Friday, 16 August 2013

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

புங்குடுதீவு

மதுரையை ஆண்ட மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகள் வீரமாதேவி புங்குதீவில் கோட்டை கட்டி வாழ்ந்தவள். அவள் குயிலின் இனிமையான குரலில் தமிழ்ப்பண்பாட்டைக் கேட்க ஆசை கொண்டு 
“பண்பாடும் குயிலே பாடாயோ - தமிழ்
பண்பாடு ஒருக்கால் பாடாயோ”
என்று குயிலைக் கேட்கிறாள். தமிழ்ப்பண்பாடு மிகமிக இனிமையானது என்பது அவளது முடிவு.
“பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்” 
என்கிறது கலித்தொகை. பாடு என்றால் கடமை அல்லது உலக ஒழுக்கத்தைக் குறிக்கும். அதாவது அன்பு, சான்றான்மைகளில் வழுவாது நின்று, தத்தமது கடமைகளைச் செய்து உலகோருடன் சேர்ந்து வாழ்தலாகும்.

‘பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்கிறார் திருவள்ளுவர். திருக்குறளின் உயிர்ப்பாய் ஒளிர்வது ஒன்று. அது ‘உலகம் ஒருகுலம்’ என்பது. அது பழந்தமிழர் பண்பாட்டில் இருந்து முகிழ்ந்த ஒரு குறிக்கோள். அக்குறிக்கோள் திருவள்ளுவருள் படிந்து நின்று வளர்ந்து ஒரு சிறந்த உலகநூலாயிற்று. வள்ளுவத்துள்ளே தமிழர் தம் பண்பாட்டின் மணிமகுடமாக விளங்குகின்றது ஒரு குறள்.
“பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்”                                       - (குறள்: 580)
நாகரிகம் என்பது மனப்பண்பாடு. தனக்கு நஞ்சு இடுகிறார்கள் என்பதைக் கண்டும் காணாதது போல் இருக்கும் மன அமைதி - நஞ்சைக் கொடுக்கும் போது மகிழ்வோடு எடுத்து உண்ணும் மனத்துணிவு - உண்ட பின்பும் தன் வருத்தத்தை, உடல் வேதனையை புலப்படுத்தாது தாங்கி இருக்கும் பொறுமை - என்ற நிலைகளை அடையை மனித மனம் எவ்வளவு பண்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள். மிக உன்னத பண்பாடு உள்ள சமுதாயத்திலேயே இப்படிபட்ட நாகரீகம் இருக்கும்.

பகட்டான ஆடை, அணிகளை அணிந்து ஒய்யாரமாகத் திரிவது நாகரீகம் அன்று. குடிசையில் வாழ்ந்தாலும், கந்தல் உடுத்திருந்தாலும் அன்புள்ளவர்களை மதித்து மனம் மகிழ்தலே நாகரீகம் ஆகும். அதுவே உயர் பண்பு. அதுவே தமிழர் பண்பாடு. எல்லோரும் பார்த்து இரசிக்கும் அலங்காரப் பொருட்களின் கவர்ச்சியே மேலை நாட்டினரின் பகட்டு நாகரீகமாகும். ஆனால் தமிழ்ப்பண்பாடு காட்டும் நாகரீகம் மனிதமனத்தைப் பண்படுத்தும் நாகரீகமாகும். 

அநுமன் சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்கின்றான். அவனுக்கு அறிவுரைகூறி அனுப்புகிறார்கள். என்ன அறிவுரை? “தமிழ்நாட்டின் இயற்கை அழகிலும், அதன் பண்பாட்டிலும் மயங்கி நின்றுவிடாதே” என்பதே அவ்வறிவுரை. தமிழ்ப்பண்பாட்டைப் பற்றி வால்மீகி கூறவேண்டுமானால் அதற்கு முன் தமிழர் பன்பாடு மற்றையோர் பேசும் அளவுக்கு வளர எத்தனை ஆயிர ஆண்டுகள் ஆகியிருக்கும்? 

உற்றிழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” 
எனச் சொல்லும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தொடர்ந்து
“ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்”
என்கிறார்.

அரசனே இந்தக்கொள்கையை உடையவனாக இருக்கும் போது அவன் ஆண்ட நாட்டில் கல்விக்கு எந்தக் குறை இருந்திருக்கும்?

“கற்றோர் இல்லாத் தொல்பதி வாழ்தலில்
கொல்புலி வாழும் காடு நன்றே”
என்கின்றது கொற்கைவேந்தன். கல்வி இல்லாவிட்டால் பண்பு ஏது? அதனால் தமிழர் கல்விக்கு மதிப்புக் கொடுத்து, கற்றோரைப் போற்றி, புலவர்களைப் பணிந்து தம் பண்பாட்டைப் பேணிக் கொண்டனர்.

ஈழத்துப் பேராறு

எல்லா ஊரும் எமது ஊர், எல்லா மனிதரும் எமது உறவு, நன்மைக்கும் தீமைக்கும் காரணம் நமது செயல்களே, என்று நயம்படக் கூறுகிறது புறநானூறு. நாம் இனத்தால் தமிழர், வாழ்வால் உலகத்தவர் என்ற பரந்த நோக்கத்தோடு வாழவேண்டும். அதனையே ஈழத்து பேராற்றங்கரையின் மணிபூங்குன்றில் வாழ்ந்த மணிபூங்குன்றனார்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்று சங்க காலத்திலேயே முழங்கினார். அப்புலவருடைய பொய்யாமொழி தழைக்க வேண்டும்.

ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு மொழி இருக்கலாம். ஆனால் உலகமொழி அமைதி. உலகின் நாகரீகம் அன்பு. இனம் ஆண், பெண். இதுவே சிறந்த பண்பாடு. இந்தநிலை இப்போதைக்கு ஏற்பட்டுவிடப் போவதில்லை. இந்த மனிததத்துவம் வளர்ந்து பெருக எத்தனையோ நூற்றாண்டு ஆகலாம். மதங்கள் உண்டானதே இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான். மதம் தோன்றி இருந்தால் அதுவே உலகப்பொதுமைக்கு வித்திட்டிருக்கும். ஆனால் மதங்கள் தேன்றிவிட்டான. எனவே இவ்வடிப்படைப் பண்பாடு கால்காசுக்கும் பயனில்லாமல் போய்விட்டது.

நான் இந்த மனிததத்துவம் நிறைகின்ற போதுதான் உலகப்பொதுமை நிலவும் என்று குறிப்பிடுகிறேன். அப்போது அந்நியன் எம்மைக் கொள்ளையடிக்கவோ, கும்மாளமிடவோ, குந்தி அரசாளவோ வரமாட்டான். குறைகளைக் களைய, கொடுத்து உதவிபுரிய, தம்மிடம் இல்லாததை எம்மிடம் கேட்டுப் பெற்றுச் செல்லவருவான். அதற்குப் பெயர்தான் உலகப்பொதுமை. மெல்ல மெல்ல உலகக் காதுகளுக்கு இந்தக் கருத்தை எட்டச் செய்துவிட்டால் தமிழர் பண்பாட்டின் பெருமை உலகில் சிறந்து வளரும்.

உலகிற்கு மணிபூங்குன்றனார் சொன்ன கருத்தை எவரும் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன் சொன்னது கிடையாது. அதனால் நமது தமிழ்மொழி சிறந்து நிற்கிறது. அந்தத் தமிழ்ப்பண்பாடு நடைமுறைக்கு வந்துவிட்டால் நாமே சிறப்படைவோம். வாழ்க தமிழர் பண்பாடு.
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:

'தமிழர் பண்பாடு' என்னும் தலைப்பில் எட்டுவயது மகன் பேசுவதற்கு 1990ல் எழுதியது.

3 comments: