Sunday 25 August 2013

நாதப்பறையினர்

நாதப்பறையினர் 
சிவனின் உருவத்தை
“வேதமொழியர் வெண்ணீற்றர் செம்மேனியர்
நாதப்பறையினர் அன்னே என்னும்”            
                                                    -(ப.திருமுறை: 8: 17: 1)
என மணிவாசகர் அன்னைப்பத்தில் வருணிக்கிறார். சிவன் பறையை (மேளம்) அடித்துக்கொண்டு எங்காவது இருக்கிறாரா? ஏன் மணிவாசகர் சிவனை நாதப்பறையினர் எனக்கூறினார்? சிவன் நாதப்பிரமம் ஆதலால் நாதப்பறையினர் என்கின்றனர் ஒருசிலர். வேறுசிலர் நடராஜனின் கையில் உள்ள உடுக்கையே நாதப்பறை என்கின்றனர். என்னால் அக்கருத்துக்களை ஏற்க முடியவில்லை. எனவே நான் சென்ற கோயில்களில் எல்லாம் வேதமொழியர்  வடிவிலுள்ள சிவனின் கையில் பறையைத் தேடினேன்.

இத்திருவாசகத்தின் தொடக்கத்தில் ‘வேதமொழியர்’ என மாணிக்கவாசகர் சுட்டுவதால் அன்று ஆலின்கீழ் நால்வருக்கு அறமுரைத்த தென்திசைக்கடவுளாகிய தட்சிணாமூர்த்தியைச் வேதமொழியர் எனச்சொல்வதாகக் கொள்ளலாம். பக்தி இலக்கிய காலத்திற்கு முந்திய சங்க இலக்கியங்களும் சிவனை ஆலமர் செல்வன் எனச்சொல்கிறன.
 “பணைத்தெழுந்த ஆலின் கீழ் இருந்து ஆரணம் ஓதி”        
                                                    - (ப.திருமுறை: 4: 108: 6)
எனத் திருநாவுக்கரசர் சொல்வதால் அன்றைய ஆலமர் செல்வரே இன்றைய தட்சிணாமூர்த்தியாகி நிற்கிறார் என்பதும் உணரப்படும்.

ஆகமங்கள் தென்திசைக்கடவுளின் வடிவங்களை நான்காக வகுக்கின்றன. நான்மறைகளையும் வெவ்வேறு வடிவங்களில் இருந்து உரைத்தார் என்பதைக் காட்டவே தென்திசைக் கடவுளின் வடிவங்களை நான்காக வகுத்துள்ளன.
  1. வியாக்கியான தட்சிணாமூர்த்தி
  2. யோக தட்சிணாமூர்த்தி
  3. வீணாதர தட்சிணாமூர்த்தி 
  4. ஞான தட்சிணாமூர்த்தி

இந்த நான்கு உருவோடு இருந்து முறையே அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்மறைகளை கூறினார் என்பதை
அழிந்த சிந்தை அந்தணர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு 
மொழிந்தவாயான்”   
                                                            - (ப.திருமுறை: 1: 53: 6)
எனத் திருஞான சம்பந்தர் போற்றுவதால் அறியலாம். 

1. வியாக்கியான தட்சிணாமூர்த்தி


அறத்தின் தன்மையை விரிவுரையாக உரைத்தவர் வியாக்கியானமூர்த்தி. சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் நால்வருக்கும் விரிவுரைசெய்த தென்திசைக்கடவுளையே வியாக்கியான தட்சிணாமூர்த்தி என்பர். முன்வலக்கை சின்முத்திரை பிடித்திருக்க,  வீராசனத்தில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை வியாக்கியான தட்சிணாமூர்த்தி என்பர்.
“நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழ்இருந்து அறம் உரைத்தான்” 
என்னும் மாணிக்கவாசகரின் திருவாசகத்துக்கு அமைய வீராசனத்தில் அமர்ந்திருந்து அறமுரைக்கும் வியாக்கியான தட்சிணாமூர்த்தியை திருமுல்லை வாயில் கோயிலில் காணலாம்.

2. யோக தட்சிணாமூர்த்தி 

யோகப் பொருள்களின் தன்மையை யோகநிலையில் இருந்து உரைத்தவர் யோகமூர்த்தி. இந்த தட்சிணாமூர்த்தி வடிவம் மூன்றுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • பத்மாசனத்தில் அமர்ந்து  இருக்கும் வடிவம்.
  • உத்குடி இருக்கையில் அமர்ந்திருக்க இடக்காலையும் உடலையும் சுற்றி யோகபட்டையோடு இருக்கும் வடிவம்.
  • இருகால்களும் குத்திட்டு இருக்கையில் இருக்க, இருகால்களையும் சுற்றி யோகபட்டையோடு இருக்கும்வடிவம். 
“கல்லால் நிழற்கீழாய் இடர்காவாயென வானோர்
எல்லாம் ஒரு தேராய் அயன் மறைபூட்டி”                     
                                                            - (ப.திருமுறை: 1: 11: 6)
எனத் திருஞானசம்பந்தர் யோக தட்சிணாமூர்த்தியைக் காட்டுகிறார்.

3. வீணாதர தட்சிணாமூர்த்தி

இன்பத்தின் தன்மையை உரைத்தவர் வீணாதரமூர்த்தி. இன்பத்தைத் தருவதில் இசைக்கும் பெரும் பங்கு உண்டு. இந்த தட்சிணாமூர்த்தி வடிவத்தின் முன் கைகளில் வீணை காணப்படும். இவ்வடிவத்தை
  • நின்ற நிலையில் - திருப்பழனம் கோயிலிலும்
  • இருந்த நிலையில் - நார்த்தாமலை விஜயாலய சோளீஸ்வரர் கோயிலிலும் காணலாம். 
  • வீணாதர தட்சிணாமூர்த்தியை 
“தங்கையில் வீணைவைத்தார் தம்மடி பரவவைத்தார்”       
                                                            - (ப.திருமுறை: 4: 33 : 6)
எனத் திருநாவுக்கரசர் பார்த்துப் பாடிப்பரவசப்படுகிறார்.

4. ஞான தட்சிணாமூர்த்தி

ஞானநெறியின் தன்மையைச் உரைத்தவர் ஞானமூர்த்தி. இவ்வடிவத்தில் வலக்காலை முயலகன் மேல் ஊன்றி, வலது தொடைமேல் இடக்காலை மடித்து வைத்து வீராசனத்தில் இருப்பார். வலக்கையில் சின்முத்திரையும், மற்றக்கைகளில் நெருப்பு, சிவஞானபோத ஏடு, பாம்பு என்பன இருக்கும். ஞான தட்சிணாமூர்த்தி ஞானநெறியை [ஒளிநெறி] நால்வர்க்கும் காட்டியதை 

ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழுது
          ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை”              
                                                            - (ப.திருமுறை: 1: 128)
எனத் திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் சொல்லி மகிழ்கிறார்.

நாதப்பறையினர்
ஆகமங்கள் கூறும் நான்கு வகையான தட்சிணாமூர்த்தி வடிவங்களில் வராத நாதப்பறையினரை வெட்டுவான் கோயிலில் மிருதங்க தட்சிணாமூர்த்தியாகக் காணலாம். இந்த வெட்டுவான் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கழுகுமலையில் உள்ளது. இது ஒரு குடைவரை கோயில். எல்லோரா போல் மலையைக் குடைந்து கோயில் கட்டப்பட்டுள்ளதாலும் அங்குள்ள சிற்பங்கள் மிகமிக  நன்றாக இருப்பதாலும் இக்குடைவரை கோயிலை தென்னக எல்லோரா என்கின்றனர்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment