Wednesday, 7 August 2013

குறள் அமுது - (72)


குறள்:
“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்”                             - 706

பொருள்:
தனக்கு அருகே உள்ள பொருளைக் காட்டும் கண்ணாடி போல ஒருவரது நெஞ்சக்குறிப்பை முகம் காட்டும்.

விளக்கம்:
இத்திருக்குறள் 'குறிப்பு அறிதல்' என்னும் அதிகாரத்தில் ஆறாவது குறளாக உள்ளது. ஒருவரின் மனக்கருத்தை, உள்ளக் குறிப்பை, மன எண்ணத்தை அவர் சொல்லாமல் எப்படி அறிவது என்பதை இவ்வதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ளார். 

பாதரசம் பூசிய கண்ணாடி பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, பளிங்கே கண்ணாடியாகப் பயன்பட்டது. ஆதலால் பளிங்கை கண்ணாடி எனவும் கூறுவர். பளிங்கிற்குப் பக்கத்தே இருக்கும் பொருளைப் பளிங்கு மிகத்தெளிவாகக் காட்டும். கடுத்தது என்றால் மிகுதல் என்ற கருத்தைத் தரும். நம் மனதில் எழும் கோபம், துக்கம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளின் மிகக்கூடிய வெளிப்பாட்டை நெஞ்சம் கடுத்தது எனலாம். கண்ணாடி வெளியே உள்ள பொருளை விம்பமாக உள்ளே காட்டும். முகம் நெஞ்சினுள் உள்ள உணர்ச்சியை விம்பமாக வெளியே காட்டும். 

மனிதரின் மன உணர்ச்சியைப் பொறுத்து, பேச்சுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடு தோன்றும். அந்த வேறுபாட்டை எமக்குக் காட்டித்தருவது அவரின் முகமே. பிறரின் உள்ளக்கருத்தை எடைபோட வேண்டுமானால் முகக்குறிப்பைக் கணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றைய உடல் உறுப்புக்களைவிட முகமே நன்றாக உள்ளத்து உணர்ச்சியை எடுத்துச் சொல்லும். 

மகிழ்ச்சியை மட்டும் முகம் காட்டுவதில்லை. அதற்கும் மேலாக ஒவ்வொருவரின் நெஞ்சிலும்  உள்ள சோகம், கோபம், வஞ்சனை, எரிச்சல், பரிவு, பாசம், அன்பு, கருணை, அழுகை, சிரிப்பு, வீரம், காதல் யாவற்றையும் முகம் காட்டுறது. எவ்வளவு தான் மற்றவர்களுக்கு மறைத்து, உள்ளத்து உணர்வை நெஞ்சில் போட்டுப் பூட்டிவைத்தாலும் அவற்றை கண்ணாடியில் தெரியும்  விம்பம் போல் பிறருக்கு காட்டிக் கொடுப்பது முகம் என்பதை பலர் புரிந்து கொள்வதில்லை.

கண்ணாடி எப்படி பக்கத்தில் உள்ள பொருளை மேடு, பள்ளம், கீறல்களுடன் மிகத்தெளிவாகக் காட்டுமோ அது போல் நெஞ்சிலுள்ள கடுகடுப்பு, வெறுப்பு, பொறாமை, இன்பம், துன்பம், ஆசை எதுவானாலும் முகம் காட்டிக்கொடுக்கும். எனவே ஒருவரின் முகத்தைப் பார்த்து அவரின் மனநிலையை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment