Monday 12 August 2013

காரா! நீரா!

காளமேகப் புலவர் பாண்டிநாட்டில் இருந்து கால்நடையாக சோழநாட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.  கோடைகால வெயில் நெருப்பாய் கொதித்தது. மூச்சாய் வெளிவரும் காற்றும் சுட்டது. நாவறண்டு நடை தளர்ந்தார். தூரத்தே குடிசைகள் உள்ள ஊர் ஒன்று தெரிந்தது. எனினும் அதற்கு மேல் அவரால் ஓர் அடிகூட எடுத்துவைத்து நடக்கமுடியவில்லை. பசியும் தாகமும் அவரை வாட்ட, அருகே இருந்த மரத்தில் சாய்ந்தபடி அதன் நிழலில் இருந்தார். 

அப்போது தூரத்தே தெரிந்த ஊரிலிருந்து இளம்பெண்ணொருத்தி “மோரு வாங்கலையோ! மோரு! வெண்ணெய் ததும்பும் நல் மோரு வாங்கலையோ! மோரு!” என்று கூவிக்கூவி மோர்விற்கும் குரல் கேட்டது. அக்குரலைக் கேட்ட காளமேகப்புலவரும் அந்த மோர்க்காரி தானிருக்கும் பக்கம் வரமாட்டாளா எனத்தாகத்தின் தவிப்போடு எதிர்பார்த்தார். அவரின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. அவள் கூவிக்கூவி விற்பதுபோல, தலையிலும் இடையிலும் இருந்த பானைகளில் இருந்து வெண்ணெய் ததும்பி வழிய, சிற்றிடை ஒடிய அன்னநடை நடந்து வந்தாள். 

அவள் ஒய்யாரமாக பானைகளைச் சுமந்து வந்த அழகு புலவரின் சோர்வைக்ச் சிறிது குறைத்தது. மெல்ல நிமிர்ந்து உட்கார்ந்தார். அவள் அருகே வந்ததும் 'பெண்ணே! தாகத்திற்கு சிறிது மோர் தருவாயா' என்றார். அவரைப் பார்த்ததும் அவரது பசிக்களையை அறிந்து குடிக்க மோர்கொடுத்தாள். மோரைக்குடித்த காளமேகப் புலவருக்கு பசியும் தாகமும் நீங்கியது. 

அவருடன் கதைத்ததிலிருந்து அவர் பாண்டிநாட்டிலிருந்து சோழநாட்டிற்கு வந்த புலவர் என்பதை அறிந்து கொண்டாள். 'புலவரே! நான் தந்த மோரைப்பற்றி ஒரு பாடல் பாடுங்கள்' என்று கேட்டாள்.

அவள் கேட்டதற்காக அவர் பாடவேண்டும். ஏனெனில் அவளுக்குப் பொருள் கொடாது மோர் வாங்கிக் குடித்தாய்விட்டது. மோரைப்பற்றிப் பாடாது இருக்கமுடியுமா? அவருக்கு இருந்த சோர்வும் தாகமும் அவளது அழகும் மடமடவென மோரைக் குடிக்கவைத்தது. அவள் மோரைப்பற்றிப் பாடச்சொன்னதும் தான் குடித்தது மோரா எனச்சிந்தித்தார். சிந்தனையில் பிறந்தது பாடல்.

“காரென்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய் நீள்தரையில் வந்ததன்பின்
வாரொன்று மென்முலையார் ஆச்சியர்கை வந்ததன்பின்
மோர்ரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

“மேகமாய் வானத்தில் இருக்கும் போது கார் என்ற பெயரைப் பெற்றாய். மழையாய் தரைக்கு வந்தபின் நீர் என்ற பெயரைப் பெற்றாய். மார்புக் கச்சையால் கட்டப்பெற்ற மென்மையான முலைகளையுடைய இடைச்சியர்களின் கையிலே வந்ததன் பின்னர் மோர் என்ற பெயரைப் பெற்றாய். மூன்று பெயர்களைப் பெற்றுவிட்டாயே!!” என்று அவள் கொடுத்த மோருக்கு முடிசூட்டினார். 

நீர் மேகமே கார் என்ற பெயரைப் பெறுகிறது. ஆதலால் காரே நீராகிறது. இடைச்சி கொடுத்த மோரும் நீராய் இருந்தது என்பதை காராய், நீராய், மோராய் ஆகி முப்பெயர்களை பெற்றது நீர் என்றார். 

நீரின் மேல் வெண்ணெய்யைத் ததும்ப வைத்து, அவள் நீரையே மோர் என்று கூறி விற்றுவந்தாள். எனவே அவள் கொடுத்த மோரை காளமேகப் புலவர் நீரெனப் பாடியதற்கு அவள் கோபப்படவில்லை. உண்மையைப் பாடும் ஒரு பெரும் புலவரின் பாடல் தன் மோருக்கு கிடைத்ததே என்று அவள் பெருமைப்பட்டாள். 
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment