Thursday, 22 August 2013

பிடி கன்றிடும் முதுகுன்று


படம்: வரலாறு.கொம்

இன்றைய தமிழகத்தில் உள்ளோரிடம் முதுகுன்றம் போவதற்கு வழிகேட்டால் அது எங்கே இருக்கிறது என்று கேட்பார்கள். பண்டை நாளில் பெரும் புகழுடன் இருந்த முதுகுன்றம் என்ற ஊர் சங்ககாலப் பழமைவாய்ந்தது. 

சங்ககாலத்து காதலன் ஒருவன் பொருள் தேட காதலியைப் பிரிந்து சென்றான். அவன் வருவதாகச் சொன்ன காலத்தில் அவன் வராததால் காதலியின் கவலையை போக்க, காதலிக்கு தோழி கூறுவதாக 
... வாழி! தோழி! முனை எழ
முன்னுவர் ஓட்டிய முரண்மிகு திருவின்
மறமிகு தானைக் கண்ணன் எழினி
தேமுது குன்றம் இறந்தனர் ஆயினும்”         - (அகம்: 197: 5 - 8)
என மாமூலனார் என்ற சங்ககாலப் புலவர் முதுகுன்றைச் சொல்வதால் அவ்வூர் சங்ககாலப் பழமைவாய்ந்தது என்பதை அறியலாம்.

'தோழியே! நீ வாழ்வாயாக! போரைவிரும்பி போர்முனைக்குச் செல்ல [எழ] நினைபவரையும் பயந்து ஓடச்செய்த, வலிமைபொருந்திய வீரச்செல்வம்மிக்க மறப்படையையுடைய கண்ணன் எழினி என்பவனின் தெய்வத்தன்மை [தே] பொருந்திய முதுகுன்றம் என்ற மலையைக் கடந்து சென்றார் ஆயினும் வந்துவிடுவார்' எனத்தோழி சொல்கிறாள். சங்ககாலத்திலேயே அங்கு கோயில் இருந்ததை தேமுதுகுன்றம் என்ற சொல்லின் ‘தே’ என்னும் சொல் எடுத்துக் கூறுகிறது. தே என்பது கடவுள், தெய்வம், அருள் என்பவற்றைக் குறிக்கும் ஓரெழுத்துச் சொல்லாகும். (பூ என்பது போல). 

சங்ககாலப் புலவரே அதனை முதுகுன்றம் என்கிறார். முதுமை அடைந்த குன்றம். அதாவது மிகப் பழமையான குன்றம் என்ற கருத்தில் முதுகுன்றம் என்றார். சங்ககாலத்திலேயே அக்குன்றம் முதுமையடைந்து விட்டது என்பதை அழகுதமிழில் மாமூலர் குறித்து வைத்தார். அவர் இப்பாடலில் காதலன் சென்ற வழியில் ஓர் அழகிய காட்சியைக் காட்டுகிறார்.
கடுஞ்சூழ் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு
இனம்சால் வேழம் கன்று ஊர்பு இழிதரப்
பள்ளி கொள்ளும் பனிச்சுரம் நீந்தி”            - (அகம்: 197: 13 - 15)

நிறைமாதமான[கடுஞ்சூழ்] அழகிய பெண்யானையைத் [பிடி] தழுவியபடி கிடந்த, வெள்ளைத் தந்தத்தையுடைய ஆண்யானை[வேழம்], தன் கன்று தனக்குமேலே ஏறியிறங்கி விளையாட[ஊர்பு இழிதர], படுத்திருக்கும் பனி நிறைந்த வழியை[பனிச்சுரம்] கடந்து[நீந்தி] சென்றான். 

சங்ககாலக் காதலன் சென்ற வழியில் கருவுற்ற பெண்யானையைத் தழுவிக்கிடந்த ஆண்யானையை மாமூலர் காட்ட, அதுபோல் கருவுற்ற பெண்யானையைத் தழுவி நின்ற ஆண்யானையை சுந்தரமூர்த்தி நாயனார் முதுகுன்றத்தில் கண்டார். அந்த ஆண்யானையை யாளி[ஆளி] ஒன்று அடித்துக் கொன்று இழுத்துச் செல்ல, முதுகுன்றத்தில் வாழ்ந்த குறத்திகள் அப்பெண்யானையைத் தங்கள் முற்றத்திலே கட்டி வைத்து கன்றீன வைத்தார்கள் என்கிறார். அக்குறத்திகளின் மிருகநேயத்தைப் பாருங்கள்.

“சென்றிலிடைச் செடிநாய் குரைக்கச் சேடிச்சிகள்
மன்றிலிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே
குன்றிலிடைக்களிறு ஆளிகொள்ளக் குறத்திகள்
முன்றிலிடைப்பிடி கன்றிடும்முது குன்றரே    
                                           - (ப.திருமுறை: 7: 43: 7)
மாமூலனார் வாழ்ந்த காலத்திற்கு எண்ணூறு வருடங்களின் பின்னரே சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்திருப்பார். முதுகுன்றம் என்ற பெயர் அந்த எண்ணூறு வருட காலத்தில் கூட மாறாது இருந்துள்ளது. 

ஆனால் இன்றைய தமிழராகியா நாம் முதுகுன்றம் என்பதை விருத்தாசலம் என்று நீட்டிமுழங்கி வடமொழியில் சொல்கிறோம். அதுமட்டுமா செய்கிறோம். சங்ககாலத்திலே தெய்வக் குன்றாகக் காட்டப்பட்ட முதுகுன்றில் வீற்றிருந்த சிவனை, சுந்தரரும் முதுகுன்றரே எனவணங்குகின்றார். ஆனால் நாம் விருத்தாசலத்தில் இருக்கும் இறைவனை விருத்தகிரீஸ்வரர் என்று சொல்கின்றோம். அங்குள்ள இறைவனின் பண்டைய பெயராகிய பழமலைநாதர் எனச்சொல்வது எமக்கு வெட்கமாக இருக்கிறது. முதுமை - பழமை; குன்று - மலை. பழமலை என்றாலும் முதுகுன்றம் என்றாலும் ஒன்றே. இரண்டும் தனித்தமிழே. அப்படி இருக்க விருத்தகிரீஸ்வரர் என்று சொல்வதில் பெருமையடைவதேன்? ஏன் இப்படிச் செய்கிறோம் என்று எவராவது சிந்தித்ததுண்டா? நாம் தமிழரா?

மாமூலரும் சுந்தரரும் குறத்திகளும் மட்டும் மிருகநேயத்தைக் போற்றவில்லை. எங்கள் கோயில்களின் சிற்பிகள் கூட மிருகநேயத்தை மிக அற்புதச் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள். அப்படிபட்ட ஒரு மிருகநேயக் காட்சியையே மேலேயுள்ள படம் காட்டுகிறது. கன்றீனும்  பெண்யானைக்கு வலி தெரியாதிருக்க ஒரு யானை வருடிக்கொடுக்கிறது. அது போடும் பிளிறலை குறைக்க ஒரு யானை துதிக்கையைத் தடவுகிறது. பிறந்துவரும் கன்றுக்கு இடஞ்சல் இல்லாதிருக்க இன்னொரு யானை வாலைத் தூக்கிப் பிடிக்கிறது. மூன்று யானைகள் சூழ நின்று அன்பாக அரவணைத்து யானைக் கன்றுப்பேறு பார்ப்பதை எந்தத் தொலைக்காட்சியிலும் பார்த்திருக்க முடியாது. இந்த அற்புதச் சிற்பத்தைப் படம் எடுத்த இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தாருக்கு எனது வாழ்த்துக்கள் உரியனவாகுக. காட்டுவாழ் விலங்குகள் மேலும் எம் அன்பைப் பொழிவோம்.
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment