குறள்:
“தகுதிஎன ஒன்று நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப் பெறின்” - 111
பொருள்:
ஒருவன் நடுநிலையாளனாக இருக்க, எவரிடத்தும் பாகுபாடு இன்றி நடப்பதே சிறந்த தகுதியாகும்.
விளக்கம்:
ஒருவனை வேலைக்குச் சேர்ப்பதற்கு, அவன் என்ன படித்திருக்கிறான்? அந்த வேலையில் முன் அநுபவம் உள்ளவனா? களவெடுப்பானா? பொய் சொல்வானா? எனப்பலவகையான தகுதிகளை பட்டியல் இட்டுப்பார்ப்போம். ஆனால் திருவள்ளுவரோ நடுநிலையாளனாக இருப்பதற்கு ஒரேயொரு தகுதியைக் கூறியுள்ளார். இக்குறளில் ‘தகுதி என ஒன்று நன்றே’ என்று நடுநிலைமையை தகுதி எனும் சொல்லால் குறிப்பிடுகிறார். நடுவுநிலைமை என்றால் என்ன? தமர் பிறர் என்ற பாகுபாடு அற்று, பக்கச்சார்பு இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாகும்.
பிறர் செய்யும் நன்மை தீமையை ஆராய்ந்து, விருப்பு வெறுப்பு இல்லாது நடுநிலையாளனாக இருப்பதற்கு, விருப்பு வெறுப்புகளைக் கடந்தவனாக வாழ வேண்டும். எவன் ஒருவன் விருப்பு வெறுப்பு அற்றவனாய் தாமரை இலைத் தண்ணீர் போல் இவ்வுலகில் வாழ்கிறானோ அவனே நடுநிலையாளனாக இருக்க முடியும். அப்படி வாழ்பவனும் நன்மை தீமையை ஆராய்ந்து பகுத்து அறியும் பகுத்தறிவாளனாக இருக்க வேண்டும்.
திருவள்ளுவர் காலத்தில் தகுதியுள்ளவன் என்றால் அவன் நடுநிலைமை உள்ளவன் என்ற கருத்தே இருந்திருக்க வேண்டும். நடுவுநிலைமை உள்ளவனாக வாழ்தலே, மனிதவாழ்வின் தகுதி என வாழ்ந்ததாலேயே அக்காலம் பல சான்றோர்களைக் கண்டிருக்கிறது.
பகுத்தறியும் தன்மையில் எவரிடத்தும் விருப்பு வெறுப்பு அற்று நடக்க முடியுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் தகுதியொன்றே நல்லது என இக்குறள் கூறுகிறது.
No comments:
Post a Comment