Tuesday, 6 August 2013

கைக்கூலி


“போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்னும் பழமொழி தமிழர்களால் பொன்னே போல்  போற்றப்பட வேண்டிய பொன்மொழியாகும். போதும் என்ற மனம் எம்மிடம் இருந்திருந்தால் தமிழன் அகதி என்ற பெயரைப் பெற்றிருக்கமாட்டான். மனிதவாழ்க்கையில் எமக்கு ஏற்படும் எத்தனையோ துன்பங்களுக்கு முதற்காரணமாக இருப்பது மனநிறைவு இன்மையே. அந்த மனநிறைவு இன்மையைத் தருவது ஆசையாகும். எமது தேவைகள் கூடக்கூட ஆசையும் கூடுகிறது. எமது ஆசைக்கு ஏற்ப உழைத்து வாழவேண்டும் என்னும் எண்ணத்தை விட்டு குறுக்குவழியில் சுகம்காண நினைப்போர் கைக்கூலி வாங்குகின்றனர். அப்படி கைக்கூலி [இலஞ்சம்] வாங்கும் பழக்கம் தமிழரிடையே பன்னெடுங்காலமாக இருக்கிறது. ஔவையாரின் தனிப்பாடல் ஒன்றும் கைக்கூலி வாங்கும் வழக்கம் அவரது காலத்தில் இருந்ததை எடுத்துக்காட்டுகிறது.
ஔவையார் காலத்தில் வாழ்ந்த அரசன் ஒருவன் பதினாயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றை அத்தாணிமண்டபத்தில் தொங்கவிட்டான். அங்கே கூடியிருந்த புலவர்களைப் பார்த்து “பைந்தமிழ்ப் புலவர்களே! இந்தப் பொற்கிழி அற்று [அறுந்து] விழ, நீங்கள் அறம் பாடவேண்டும். எவருடைய பாடலால் இப்பொற்கிழி அறுந்து விழுகிறதோ அவருக்கே இப்பொற்கிழி உரியது என்றான்.

எங்கிருந்த புலவர்களில் பெரும்பாலானோர் முயன்று பார்த்தனர். எவரது பாட்டாலும் அப்பொற்கிழி விழவில்லை. ஔவையார் மெல்ல எழுந்து ‘ஒரு வழக்கின் உண்மை ஒன்றாக இருக்க, இருகட்சிக்கும் பொதுவாக ஊரார் இருக்க, எதிராளிக்கு சார்பாக பொய்வழக்கு [கள்ளவழக்கு] பேசுவதற்கு எள் அளவு கைக்கூலி வாங்குபவனின் சுற்றமும் சந்ததியும் அழிந்து போவது உண்மையானால் பொற்கிழியே! நீயும் அறு’ என்ற கருத்தில்

“உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்க
கள்ள வழக்கதனை தாம்பேசி - எள்ளளவும்
கைக்கூலிதனை வாங்கும் காவறுவான் தன்கிளையும்
எச்சமறு என்றால் அறு”

எனப்பாட பொற்கிழி அறுந்து விழுந்தது.

எனவே ‘எம் பேர் சொல்ல சந்ததி இருக்கவேண்டுமானால் எள் அளவு கூட கைக்கூலி வாங்காதீர்கள்’ என்று இப்பாடல் மூலம் ஔவையார் இலஞ்சவழக்கத்தைக் கண்டித்திருக்கிறார். ஆதலால் போதும் என்ற மனதுடன் வாழ்வோம்.  தமிழ் சமூகத்தை சீர்திருத்திய ஒரு சீர்திருத்தவாதியாக ஔவையார் வாழ்ந்திருக்கிறார் என்பதை இப்பாடல் எடுதியம்புகிறது. 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment