ஓருருவே மூவுருவம்
- சாலினி -
தமிழர்களிடையே பல சமயக்கொள்கை பண்டை நாள் தொடக்கம் இருந்து வருகிறது. அதனால் பல பூசல்களும் போர்களும் நடந்திருக்கின்றன. அதனைக் கண்ட திருமூலர் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற உண்மையை எடுத்துச் சொன்னார். அவரைப் போலச் சமயச்சான்றோர்கள் மீண்டும் மீண்டும் தமிழர்களாகிய எமக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தான் என்னவோ மதங்களின் பேரால் தமிழர்கள் சண்டை செய்வதை விட்டனர் போலும். எனினும் தமிழகத்தில் சைவ வைணவ சமயப்பூசல்கள் இடையிடையே தலைதூக்குகின்றன.
இன்றைய சைவசமயத்தவர் வணங்கும் பிரமா, விஷ்ணு, உருத்திரன் [அயன், அரன், அரி] மூவரும் ஒன்று என்ற எண்ணம் சைவ, வைணவ சான்றோரிடம் இருந்திருக்கிறது. திருநாவுக்கரசு நாயனார், ‘ஒருவனே மூவுருவம் ஆனான்’ என்பதை
“ஒருவனாய் உலகேத்த நிற நாளோ
ஓருருவே மூவுருவ மான நாளோ” - (ப.திருமுறை: 6: 34: 1)
எனத் தேவாரத்தில் சொல்ல, பொய்கை ஆழ்வார், ‘மூவருமே ஒருவனானான்’ என்பதை
“பாருருவில் நீரெரிகால் விசும்புமாகி பல்வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்றஇமையவர் தம் திருவுருவம் எண்ணும் போது
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி முகிலுருவம் எம்மடிகள் உருவந்தானே” - (திருமொழி: 2052)
முதலாம் திருமொழியில் சொல்கிறார்.சான்றோர்களுக்கு எல்லாம் ஒருவனாயும் மூவராயும் இருப்பவன் ஒருவனே என்னும் தெளிவு இருந்திருக்கிறது. நாம் ஏன் பிணங்க வேண்டும்?
No comments:
Post a Comment