விடத்தல்தீவு மங்கையொருத்தி, பகலில் நெல் வயலை மிருகங்கள் வந்து உண்ணாது காவல் செய்தாள். அப்போது யானைக் கூட்டம் ஒன்றுவந்து அவளின் வயலில் புகுந்தது. அவள் யானைக்கூட்டம் வந்ததை ஊராருக்கு தெரிவிக்க அபாயச் சங்கை ஊதினாள். பறையை முழங்கினாள். அந்த யானக்கூட்டத்தில் ஒன்று மதங்கொண்டு மற்றயானைகளுடன் போரிட்டு, வயலை அழித்தது. மதயானையைக் கொல்ல நாணேறுதற்காக தனது வில்லையும் அம்பையும் எடுத்தாள்.
அந்த நேரம், அவளது அபாயச்சங்கின் ஒலிகேட்டு குதிரையின் மேலே ஒரு வாலிபன் விரைந்து வந்தான். அவன் கையிலே மான் தோலால் பின்னிய கயிறு இருந்தது. அவளுக்கு அந்த வாலிபனை நன்றாகத் தெரியும். அவன் மதயானையை அடக்குவான் என்பதும் அவளுக்குத் தெரியும். அவனது வீரத்துக்கு அவளது வீரமும் குறைந்ததல்ல. அடங்காத மதயானையை அடக்கப்போகின்றவனிடம் சொல்கிறாள். தன் காதலை, வீரத்தை நாட்டுப்பாடலாகச் சொல்கிறாள். விடத்தல்தீவின் வீரமங்கை ஒருத்தி வடித்த நாட்டுப்பாடல்.
பெண்: மான்தோல் கயிறு எடுத்து
மதயானை கட்டும் மன்னா!
எனை அழைத்துப் போனால்
இளம்பிடியைக் கட்டேனோ!
- நாட்டுப்பாடல் (விடத்தல்தீவு)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
அன்றைய ஈழத்தமிழர் மான் தோலால் திரித்த கயிறு கொண்டு மதம் பிடித்த யானையைக் கட்டி வைத்ததை இந்நாட்டுப்பாடல் வரலாறாகத் தருகிறது.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment