              - (தாயு.பா: 45: 14: 12)
எனக்கூறியுள்ளார்.

“இழிவைத்தரும் பொய்யான [துச்சு] ஐம்புல ஆசைகளுள் கிடந்து சுழலாமல் இறைவனின் தண்ணருளால் முத்தியென்னும் குற்றமற்ற தன்மையை [உச்சிக் கதிர்ப்படிகம்] அடையும் நாள் [ஒவ்வு நாள்] எந்தநாளோ?” என்கிறார்.

இப்பாடலில் தாயுமானவர் முத்தியை ‘உச்சிக் கதிர்ப்படிகம்’ என்று சுட்டுகிறார். மெஞ்ஞானம் சொல்லும் முத்தியை விஞ்ஞானா முறையால் விளக்குகின்றது ‘உச்சிக் கதிர்ப்படிகம்’ என்ற சொல்லாட்சி. ‘உச்சிக் கதிர்ப்படிகம்’ என்றால் என்ன? எனப் பார்ப்போம். 

உச்சிக் கதிர்ப்படிகம் = உச்சி + கதிர் + படிகம் எனப்பிரியும். உச்சி என்றால் என்ன? சூரியன் எமக்கு நேர் மேலே இருக்கும் போது அதனை உச்சி வெயில் என்கிறோம். அதாவது நேர் மேலே இருப்பது என்ற கருத்தை அது தருகின்றது. ஒளிக்கதிரையே கதிர் என்கிறார். படிகம் என்பது பளிங்காகும் [crystal]. 

நாம் நல்லவர்களுடன் சேர்ந்தால் நல்லவர்களாகவும், கெட்டவர்களுடன் சேர்ந்தால் கெட்டவர்களாகவும் இருக்கிறோம் அல்லவா? அதனைச் சேர்ந்ததன் வண்ணம் என்பார்கள். படிகம் எந்த நிறமுள்ள பொருளுக்கு அருகே இருக்கிறதோ அந்த நிறத்தை அது காட்டும். எனவே படிகமும் சேர்ந்ததன் வண்ணம் பெறும். படிகத்தின் நிறத்தை எடுத்துக் காட்டுவது ஒளிக்கதிரின் தெறிப்பேயாகும். ஒளிக்கதிர் பளிங்கில் பட்டுத் தெறிக்க வேண்டுமானால் 90 பாகை தவிர்ந்த வேறு கோணங்களில் படவேண்டும். பளிங்கின் மேற்பரப்புக்கு 90 பாகையில்  செல்லும் ஒளிக்கதிர் தெறிக்காது உட்செல்லும். அந்தக் கதிரையே உச்சிக்கதிர் என்கிறார். பளிங்கு பச்சை நிறப்பொருளின் அருகேயிருக்கும் போது பச்சையாகத் தெரிகிறதென வைத்துக்கொள்வோம்.  அப்போது பளிங்குக்கு நேர் மேலே இருந்து பார்த்தால் பளிங்கின் நிறமற்ற தன்மை தெரியும். உச்சிக்கதிரின் ஊடுருவல் பளிங்கை நிறமற்றதாக எமக்குக் காட்டும். 

ஐம்புலன்களின் ஆசையால் உந்தப்பட்டு ஒன்றோடு ஒன்று மோதித் தெறிப்புற்றுத் திரியும் நாம் இறை என்னும் உச்சிக்கதிரின் ஊடுருவலோடு இணையும் போது ஆசை, பாசம், பந்தம் என்ற நிறங்கள் எல்லாம் நீங்கி பளிங்காகி முத்தியை அடையலாம்.
இனிதே, 
தமிழரசி.  

No comments:

Post a Comment