ஒருவர் இன்னொருவருக்குத் தீமை செய்வற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை போட்டி, பொறாமை, பேராசை, குறும்பு, சந்தேகம், அகங்காரம், அறிவின்மை, ஆற்றலின்மை எனப் பல குணக்கேடுகளாகக் கொள்ளலாம். மனிதனிடம் உண்டாகும் இந்தக் குணக்கேடுகளே அவனை தீமை செய்யத் தூண்டுகின்றன. இப்படியான குணக்கேடு உள்ளவர் செய்யும் தீமை, மீண்டும் அவர்களைச் சென்று தாக்கித் தண்டணையைக் கொடுக்கும். இது ஞானியர் கண்டு சொன்ன முடிவாகும்.
அரசாங்கங்கள் உண்டாக்கி வைத்திருக்கும் சட்ட ஒழுங்கு முறையால் கிடைக்கும் தண்டனை அல்ல. அதைவிடவும் மாபெரும் சக்தி மனிதனிடம் இருக்கிறது. மனவலிமை என்றும் மனோசக்தி என்றும் அதனைச் சொல்வர். நம்மோடு வாழும் பலரின் மனவலிமையை நாம் உணர்வதில்லை. மனவலிமை என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். மனித மனவலிமை பொதுவாக, அவர்கள் செய்யும் செயலை விரைவாகவும், ஒழுங்காகவும் செய்து முடிக்க உதவும்.
ஆனால் தனது என்னும் பற்றைவிட்டு, இன்னொரு பற்றை பற்றி பிடித்தோரின் மனவலிமை பொதுவான மனித மனவலிமையை விட மிகமிக ஆற்றல் உடையது. அதன் ஆற்றலை அளந்து அறியமுடியாது. அந்த ஆற்றலின் தன்மையையும், அது யார் யாரிடம் இருக்கும் என்பதையும் திருமூலர் திருமந்திரமாகத் தந்து சென்றுள்ளார்.
1. தான் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், தனது பற்று முழுவதையும் தன்னொடு வாழவந்தவன் மேல் செலுத்தி பற்று நீ என வாழும் பற்றுனி - பத்தினிப் பெண்கள், அவர்களிடம் அந்த ஆற்றல் இருக்கிறது.
2. தான் என்னும் பற்றைவிட்டு, பற்று இல்லாதவனாகிய இறைவனின் பற்றைப் பற்றிப்பிடித்த பற்றர்கள் - பத்தர்கள் அவர்களிடம் அந்த ஆற்றல் இருக்கிறது.
3. தான் என்னும் பற்றை நீக்கி உலகின் மேல் பற்றைவைத்து உலக உயிர்களுக்காக - உலகம் வாழ நல்ல தத்துவங்களை சொல்லும் தத்துவ ஞானிகள் அவர்களிடமும் அந்த ஆற்றல் இருக்கிறது.
இவர்கள் மூவரும் மற்றவர் புகழ்வதற்காக எதனையும் செய்யமாட்டார்கள். இகழ்ச்சியையும் கண்டுகொள்ளமாட்டார்கள்.
‘உண்மையான பத்தினி, பத்தர்கள், தத்துவஞானிகள் மூவரதும் மனவலிமையை அறியாது, அவர்கள் செய்யாததை செய்ததென்று சொல்லி எவராவது அவர்களது சிந்தை கலங்கும்படி இழிச்சொற்களால் ஏசியும், கோபித்தும், கேடு செய்வார்களாயின் அப்படிச் செய்தோரது பொருளும் உயிரும் ஒரு வருடத்தில் மாண்டு போகுகும்’ இது சத்தியம் என சிவன் மேல் ஆணையிட்டு திருமூலர் கூறியுள்ளார்.
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே!
- (திருமந்திரம்: 532)
இதனையே தெய்வம் நின்று கொல்லும் என்று சொன்னார்கள் போலும். எனவே இத்தகைய மனவலிமை உடையோரின் சிந்தை கலங்கச் சிதைவுகள் செய்யாது இருத்தல் நன்றாகும். மனிதனிடம் இருக்கும் இந்த மாபெரும் சக்தியாகிய மன ஆற்றலைப் போற்றி வாழ்ந்தால் பல துன்பங்களிலிருந்து நீங்கலாம். போலிப்பத்தினி, போலிப்பத்தர்கள், போலிதத்துவஞானிகளுக்கு இது பொருந்தாது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இனிதே, தமிழரசி.
உண்மையான பத்தினி, பத்தர்கள், தத்துவஞானிகள் மூவரதும் மனவலிமையை அறியாது, அவர்கள் செய்யாததை செய்ததென்று சொல்லி எவராவது அவர்களது சிந்தை கலங்கும்படி இழிச்சொற்களால் ஏசியும், கோபித்தும், கேடு செய்வார்களாயின் அப்படிச் செய்தோரது பொருளும் உயிரும் ஒரு வருடத்தில் மாண்டு போகுகும்’ இது சத்தியம் என சிவன் மேல் ஆணையிட்டு திருமூலர் கூறியுள்ளார். OH MY GOD ..........
ReplyDeleteதிருமூலர் இத்திருமந்திரத்தில் சொன்னது போன்ற மனவலிமை உடையோர் ஒரு சிலரே. அவர்களை இனம் காண்பது மிகமிகக் கடினம். அத்தகைய மன ஆற்றல் உடையவர்களை போற்றி வாழவேண்டும்.
DeleteIf you want to improve your மனவலிமை then, தான் என்னும் பற்றைவிட்டு, பற்று இல்லாதவனாகிய இறைவனின் பற்றைப் பற்றிப்பிடி
ReplyDeleteமகிழ்ச்சி. "பற்றுக பற்றற்றான் பற்றினை" - திருவள்ளுவர்.
Delete